Skip to main content

விடையேறி நங்கள் பரமன், IBM 1620(சிறுகதை)

how about

விடையேறி நங்கள் பரமன், IBM 1620

-----------------------------------------------



ஜூலை 19 1963.

'புரொபஸர் ஹாரி ஹஸ்கி சார்ட்டர்ட் பிளைட் டெல்லி வந்தாச்சு..கஸ்டம்ஸ்ல சின்னச் சிக்கல்ன்னு காலம்பற ட்ரங்க் கால்' 

பேராசிரியர் ராஜாராமன் கேசவனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் அறையில் நுழைந்தேன்..

'டாக்குமெண்ட்ஸ் ஷிப் பண்ண மறந்துட்டாராம்...பைனான்ஸ் செக்ரடரிய லைன்ல பிடிங்கோ ... அவா சப்போர்ட் கமிட் பண்ணிருக்கா'

நாக்பூர் IIT ஆசிரியர்களின் அறை வெள்ளிக்கிழமை அன்று விழித்துக்கொண்டது.

ராஜாராமனும் அவரது மாணவர்கள் நாங்கள் எதிர்பார்த்திருப்பது IBM 1620. நான் அதில் மின்பொறித்துறையின் மாணவன்.

'சார் , நீங்க சொன்ன மாதிரி இருபது பேர் டீம் ரெடி' என்றேன்.

இன்று இந்தியாவில் மொத்தம் பத்து கணிப்பொறிகள் இருந்தால் அதிகம். 

இந்தக் கதையை ராஜாராமன் வகுப்பில் சொல்லியிருக்கிறார்.

'நாம இன்னிக்கு கம்ப்யூட்டர் பாக்கணும்னா கல்கத்தா இந்தியன் ஸ்டாடிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடூட் போகணும்..மஹலனோபிஸ் டீம்ல BTM HEC-2M மெஷின் ...1954 பிரிட்டிஷ் இம்போர்ட்டட்...அப்புறமா நாலு வருஷம் கழிச்சு வந்த URAL-1 ரஷ்யன் கம்ப்யூட்டர்'

'இதுல ப்ரோக்ராம் எழுதுறது கஷ்டம்... அசெம்பிளியில் எழுதனும்.. சுருக்கமாய் பெருக்கல் வகுத்தல் வராது. எல்லா கணக்குகளையும்  கூட்டலும் கழித்தலுமாக மாத்தனும் . கல்வெட்டு எழுதுக்கள  நீங்க நினைச்சுக்கலாம் ' 

கரும்பலகையில் ஸ்டோர் ,மூவ் , காபி , கழித்தல், வைத்து நிரல் ஒன்றை  எழுதிக் காண்பித்தார்.

'அப்புறமா எழுதினத கார்ட்ல பஞ்ச் பண்ணனும்... . வரிக்கு ஒரு அட்டை.... அட்டைகளை அடுக்கி ஆபரேட்டரிடம் கொடுத்தா அவர் கார்டு ரீடர் வச்சுப் படிப்பார்..வரிசை முக்கியம்... திரை விக்கி நின்னா  அட்டையை சரிபார்த்து திருப்பி எழுதனும் . தப்புகளை மேனுவல் பாத்து சரி பண்ணனும்.. URAL மேனுவல் ரஷ்யன் மொழில இருக்கும்...பிரிட்டிஷ்காரன் கொஞ்ச நாள் நம்மூருக்கு சப்போர்ட்டுக்கு  வரமாட்டான்..இனிமே நம்ம டர்ன் ... ' சொல்லி  வெடித்துச் சிரித்தார்.

ராஜாராமன் அமெரிக்கா MIT -ல் ஸ்காலர்ஷிப்பில் படித்தவர். முதுகலைப் பட்டம் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம். கணிப்பொறித் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்றவர்.  பேராசிரியர் ஹஸ்கி இவரது வழிகாட்டி. 

