Translate

ஏற்றம் (சிறுகதை)

ஏற்றம்

                                                                                         (1)

சிவாவின் கார் கத்திப்பாரா மேம்பாலத்தை நெருங்கியிருந்தது. அழுத்திப் போய்க்கொண்டிருந்தான். 

ஐம்பது லட்சம் SUV. தோளில் சுமந்து போனால் விரைவில் போகலாம். இன்னும் நாலைந்து சிக்னல்கள். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் பக்கத்தில் சக்தி பேசுகிறான் என்று படித்தான். எப்படியும் சக்தியை கூட்டம் ஆரம்பிப்பதற்குள் தனியாய்ப் பார்த்து விட வேண்டும். சக்தியும் அவனும் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாய்ப் படித்தவர்கள். 

வண்டியை மண்டபத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி மேலே வந்தான். கோயில் போகும் தெரு பார்த்து கை உயர்த்திக் கும்பிட்டான். பணக்கவலை இல்லாமல் செய்ததற்கு ஒரு முறை. நடு வயதில் நீரிழிவு பிடிக்குள் இருக்கவேண்டி இன்னொன்று  என்று முனகினான். விழா முடிந்ததும் கோவில் பக்கம் போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். 

படியேறி மண்டபத்தை உள்ளே பார்த்தான். ஒரு ஐநூறு நாற்காலிகள் இருக்கும். பாதிக்கு மேல் தலைகளும் உடல்களும் அதில் இருந்தன. டிவி படம் பிடிப்பவர்கள் நடுவில் பாதையை காமெராவால் மறைத்திருந்தனர். சங்கரா டிவியில் வருகிறது என்றார்கள். 

முதல் வரிசையை அடைய ஓரம் எங்கிருக்கிறது என்று பார்த்தான்.  எல்லோரும் வயதானவர்கள். பெரும்பாலும் தம்பதிகள். கம்பனைப் பற்றிய தலைப்பு என்றார்கள். இதற்கு இவ்வளவு கூட்டமா என்று நினைத்தான். எண்ணி வழி தேடி முதல் வரிசையில் இடம் பார்த்தான். இரண்டாவது வரிசையில் இடம் கிடைத்தது. 

இப்போது சிவாவுக்கு இங்கு ஏன் வந்தோம் என்ற நினைப்பு எழுந்தது. வேலையை விட்டு இது என்ன அரிப்பு. அவன் வேலை பார்ப்பது கலையும் தொழில் நுட்பமும் இணையும் இடத்தில் இருப்பதாகச் சொல்லும் நிறுவனத்தில். உலகில் தனித்துத் துலங்கும் நிறுவனம். அதில் மேலாளர்.

அங்கு கலையும் தொழில் நுட்பமும் இணையும் புள்ளி என்று அடிக்கடி சொல்வார்கள் . அவனுக்குத்தான் அந்தப் புள்ளி எங்கிருக்கிறது என்று விளங்கவில்லை. நடுவில் இப்படி ஊசலாட்டமாய் இருக்கிறது. சக்திக்கு கலைப்புள்ளி வசப்பட்டிருக்கிறது. போராடி , கிழிபட்டு இங்கிருக்கிறான் என்கிறார்கள். 

சிவாவுக்கு தொழில்நுட்பம் என்ற புள்ளி வசப்பட்டதோ இல்லையோ, பணம் எனும் புள்ளி வசப்பட்டு வருகிறது. அதை வைத்து கலைப் புள்ளியை அருகில் இழுக்கலாமா என்று பார்க்கிறான். 

பின் இருக்கையில் இருந்தவர், 'சார் , பேச்சு ஆரம்பிச்சதும் தலையக் கொஞ்சம் குனிஞ்சுக்குங்க...பின்னால இருக்கிறவங்களுக்கு மறைக்கும்' என்றார். 

மேடையில் மையமாய் நடுவர் நாற்காலி. அதைச் சுற்றி நான்கு  நாற்காலிகள். எல்லாம் காலியாகவே இருந்தன. கம்பனில் சொல்வன்மை என்ற பேனர் பின்னால் திரையில் இருந்தது. கம்பர் கையில் சுவடிகளுடன் மார்பில் குறுக்கே போகும் மேல் துண்டுடன், மீசையுடன் இருக்கும் படம். கம்பன் கழக விழா. 

