Skip to main content

பிறந்த நாள் குறிப்புகள்

 பிறந்த நாள் குறிப்புகள் 



[1]

(முன்னறிவிப்பு  : இது ஒரு படத்தொகுப்பு போலவோ  , இல்லை உதிர்ந்த பூக்கள் போலவோ இருக்கலாம். அப்படி இருந்தால் என் மனநிலையை சரியாய் பிரதிபலித்தது என்று கொள்வேன்)

'முத்தான முத்தல்லவோ

மிதந்து வந்த முத்தல்லவோ

கட்டான மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ...'


https://www.youtube.com/watch?v=I2f66z7dUU0


இன்று இந்தப் பாட்டு காதில் படுவது தற்செயல் என்று கடந்து போகலாம்.
இப்போது இது காதில் விழ ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அதை ஒதுக்கித் தள்ள மனம் இல்லை.

இரண்டு நாள் பின்னோக்கிப் போக வேண்டும்.


நடை பாதையில் செர்ரிப்  பூக்கள் நுரை போல் இன்னும் பூத்துக் கொண்டிருக்கின்றன. 
செங்கொன்றைகள் தலை காட்ட ஆரம்பித்துள்ளன.
குடியிருப்பின் மாந்தோட்டம் பூத்துத் தள்ளுகிறது. 
வண்டுகள் அமர்ந்த இலைகள் கரும்புள்ளிகள் கொண்டிருக்கிறது. 
இரண்டு நாள் முன் பெய்த மழையில் மாவடுக்கள் நிலத்தில் உதிர்ந்திருக்கிறன்றன.
சிறு சேவலோ கோழியோ போல கிளிமூக்கு மாங்காய் தோன்றும் எனக்கு.

'அம்மா இருந்தா பொறுக்கி மாவடு போடுவாங்க ' என்றாள் அவள்.

'சரி , பொறுக்குவோம் ' என்றேன். 

இருவரும் இரண்டு நாள் நடையில் அரைக்கிலோ மாம்பிஞ்சுகளை பொறுக்கினோம். 


இன்று காலையில் அவள் மாவடு செய்முறை யூடூபில் துழாவிக்கொண்டிருந்தாள். 

நான் Inner Life of Animals படித்துக்கொண்டிருந்தேன்.


'மாவடு கண்ணல்லவோ ..மைனாவின் மொழியல்லவோ..முத்தான முத்தல்லவோ'

அம்மாவுடன் யூடுப் சானல் நடத்தும் அந்தப் பாடகர் பாடிய வரி.

பின்னர் முழுப்பாடலையும் போட்டுக் கேட்டேன்.
கண்ணதாசன் எனக்குச் சொல்வது போல் கற்பனை செய்துகொண்டேன், கிளர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக 'கடவுள் தந்த பொருளல்லவோ' என்ற வரி.  என்னை எழுச்சி கொள்ளச் செய்தது.
எல்லோரும் கடவுளின் பொருள்கள் தான் அல்லவா? 

நடுவீட்டில் இந்தப் பாடலை சிலமுறை போட்டேன்.

'அப்பா ..திஸ் இஸ் டூ மச்...இது பேபி சாங் ' என்றான் பையன். 

இன்னும் பொருத்தம் என்று நினைத்தேன். இனிமேல் மனதால் பின்னால் சென்று குழந்தையானால் மகிழ்ச்சி.

பூவின் மணமும் , பொன்போன்ற குணமும், செம்மாதுளை திறந்து வரும் சிரிப்பும் , சிறகு கொண்ட பறவையுமானால் குழந்தையாக மட்டுமே இருக்க முடியும்.

'இன்னைலேருந்து அப்பா வயசு ரிவேர்ஸ்ல கவுன்ட் பண்ணுவோம்..ஒவ்வொரு வருஷமா கடைசில பேபி ஆகட்டும்' என்று சிரிப்பு.

' என் புக்ல ஒன்ன பிரீக் ன்னு தான் எழுதுவேன்ப்பா'   


[2]

Inner Life of Animals , Peter Wohllben விலங்குகளுக்கு நன்றியுணர்ச்சி, அன்பு, கள்ளம், எல்லாம் உண்டா என்று ஆராய்கிறார். 

விலங்குகளின் மீதும், பறவைகளின் மீதும் மனிதன் தன் உணர்வுகளை ஏற்றி வைக்கிறான்.

அவற்றிற்கு நம் காட்டும் உணர்வுகள் எதாவது தெரியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.  ஆனால் அன்பு உள்பட எல்லா உணர்வுகளும் hardwired. உதாரணமாக oxytocin பல விலங்குகளில் இருப்பத்தைச் சொல்கிறார். இது சக விலங்கின் மேல் காட்டும் நம்பிக்கையின்  அன்பின் அடிப்படை. பயங்கரமாக நான் நினைக்கும் bull dog , அன்புக்கு அதிகம் கட்டுப்படும் நாய் என்று சொல்கிறார். நானும் இப்படி bull dog போல கரடு முரடாக இருந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லியாக வேண்டும். வாழ்த்துக்களை அன்பென்று எடுத்துக் கொள்கிறேன்.