இந்திய அமெரிக்க நல்லுறவை மேம்படுத்த தொழில்நுட்பம் இப்போது முக்கியக் கருவி. நேருவின் அரசாங்கம் நடுநிலையில் நிற்கிறது. அணிசேராக் கொள்கை. ருஷ்யாவிடம் இருந்து நம்மை இழுக்க அமெரிக்கா முயல்கிறது. நேருவும்  கென்னடியும் சந்தித்த போது கையெழுத்தானது இந்த IIT உருவாக்கம். ராஜராமனை ஹஸ்கி இதற்காக இந்தியா திரும்ப வைத்திருக்கிறார். ஹஸ்கி இன்றைய கணிப்பொறித் துரையின் தந்தை என்பார் ராஜாராமன். முதல் கணினியை வடிவமைத்த ENIAC குழுவில் இருந்தவர். ஆலன் டூரிங்கை நன்கு தெரிந்தவர்.

1959 தேசிய மாதிரிக் கணக்கெடுப்பில் கணிப்பொறிப் பயன்பாடு  வந்துவிட்டது என்றார். பக்ராநங்கல் அணையின் நீர் அழுத்தச் சோதனைகள் , கரை பாதுகாப்புச் சோதனைகள் கணிப்பொறியால் செய்யப்படுகின்றன.  மொத்த அணையையும் கட்டங்களாகப் பிரிப்பார்கள். லாப்லாஸ் விதியை வகையீட்டுச் சமன்பாடுகளாக அசெம்பிளியில் எழுதுவார்கள் என்றார் 

ராஜாராமன் வகுப்பென்றால் கதைகள். காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்குச் சென்றதைச் சொல்வார். எவ்வளவு சன்னமான குரல் அந்த மனிதருக்குள். ஆனால் எத்தனை வலிமை என்பார். கல்கியின் ரசிகர் பொன்னியின் செல்வன் தனக்கு கடல் கடக்கச் கற்றுக்கொடுத்தது என்பார் . சோழர்களுடையது வலிமையான , அகண்ட தேசக் கனவு  எனக் கூறுவார்.

'இன்னிக்கு அமெரிக்கா ஜெர்மனில நடக்கறது தொழில் புரட்சியோட அடுத்த கட்டம்...ஜெர்மனி கெமிக்கல்ஸ் பின்னால ஓடறது...விவசாய விரிவாக்கம்னு BASF ..Bayer  ன்னு கம்பெனிகள் முக்கியமான ஆராய்ச்சிகள் பண்றது.. கம்ப்யூட்டர்ஸ் பின்னால ஓடறது...பெல் லேப்ஸ் யூனிவெர்சிட்டிஸோட ஒர்க் பண்றது...நாம இந்த கப்பல மிஸ் பண்ணக்கூடாது...'

ராஜராமனின் கனவு கணிப்பொறிக் கல்வியை மாணவர்களிடம் சேர்ப்பது. சமுதாயத்தில் சேர்ப்பது. 

அவர்  இருக்கையில் இருந்து எழுந்ததும்` நாங்களும் எழுந்தோம். எலெக்ட்ரிக்கல் துறையின் தாழ்வாரத்தில் நின்று பார்த்தார். எந்தக் கட்டிடமும் முழுதாய் முடியவில்லை.ஒரு வருடமாய் வேலை நடந்துகொண்டிருக்கிறது. சில வகுப்பறைகள் மட்டுமே முடிந்திருக்கின்றன. ஆடிட்டோரியம் முடியவில்லை. சில மாதங்கள் முன் அமெரிக்கத் தூதர் வந்துவிட்டுப் போனார். இந்த இடத்தில் எப்படி வெளிநாட்டுப் பேராசிரியர்களை தங்க வைக்கப் போகிறோம் என்பதை கேட்காமல் கேட்டார் . எல்லோருக்கும் வருகையை துரிதப்படுத்தி கடிதங்கள் அனுப்பினார். IBM 1620 இங்கே நிறுவுவது முதல்  குறிக்கோள்.

அவர்களிடம் இருந்து கற்பது ராஜாராமனின் குறிக்கோள். மரம் ஒன்றை நடுவது போல், என்றாவது வனமாகும் நம்பிக்கை. அவருள் இருந்தது கட்டில்லா வனம்.