நடுவர் கம்பவாரிதி ஜெயராஜ். சக்தியையும் சேர்த்து ஐந்து பேச்சாளர்கள் மண்டபத்தில் நுழைந்தனர். கம்பவாரிதி முழுதும் காவியுடையில் , குபேரன் பொம்மை போல் அவனுக்குத் தோன்றியது. சிரித்தபடியும் இருந்தார். எல்லோரும் இருக்கையில் எழுந்து நடுப்பாதையில் குவிந்தனர். சில கைகுலுக்கல்களும் , வணக்கங்களுமாக அவர்கள் முன்னால் வந்து கொண்டிருந்தனர். கேமரா ஷட்டர் ஒலிகள் இணைந்து சிதறிய தனிக் கைதட்டல் போல் கேட்டது.

சிவாவும்  முன்னால் நடை பாதைக்கு வந்தான். சக்தியின் கண்ணில் விழுந்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட வேண்டும். 

முண்டியடித்து 'சக்தி ..நான் சிவா முகம் நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்..'. ஒரு கணம் முடி உதிர்ந்த  இவனை சக்தியின் கண்கள்  கண்டுகொண்டன. 'போன்ல பேசினது..உங்க குரல் மாறல..ஸ்கூல்ல பாத்த மூஞ்சிக்கு இந்த உடம்பு மேட்ச் ஆகல...அப்புறம் ஓய்வா இருக்கும்போது பேசலாம்..' . மரியாதை என்றால் தள்ளி இரு என்றும் அர்த்தம் இல்லையா.

நடுவயதில் சக்தியின் மீள் தொடர்பு கிடைத்தது மணியின் மூலம். அவன் தான் கூடப் படித்த எல்லோரும் சென்று இணையும் ஜங்ஷன் பெட்டி. 

இதற்கு முன்னால் சக்தியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறான்.  

அவர்கள் ஏறி மேடையில் அமர்ந்ததும் அரங்கம் முழுதும் சில நொடிகள்  அமைதி பரவியது. அவனைப் போல் காற்றைக் கையில் பிடிக்க எண்ணியர்வர்கள் என சிவா நினைத்தான். மேடையில் அமர்ந்து அவர்களாய் சிரித்தபடி இருந்தனர். மைக் அணைந்திருந்தது. ஒருவர் நடுவர் மைக்கையும், பேச்சுப் பெட்டி மைக்கையும் சரிபார்த்தார்.

கம்பவாரிதி பேச ஆரம்பித்தார். 

பேசாமல் இருப்பதுவே சால உத்தமம் என்று இந்நாட்களில் தோன்றுவதாகச் சொன்னார். பேசா அனுபூதி பிறந்ததுவே என்று அருணகிரி நாதர் பாடியதைச் சொன்னார்.

'தெய்வத்துள் வைக்கப்படும் என்றான் வள்ளுவன்...நமக்கு எப்படி வாழ்ந்தால் தெய்வமாகலாம் என்று தெரியாது...ஆனால் கம்பன் இன்னும் தெளிவாகச் சொன்னான். தெய்வமான ராமனை பூமியில் வாழ வைத்தான்...வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்று எல்லோருக்கும் காட்டினான். இதுதான் கம்பனில் சொல் என்பது..' என்றார். 

பின்னர் பேச்சாளர்களை அறிமுகம் செய்தார். 

'சக்தி முறையாக இசை பயின்றவர்...முறையாகத் தமிழ் பயின்றவர்...ஈடுபாட்டுடன் கம்பனைப் பயின்றுள்ளார்..கம்பன் வரிகளுக்கு இசை சேர்த்துள்ளார்...இசை ஆசிரியராக பணி புரிகிறார்...கொரோனா காலத்தில் தனக்கு உணவில்லாமல் ஊருக்கு உணவிட்டார் என்று கேள்விப் பட்டேன்...எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து இந்த இடத்தை எட்டியிருக்கிறார்...இதற்கு மேலே என்ன புகழ இருக்கிறது...மைந்தர் தம்மை நெஞ்சில் துதிக்க வேண்டும்...இங்கு அவர் பேச வேண்டும்..நாம் கேட்க வேண்டும் ' 

சக்தி  பேச வந்தான்.


                                                                           [2]

சக்தியின் முகம் இன்னமும் மாறவில்லை என்று சிவா நினைத்தான். மீசையில் ஒன்றிரண்டு வெள்ளை நூல்கள். முடியில் இல்லை. ஆனால் இன்னும் சிறுவனுக்குரிய உடல் வேகம். 

