நாட்குறிப்பு - 33/50 நேற்றைய காலை
'லெட் மீ மேக் யு லாப் திஸ் மார்னிங் ' என்றார்.
உடன் வேலை பார்ப்பவர் , சந்தித்துச் சிலநாட்கள் ஆகியிருந்தன.
அப்படி அவர் சொன்னதுமே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
'அவன் கேட்டான் எதைத் தேர்ந்தேடுப்பதென்று...நான் சொன்னேன்.
Ek toh kodhi, doosre khaaj ...samaj gaya
ராமுக்கு தொழுநோய் , இப்போது புதிதாய் அரிப்பு, எதைத் தேர்ந்தேடுப்பது...
இல்லை ராமுக்காக நான் சொரிய முடியுமா சொல்லு'
சொரிந்து காட்டி கைதட்டி புரளாத குறையாக சிரித்தார்.
'இன்னொன்று..ஒரு பையன் அம்மாவிடம் சொன்னான்.
நான் எனக்குப் பிடித்தமாய் பெண் பார்த்திருக்கிறேன்...நாளை , மூன்று பேரில் என்னவளை நீ கண்டுபிடிக்க வேண்டும் '
அந்த மூவரில் அவளை அம்மா சரியாகக் கண்டுபிடித்துவிட்டார்.
பையன் 'எப்படிம்மா' என்றான்.
அம்மா சொன்னாள் , 'அவளை மட்டுமே எனக்குப் பிடிக்கவில்லை'
ரெண்டாவதைச் சொல்லி சிரித்து மறைந்தார்.
நாட்குறிப்பு 34/50 முடியாத படைப்பு
உலகில் படைப்புக்கு முடிவில்லை.
சமைத்தல் என்றால் செய்தல், படைத்தல் என்றும் பொருள் இருக்கிறது.
அடுப்பில் சமைத்து முடித்து விட்டால் சமையல் முடிந்துவிடுவதில்லை.
பலர் உணவைத் தட்டிலும் சமைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
டெர்மினல் படத்தில் டாம் ஹாங்க்ஸ் ஏர்போர்ட்டில் சிக்கிக்கொள்வார்.
காசில்லாமல் விசா இல்லாமல் அங்கேயே குளித்து சாப்பிடவேண்டிய நிலைமை.
உப்பு பிஸ்கட்கள் நடுவில் கெச்சப் தடவி சிற்றுண்டி செய்வார்.
நேற்று உணர்ச்சிவேகத்தில் வாங்கிவிட்டதால் சாலடையும் சூப்பையும் சாப்பிட்டாக வேண்டும்.
கடலாய் இலைகள் ,படகாய் காய்கறிகள் , சமாளிக்க வேண்டியது இலைகளை ...
இலைகளை உறுவி சிறிதாய் நறுக்கி மஞ்சோவ் சூப்பில் முக்கியெடுத்தேன்.
சுவைத்தும் 'இப்படி ஒரு' என்று வாயில் வந்தது, மேலே சொல்லில்லை ...
மஞ்சோவ் சூப் , காய்கறிகள் கருமிளகு பூண்டு இஞ்சி கலந்த ரசம் .
சூப்பை சாலடில் கொட்டிக் கொஞ்சம் மிருதுவாய்க் கிளறினேன்.
வாய்க்குள் சென்றதும் செஃப்கள் போல் எதாவது சொல்லவேண்டும் போலிருந்தது.
எதிரே இருப்பவரின் பார்வைக்கு பதிலாய் நீங்களும் செய்துபாருங்கள் என்றேன்.
நாட்குறிப்பு 35/50 - வினோதமான சத்தியம்
நீதிமன்றத்தில் வாக்குமூலம் செய்ய கீதை பைபிளில் சத்தியம் செய்கிறார்கள்.
அதைத் தொட்டு சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்லவேண்டும் .
அந்தப் புத்தகத்தின் மேலுள்ள பெரிய நம்பிக்கை அதில் இருக்கிறது.
அம்மா சாமி படம் முன்னிறுத்தி உண்மையைச் சொல்லக் கேட்பார்கள்.
மனதை உலுப்ப வேறு வழி என்ன இருக்கிறது.
உண்மையைச் சோதிக்க பள்ளிக்கூடங்களில் அம்மாவின் மேல் சத்தியம் கேட்பார்கள்.
சமயங்களில் இங்கே பொய் தோற்று நிற்பதைப் பார்த்திருப்பீர்கள்.
