அருணாச்சலம் அன்று காலை ஒரு அட்டைப் பெட்டிக்கு மேல் வைக்கப் பட்டிருந்த விசைப்பலகைக்கு அருகில் சம்மணமிட்டு கீழே அமர்ந்தான். எதிரில் கணிப்பொறியின் செவ்வக கோபுரம் கருப்பாய் நின்றது. அதனருகே அதன் ஒளித்திரை அவனை வாய் திறந்து விழுங்க வருவது போல் பிளந்து நின்றது. இல்லை நெஞ்சைப் பிளந்து என்னிடம் இன்னும் ஒன்றும் மிச்சம் இல்லை, எல்லாம் உன் கையில் என்று சொல்வது போல் இருந்தது. அதுவே வசை பாடி என்னைத் தொடாதே என்பது போலும் அவனுக்குத் தோன்றியது. அவன் செவ்வக கோபுரத்தில் இருந்த வட்டமான மின் பொறியை அழுத்தினான். இதையும் ஓங்கி அழுத்தக் கூடாது என்று உள்ளே இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் மனோகர் சொல்லியிருக்கிறான். ஆகவே எப்போதும் மெதுவாகவே அழுத்துவான். மேலும்அந்தக் கணிப்பொறி தன்னுடையதில்லை, அவனுடையது. KR மார்க்கெட்டில் ,துண்டுச் சீட்டில் காய் கறி , பலசரக்கு பெயர்கள் போல் கணிப்பொறிக்கு வேண்டிய சாமான்கள், மதர் போர்டு , சி பி யூ , காற்றாடி , கோபுரம் எல்லாம் எழுதி வாங்கி வந்து அவனே அசெம்பிள் செய்தது. CD பிளேயர் , யமஹா சவுண்ட் கார்டு உள்பட தன் கையால் செய்து வைத்திருக்கிறான். சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமா?
இதற்க்கு மேல் இன்னும் அவனுக்கு அந்த இடத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. காலையில் பாட்டுக் கேட்கக் கூடாது, CD யில் படம் பார்க்கக் கூடாது, கேம் விளையாடக் கூடாது. குறிப்பாக பைக் ரேஸ் செய்யக் கூடாது. இதை பைக்கின் முனகல் சத்தம் இல்லாமல் விளையாடினால் நன்றாய் இருக்காது. ஆனால் சத்தம் வந்தால் எங்கிருந்தாலும் மனோகர் வந்து விடுவான். 'படிக்கிற வேலையைப் பார்ரா...எல்லாம் படிச்சு முடிச்சுட்டியா..' என்பான்.
இப்போது திரையில் விண்டோஸ் பிறந்தது. உள்ளே செல்ல மனோகர்555 கடவுச் சொல் இப்போது . இதுவும் அடிக்கடி அவன் மாற்றி விடுவான். மீண்டும் கேட்டு வாங்க வேண்டும்.
அவனுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை ஏறு வரிசை நிரலியை கணினியில் போட்டுப் பார்ப்பது. கலைப் படிப்பு படித்தால் வாழ்வில் ஓவியம் வரைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கவிதை, கதை தெரிய வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஆங்கிலம் படித்த மாணவர்கள் ஆங்கிலம் கட்டாயம் பேச வேண்டும் என்றால் சரியாகுமா? ஆங்கிலம் படிக்கவே தடுமாற்றமாய் இருக்கிறதே. எல்லோரும் கோட்பாடுதான் படிக்கிறார்கள்.வெளி உலகில் வேறு எவ்வாறோ பிழைக்க முடிகிறது. ஆனால் இவன் படித்த படிப்பில், என்னதான் கோட்பாடு தெரிந்தாலும் நிரலி எழுதத் தெரியவில்லை என்றால் வேலை கிடைப்பது கடினம். அவனுக்கு கோட்பாடுகள் அத்துப்படி என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் நிரலி எழுத இன்னும் பெரிய தடுமாற்றம் இருந்தது.