'ஹஸ்கியோட நாலு பேர் ...குவாட்டர்ஸ் ரெடியாக நாள் செல்லும்...' என்றார் ராஜாராமன்.

'பிரைவேட் ரெசிடென்ஸ் புக் பண்ணியாச்சு..இங்கிலிஷ் பேசற ஹவுஸ் மெய்ட்ஸ் அப்பாய்ண்ட் பண்ணியாச்சு' கேசவன் சொன்னார் .

'அவங்களுக்கு நாலு வார வீக் எண்ட் பிளான் பண்ணிடனும் நம்ம...'

'கஜுராஹோ , நம்மூர் ஜூ யானைச் சவாரி அப்புறம் இருக்கவே இருக்கு இமயமலை...'

'அப்புறமா அவாளே பையத் தூக்கிண்டு கிளம்பிடுவா...ஆரம்பிச்சு விட்டாப் போறும்..'

அவர் தலைக்குள் நிறைய ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

'ட்ரைனிங்ஸ்... ட்ரைனிங்ஸ்...இன்னும் ட்ரைனிங்ஸ்...இது மட்டுந்தான்  அவா இங்கே இருக்கறச்சே நமக்கு ஒரே வேலை...1620ல போர்ட்ரான் கம்பைலர்...a = b + c ன்னு எழுத்திட்டுப் போய்டலாம்...ஹஸ்கி எங்கிட்ட சொன்னார்...இது கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்க்கு மட்டும் இல்ல..எல்லோரும் கத்துக்கணும்னு சொல்லியிருக்கார்...எல்லா வகுப்புக்கும் அவரோட  ட்ரைனிங்ஸ் ஆர்கனைஸ் பண்ணனும்...அட்டவணை போட்டு அவா கைல கொடுத்துடனும்...' 

கேட்டுக்கொண்டே வராண்டாவில் நடந்தோம்.

'லேப் 24மணி நேரமும் ஓடணும்...ஜெனெரேட்டர் முக்கியம்...ac ஓடிண்டே இருக்கணும்...பஞ்ச் கார்ட்ஸ் எல்லாம் ஸ்டாக் இருக்கணும்...IBM சப்போர்ட் என்ஜினீயர்ஸ் உள்ளேயே இருக்கணும்..'

மறுபடியும் ஹஸ்கியின்  ட்ரங்க் கால். 

ஹஸ்கி கான்பூர் விமானப்படை விமானதளத்தில் இறங்கிவிட்டார். ராஜராமன் வணிக ஓடுதளம் சிறியது என்பதால் விமானப்படை ஓடுதளத்தில் இறங்க அனுமதி பெற்றிருந்தார். 

அங்கிருந்து முப்பதே கிலோமீட்டர் கான்பூர் IIT இருக்கும் கல்யாண்புர்.

எல்லோரும் மௌனமானோம். அவர்கள் மணி நேரத்தில்  இங்கே நுழையலாம். எல்லாம் ஒருங்க வைத்தது போலேயே இருந்தது. 

'பிழையில்லாமல் எதுவும் உலகத்துல நடக்காது...செய்ய வேண்டியத செஞ்சாச்சு..பிழை நடக்கும்போது எவ்வளவு சீக்கிரம் சரி பண்றோம்ங்கிறதுல மீதி நாள்  இருக்கு...'

திறந்த தகரக் கதவுகளின் வெளியே நீண்ட செம்மண் சாலை. அங்கங்கே பூமியின் சிவந்த கண்கள் போல்  செம்மண்ணில் நீர் தேங்கியிருந்தது. சில நாள்களாக ஒரே மழை. கட்டிட வேலை நடப்பதால் உள்ளே போர்க்களம் போல் இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் கம்பிகள். படுத்திருந்தவை, நின்றிருந்தவை, வளைந்த கம்பிகள். அப்புறம் சவுக்கு மரக் கட்டைகள். கட்டிடத்திற்கு சட்டை போட்ட மாதிரி எங்கும்.