மகிழிச்சி என்பது எண்ணமும், சொல்லும், செயலும் நேர்கோட்டில் வருவது. காந்தியின் இச்சொற்களைக் காட்டி பொய்யை மாற்ற முயற்சித்திருக்கிறேன்.
சொல்பவர் தன் மேல் சத்தியம் என்பார். சிலர் நம்மிடமே உம்மேல சத்தியம் என்பார்கள்.
உண்மை சிக்கி , சொல் உதவாத நிலை, வேறென்ன முடியும்.
கு.அழகிரிசாமி கம்பராமாயணத்தின் மீது சத்தியம் என்று எழுதிய ஒருவரி படித்தேன்.
'குழந்தைகளை அடிக்கமாட்டேன் , கம்பராமாயணத்தின் மீது சத்தியம்' நாட்குறிப்பு 31-03-1961.
ஏன் அடித்தார் தெரியவில்லை, அதன்பின் நிச்சயம் அடித்திருக்க மாட்டார்.
நாட்குறிப்பு 36/50 பரீட்சை
மெட்ரோ போகும் வழியில் நிறைய பள்ளி,கல்லூரிகள்.
வித்யா பீடம், நேஷனல் காலேஜ் போன்ற பெயருடன் நிறுத்தங்கள்.
அலைபோல மாணவர்கள் வந்தபடி இருப்பார்கள்.
நின்றபடி படிப்பார்கள், ஒருவர் கேட்க இனொருவர் பாடம் சொல்வார்.
இருவர் ஒரே புத்தகத்தைப் படிப்பார்கள், சமயங்களில் ஆண் பெண்.
நேற்று பக்கத்தில் அமர்ந்த மாணவர் தலைதொங்கி படித்தபடியே இருந்தார்.
இறுகிய முகம் , பதட்டம் ஏதாவது பரிட்சையாக இருக்க வேண்டும்.
எனக்கு இப்போதும் கொடுரக் கனவால் தூக்கம் கலைகிறது.
உலுக்கிப்போடும் அக்கனவில் அடுத்த நாள் பரிட்சையாக இருக்கிறது.
மறுகணம் பரிட்சைக்கும் நமக்கும் இனி உறவில்லை என்ற மீளுணர்வு.
வரை படங்களாகத் வரைந்து பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தார்.
GNP என்ற ஒரு பெட்டி GDP , NR , NP என்று மூன்று அறைகளாகப் பிரிந்தது.
GDP ஐந்து வீடுகளாக , தெருவாக , ஊராக விரிந்து பக்கம் முடிந்தது.
அடுத்த பக்கத்தில் ஒரு அலுவலக வரைபடத்தை , நெடுநேரம் படித்தார்.
எல்லோரும் முதலில் வேலைபார்த்து பின்னர் படித்தால் எளிதென்று நினைத்தேன்.
நாட்குறிப்பு 37/50 - பூவின் எடை
அந்த ஓரடி சதுர இடத்திற்கு துரதிர்ஷ்டம் இருந்திருக்கிறது.
தேடிப்பிடித்து நட்டுவைத்த செவ்வந்திச் செடி வாடி இல்லாமல் போன இடம்.
பின்னர் நட்டிய செம்பருத்திச் செடியையும் விழுங்கி இருக்கிறது.
விதைகளை விழுங்கி விட்டுச் சலனமில்லாமல் இருந்திருக்கிறது.
எல்லோரும் சேர்ந்து ஆழமான பதியனில் மீண்டும் ரோஜா நட்டினோம்.
ஊரிலிருந்த போது புதுத்தளிர் பார்த்து மகள் போன் செய்தாள்.
எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை, ஆனால் செடி வளர்வது போல் பட்டது.
சென்ற வாரம் அப்பா, ரோஜாவ மிதிச்சிட்டாங்க என்ற குரல்.
மையக்கிளையில் இருந்து பிரிந்த பூவிருந்த வலுவான பக்கக்கிளை தொங்கிவிட்டது.
நூலைக் கட்டி கிளைகளை ஒட்டி , பக்கத்தில் கொம்பை பொறுப்பாய் நிறுத்தினேன்.
தொங்கிய தலை சில நாட்களில் நிமிர ஆரம்பித்தது.
முறிந்த கிளை ஒட்டிவிட்டது, ஆனால் இத்தனை பூக்களா சிறுகிளையில்?