[3]

சென்ற நாட்களில் பத்து சிறுகதைகள் படித்திருப்பேன். 

ஜெ எழுதிய வனம் என்ற கதை பைத்திய ஆஸ்பத்திரியில் நிகழ்வது. துங்கபத்ரா நதிக்கரையில் இருக்கிறது.

பெரியவர் புத்திசுவாதீனம் இல்லாதவர். தினமும் ஆலமரத்தைப் பார்த்தபடி இருக்கிறார்.ஆலமரம் (போதி) அறிவின் உருவகம்.

கதையில் காகம் அவரிடம் பேசுகிறது. காகம் இருளைக் குறிக்கும்.

துக்கமான ஜீவன்கள் மரத்தைப் பார்க்கின்றன. மரத்தைப் பார்க்காதே, நதியைப் பார்த்திருக்கிறாயா? என்று கேட்கிறது.

வானத்தைப் பார் , பறந்து வா. ஆல மரத்தின் கீழ் ஞானம் பெற்றவர் நிம்மதியாக இறக்கவில்லை. யுதிஷ்டிரரையும், புத்தரையும் சொல்கிறது. புத்தரை நாய் தின்று இறந்தவர் என்கிறது. பூமியில் இன்பத்திற்கு இனி இடமில்லை, வானில் பற என்கிறது காகம்.

நான் துவாபர யுகத்தில் பாம்பாக பூமியில் ஊர்ந்தேன் . இப்போது கலியுகச் சின்னம். பறக்கிறேன் என்கிறது.

நானும் அன்றாட சிக்கல்களுக்கு மத்தியில் வானைப் பார்க்க பயின்று கொண்டிருக்கிறேன்.

பூமியின் பிரச்சனைகள் வானத்தில் செல்லாது. 


[4]

இதையெல்லாம் எழுதிவிட நினைத்தேன். நினைவுகளைக் கோர்த்துக்கொள்ள ஒரு மெது ஓட்டம் ஓடவேண்டும் போல் இருந்தது. 

ஓரிடத்தில் உடல் வியர்வை ட்ரெட்மில் பட்டையில் மின்னி விழுந்தபடி இருந்தது. இந்தத் துளிதான் முத்து என்று தோன்றியது.

வாழ்க்கைப் பட்டையில் செயலெனும் ஒரு துளி. அதற்கு மேல் எவ்வளவு பெரிய காரியத்திலும் எண்ணுவதற்கு ஒன்றும் இல்லை. செய்வதற்கே ஒரு துளி. பட்டை சுழன்று மேல் வரும்போது வியர்வைத் துளி காணாமல் ஆனது. அடுத்து அதில் ஏறுபவர் துளியும் அவ்வாறே. 

பதினோரு மணிக்கு கோவிலுக்குச் சென்றோம்.

நாராயணகட்டா வரதராஜர் கோவில். பையன் அப்பா அர்ச்சகர்கள். நுழையும் போது அவர் ஐபோன் அடித்தபடி இருந்தது. அர்ச்சகர் அவர் வேலையில் மும்முரமாக இருந்தார். சோடச உபச்சாரம் நடந்தது. டூ வீலர் பூஜை போட்ட மூன்று பேர் சேர்த்து ஐந்து பேர். வரதராஜர் மேல் மட்டும் அர்ச்சகர் நோக்கம் இருந்தது.

திடீரென, அர்ச்சகர் பையன்  வேஷ்டியில் அக்கினிக் குஞ்சு பின்னால் தொற்றியிருந்தது. இவள் 'நெருப்பு , நெருப்பு ' என்று கூவினாள். அதற்குள் அவருக்கும் லேசாய் சுட்டுவிட்டது. அக்கினிக் குஞ்சை அணைத்தார். ஒவ்வொரு வயதாவதும் அப்படித்தான் என்று நினைத்தேன். ஒரு சிறிய நெருப்புத் துளி பற்றுவது. மேலே சொன்ன இரண்டு துளிகளுக்கு இடையே வாழ்க்கை என்று தோன்றியது.

எல்லாம் முடிந்து கன்னட உச்சரிப்பில் பல்லாண்டு பல்லாண்டு பிரபந்தம் பாடினார். படியிறங்கி வார்த்தைகள் உருண்டு என்னை நோக்கி வருவதாக எண்ணினேன்.

'ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கு அறிய..'


தமிழ்நாட்டில் பிறந்து , பெங்களூரில் வயதில் பாதிக்கு மேல் அடைக்கலமாகி, கன்னட அர்ச்சகர் வாயால் தமிழ் பல்லாண்டு இன்று காதில் விழுவது. இதுவும் தற்செயல் தான் என்று சொல்லலாம். அப்படியே இருக்கட்டும்.

எல்லாம் கடவுள் தந்த பொருளாக இருந்துவிட்டுப் போகட்டும்.   

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...