எந்த நிறுவன வேலை அழைப்பானாலும் ஒரு கட்டத்தில் தும்பைப் பூ வெள்ளைத் தாளில், கண்ணாடி மேஜையின் மேல் வைத்து நிரலி எழுதியாக வேண்டும். எழுதுவதை கேட்பவர் பார்த்துக் கொண்டிருப்பார். அது அவனுக்கு இன்னும் பதற்றத்தைக் தரும். பல்லவி, அனு பல்லவி, தாண்டி இரண்டு மூன்று சரணங்கள் செல்லும் நிரலிகள் கேட்பார்கள். அவனுக்கு பல்லவியில் சிக்கி விடும். அவனுக்கு அந்த வெள்ளைத் தாளில் உ போட்டு எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கி, மனதுக்குள்ளேயே உ போட்டுக் கொண்டான்.
தேவைப்படும் கோப்புகள், நிரலின் தகவலை அமைப்பதிலுமே அன்று அவன் திணறுவதைப் பார்த்த தேர்வாளர், 'எஸ்க்யூஸ் மீ' என்று வெளியில் போனவர் திரும்ப வரவே இல்லை. எழுதியும் முடிக்க முடியாது தெரிந்தது தான் , வெளியில் போகவும் முடியாதா? மனம் பதற்றம் அடைந்தது. வெள்ளைத் தாளில் பாதிக்கு மேல் இன்னும் வெள்ளையாய் இருந்தது. கதவு பூட்டப்பட்டிருந்தது. அவன் உள்ளே இருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது, ஒட்டப்பட்ட ஒளி நிறுத்தும் காகிதத்தால், வெளியில் நடமாடுபவர்கள் ஆவி போல் தோன்றினார்கள். அவனுக்கு அப்போது நிரலி மறந்து எப்படியாவது வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது. அவர் மீண்டும் வந்தால் என்ன சொல்வது என்று யோசித்தான். இல்லை அவர் வரும் முன் போனால் நல்லது என்று தோன்றியது. AC சப்தம் மட்டும் நன்றாய் கேட்டது, காற்றின் ஒலி. நெற்றியின், மூக்கின், காதுகளின் முனைகள் நீரால் இன்னும் குளிர்ந்தன. அவனுக்கு மலம் கழிக்க வேண்டும் போல் இருந்தது. வெளியில் போய் சிறுநீர் கழிப்பறை எங்கே என்று கேட்டான். கழிப்பறை நோக்கி நடக்கும் போதே வெளியில் ஓடி விட வேண்டும் என்று முடிவு செய்தான். எல்லோரையும் போல் தோள்ப்பையும் , காலணியும் , உள்ளே விட்ட சட்டையும் , கால் சட்டையும் அணிந்திருந்ததால் அவனால் எளிதாக வெளியே வர முடிந்தது. வெளியே மெல்லிய உஷ்ணமான காற்று அவன் மேல் பட்டது. இப்போது மலம் வருவது தானாய் நின்றிருந்தது.
அருணாச்சலம் இப்போது நிரலியை உள்ளிட அருகில் கிடந்த புத்தகத்தை திறந்தான்.அவன் செய்ய நினைத்தது ஏறு வரிசை அமைத்தல். வரிசையில் இல்லாத எண்களை வரிசையில் அடுக்க வேண்டும். ஆனால் அவன் கண்ணில் விழுந்தது அவனுடைய அண்ணன் ஊரில் இருந்து எழுதிய கடிதம். 'இன்னும் எத்தனை நாள் இரண்டாயிரம் அனுப்புவது. எப்போது பணம் அனுப்ப வேண்டாதபடி சிறிய வேலை அமையும். எப்போதும் போல் 'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னாற்றான் கொல் எனும் சொல்' குறள் அறிவுரை சொல்லப் பட்டிருந்தது. உள்ளே இருந்தது பதில் கடிதம். இவன் முன்னர் அனுப்பியிருந்தது இவ்வாறு: இப்போது தொழில் நுட்பம் மாறியபடி இருக்கிறது. கல்லூரியில் படித்தது வேலை வாங்க உதவாது. பெங்களூர் வந்து நேற்று வரை படித்தது இன்று காலாவதி ஆகி விட்டது. அவன் முடிந்த வரை முயற்சிக்கிறான். இன்னும் பணமிருந்தால், இன்னும் படித்தால் உதவியாய் இருக்கும். அண்ணன் அவனுக்கு அப்பா மாதிரி. அவன் அண்ணன் படிக்க வைத்ததை சொல்லும் இன்னொரு குறள் : "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்". அண்ணனுக்கு என்று வள்ளுவர் எதுவும் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை.