பட்டையும், செந்துருக்கமும் , மஞ்சளுமாய் மரங்கள் திருவிழா முகங்கள் போலிருக்கின்றன.
ஊர் வெறிகொண்டு பூத்திருக்கிறது, பூக்கள் எடை கொள்ள ஆரம்பித்திருக்கின்றன .
நாட்குறிப்பு 38/50 பிரம்ம ரதம்
நேற்று இங்கே பக்கத்து ஊர்கள் கூடும் திருவிழா - 'ஜாத்ரே'.
முக்கிய நிகழ்வு 100அடித் தேரோட்டம் , அருகிலிருந்த மின்கம்பம் சின்னதாய் அமர்ந்திருந்தது.
உயரத்திற்கு பேர்போன இத்தேர்கள் இப்பகுதியான ஹஸ்கூரில் மட்டுமே கட்டப்படுகின்றன.
சக்கரங்கள் இணைக்கப்பட்ட மரத்தாலான அதிஷ்டானத்தின் மேலே கோபுரம் எழுகிறது.
நாலு பக்கமும் ஐம்பதடி உயர மூங்கில் மேல்கம்புகள் நின்றன.
இரண்டு ஐம்பதடி மூங்கில் இணைத்தால் மட்டுமே நூறடி உயரம் அமையும்.
மேலே செல்லச்செல்ல குறுக்கே சென்ற மூங்கில்களால் மேல்கம்புகள் வளைக்கப்பட்டிருந்தன.
ஒரு விண்வெளி ராக்கெட் உயரம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.
துணிகளும் , பூக்களும் , விளக்குகளுமாக எந்நேரமும் பறக்க இலகுவாய் நின்றிருந்தது.
பால்காரர் யார்வீட்டிலும் இரண்டுநாள் சமையலில்லை , கோயில் சாப்பாடு என்றார்.
பாக்யதா லக்ஷ்மிக்கு ஒரு குழந்தை ஆடி முடித்தது.
பின்னர் ஆறிலிருந்து அறுபது வரை ஆடிய பெண்கள் கோலாட்டம்.
விராட் கோலி ஆடுவதின் மகிழ்ச்சி தீவிரம் எல்லோர் முகத்திலும்.
சினிமா எதிர்பார்த்த ஒருவர் இக்காலத்தில் இவ்வளவுநேர கோலாட்டமா என்றார்.
பார்ப்பவருக்கு களிப்பு நிச்சயமில்லை , ஆனால் விளையாடுபவருக்கு நிச்சயமாய் இருக்கிறது.
நாட்குறிப்பு 39/50 கண்ணாடிப் பார்வை
மகனைச் சேர்த்து 8-பேரை மைதானத்தில் விடுவதில் நேற்று என்முறை.
அவர்கள் பேசுவதை, சீரியசாக ஓட்டுவதுபோல் கேட்பது எனக்குப் பிடிக்கும்.
'கடைசியா எட்டுப்பேர் கார்ல போனப்ப காஸ்-ட்ரபிள், இல்ல'?
'அன்னைக்கு கார்த்திக் போட்டது இன்னும் என் மூக்கிலேயே இருக்கு'
'இன்னிக்கு முடிவெட்ட யாரெல்லாம் வர்றதா பிளான், அப்பா இல்லாம'
'அப்பா, நூறு ரூவா சலூனுக்கு விடமாட்டார்'
'பேரண்ட்ஸ புரிஞ்சுக்க முடியல...ஏன் எப்பவும் ஓவரா செலவழிக்கணும்'
சிலர் சைக்கிளில் மொபைலுடன் முடிவெட்டச் செல்லும் திட்டம் ரெடியானது.
'போன வாரம் உனக்கு ஸ்கூல்ல மூக்கு உடஞ்சதே என்னாச்சு'
'மூக்குல ரத்தம் வரப்ப, சுடுதண்ணி குடிச்சேன்,..ஸ்ரீஸ்ரீ ஸ்கூல்ல உடம்பு முடியலேன்னா சொம்பு வெந்நீர் குடிச்சாகனும்...'
எல்லோர் பெயரையும் பெண் பெயராக மாற்றி பார்க்கும் விளையாட்டு.
தேவ்- தேவகி என்றதும் அவருக்குள் வெட்கம், மைதானமும் வந்திருந்தது.