படிக்கும்போதே சக்தியின் கண்ணிமைகள் அதிகமாய்ப்  படபடக்கும். சத்தமாய்ச்  சொல்லும் அதே வார்த்தைகளை மௌனமாய் இன்னொருமுறை அவன் வாய் சொல்லும். சக்தியின் கையெழுத்து சிவாவுக்கு பொறாமையை ஏற்படுத்தும். 

அந்தச் சிறிய உருவில் அவ்வளவு சத்தம் எங்கிருந்து வருமோ? நெஞ்சைத் தொடாது நாபியிலிருந்து நேராய் தொண்டையைக் கிழித்து வெளி வரும் குரல்.  ஆசிரியர்கள் மதிய உணவு ஒன்றாய்ச் சேர்ந்து உண்பார்கள். அப்புறம் சக்தியைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். 'கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்...உயிர்த்தீயை வளர்த்தேன்' எப்போதும் இந்தப் பாட்டைத் தான் பாடுவான். சக்தி உள்ளூர அப்போதே கலைத்தெய்வத்தை அழைத்தபடி இருந்திருக்கிறான். இது யாருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.

தமிழைத் தவிர எதுவும் அவனுள் நுழையவில்லை. வகுப்பில் நிறைய அடி வாங்குவான். தலைமை ஆசிரியர் ஆங்கிலம் எடுப்பார். பிரம்படிக்கும் அழ மாட்டான். ஆங்கில மீடியம் இன்னும் நிறைய அவனுக்கு அடிவாங்கிக் கொடுத்தது. 

கல்லூரியில் உயிரியல் பாடம் எடுத்தேன் என்றான். பார்க்கும்போதெல்லாம் எதாவது பாடுவான்.. சின்ன சின்ன பாடல் என்ன..என்னைக் கொஞ்சும் சாரல் என்ன...கல்லூரி இறுதியில் த.மு.எ.ச கலை இலக்கிய இரவுகளில் பாடுவதாகச் சொன்னான். 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்று கண்ணடித்துக் கேட்பான். 

பாடங்கள் நிலுவையில் விழுந்தன. வருடங்கள் தீர்ந்து போயின. நகரில் பெட்டிக்கடை வைத்திருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். மேடையில் நாட்டுப்புற பாடல்கள் பாடுவதாகவும் , ஒருமுறை அரட்டை அரங்கத்தில் வந்ததையும் சொன்னார்கள்.   

இப்படித்தான் வருடங்கள் ஓடிவிடுகின்றன என்று சிவா நினைத்தான்.

சக்தி வந்து நின்றதும் பேச்சுப்பெட்டிக்கு கழுத்து வைத்தது போல் இருந்தது.

'நடுவர் அவர்களே..ஒரு பூனை கடலை நக்கிப் பார்ப்பது போல் என்றான் கம்பன்...நானும் ஒரு பூனையாக  கம்பனை நக்கிப் பார்க்க வந்திருக்கிறேன்..என் வாழ்நாளெல்லாம் இதையே செய்தும் அலுக்கவில்லை...இன்னும் ஈரேழு பிறவிக்கும் இதையே செய்வேன்..'   நடுவர் தட்டிக் காட்டியதும், சபை கை தட்டியது.

'கம்பன் என்றால் நாடகம்...கம்பன் என்றால் அணி , அழகு... இல்லை கம்பன் என்றால் சொல் நடுவர் அவர்களே..சொல்..சொல் என்பது மனம்...சொற்கள் என்பது நம் மன ஓட்டம்...ஓரிடத்தில் பூக்கள் மிதக்கும் அமைதியான நதி...மற்றொரு இடத்தில் கரை மிரட்டும் காட்டாறு..இன்னொரு இடத்தில் உயர விழும் அருவி ..கழிமுகத்தில் கடல் சேரும் ஆறு...எல்லாமும் நீர்தான் நடுவர் அவர்களே..எல்லாமும் கம்பனின் சொல்தான் நடுவர் அவர்களே..' என்றான்.

'ராமகாதை என்று நூலுக்கு அவனே பெயரிடுகிறான். ராமன் பிறந்ததும் அவனைக்  'கருமுகில் கொழுந்து' என்கிறான்..எவ்வளவு அழகான சொல் பாருங்க..துண்டு மேகம்...இல்ல.. ஒரு துண்டு கரு மேகம்...தளிர் என்றால் அப்போது பிறந்தது... அப்போது பிறந்த துண்டுக் கரு மேகம்...கற்பனை பண்ணுங்க.. '

சிவா தன்னை சக்தியின் கண்கள் தொடும் என்று காத்துக்கொண்டே இருந்தான். அவன் கண்கள் கூட்டத்தை கூழாங்கல் குவியலாகவே கண்டன என்று நினைத்தான். 