அந்தப் பக்கத்தை தள்ளி பக்கத்தை புரட்டினான். பத்து எண்கள் கொடுக்கப்பட்டு , புரிவதற்காக 6,3,2,1,4,5,7,9,10,8 என்று வைத்துக் கொண்டால் , நிரலின் முடிவில் 1...10 என்று வர வேண்டும். இது சாதாரணமாய் புரிகிறது. இது ஏன் இவ்வளவு சிக்கலாக வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. பத்து சதுரங்கள் போடப்பட்டு உள்ளே எண்கள் எழுதிய படத்தைப் பார்த்தான். அதே படம் ஒன்றன் கீழ் ஒன்றாய் பல முறை போடப்பட்டிருந்தது. இரு அம்புக் குறிகள் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டே இருந்தன. கடைசியில் எண்கள் வரிசையாய் இருந்தன. பப்புள் சார்ட் என்று எழுதப் பட்டிருந்தது. ஒட்டு மொத்தப் படத்தையும் ஒரு முறை பார்த்தான். ஒரு ரியல் எஸ்டேட் வீட்டு மனை விளம்பரம் என நினைத்தான். ஆனால் அதில் அதே எண்கள் திரும்ப வராது என நினைத்தான். அடுத்த பக்கத்தில் அதே படங்கள் , கீழே இன்செர்சன் சார்ட் என்று இருந்தது.
இப்போது அவனுக்கு லேசாக தலையை வலித்தது. டீ குடித்தால் நல்லது போல் தோன்றியது. உள்ளறையில் சென்று ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த எண்ணற்ற சட்டைகளில் தன் சட்டயைத் தேடி எடுத்தான். கீழே நால்வர் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர், மனோகர் உள்பட. அதில் ஒரு ஏறு வரிசை இருப்பதை எண்ணிக் கொண்டான். வேலை பார்ப்பவர் மேலே கீழே ஒருவர் அதைத் தேடிக் கொண்டிருப்பவர்.
வெளியே பூட்டி எடுத்துக்கொண்டு மாடிப்படி இறங்கினான். தெருமுனையில் வழிமறிக்கும் ஒரு பெட்டிக் கடை. கடைக்காரர் வயதான அடர்த்தியான நரை முடி மட்டுமே உடைய தெலுங்கர் , அதனால் இவனால் சிரிக்க மட்டுமே முடியும். வெள்ளை சாயம் அடித்தால் எப்படி இருக்கும் , அப்படி வெள்ளை. மாடியும் கீழேயும் ஒரு ஐம்பது வீடுகள் உள்ள தெரு. சிறு பெண் குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் முதலில் இங்கு வரும் போது அவளுடைய அம்மாவே பெரும்பாலும் குழாயில் தண்ணீர் பிடிப்பாள். ஆட்டோ டிரைவர் ஆட்டோவை , கால் வாளித் தண்ணீரில் கழுவிக் கொண்டிருந்தார். தண்ணீர் நன்றாய் கலங்கி விட்டிருந்தது. படுத்திருந்த தெரு நாய் முகம் தூக்கி தும்மி மீண்டும் தலையை கழுத்தில் வைத்து படுத்தது. புறாக்கள் வரிசையாய் மின் வயரில் அமர்ந்திருந்தன. ஏறு வரிசையா , இறங்கு வரிசையா? ஒரு புறா எழுந்து பறந்து இரண்டாவதாய் வந்து அமர்ந்தது. இன்னொன்று கீழே அம்பு போல் இறங்கி எதையோ கொத்தி மீண்டும் கடைசியில் போய் அமர்ந்தது. பின்னர் இன்னொன்று இடம் மாறியது, மற்றொன்று, மற்றொன்று...