மைதானத்தை முதலில் ஓடிச்சுற்ற வேண்டிய பயம் தொற்றிவிட்டது.
வீட்டில் வந்ததும் , 'அப்பா நீ வந்தா பிரண்ட்ஸுக்கு பிடிக்கும்'
வேறெல்லாரும் side-eye-parents , கண்ணாடில பாத்துட்டே இருப்பாங்க..'
நாட்குறிப்பு 40/50 கழன்ற நட்டுகள்
நேற்று போகும் வழியில் ஒரு பளபளப்பில்லாத நட்டு கிடந்தது.
எதோ ஒரு லாரியில் இருந்து கழன்று விழுந்திருக்க வேண்டும்.
ஏதோ இரண்டு உறுப்புகளை இணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தது, இப்போது இல்லை.
இல்லை , இறுக்கமான எதுவோ ஒன்று பிடி தளர்ந்திருக்கிறது, நல்லது.
பாதையில் இருந்த நட்டு ஆணிகளை எண்ண ஆரம்பித்தேன்,
சில நிமிடங்களில் கணக்கு பத்தைத் தாண்டியது.
இந்த நட்டுகள் அந்த வண்டிக்கு எவ்வளவு முக்கியம்?
முக்கியமென்றால், தினமும் முட்டி நின்று ரோடு ஸ்தம்பித்திருக்கும் இல்லையா?
நமக்கு பல்லும் முடியும் விழுவது போல் வண்டிக்குத் திருகாணியா?
முற்றும் உதிர்ப்பது விடுதலையெனில் , ஒரு போல்ட் உதிர்வது அதன் ஆரம்பம்.
ஒவ்வொரு நட்டாய்க் கழன்று கடைசியில் முற்றும் உடைவது.
ஆமாம், நட்டும் போல்ட்டும் பிரிவது ஒரு விடுதலையின் அறிகுறி.
இன்றைய டைரி 41/50 - அம்மாவின் ஜோதிடம்
'ஓன் ராசில இன்னிக்கு கிரகணம் பிடிக்கிது ', அம்மா போனில்.
எனக்கு ஜோசியத்தில் எதாவது பிடித்தால் என்றும் தனியாக வராது.
அம்மா, மனைவி, மாமியார், அக்காவின் கணவர் ராசிகள் ஒன்று .
இதில் யாருக்கு என்ன பிடித்தால் தான் என்ன ?
நிலவைப் பார்த்துக் குளித்துக் கோயிலுக்கப்புறம் சாப்பிடு என்றார்.
மதியம் அம்மா அனுப்பிய லிங்கின் ஒரே சாதுவான வரி .
எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் பிரச்சனைகள் வரலாம் என்பது.
ஐந்து ராசிகள் அடி வாங்குமென மற்றொரு லிங்க் சொல்லியது.
சந்தோஷம் , கிட்டத்தட்ட பாதிப்பேர் அடிவாங்கினால் அது தண்டனையில்லை.
கிரகணம் விட்டதும் அம்மாவின் போன் வந்தது.
'நீயாவது சொல்றத காதுல வாங்குற , தம்பி அதுவுமில்ல'
இந்தப் பதினைஞ்சு நாள் உக்கிரம் இறங்குனதும் மறுநாள் சந்திராஷ்டமம்
இந்த வருஷமே அஷ்டமத்துச் சனிக்குள்ள இருக்குறப்போ அலெர்ட்டா இருக்கணும், '
'
நாடுகளே அலெர்ட்டாக இருக்கையில் தனிமனிதன் இருப்பதில் பிழையில்லை.
அப்புறம் , ஜெமினி நாடுகளுக்கு ராசிபலன் சொன்னது, ஈரானுக்குப் படித்தேன்.
நாட்குறிப்பு 42/50 - நதிக்கரையில்
இப்போதிருக்கும் ஓவியம் மெஜஸ்டிக் ஸ்டேஷனுக்குப் பொருத்தம் என்று நினைத்தேன்.
எஸ்கலேட்டரில் முண்டியடிக்காமல் இருபது படி ஏறினால் தெரியும்.
மாடியில் காலைச் சூரியன் பார்ப்பது போல் கற்பனை செய்துகொள்ளலாம்.
இரண்டு சினிமாத் திரைபோல் பெரிதென்றாலும் வேகத்தில் கண்ணில் விழாது.
முன்னிருந்த ஓவியத்தில் ஒரு பும்ரா சிறிதாய் பந்துவீசுவார்.
