Skip to main content

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -1

எல்லாமும் ரொம்ப ஈசியாக நடந்துகொண்டிருப்பது போல் இருந்தது. வேலைவிட்டு வந்து சரியாக மாலை ஏழு மணிக்கு டாக்ஸி ஒரே முயற்சியில் புக் ஆனது. அந்தப்பையன் புது வண்டியை (ஓனர்) ஒட்டிக்கொண்டு வந்தார். அவரே பஸ் வரும் இடத்தை அறிந்திருந்தார். வாழ்வாங்கு வாழட்டும். அப்பாவும் டிரைவராக ஊரில் இருக்க வேண்டும். போனில் இங்கிருந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். தெலுங்கு தான் அவருக்கு வந்தது. நமக்கு தெலுங்கும் வராது. எதோ மைலேஜ் , CNG, டிராபிக்  போன்ற உதிரி வார்த்தைகளாய் போய்ச் இறங்கியதும் பஸ் சரியாக 8:50 என்ற குறித்த நேரத்திற்கு வந்தது. போன வாரம் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதும் ஒரே நொடியில் நான்கு பேருக்கும் புக் ஆனது. ஒரு சிலரிடம் பேசி இதெல்லாம் சரியாகப் போகிறதா என்று விசாரித்தேன். சரிதான் என்றார்கள் பெரும்பாலும். டிக்கெட்டில் அடைப்புக்குறியில் பிரீ தர்ஷன் என்று இருந்தது. முன்னப் பின்ன சென்றால் தானே தெரியும், இதற்க்கு இன்னும் விளக்கம் பின்னால் வருகிறது. கடைசி நிமிடத்தில் ஆரம்பித்ததிலும் இவ்வளவு நேர்த்தியாய் எல்லாம் நடந்து கொண்டிருப்பது தான் நான் சந்தேகப்பட்டது.




வோல்வோ வண்டி அலுங்காமல் சென்றது. அசோகமித்திரன் கதைத்தொகுப்பு கையில் இருந்தது. ஊதா விளக்கிலும் படிக்க முடிந்தது. பையன் இன்னுமொரு ஹாரிப்போட்டர் படித்து வந்தார். வெளியே கர்நாடகா தாண்டியதை ஒரு பிரம்மாண்டமான  ராஜசேகர் ரெட்டி சிலை காட்டியது. வறண்ட , அங்கங்கே தகடுகள் செருகிய  பாறைகளால் ஆன குன்றுகள். எல்லா சாலைகளிலும் இன்னும் சாலைகள், பாலங்கள்  போடப்படுகின்றன. இங்கு விசேஷமாய் ஒரு சுரங்கம் அளவுக்கு நாடு ரோட்டில் மாபெரும் பள்ளங்கள் உள்ளன. இன்சமாம் கையில் பேட்டைப் போல், யானை கட்டி  மூங்கில்  வேலி போல், தகர டப்பாக்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளன. அதை உரசினாற்போல் குலுங்கி நிமிர்ந்து வோல்வோ போகிறது. கீழே தெரியும் மண்ணே இல்லாத கல் பள்ளம்(100 அடி ?) கிலியை ஏற்படுத்துகிறது. நெஞ்சையும் , வயிற்றையும் சேர்த்து சில நொடிகள் இழுக்கிறது. இது என்ன ரோடு போடும்  டெக்கினிக் என்று விளங்கவில்லை. ஒரு வேளை கட்டத் தேவைப்படும் இரும்பை முதலில் நோண்டி எடுக்கிறார்களா? இதற்கு முன்னால் ரோட்டுக்காக இவ்வளவு பெரிய பள்ளம் தோண்டிப் பார்த்ததில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் ரோடு போட்டுக்கொண்டிருக்கும் போதே வண்டிகள் இறங்கி அதில் போய்க்கொண்டிருக்கும். வரும்போதும் இதைக் கடக்க வேண்டுமே என எண்ணிக்கொண்டேன்.