வெஸ்டர்ன் லேப் என்ற மேற்குக்  கட்டிடத்தில்  IBM 1620 -ஐ வைப்பதாகத் திட்டம். பேர் வைத்தாயிற்று. ஆனால் கட்டிடம் பாதி முடிந்திருக்கிறது. அதுவும் இன்னும் சவுக்குச் சட்டை போட்டே  இருக்கிறது. போன வாரம் வரை மழைக்கு ஒழுகியது. 

அமெரிக்காவில் எதுவும் இவ்வளவு கடினமாக இல்லை. இந்தியா திரும்பிய நாள் தன்னுள் வந்த எழுச்சியை இப்போது சொல் எனக் கேட்டார் . டெல்லியில் மாமாவின் கை பிடித்து கேட்ட காந்தியின்  பிரார்த்தனைக் கூட்டங்கள் நினைவில் வந்தன. அந்த மனிதர் இவ்வளவு காரியங்களை எப்படிச் செய்தார்.  நம்மாட்களை வைத்துக் கொண்டு அவர்களுடன் எப்படி பாய்ச்சலை நடத்துவது என்பதே அவர் மனதுள் ஓடியது. காந்தி எப்போதும் தன் வேலையை மட்டும் உண்மையாகச் செய்வதாக மாமா சொல்லியிருக்கிறார்.

ராஜாராமனின் கண்கள் விரிந்தன. 

நீல வெளியில் இரண்டு ஏர்போர்ட் ட்ரக்குகள் மஞ்சள் வாத்துகள் போல் ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்தன. நிற்கிறதா நகர்கிறதா என்பதைக் கணிக்க முடியவில்லை. கூர்ந்து பார்க்கும் போது மரங்கள் மெதுவாய் பின் சென்று கொண்டே இருந்தன. அதன் பின்னால் பெட்டிகளை இறக்கி ஏற்றும் சிறிய வண்டி வந்தது. அதன் பின்னால் மூன்று அம்பாசடர் கார்கள் வந்தன. ஹஸ்கி பின்னால் தான் வருவார் . அவருக்கு பெட்டிகளின் பாதுகாப்பு முக்கியம்.

நாங்கள் படியிறங்கிச் சென்றோம். ஏர்போர்ட் ட்ரக்குகள் கதவை நெருங்கின. இடதுபுறம் சைகை காட்டி வெஸ்டர்ன் லேப் நோக்கி ஓடப் போனேன். கேசவனும் .

ஆனால் எல்லா வண்டிகளும் நின்று விட்டன. 

ஹஸ்கி முதலில் இறங்கினார். பின்னர் ஆக்டன் , ஜியோ, இர்விங். 

நாங்கள் வாயிற் கதவை நோக்கி ஓடினோம்.

வண்டியைத் தொடர்ந்து கூட்டம் கூடி விட்டிருந்ததது. வேலையாட்கள் வேலையை விட்டு குழும ஆரம்பித்தார்கள்.

ஹஸ்கி ராஜாராமனை கட்டித் தழுவினார். ஆக்டனை அவருக்குத் தெரிந்தது. மற்ற இருவரையும் ஹஸ்கி அறிமுகப் படுத்தினார். ஸ்டான்போர்ட், ப்ரின்ஸ்ட்டன் பேராசிரியர்கள்.

ஹஸ்கியை தவிர மற்ற மூவரும் மேல் கோட் அணிந்திருந்தனர். நால்வருக்கும் இந்தியா முதல்முறை.

'VR  , வி ஹாவ் எ ஸ்மால் ப்ராப்ளம்' என்றார் ஹஸ்கி. அவரை VR என்றே அழைத்தார்.

நுழைவாயிலில் இருந்து வெஸ்டர்ன் லேப் வரை தேங்கியிருந்த தண்ணீரையும் , குழிகளையும் இடுப்பில் கை வைத்துப் பார்த்தபடி இருந்தார்.

செம்மண் சகதியின் கசந்த வாசனை அடித்தது. சாயங்காலம் மழை வரப் போகும் போல வெக்கை. காற்றில்லாத நிசப்தம்.