'சீதை முதலில் வரும் இடத்தைப் பாப்போம்...கம்பன் உச்சங்களைச் சொல்லியபடியே வருகிறான்...முதல்ல பொன்னின் ஒளி...பூவின் நாற்றம்...அதில் ஊரும் தேனின் சுவை...மனசுக்கு சொல்லிப் பத்தலை...செஞ்சொற் கவி இன்பம்...சொல்லில்லாத இடங்களில் சொல்லையே அணியாக வைக்கிறான் கம்பன்...'

இவனுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. சாப்பிடாமல் இருக்கிறோம் என்று நினைவு வந்தது. கால்களையாவது நீட்ட வேண்டும் என்று தோன்றியது. 

சக்தி பேச ரயிலில் வந்திருக்கிறான். அவனுக்கு ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருந்தது என்று மேடையில் கம்பவாரிதி அறிவிப்பு செய்தார். 

பேசி முடித்து மேடையின் பின் வழியே சென்றுவிட்டான். தெரிந்திருந்தால் விமானத்தில் கூட அனுப்பியிருக்கலாம் என்று சிவா நினைத்தான்.

                                                                         [3]

இரண்டு மாதம் கழித்து சக்தியிடம் இருந்து ஒரு அழைப்பு.

'சிவா..ஒங்க ஊர் ஸ்கூல்ல நாளைக்கு ஒரு பேச்சு...உங்க ஞாபகம் வந்தது..ஊரப் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிடலாமேன்னு தான்..ஒரு தடவ உங்கள கிரிக்கெட் மேட்சுக்கு கடத்தி கூட்டிப்போன நினைவிருக்கு...நானும், ஆனந்தும், கோவில்ல மார்கழி பஜனை நடந்துட்டு இருந்துச்சு...அப்புறம் எப்பாவது அந்த வழிப் போவேன் ...'

சிவாவுக்கு சட்டென்று எதுவும் தோன்றவில்லை. ஊருக்கு எப்போவாவது செல்வதுடன் சரி. 

'அந்தப் பெருமாள் கோவிலும் , குளமும் நாயக்கர் காலத்துல கட்டுனதுன்னு சொல்வாங்க..இந்த பக்கத்து நாயக்கர் செட்டில்மென்ட் இந்த ஊர்ல நடந்துச்சுன்னு சொல்வாங்க..குளத்துல இருந்த சுகாசன வரதராஜர் சிற்பம் பிரபலம்..' என்றான்.

'அப்புறம் அந்த ஊருக் கண்மாய் மாவட்டத்துல ரெண்டாவது பெரிய கண்மாய்...ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாயை அடுத்த கொள்ளளவு உள்ளது...' என்றான் சிவா.

'யாராவது சொல்ற மாதிரி ஆளுக இருக்காங்களா ஊர்ல...ஊர்ல பிறந்து பெரியாளானவங்க யாரவது?' என்று சக்தி கேட்டான்.

சிவாவுக்கு எல்லாம் ஸ்தம்பித்தது. யாரும் இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை.

'கலசலிங்கம் யூனிவர்சிட்டி பிரின்சிபால் இந்த ஊருக்காரரு..அவரு தான் கல்லூரிய யூனிவர்சிட்டி வரைக்கும்  கொண்டு வந்தது...அப்புறம் இன்னொருத்தர் சென்னையில கம்பெனி நடத்துறாரு ...'  

சிவாவுக்கு தன் பெயரையும் , தன் நிறுவனத்தின் பெயரரையும் -தொழில் நுட்பத்தையும் , கலையையும் இணைக்கும் புள்ளியிலிருக்கும் அந்த நிறுவனத்தின் பெயரையும்- சொல்ல வாய் நுனி வரை வந்தது.  பின் ஏனோ அதுவே உள்ளே சென்று விட்டது.

பின்னர் அவன் பேசிய காணொளியைக் கேட்டு வாங்கினான். 

பார்க்காமலே ஏனோ அழித்து விட்டான். 

ஏற்கனவே வரைவில் இருந்த ராஜினாமா கடிதத்தை மீண்டும் படித்தான்.to: இடத்தை வேண்டுமென்றே நிரப்பாமல் விட்டிருந்தான்.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2