Skip to main content

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -2 - எழுத்தின் செயல்முறை



'எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா ?'. 

அடுத்த பத்து நிமிஷத்திற்குள் இந்த இரண்டு விஷயங்களை எதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார்.

'எழுதுறது நூறு சதவீதம் இன்ஜினியரிங்...உட்கார்ந்தா அதுவா வரும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் பொய்...வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொல்றது...என்னளவில் எழுத்து ஒரு  தொழில் நுட்பம்..நுணுக்கங்களைக் தெரிந்து கொண்டால் எல்லோரும் எழுத முடியும்.'

நானும் நல்ல எழுத்து அரை போத நிலையில் வருவது என்று எண்ணியிருந்தேன். கப்பல் நீரில் மிதப்பது போல். போத நிலையில் எழுத்தாளரின் உணர்ச்சி மேலிடுகிறது. அந்த இடத்தின் பாத்திரங்களின் உணர்ச்சியே அவருள் வர வேண்டும். அவர் எல்லோருக்கும் ஒரே உணர்ச்சியை காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதை எப்படிச் செய்வது என்று சொற்களால்வகுப்பது கடினம்.

படைப்பாற்றல் தெய்வக் கொடுப்பினையா? கற்றுக்கொள்ளவே முடியாதா? 

படிப்பு தான் எழுத்தின் முதுகெலும்பு. அதில் பின்னித்தான் இதயமும், மூளையும், காலும், கையும் ரத்தத்தைப் பெறுகின்றன. நல்ல எழுத்து சுவாசம் என்றால் , வேண்டாத எழுத்து வெளியேறும் சுவாசம். செய்யும் வேலையைப் பொறுத்து உறுப்புகள் ஊட்டம் பெறுகின்றன. நெடுநாள் வாழ்கின்றன.

'இந்த குரூப்ல படிப்பு பத்தாது...எல்லாரும் பிடிச்ச எழுத்தாளர் பேரச் சொன்னீங்க..படிச்ச மாதிரி தெரியல..அசோகமித்திரன் முழுத்தொகுப்பு, வண்ணநிலவன் முழுத்தொகுப்பு,ஜானகிராமன் முழுத்தொகுப்பு, ஒரு நூறு நாவல் படிச்சாதான் எழுத்து நல்லா வரும்..முழுத்தொகுப்ப ஒரு நாவலா வாசிக்கலாம்...அசோகமித்திரன் காட்றது மிடில் கிளாஸ் மெட்ராஸ் முழுச்சித்திரம்..' 

நாவல் என்றால் என்ன என்று ஆரம்பிப்பார் என்று நினைத்தேன்.

'சார் நாவல்ங்கிறது இடைவிடாத ஒழுக்கம்...ஒவ்வொரு நாளும் எழுதணும்..முப்பதாயிரத்திலிருந்து  முப்பத்தஞ்சாயிரம்  வார்த்தைகள் ஒரு நாவல்...ஒரு சாப்டர் 2500 வார்த்தைகள்...எனக்கு அது எழுதி சரிபாத்து திருப்பி எழுத ரெண்டரை நாள் ஆகும்..'

சிலரை எத்தனை மணிக்கு எழுவீர்கள், எத்தனை மணிக்கு உறக்கம் என்று கேட்டார். அவரே பேசி ஒரு மணி நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். இந்த ஒரு மணி நேரம் கண்டிப்பாக எழுத்துக்கும் படிப்புக்கும் மட்டுமே. பின்னொரு இடத்தில் தன்னுடைய நாவல்கள் முடிக்க முடியாமல் நின்ற போது ஜெயமோகன் சொன்ன வழிகள் இவை என்று சொன்னார்.

'அன்னைக்கு ஒன்னும் எழுத இல்லன்னா ஸ்ரீராமஜெயம் எழுதுங்க'

மேலே கூறியதை எளிதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  ஸ்டீவன் ப்ரெஸ்பீல்ட் 'The War Of Art : Resistance ' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இது அவர் எழுத்தாளர் ஆன கதை.  '...secret is this. Its not the writing part that is hard. What is hard is sitting down to write '

எழுத்தில் அவர் உடைத்த இரண்டாவது வார்ப்பு எழுத்துக்கு மூடு வரணும் என்பது.

இன்னும் ஒரு பாய்ச்சல்.  