'எப்படி இதில் வண்டி போகும் VR ...இவ்வளவு தூரம் கடவுள் காப்பாற்றினார்...லாஸ்ட் மைல் ரிஸ்க் ?' என்றார். 

ராஜாராமனும் கவலையடைந்தார். வாயிலில் இருந்து ஐம்பதடி வரை டிரக் செல்லமுடியும். அப்புறம் எழுந்து கொண்டிருக்கும் லெக்ட்சர் ஹால்  கட்டிடம் கடந்து பின்புறமாக வெஸ்டர்ன் லேபில் நுழைய வேண்டும். 

ஹால் 1 ல் கட்டி முடிக்கப்பட்ட அறையில் ஏற்ற வேண்டும். வண்டியில்லாமல் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

'VR குழிகள் எவ்வளவு ஆழம்னு தெரியல...டிரக் எடுத்துட்டுப்போறது ரொம்ப  ரிஸ்க்...ஆக்ஸிலரேட்டர் பிரஸ் பண்ணாம ஏறாது... டேமேஜ் ஆக உண்மையான சான்ஸ் இருக்கு...கட்டிக் காப்பாத்தின எல்லாம் வீணாகும்...நாங்க எல்லாம் ரிடர்ன் டிக்கெட் போட வேண்டியதுதான்...இன்னொன்னு இந்த ஜென்மத்துல கிடைக்காது...ஏர் மெயில்  போட்டே உன்னோட  கை ஒடியும்...பிராக்டிகல் கிளாஸ் இல்லாம கம்ப்யூட்டர் கிளாஸ் பண்றது வேஸ்ட்..ஓவர் டு யூ   ' என்று சிரித்தார்.

ராஜராமனுக்கு இவ்வளவு வந்து கை நழுவிப் போய் விடுமோ. இரண்டு  மூன்று தினங்கள் வேறு எங்காவது நிறுத்தி எடுத்து வரலாமா. யோசனைகள் முக்கியம். குறிப்பாய் நிதானமான யோசனைகள்.வண்டிகளை மற்றுமோர் முறை பார்த்தார். நாலு பெட்டிகளும் யானை அளவுக்கு இருக்கிறன்றன. மூன்று டேப் டிரைவ், கேபினட் மெஷின் , கன்சோல் திரை, கார்டு ரீடர், கார்டு பஞ்ச். குடும்பி போல் வந்திருக்கிறது. 

இல்லை இன்றே நாள் என தனக்குச் சொல்லிக்கொண்டார். 

'கேசவன் , ஒரு டயர் மாட்டு வண்டிக்கு ஏற்பாடு பண்ணுவோம்...நாலு டயர் இருக்கற ரெட்டை மாட்டு வண்டி ஊருக்குள்ள பார்த்திருக்கேன்... நீளமான பார மேடை இருக்கும்...அது ஒன்னு வேணும் நமக்கு இப்போ'

எல்லோரும் திகைத்துப் போய் அவரைப் பார்த்தனர்.

'மாட்டு வண்டில அன் லோடிங் வண்டிய வச்சு ஏத்துங்கோ...ரெண்டு பெட்டி ஒரு ட்ரிப்ல....ரெண்டு ட்ரிப் ஆகும்...வண்டி குழில  இறங்கறச்சே நம்ம பசங்கள இழுத்துப் பிடிச்சு கயிற மெதுவா விடறாப்ல விட்டு வண்டிய பள்ளத்துல இறக்கணும்...ஒவ்வொரு பள்ளமா நிதானமா நம்பூர்ல தேர் ஓட்டறா மாதிரி இழுத்துக் கொண்டு போகணும்...காளை மாடு முன்னால இழுக்கும்...நாம பத்துப்பேர் பின்னால இழுக்கனும்...சரியாய் வரும்னு தோணறது'  ராஜாராமன் சொன்னார்.

ஹஸ்கியிடம் அவரே சென்று திட்டத்தை விளக்கினார்.