மற்றொன்றில் அவரே பெரிதாய் பந்தைப் பிடித்தபடி சிரிப்பார்.
ஒரு வகையில் மெஜெஸ்டிக்கில் ரயிலேறுபவர்கள் எல்லோரும் பாஸ்ட் பௌலர்ஸ்தான்.
நேற்று பார்த்த ஓவியம் நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்.
காடு சூழ ஓசையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதி.
படித்துறையில் நீலப்புடவையில் பொன்னொளியில் நதியோட பார்த்திருக்கும் பெண்.
பின்னால் ஆண் மயில், நீலவானில் தியானமாய் உறைந்த மேகங்கள் .
கீழே ரயிலென்ற இன்னொரு நதி கடக்கும் மனிதர்கள்.
சீரியல் பல்புகள் போல் தலைகள், எல்லாம் ஒன்றுபோல் தெரிகிறது.
நதியில் குமிழிகள் போல் பறந்து நகர்ந்து ரயிலேறி வெடிக்கின்றன.
நதிகள் சங்கமம், நானும் அதில் இறங்கிக் கொண்டிருக்கிறேன்
நாட்குறிப்பு 43/50 - முடிவில்லாத முடிவு
மனித வாழ்க்கையை வளையம் என்று சொல்கிறார்கள்.
குழந்தை ஒரு முனை என்றால் மூப்பு மறுமுனை.
இரண்டும் முனையும் நிர்மலம், மூப்பில் நிர்மலம் வாய்க்க வேண்டும்.
பெரியவர்(85) மாமனாரின் நிலத்தில் கட்டிய வீட்டை விற்க விற்கிறார்.
ஓடிக்கொண்டே இருந்தும், ஆஸ்பத்திரி செலவுகள் இல்லாமல் இவ்வயதை எட்டியிருக்கிறார்.
விலை பேசி அச்சாரம் ஆகும் முன்னர் ஈக்கள் மொய்க்கின்றன.
மூணு பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் பேரம் பேசுகின்றன.
மனைவியின் தங்கைகள் கேள்வியுடன் குறுக்கே வருகிறார்கள்.
இணையத்தில் தேடி என்ன வில்லங்கம் பண்ணலாம் என்று ஆராய்கிறார்கள்.
விஷயம் தேடி ஒன்றுவிட்ட பையன் வழக்கு போடுவேன் என்கிறான்.
அம்மா கண் கசக்குவதை அநீதியை பார்க்க முடியாது என்கிறான்.
நேற்று பெரியவர் விற்பதை பத்து வருடம் தள்ளி வைத்திருக்கிறார்.
போகப் போகும் ஊர்களைப் பட்டியல் போட்டிருக்கிறார்.
நாட்குறிப்பு 44/50 - வெளியிலேயே நின்று விட்ட கிராமம்
வேலைக்குப் போகும் வழியில் இக்குக்கிராமம் கடந்து செல்ல வேண்டும்.
இந்தக் கிராமம் பிஸியான ஓசூர் சாலையில் இணையும்.
காலையில் மூன்றரைக்கு முழிப்பு வந்து வேலை பார்க்க ஆரம்பித்திருந்தேன்.
நேற்று இவ்வூரைக் கடக்கும்போது எண்ணங்கள் வேலையைப் பற்றி ஓடிக்கொண்டிருந்தன.
சட்டையில்லாமல் மாடு பிடித்துச் செல்பவர் , மண்வெட்டியுடன் கழனிக்கு நடப்பவர்.
ஒன்றும் செய்ய இல்லாமல் சும்மா பெஞ்சில் அமர்ந்தவர்,
சிரித்தபடி லிஃப்டுக் கேட்பவர்கள், அரசாங்கப் பேருந்தை எதிர்பார்க்கும் பிள்ளைகள்
சட்டி பானைகளை வெட்டவெளியில் விரித்துக் கழுவும் ஒரு அம்மா.
முன்னங்கால் நிறுத்தி நரசிம்மம் போலிருந்த கைவிடப்பட்ட ஒரு பொமரேனியன்.
முழுக்கிராமமும் முற்றத்தில் ஈஸிசேரில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பது போலிருந்தது.
ஊர்க்கோவில் இருக்கும் இடத்தில் இடைஞ்சலான மிகக்குறுகிய வளைவிருக்கிறது.
நின்று பார்த்து நிதானமாய் வழி விட்டால்தான் வழிகிடைக்கும்.