'இது நாவலின் காலகட்டம். இரண்டு எல்லைகளின் நடுவில் நாம் இருக்கிறோம். ஒரு எல்லையில் ரெண்டு ஸ்க்ரோல் நீளம் , அல்லது 250 சொற்கள். இதற்கு மேல் இன்று யாரும் படிப்பதில்லை. எல்லோருக்கும் விரல் நுனியில் தகவல் இருக்கிறது. தகவலை இன்று எழுத்தாக்க முடியாது. '

'மறு எல்லை..இன்னைக்கு எழுத்துல என்ன இல்ல..பரந்த வாழ்க்கை இல்லை...முழுமையைக் காட்டினால் ஜெயிக்கும்..பூரணத்தைக் காட்டினால் ஜெயிக்கும்..நாவல் என்பது வலுவான கேள்விகளால் ஆனது...உலகத்திற்குப் பொதுவான கேள்விகள்..சொலுஷன் தேவையில்லை...அதில் அற்புதங்கள் தக்கவைக்கப்பட வேண்டும்... புதிர்கள் அப்படியே இருக்கும்...அபத்தங்கள்,அதிசயங்கள் இருக்கும்...அறிவியல் அடங்கும் இடங்கள் இருக்கும்..ஒரு முழு வாழ்வு அனுபவத்தைக் கொடுப்பது..'

'நாவல்ல வேண்டாத நெகிழ்ச்சி, திடுக்கிடல் இருக்காது...திட்டமிட்ட திருப்பங்கள் இருக்காது...உணர்ச்சிகள் தூக்கலாக இருக்காது..'

தான் எழுதிய நெடுந்தொடரில் கதாநாயகி மூன்று மாத விடுப்பில் செல்ல வேண்டியதாகிறது. கதாநாயகி இல்லாமல் ஒரு எபிசோடு கூட எடுபடாது. கதையை மாற்றி கதாநாயகி தொலைந்து போகச் செய்ததாகக் கூறினார். சீரியல் TRP இன்னும் பிய்த்துக் கொண்டு போகிறது. நாவல் இப்படி இருக்காது.

'உங்கள் வாழ்க்கை நாவலாகும்...அடுத்தவர் வாழ்க்கை ஆகாது...'

ஒருவர் நாவலில் வேகம் இல்லை என்று கேட்டார். 'உங்க லைப் எப்படிப் போகுது..டெய்லி வேகமாத்தான் போகுதா..' பாரா கேட்டதும் அமைதி. 'வாழ்வின் வேகம் தான் நாவலின் வேகம். நீங்க எடுத்துக்கிட்ட சுப்ஜெக்ட்ல இருக்கிற கேள்விகளை லிஸ்ட் பண்ணுங்க...உண்மையான பதில வாய்விட்டு சொல்லி எழுதிப் பாருங்க..'

எழுதும் நாவலின் கருவைத் தேர்ந்தெடுப்பது சவால் தான் என்று நினைக்கிறேன். எழுதப்படாததாக இருக்கவேண்டும், வாழ்வின் முழுமை காட்டுவதாக இருக்க வேண்டும். எழுதுவதற்கு வாழ்வில் நடந்த உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒப்புக்கொள்ள வில்லை. எல்லோரிடமும் நூறு நாவல் இருக்கிறது என்றார். எல்லோரையும் நாலு வரியில் நாவலை சுருக்கி வாய்ஸ் நோட் அனுப்பினால் ஜெயிக்குமா இல்லையா என்று சொல்வதாகச்  சொன்னார். நாலு வரியில் பாக்யராஜ் சொல்லமுடியாத தாவணிக் கனவுகளை சின்னப்பாதேவர் எடுபடாது என்று திருப்பிவிட்டதைக் கூறினார்.

பதினெட்டாவது அட்சக்கோடு போல ஏதாவது நாவல் பெயர் சொல்லி யாராவது படிச்சிருக்கீங்களா என்பார். மௌனம். அதிலிருந்த காந்தி இறக்கும் தருணம் சந்திரசேகரன் விழுந்து புரண்டு அழுகும் இடத்தைத் தொட்டுக் காட்டினார்.

அடுத்த நாள்களில் வகுப்பில் அபுனைவு எழுத்தை அறிமுகம் செய்தார். 

எழுத்தெல்லாம் ஒன்று தான். நல்ல எழுத்து. நல்ல எழுத்துக்கு அடிப்படை நம்பகத் தன்மை, உண்மை.

கட்டுரை எழுத்தும் , கதை எழுத்தும் ஒன்று தான். பின்னதில் கற்பனை ஒரு சதவீதம் கூட கிடையாது. வெ.சாமிநாத சர்மாவை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தார். அவர் எழுதிய கார்ல் மார்க்ஸில் முக வர்ணனைக்குப் பின்னால் இருந்த புகைப்படத்தைக் காட்டினார். இப்புத்தகத்தைத் தேடிப்படித்தேன். தேர்ந்த ஆராய்ச்சி எழுத்து போன்ற அடிக்குறிப்புகள். ஆனால் கதை படிப்பது போல் மார்க்சின் வரலாறு படிக்க முடிந்தது.