மாட்டுவண்டி உள்ளே நுழைந்தது. ஏற்றி இறக்கும் வண்டி பெட்டிகளை ஒன்றொன்றாய் பன்றி அகழ்வது போல் மூக்கில் தூக்கியது. 

மாட்டு வண்டியை கற்கள் போட்டு நகராமல் பார்த்துக் கொண்டனர்.

சிறு தேர் ஊர்வது போல் இரண்டு பெட்டிகள் மேலேறி மாட்டு வண்டியில் அசைந்து சென்றன. 

'தேர் போறாப்லயே  இருக்கு ' என்று கேசவனிடம் சொன்னார். 

'ஜோடியாப் போறது... விடை அமர் கொடியினான் ' என்றார்.

'அடைவு இலோம்” என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!

விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,

கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் 

பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே', தேவாரம் பாடினார்.

நமக்கு கதியில்லை என்று கவலைப்படாதே; அன்னை பார்வதியுடன் சிவபெருமான் சீர்காழியில் நமக்காகக் காத்திருக்கிறார்ன்னு சம்பந்தர் சொல்றார்' என்று சொல்லிச் சிரித்தார். 

இதை கேசவன் ஹஸ்கியிடம் ஆங்கிலத்தில் விளக்கினார்.

இரண்டாம் முறை பெட்டிகளை எடுக்க எருதுகள் திரும்பின. 

'காளைன்னா கம்பீரம்...அசெம்பிளி இருந்து போர்ட்ரானுக்கு போறது பாய்ச்சல்....இது காளை மேல ஏறினா  பாய்ச்சலாத்தான் இருக்கணும் நம்மூர்ல '  என்றார். ஹஸ்கி மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருந்தார். 

பெட்டிகளை ஏற்றி இறக்கும் வண்டி அடுத்த வேலைக்கு தயாராய் முன் வந்தது. மீண்டும் மாட்டு வண்டி நகர ஆரம்பித்தது. ஜோர் லகோவ் ஹேசா பக்கத்திற்குப் வண்டியில் கட்டிய கயிற்றைப் பத்துப் பேர் இழுத்தனர். காளைகள்  மூக்கை விடைத்து முகத்தை வானத்தை நோக்கி விளித்தன. அதனால் சில இடங்களில் ஒவ்வொரு அடியாய் மட்டுமே வைக்க முடிந்தது. முடிவாய் நான்கு பெட்டிகளும் வெஸ்டர்ன் லேப் வாசலை அடைந்தன.

ஹஸ்கிக்கு இனிமேல் சமாளித்து மேலே ஏற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. ராஜாராமனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

'பயணம் எப்படி இருந்தது' என்று ராஜராமன் கேட்டார்.

'ஓ எஸ்...வேறென்ன, யோசித்துக்கொண்டிருந்தேன் VR , தூங்கினேன் சாப்பிட்டேன் ..இறங்கும் இடம் வந்தது'

'என்ன யோசித்தீர்கள்' 

'ஆலன் டூரிங் ஒரு பேப்பர் எழுதியிருக்கிறார். பெயர் டூரிங் டெஸ்ட்.. மெஷின் மனிதனை விடப் புத்திசாலி என்று  முடிவெடுக்க மனிதர் ஒரே கேள்வியை மனிதனிடமும் , மெஷினிடமும் கேட்க வேண்டும்...விடையை அவரால் பிரித்தறிய முடியவில்லையானால் அந்த இயந்திரம் இன்டெலிஜெண்ட் என்கிறார் டூரிங்...இப்படி ஒரு நாள் வருமா VR..இது தான் யோசித்தேன் ' 

கேசவன் ராஜராமன் காதில் இன்னொரு பிரச்சனை என்றார். 

IBM 1620 நுழைய வாசல் அகலமில்லை. வாசலை இடிக்க வேண்டும். சரியென்று ராஜாராமன் தலையாட்டினார்.சுவர் சரிந்து பெட்டி உள்ளே ஏறும் சத்தம் அவருள் கேட்க ஆரம்பித்தது.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...