இந்தச் சாலையில் இந்தக் கிராமமே ஸ்பீட் பிரேக்கர்.
நாட்குறிப்பு 45/50 - இரக்கமற்ற சுவிட்ச்
எம்பிஏ வகுப்புகளில் முடிவெடுத்தல் பற்றிய ஒரு கதை சொல்வார்கள்.
முடிவெடுக்கும் நீங்கள் தனியறையில் சுவருக்கு இந்தப் பக்கம்.
நீங்கள் எடுக்கும் முடிவின் விளைவு சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கு.
ஒவ்வொருவரையும் ஷாக் அடிக்கும் வயரால் இணைத்திருப்பார்கள்.
சுவிட்ச் உங்கள் கையில், இரக்கமற்ற(ruthless) முடிவை எடுத்தால் ஷாக்காகும்.
சுவர் சுவிட்ச் தட்டிச் செய்யும் கொலைகளை எளிதாக்கி விடுகிறது.
ஒரு சுவிட்ச் தட்டப்பட்டதும் வீட்டுக்குள் என்ன நடந்தால் யாருக்கென்ன?
சுவிட்ச் வீட்டில் ஏற்படுத்தும் விளைவுகளை குறிப்புகளில் மீண்டும் படித்தேன்.
டிஸ்கவரியில் எலிகளின் மேல் கேமரா கட்டி வலைக்குள் விடுவார்கள்.
படித்ததும் அக்காட்சி மனதில் ஓடியது, வேறு அனுபவம் எனக்கில்லை.
வானமே பெரும் சுவராக ஆகிப்போயிருக்கிறது.
வானின் கீழ் நடப்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.
சுவிட்ச் போட்டதும் மின்னலடித்து மழையாகப் பொழிவது போல் காட்டுகிறார்கள்.
அடோனிஸின் வெடிகுண்டின் விட்டம் என்ற கவிதையை தேடிப்படித்தேன்.
என்ன மழை விழுந்தாலும் முளைப்பது எழுத்து என்று தோன்றியது.
நாட்குறிப்பு 46/50 - பட்டாம்பூச்சியின் கனம்
நேற்று எதிர் வீட்டுப் பெண் அழைப்பிதழுடன் வந்திருந்தார்.
மகள் வயதடைந்து விட்டார், இரண்டு வாரத்தில் விழா.
இரண்டு நாள் முன் ஹோலி விளையாடிய அந்தக் குழந்தை.
காரைக்குடியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பம்.
கணவருக்கு துபாயில் வேலை , அடிக்கடி இங்கு வந்து செல்பவர்.
போர் ஆரம்பித்த நாள் ஓமன் செல்ல விமானத்தில் இருந்திருக்கிறார்.
இப்போதும் திரும்ப வழியின்றி அங்கேயே இருக்கிறார்.
செய்தி பார்த்துக் கொண்டே இருப்பதாகவும், இன்னும் பயம்தான் என்றார்.
போரின் நடுவில் அருண் வந்துவிடுவாரா என்று கேட்டேன்.
இண்டிகோ விமானங்கள் இல்லை, டவுன்பஸ் போல வந்தால்தான் கணக்கென்றார் .
மூன்று டிக்கெட்டுகள் எடுத்திருப்பதாகவும் ஒன்றில் வந்து விடுவார் என்றார்.
படியிறங்கி மனைவியும் அவரும் இன்னும் மெதுவாய்ப் பேசிக்கொண்டார்கள்.
ஒரு வாரத்தில் அவர் வருவது தெளிவாய்த் தெரிய வேண்டும்.
அப்பா இல்லையானால் விழா ரத்தாகும்.
இது மகளின் முக்கிய நிபந்தனை.
நாட்குறிப்பு 47/50 - கவலைகளின் வரிசை
இரண்டு வார விடுப்பு முடிந்து அவர் நேற்று வந்துவிட்டார்.
இவர் வேலையின் சமன்பாட்டில் பதட்டமே பெருங்காயம்.
வெள்ளி சாயங்காலம் எதாவது வேலை சொல்லி விடுவார்.
வார இறுதியில் நிச்சயம் குறுஞ்செய்திகள் விடுவார்.
ஓரிரு பதில்களில் நிறுத்தமாட்டார், நாமே அவரை நிறுத்த வேண்டும்.