அபுனைவின் கூறுகளாக அவர் சொல்லிய விஷயங்கள் வகுப்பின் உச்சம் என்பேன். தெளிவான ஒருவரி  வரையறைகள், பெரிய எழுத்தாளர்களின் எழுத்தில் இருந்து அவர் சொன்ன விளக்கம். உண்மை, ஆதாரம், விளக்கம், சுருக்கம், சுவாரசியம்,முழுமை  போன்ற முக்கியக் கூறுகள். பஷீர் பசி பற்றி எழுதிய குறிப்பு, அ .முத்துலிங்கம் பாகிஸ்தானில் 2000 வருட சிதிலமான சுவரில் 40 வயது ஆள் தான் கால் பதித்து குந்தியிருந்தது , ஜெயமோகனின் லோகியின் சாயம் பூசும் குறிப்பு ஆகியவை நினைவில் நிற்கின்றன. கட்டுரைகளில் உரையாடல் அவசியம் என்பது எனக்கு கண்திறப்பு. விறுவிறுப்பைக் கூட்ட , சம்பவங்களை விளக்க உரையாடல் பயன்படும்.

காந்தியின் எழுதிய கல்யாணம் பற்றிய ஒரு குறிப்பு வந்தது. மிகையற்ற எழுத்தின் கீழ் பாரா கொடுத்தது புதிய திறப்பு. ஐம்பதாயிரம் பக்கம் எழுதியவர் பெரும்பாலும் எல்லாம் கட்டுரைகள். அவருடைய குரலும் அரசியல்வாதிகளுக்குரிய பிரசங்கக் குரலில்லை. இவர் எப்படி தேசப்பிதா ஆனார் என்று தோன்ற வைக்கும் குரல். காந்தியைப்  படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

எழுத்தில் ஒருமை என்பது பற்றி நீண்ட நேரம் வகுப்பு நடந்தது.

'கத்தில எத்தனை வகையிருக்கு...காய்கறி வெட்டுறதுக்கு எத்தனை கத்தியிருக்கு...எந்த இடத்தில எந்த கத்தி வேணும்னு நாமதான் முடிவு பண்ணனும்'

எழுத்தில் தலைப்பு என்ன சொல்கிறது என்று காட்டினார்.  விடாமல் சொல்லப்பட்டு நிரப்ப எதிர்பார்த்து நிற்கும் இடத்தையும் காட்டினார். முன்னரே யோசித்து வெற்றிடமாய் விடப்பட்ட ஜெயகாந்தனின் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் குறிப்பும் சொல்லவேண்டியது.

பாரா ஏற்ற இறக்கமாய் பாத்திரங்களுக்குள் புகுந்து தமிழ் படிப்பதும் கதை சொல்வது போல் இருந்தது. 

'சார் எழுத்தை உடைச்சுப் பார்க்கணும்...ஏன் ஜெயகாந்தன் கறுப்புப் பணத்தை எழுதுறாரு..ஆனா அவரு அந்த இடத்தில என்ன பண்ணாருன்னு தெளிவில்ல..அத விட்டுட்டு எழுதுவாரா..சொல்ல வந்தது அது இல்ல வேணுன்னு விடுறாரு.'

எழுத்தை உடைத்துப் பார்ப்பதை பல முறை சொன்னார்.

எஸ் எஸ் வாசன் மலரில் எஸ் எஸ் பி எழுதிய குறிப்பை உடைத்து மையம் தொடச் சொன்னார். பதில்கள் தொடாதபோது,  'இந்த பத்தியில அவரோட கில்ட் பீலிங்கதான் சொல்ல நினைக்கிறாரு'  

பாரதியார் சொன்ன எழுத்தின் குறிப்பை இரண்டு முறை எட்டு நாளில் சொன்னார்.

'எளிய பதங்கள், எளிய நடை, எளிய  சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு'

'பாரதியார் கவிதை வரி ஒன்னு சொல்லுங்க...இப்ப பாரதிதாசனோட வரி ஒன்னு சொல்லுங்க..இவ்ளதான் வித்தியாசம்..யாரு எழுத்து நின்னுருக்குன்னு பாருங்க...திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் இதே தான்' 

இதைச் சூத்திரமாக வைத்து இந்தப்  பகுதியை முடிக்கலாம். ஆயுர்வேத அரிஷ்டங்கள் போல சுண்டக் காய்ச்சி பலமுறை வடித்து ஆவியாகி  சூத்திரங்கள் இந்த நிலையை அடைகின்றன. அந்த செயல்முறை  அந்த சூத்திரத்திற்குள் பொதிந்து  இருக்கிறது.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...