போகட்டும், பஸ் ராத்திரி ஒருமணிக்கு திருப்பதியை அடைந்திருந்தது. எப்பவும் போல் சேரும் இடம் வர வர தூக்கம் அப்படி வந்திருக்கிறது. தூங்கியிருக்கிறேன். ஒரு சத்தம் எழுப்பியது. முதலில் கன்னடம், பின்னர் ஹிந்தி. திருப்பதியின் தள்ளு முள்ளு ஆரம்பித்தது என்று நினைத்தேன், முதலில் வார்த்தைகளால். 'காலை வணக்கம். மணி காலை 1:15. சரியாக 45 நிமிடத்தில் குளித்துவிட்டு வண்டிக்கு வரவும். முதலில் திருமலை , பின்னர் பத்மாவதி தரிசனம். ' இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். குயிக் refresh ஸ்டே என்று எழுந்திருந்தது. ஒரு கருப்பு மனிதர் இரண்டு போன்கள், கத்தை கத்தையாய் பேப்பர்கள், அவர் சொல்லக் கேட்க இன்னும் இருவர். ஒரு சீட்டில் எழுதி எங்கே குளிப்பது என்று சொன்னார்கள்.  லிபிட்க்கு நிற்க வேண்டிய நேரத்தில், உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு பையன் தேங்காய் சட்டினியை வரிசையாய் வைத்த கிண்ணங்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்.அடுத்து வருவது புரிந்தது. குளித்து இறங்கியதும், எல்லோரும் சாப்பிட்டார்கள், காலை 2 மணி. நாங்கள் அனைவரும் காபி சாப்பிட்டோம். ஒரு வேளை, தெரிந்து தான் இந்த நேரத்தில் சாப்பிடுகிறார்களோ, அடுத்த வேளை உணவு எப்போதோ?. சாப்பிட்டானபின் நம் கைடு மறுபடி தோன்றினார். மேலே செல்ல பஸ் மாற்றப்படும். செருப்பு , பைகளை இங்கேயே விட்டுவிடலாம். துறத்தல் இங்கே ஆரம்பம். இதை நான் நெருக்கடியுள்ள மதுரையிலும் பார்க்கிறேன். போன் முதல் எல்லாமும் வைத்துவிட்டுப் போக வேண்டும். பிரிண்ட் அடித்த சீட்டுகள் சாட்சியாய் பதிலுக்கு, எப்பவும் போல் 'ஏங்க பத்திரம்' சத்தங்கள்.  

மாறிய பஸ் 2:56 மணிக்கு திறக்காத ஏழுமலையானின் கதவுகள் முன் நின்றது. ஓட்டுநர் பாதி வழி ராங் ரூட்டில் வந்து நிறுத்தியிருந்தார். சரியாய் மூன்று மணிக்கு சுப்ரபாதம் ஒலித்தது. கதவுகள் திறந்தன. பதட்டம் கூடி வருவதை அறிந்தேன். கார்களில் தூங்குபவர்கள், நடைபாதைகளில் உட்கார்ந்திருப்பவர்கள், முடியாமல் படுத்துவிட்டவர்கள், நடந்து கொண்டே இருப்பவர்கள், சும்மாய் நிற்பவர்கள், நின்று பேசுபவர்கள். வண்டி மேலே செல்ல ஆரம்பித்தது. வெளியே பார்க்கலாம் என்று ஜன்னலைப் பிடித்து வைத்திருந்தேன். ஒரு அம்மாள் வாந்திப் பிரச்சனையைச் சொல்லி இட மாற்றம் கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை, வாந்தியை நம் மேல் விட்டால் இன்னும் சிக்கல். ஒதுங்கி வழி விட்டேன். கைடு அவர் போன் நம்பரை விசிட்டிங் கார்டு போல் எல்லோருக்கும் காகிதத்தில் இருந்ததைக் கொடுத்தார். பக்கத்தில் முதல் முறை திருப்பதி வருபவர். அவர் மனைவி, தங்கையோ, அக்காவோ என மூன்று பேர். திருப்பதியில் என்ன இருக்கிறது,  என்ன சாமி என்று கேட்டார் . மேலும் திருமலையும் திருப்பதியும் ஒன்றா வேறா என்று கேட்டார்.  சம்பிரதாய பேச்சுக்கள் ஒடுங்கி இருமல்கள் மட்டும் அங்கங்கே ஒலிக்கத் துவங்கின. இருமல்கள் பேசின, பாடின, எழுந்து ஆடின , தனியாயும், சேர்ந்தும் இருமல்கள். எனக்கு மீண்டும் தூக்கம் வந்தது. நீல வானில் ஒரு மாபெரும் சங்கு சக்கரம்  வெள்ளை ஒளியில் தெரிந்தது, நடுவில் செஞ்சுடராய் அவன் நாமம். அதன் நேர் பின்னே நிலவு. கீழே ஹாரன்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

கைடு இதற்குள் நான் மேலே சொன்ன 'பிரீ தர்ஷன்' என்றால் என்ன என விளக்கியிருந்தார். மொத்தத்தில், திரும்பும் நேரம் ஆண்டவன் கையில் என்று விளங்கிக் கொண்டேன். திரும்பி வர அடுத்த நாள் ஆனாலும் ஆகலாம் என்றார். சிறப்பு தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிந்தேன். எதுவானாலும் நடப்பது சரிதான். இறங்கியதும் மெல்லிய குளிர் தோலில் அப்பியது. வேறு எதுவும் இருட்டில் பார்க்க முடியவில்லை. சென்ற முறை மலை ஏறும்போது கண்ட அந்தப் பள்ளத்தாக்கு நினைவில் இருந்தது.

