சுந்தரிக்கு யார் பொறுப்பு?
---------------------------------
'இந்த நாய்க்கு ஏற்கனவே நியூட்ரலைஸ் பண்ணியிருக்கா , இல்லையா '
வேலை விட்டு வந்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன். இந்த வாட்சப் கேள்வி தூக்கி வாரிப்போட்டது.
இரண்டு மூன்று ஸ்க்ரோலில் விஷயம் தெளிவாகியது.
நியூட்ரலைஸ் என்றால் என்ன என்று மனைவியைக் கேட்டேன். விரைநீக்கம் என்றாள்.
கொஞ்சம் நிம்மதி. நான் நினைத்தது சுட்டுத் தள்ளுவது.
சுந்தரி பெண் நாயல்லவா ? என்னுடைய சந்தேகம் இதற்கு எப்படி விரை நீக்கம்.
டெஸ்டோஸ்டெரோன் ஆண் தொடர்பான விஷயம் அல்லவா?.
சுந்தரியை மனதில் நினைத்தால் எனக்கு ஒரு இளம் பன்றியின் நினைவு எழும், உடலின் சில இடங்களில் மேகம் போல் வெள்ளைத் தீற்றல். மற்றபடி பன்றியைப் போல் குனிந்தவாறு நடக்கும். பின்னால் கை கட்டி நடக்கும் ஒரு மூதாட்டியைப் போல். என் மகளைப் பார்த்து ஓடி வரும். CCTV -ல் படாமல் பிஸ்கட் துண்டு போடுவாள். பிரட் தின்பதில்லை. உணவு போட்டால் தரையில் சோற்றின் தடம் CCTV காட்டிக் கொடுக்கலாம்.
அடுத்த அடுத்த கொத்து கொத்தாய் சுந்தரியைப் பற்றிய வாட்சப்கள்.
'இந்த நாய ஒண்ணா வெளிய விரட்டணும்...இல்லன்னா விரைய காலி பண்ணனும்...இந்த நாய்க்கு யார் இங்க பொறுப்பு..'
ஐநூறு பேர் குரூப்பில் பலர் ++ போட ஆரம்பித்தனர்.
'இதுக்கு தடுப்பூசி போட்டிருக்கா..யார் இதுக்கு பாரென்ட்..கொஞ்சம் முன்னாடி வாங்க'
எனக்குத் தெரியும் சுந்தரியின் அம்மா முன்வர மாட்டார். ஏனென்றால் குரூப்பில் இருந்து வெளியேறி விட்டார். இதற்கு முன் என்ன சண்டையென்று தெரியாது. இவர் தான் சுந்தரிக்கு தனது வீட்டு முற்றத்தில் சாக்குகளை விரித்து படுக்கும் இடம் அமைத்திருக்கிறார். உணவுப் பொறுப்பை இவரும் எதிர் வீட்டு அம்மாவும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இதெல்லாம் கண்டும் காணாமல் செய்ய வேண்டும். சொசைட்டியின் பை லாஸ் வீட்டில் நாய்களை அனுமதிக்கிறது. கழுத்தில் கயிறு கட்டி கூட்டிச் செல்லலாம். ஆனால் தெரு நாய் இருக்க முடியாது. பெரும்பாலானோர் சொசைட்டியின் உள்ளே தான் காலால் நடப்பது. வெளியில் கார்கள் மட்டுமே. உள்ளேயும் காரில் செல்பவர்கள் இருக்கிறார்கள். சுற்றுச் சுவருக்குப் பின் தெருநாய்கள் இருப்பது யாருக்கும் பிரச்சனையில்லை.
சுந்தரியின் அம்மா, அதற்கு ஒரு கயிறைக் கழுத்தில் ஏன் கட்டி விடக்கூடாது. இது எனக்குப் பிடிபடாத ஒரு விஷயம். ஏற்கனவே ஒரு பிளட் ஹௌண்ட்ஸ் நாய் அவரிடம் இருக்கிறது. அதற்கு ஒரு நாய்க் காப்பாளர் இருக்கிறார். இது மட்டும் ஏன் பிரமாதம்.