பிறருக்கும் அவருக்கும் இன்னொரு வேறுபாடு இருக்கிறது.
நாம் பூவைப் பார்த்தால் , அவர் முள்ளை மட்டுமே பார்ப்பார்.
கீழே பார்த்து நடக்கலாம்.
கீழேயே பார்த்தால் நடக்க முடியாது.
நேற்று வந்தவுடன் வேலைகளை கவலைகளாகத் தொகுத்தார்.
அழகிய வண்ணத்துப்பூச்சி முட்கள் தேடி அமர்வது போல்.
தரவரிசை போட்டு பத்தில் மூன்றை அப்புறம் என்று புறந்தள்ளினார்.
மற்றதை நாளை மீண்டும் பார்க்கலாம் என்றார்.
காற்றில் திறந்து வைத்தால் வாடும் கவலைகளாக இருக்கலாம்.
நாட்குறிப்பு 49/50 - சிட்டுக்குருவியைக் கணித்தல்
நேற்று அந்த நெருங்கிய நண்பரைச் சந்தித்தேன்.
வேலையில்லாமல் இரண்டு வருடமும், மனைவியில்லாமல் இரண்டு மாதமும் ஆகிறது.
ஸ்டாக் டிரேடிங் முழுநேரமும் செய்கிறேன் என்றார்.
98% பங்குகளைக் கணிக்கும் அவரே எழுதிய நிரலியைக் காண்பித்தார்.
இரண்டு பெரிய கணித்திரைகளில் எண்கள் மழைபோல் விழுந்துகொண்டிருந்தன.
மலையிலும் சமவெளியுமாய் வெறிகொண்ட ஆறென வரி வரைபடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
எண்ணெய்ப் பிரச்சனை பங்குகளை இப்போது கீழ்நோக்கிச் செலுத்தியிருக்கிறது என்றார்.
சரிவுகளை கணித்துப் பணம் பண்ணுவதாய்ச் சொன்னார்.
கோப்புகளின் பெயர்கள் காலம் சிவநடனம் என்று செவ்வியலில் இருந்தன.
நேற்று எவ்வளவு சம்பாதித்தாய் என்னுடைய அடங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன்.
அதைக் கேட்கக்கூடாது, ஆசைப்படக்கூடாது மாதத்திற்குப் போதும் என்றார்.
ஒரு எழுத்தாளர் சொல்லி இச்சொற்களை பிற்பகல் கேட்டேன்.
சிட்டுக்குருவியின் விழுவதிலும் கடவுளின் சித்தம் இருக்கிறது.
விழும் என்றால் விழாது; விழாது என்றால் விழும்;
தயார் நிலை தான் எல்லாம்.
நாட்குறிப்பு 50/50 - JCB ஷோரூம்
இன்று நகரில் முதல்முறை ஒரு JCB ஷோரூம் பார்த்தேன்.
பக்கத்தில் ஹூண்டாய் கார் ஷோரூம்.
பலவகை அளவுகளில் JCB-க்கள் நின்றிருந்தன.
என்னுடைய ஆச்சரியம் இது இவ்வளவு பக்கத்தில் வந்துவிட்டது.
வீட்டின் சுவரின் பின்னால் JCB உறுமல் கேட்டவாறு இருக்கிறது.
ஒரே டிரைவர் தனியாய் வானம் தோண்டுகிறார்.
பத்துநாளில் சாலையில் ரோஜாத்தோட்டம் அழிந்து டைல்ஸ் கடையாகிவிட்டது.
ஒரு திரைபோட்டு எடுப்பது போல் காட்சி மாறிவிட்டது.
வீட்டில் நிறுத்தி வைக்கும் காலம் வருமோ என்று எண்ணினேன்.
மனித முன்னேற்றம் கால்கள் கைகளாய் ஆனபோது துவங்கியது என்பார்கள்.
JCBக்கு முழு உடம்பும் கைகள்.
JCB-ஐப் பற்றி இவ்வளவு நினைக்க வைத்தது ஒரு படம்.
கடந்த வாரம் ஈரானில் மகளிர் துவக்கப்பள்ளியில் குண்டு விழுந்திருக்கிறது.
168 குழந்தைகள் பலியாயிருந்த செய்தியில் சவக்குழிகளின் செயற்கைகோள் படம் .
ஒன்றுபோல் கச்சிதமான சவக்குழிகள் தோண்டும் மூன்று JCB-க்கள் .
Comments
Post a Comment