இன்று திருமலை என்று அழைக்கப்படும் இந்த மலை வேங்கடம் என்றே தோல் மரபில் சொல்லப்பட்டிருக்கிறது - வேங்கட மலை.  கீழே இருக்கும் நகரம் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரால் நிறுவப்பட்ட நகரம் என்று சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் வரதராஜப் பெருமாள் கோவில் இவர் காலத்தில் எடுத்துக் கட்டியிருக்கலாம். ஆனால் திருப்பதிக்கும் பழைய நகரம் திருச்சானுர். வரலாற்றில் திருச்சொக்கினூர் , திருச்சொக்கனூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. திருமலை இதற்கும் தொன்மையானது. திருப்பதியின் அருகிலிருக்கும் இன்னொரு நகரம் சந்திரகிரி. இது விஜய நகரப் பேரரசுக்கு அடிகோலிய நகரம்.

அந்தக் காலங்களில் காலால் ஏறி வேங்கடம் சென்றிருக்கிறார்கள். ஏழு மலைகளைக் கடக்க வேண்டும். முதல் மலையைத் தொட்டதும் தெரியும் கோபுரம் கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. சப்த கிரி என்று முதல் மலைக்குப் பெயர். ஏழாவது வேங்கட கிரி. இரண்டாவது மலைக்கு 'முழங்கால் முறிப்பான்' என்று பெயர், ஏற வேண்டிய உயரத்தை குறிக்கும் பெயர். மலைகள் எல்லாம் ஏறி முடிந்தவுடன் தெரிவது பாஷ்யக்கார சந்நிதி (எ) ராமானுஜர் சந்நிதி. இந்த இடத்திலேயே ராமானுஜர் தனது மாமாவிடம் திருமலை நம்பியிடம் பாடம் கற்றிருக்கிறார். திருமலை நம்பி ஆளவந்தாரின் நேரடி மாணவர். ஆளவந்தார் நம்மாழ்வாரின் குரு பரம்பரையில் வந்தவர். நம்மாழ்வார் வேங்கடவனை முதலில் பாடியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். பன்னிரு ஆழ்வார்களுள் , பதினோரு பேர் திருமலையைப் பாடியிருக்கிறார்கள்.

கோவிலைப் பார்த்தவாறு ஒரு மாபெரும் 'கண்ட' மண்டபம் இருக்கிறது. இப்போது மணி இல்லை. ஆனால் இந்த மணி கோவிலில் நைவேத்தியம் முடித்து அடிக்கப்பட்டதும் கீழே சந்திரகிரியில் அரசர் ரங்கநாத யாதவராயர் உணவை உண்டிருக்கிறார். சந்திரகிரி வழியை யானைப்பாதை என்று அழைத்திருக்கிறார்கள். மலையைச் சுற்றி 8 சுனைகளும், தீர்த்தங்களும் சொல்லப்பட்டுள்ளன. பாபநாசம், ஆகாச கங்கை குறிப்பிடத் தக்கவை.

பழமையான வேங்கட மலையைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் வருகிறது.

"வேங்கடமென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை'. மலையில் மேல் இருப்பதாலோ என்னவோ உச்சியில் நின்றான் என்ற பெயரும் இருந்திருக்கிறது. பின்னர் பதிமூன்றாம் நூற்றாண்டின் பின் 'மலை குனிய நின்றான்' என்ற குறிப்புகள் வருகின்றன. மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் கோவில் அமைந்துள்ளது. ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவர் பெரிய நம்பி, அவருக்கு சிறப்புப் பெயர் 'மலை குனிய நின்றான்'.