இன்றோ நேற்றோ சுந்தரி சம்பந்தமாக ஏதோ நடந்திருக்கிறது.
நிறைய பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி வசிப்பவர்கள். தெருநாய் , ஸ்கூட்டர், பைக்குகள் கண்டால் பயம். ஆக்சிலரேட்டர் பெடலை முறுக்கினால் வீடியோ பார்த்து குரூப் வாட்சப் செய்து விடுவார்கள்.
இன்று சுந்தரி கிழிகிறது.
இன்னும் மேலே ஸ்க்ரோல் செய்தேன்.
'அன்னிக்கு நான் டாக் வாக் போறப்ப, இது என் பிரௌனிய தொரத்தித் தொல்லை பண்ணது...கட்டிப் போடாம பேரன்ட்ஸ் இல்லாம இத வெளிய தொரத்துங்க'
'இதுக்கு யாரு இன்னும் சாப்பாடு போடறது.. நிறுத்துங்கனு ஏற்கனவே சொல்லிருக்கோம்..பொறுப்பு யாரு.. வீட்டு நம்பரோட போடுங்க'
'இந்த நாய்க்கு சோஷல் பிகேவியர் கத்துக் கொடுத்திருக்கீங்களா...யாரு அதோட அம்மா அப்பா..ப்ளீஸ் கொஞ்சம் முன்னாடி வாங்க.'
நாய் படிக்கிறது என்பது எனக்கு இன்னும் ஆச்சரியம். அவளுடைய பழைய பள்ளியின் பக்கத்தில் ஒரு நாய்ப் பள்ளி இருப்பதை என் மகள் சொன்னாள். பின்னர்தான் , ஒரு நூறு நாய்கள் இருக்கும் கொட்டகை பார்த்தது நினைவில் வந்தது. நடுவில் சிக்கினால் எப்படி இருக்கும் என்று நினைக்கையில் உள்ளங்கால் கூசியது. குலைப்பும் ,ஓட்டமும், துரத்தலும் ஆக ஒரு பெரிய முற்றத்தில் நாய்கள் பயின்று கொண்டிருந்தன. உயர் ரக நாய்கள். கழுத்து வார் கழற்றப் பட்டிருந்ததால் ஓடிக்கொண்டே இருந்தன. மாஸ்டர்கள் பெரிய இரும்புத் தடிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால் எல்லாமும் இன்னுமொரு பெரிய வேலிக்குள்ளேயே இருந்தன. நாய்களை மாதக் கணக்கில் படிக்கவோ, தங்கவோ வைக்கலாம் என்று என் மகள் சொன்னாள்.
நடந்த விஷயம் இதுதான். நேற்று தெருவில் நடந்த ஒருவரை விரட்டியிருக்கிறது. பெரிய வேலை பார்ப்பவர். மனைவியுடன் போனவரை குலைத்துத் துரத்தியிருக்கிறது. அவர் தான் அன்றைய வாட்சப் உரையாடலை துவங்கியிருந்தார். சொசைட்டி பராமரிப்பவர்களை இப்போதே நீயூட்ரலைஸ் செய்யவோ, வெளியே துரத்தவோ கேட்டிருந்தார்.
எனக்கு சுந்தரி குலைத்தது அதிசயம். சும்மா சொல்கிறாரா? அது குலைத்து நான் பார்த்ததில்லை.வால் குழைத்து, உடம்பை நெளித்து, முன்னங்கால் மடித்து ,தரையில் கழுத்தை வைத்து ஊவ் என்று மெல்லிய குரலிடும். நெற்றியில் மகள் கை வைத்ததும் சுகமாய் கண்ணை மூடிவிடும்.
சுந்தரியின் பக்கம் சிலர் பேசியிருந்தார்கள்.
இந்த அம்மாள் HR துறையில் வேலை பார்க்கிறார்.