இந்தக் கோவிலைச் சுற்றி மாபெரும் படையெடுப்புகள் நடக்கும் போது , பெரிய சேதமில்லாமல் தப்பியுள்ளது. மாலிக்காபூர் 1310-ல் இவ்வழியே படையெடுத்து கீழே மதுரை வரை சென்றிருக்கிறார். இதற்க்கு முன் பெரிய சோழப், பாண்டிய, ஹொய்சாள படையெடுக்கப்புகள் நடந்திருக்கின்றன. திருமலைக்குச் சிக்கல் தலைகோட்டைப் போருக்குப் பின் வருகிறது. சண்டைக்குப் பின் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டில்லி சுல்தான் வேலூரை பீஜப்பூர் சுல்தானுக்கும் , சந்திரகிரியை கோல்கொண்டா முஸ்லிம் மன்னருக்கும் சிற்றரசாகக்  கொடுக்கிறார். கோல்கொண்டா சுல்தான் கீழே படையெடுத்து சிவாஜி இந்தப் பக்கம் வருகிறார். தஞ்சாவூரில் ஒன்று விட்ட தம்பியிடம் அப்பாவின் பாகத்தை தனக்கு விட்டுக்கொடுக்கச் சொல்லி வருகிறார். இந்த மலையில் இருக்கும் கல்லூர் கணவாய் வழியே அவர் படை சென்றிருக்கிறது. செஞ்சி, வேலூர், ஆரணி வென்று தஞ்சாவூர் சென்றிருக்கிறார். கோல்கொண்டா சுல்தான் மேல்பக்கம் படையெடுப்பை சமாளிக்க இவரை திரும்ப அழைத்திருக்கிறார். பெரும் செல்வத்துடன்  திரும்பும்பொழுது, இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். தங்க நகைகள் கோவிலுக்கு  பரிசளித்திருக்கிறார். இதற்குப் பின்னர் ரகோஜி போஸ்லே என்ற நாக்பூர் மராட்டியரும் படையெடுத்துச் செல்லும் வழியில் நகைகளை பரிசளித்திருக்கிறார். இதன் பின்னர் தக்காணப் பீடபூமியில் இருந்த குழப்பம் காரணமாக திருப்பதி கோவில் குத்தகை உரிமை முஸ்லிம் ஆட்சியாளர்கள் மூலமாக பிரிட்டிஷ்காரர்களிடம் வருகிறது. இதை குறிவைத்து பயணிகளைத் தடுத்து கொள்ளைகள் அடித்திருக்கிறார்கள். போர்கள் மிக அருகில் நடந்தாலும் ஹைதர் அலி போன்றவர்களுக்கு கீழே இருந்த பாளையக்காரர்கள் பலமாய் இருந்துள்ளனர், கோவில் சேதமில்லாமல் தப்பியுள்ளது. 1801 ல் அதிகாரபூர்வமாக ஆங்கிலேயர் கீழ் கோவில் வந்தது. கோல்கொண்டா சுல்தான் கீழ் வந்தவுடன் 1724, கோவில் கர்நாடக நவாபுக்கு வருடம் இரண்டு லட்சம் குத்தகை கோவில் நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்ற உடன்படிக்கை கையெழுத்தாகிறது.

இங்கிருந்து தான் திருப்பதி கோவிலில் கட்டணம், உண்டியல் வசூல்கள் ஆரம்பமாயின. மொட்டையடிப்பது , தீர்த்தம் குளிப்பது, அர்ச்சனை காணிக்கை  போன்றவை உள்குத்தகை விடப்பட்டு குத்தகைப் பணம் திரட்டப்பட்டது. புது தீர்த்தங்கள் தோன்றின. மைசூர் மன்னர் கோவிலுக்கு வரும் முன் , கோர்ட்டில் வழக்குத் தொடுத்து , தன் பக்கம் தீர்ப்பு வாங்கி வந்திருக்கிறார். தீர்ப்பில் வரும் வரி இது, வருடம் 1800 :  ""It is likewise ordered that you do not demand any duty or custom either from the Raja or any of his followers but consider them totally exempted from the same and treat them with utmost politeness."

திருமலைக்கு பல புராணக் கதைகள் உள்ளன. யுகத்துக்கு ஒன்று, கிருத யுகம் -சேஷாச்சலம், திரேதா யுகம் - அஞ்சனாசலம் ,கலியுகம் - வெங்கடாச்சலம். இருந்தாலும் நாம் கேட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் மூவருள் யார் பெரியவர் என்று முடிவு காண, மூன்றாவதாக விஷ்ணுவிடம் வருகிறார். ஆனால் அவர் மஹாலட்சுமி சகிதம் நித்திரையில் இருக்கிறார். உலகைக் காப்பவர் தூங்கலாமா, இவர் அவரை மார்பில் , திருமார்பில்  உதைக்கிறார். விழித்தவர் முனிவரை நோக்கி கால் வலித்ததா என்று கேட்கிறார். மஹாலட்சுமிக்கு கோபம் வருகிறது, ஏனென்றால், மிதிபட்ட இடம் தான் உறையும் இடம். கோபித்து பூலோகம் செல்கிறார். 'அலர் மேல்' மங்கையாகப் பிறக்கிறார். இவரை மணக்க இறைவனே மீண்டும் கீழிறங்கி வருகிறார். மணக்க பெரும் பணம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும். குபேரனிடம் கடன் வாங்குகிறார். இன்றுவரை இன்னும் கொடுத்து முடிந்தபாடில்லை.(TBC) 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...