'இந்த சொசைட்டி கட்றதுக்கு முன்னாலேயே இந்த நாய் இங்க இருக்கு...2023ல நான் குடி வந்ததுல இருந்து இதப் பாக்கறேன்..சொல்லப்போனா நாம தான் அது இடத்தில இருக்கோம்...இத வெளில தள்றது நியாயம் இல்ல...அதே சமயம் அது உங்கள தொரத்தியிருக்கக்கூடாது '
இது அரசு வேலை ஒய்வு பெற்ற மலையாள தம்பதிகளின் வீட்டுக்கார அம்மாவின் மகள்.
'ஆமாம் +1 ..அதுக்காக அந்த அம்மாவ டார்கெட் பண்றது நல்லா இல்ல...இத்தனை வருஷமா அதைப் பாத்துக்கிட்டது பெரிய விஷயம்..அம்மா குரூப்ல இல்ல..அவங்கள இழுக்குறதுல பிரயஜோனம் இல்ல..'
வெளிநாட்டில் தெருநாய்கள் இல்லை. இது ஒரு துண்டு அந்த நாடு என்ற சொல் கேட்டு இந்த ஊருக்கு வந்திருந்தனர். மேலும் அவர்கள் புலம் பெயர்கையில் இவ்வளவு நாய்கள் இருந்திருக்காது. அவர்கள் விடுவதாய் இல்லை.
இன்னும் பெரிய மெசேஜ்கள்.
'குழந்தைகளோட சேப்டி எனக்கு முக்கியம்...சுப்ரீம் கோர்ட்டோட தெருநாய் தீர்ப்ப ஞாபகப் படுத்த விரும்பறேன்..பொது இடத்தில தெரு நாய் இருக்கக்கூடாதுங்கறது அதுல முக்கியம்...வெளிநாய் வராம பென்ஸ் போடணும்..சாப்பாடு போடறது தப்பு...முனிசிபாலிட்டி கூட்டிட்டு போய் பாத்துக்கணும்..லீகலா அது இருக்குறது தப்பு..நானே நாளைக்கு சொசைட்டி மேல கேஸ் போட முடியும்... '
தீர்ப்பையும் , இந்திய விலங்கு பராமரிப்புச் சட்டத்தையும் சுட்டிகளாக அனுப்பியிருந்தார். ஒரு வேளை வக்கீலாகவோ , சட்டம் தெரிந்தவராகவோ இருக்கலாம்.
இறுதியாக, சுந்தரியை அந்த அம்மாள் முழுப்பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டிரலைஸ் செய்து, சமூக நடத்தை பழக்கி, தடுப்பூசி போட்டு வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் சுவற்றுக்கு வெளியே உள்ள தெரு நாயாக ஆக்கி விட வேண்டும். இதை அமுல் படுத்த வேண்டிய பொறுப்பு நிர்வாகத்திடம் விடப்பட்டது.
அடுத்த நாள் மாலை மகளுடன் தெருவில் நடக்கையில், சுந்தரி புல் தரையில் சுகமாய் படுத்திருந்தது. அதன் அருகில் மேலும் கீழும் ஒரு கரிச்சான் குருவி தத்தி நடந்து கொண்டிருந்தது.
அந்த அம்மாள் வந்து குரல் கொடுத்ததும் எழுந்து ஓடியது. அதனுடைய உணவுத் தட்டைக் கை காட்டினார். வயிறார உண்டதும் அவர் காரின் திறந்த கதவைக் காட்டினார். அதற்கு கார் ஏறிப் பழக்கம் இருந்திருக்கவில்லை. சாக்கு மெத்தையை சுற்றி வந்து படுக்க நினைத்தது.
அந்த அம்மாள் உள்ளே போய் பிளட் ஹௌண்ட்ஸ் நாயை அழைத்து வந்தார். அது திறந்த காரில் என்றும் போல் நுழைந்தது. இதைக் கண்டதும் சுந்தரியும் ஏறி இருக்கையில் அமர்ந்து விட்டது.
வண்டி புறப்பட்டது. பள்ளிக்கூடத்திற்கோ , அடுத்த தெருவுக்கோ தெரியாது.
ஆனால் காரில் இருந்த சுந்தரிக்கு பெரிய ஆச்சரியம், தான் காலால் நடக்காமல் உலகம் நகர்வது.

Comments
Post a Comment