மெயின் ரோடில் வந்து ஒரு நொடி நின்று கவனித்தான். அப்போதே டூ வீலர்களில் வேலைக்குச் செல்பவர்கள் இருந்தார்கள். தனியாக செல்பவர்கள், மனைவியை ஏற்றிச் செல்பவர்கள் , ஆட்டோவில் செல்பவர்கள் சாலை சுறுசுறுப்பேறிக் கொண்டிருந்தது. கீழே சென்றால் இதே போல் இன்னும் ஒரு கால் பதிக்கும் கூட்டம் இருக்கிறது. இடது புறம் இன்னொன்று. இடது புறம் இன்னும் கீழே சென்றால் ஏர்போர்ட் ரோடு. ரோட்டைக் குறுக்காக கடந்தால் கோல்ப் கோர்ஸ். கபில் தேவ் அங்கு வருவார் என்று பெட்டிக்கடைக்காரர் சொல்வார். ரோடின் மேலே பள பளக்கும் கண்ணாடிக் கட்டிடங்கள், லீலா பேலஸைக் கடந்தால், NAL , இஸ்ரோ , இன்னும் நீளப் போனால் ITPL வரை கம்பெனிகள். புதன் கிழமை பேப்பர் விளம்பரத்தில் வேலை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அது எங்கிருக்கிறது என்பது. அன்று பேப்பரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடம் என்று போட்டிருந்தது, எப்படிப் போவது என்பதை ஒரு இரண்டு தினம் முன்னரே கேட்டு வைக்க வேண்டும். இல்லையென்றால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது ,இல்லை , விழலுக்கு இரைத்த நீர் , என்று அண்ணன் சொல்வார். அவன் வலது பக்கம் திரும்பி பேக்கரிக்குச் சென்றான். அரை டீ என்று சொன்னான். முதலில் அவன் பெங்களூர் வரும் போது அவர்கள் குடித்த டீயின் அளவு திடுக்கிடச் செய்திருக்கிறது. கடைக்காரர் பை டு டீ , புல் டீ என்ன என்று மலையாளத் தமிழில் விளக்கினார். ஒரு பை டு டீ வாங்கி இரண்டாவது பாதியை அப்புறம் வந்து குடித்துக் கொள்ளலாமா என்று கேட்க நினைத்தான். அதற்குள் அவர் ஆப் டீயையும் பட்டியலில் சொல்லிவிட்டார். ஒரு ஐம்பது கிராம் மிச்சர் வாங்கி பையில் வைத்தான். இதுவே அவன் காலை உண்வு.
ஒரு நீண்ட நடை சென்று திரும்பிச் சென்று கணிப்பொறி முன் அமர்ந்தான். இதற்குள் வேலைக்குச் செல்பவர்கள் சென்று விட்டனர். வீட்டில் இவனும் இன்னொருவனும் மட்டும் இன்னும் குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு. கணினியில் பாட்டை ஓட விட்டான். 'இது ஒரு பொன் மாலைப் பொழுது' என்று பாடியது. இந்தப் படத்தில் வரும் வேலையில்லா வறட்சி இவன் மனதில் ஓடியது. ஹீரோ , ரெண்டாவது ஹீரோ, ஹீரோ அண்ணன், ஹீரோவின் நண்பர் எவருக்கும் வேலை இருக்காது. சாப்பிடக் காசு இருக்காது, டீகுடிக்க காசு இருக்காது. எல்லோரும் எதையாவது அடகு வைத்தபடி இருப்பார்கள். (இந்தத் தெருவிலும் பல அடகுக் கடைகள் இருப்பது நினைவு வந்தது). இரண்டு பேர் கலையை நோக்கி வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவார்கள். ஒருவர் கவிதை, பாடல்; மற்றொருவர் இசை. அதில் ஒருவர் பாடுவதுதான் இப்பாடல். தனக்குள் அப்படி கலை வேட்கை எதுவும் எழுகிறதா என்று பார்த்தான். ஏதும் சொல்லத் தெரியவில்லை.
கீழே நேற்று இரவு சிந்திய துளி சாம்பாரில் எறும்புகள் சுற்றி வட்டமிட்டிருந்தன. அதில் ஒரு துளியை புரட்டி எடுத்து வந்து ஒரு எறும்பு வெளியே செல்லும் வரிசைக்குள் நுழைந்தது. அதன் எதிரே உள்ளே வரும் வரிசை எறும்புகள் சில அதை முகர்ந்து விலகிச் சென்றன. இன்னும் சில முன்னதை முந்திச் சென்று வரிசையில் மீண்டும் சேர்ந்தன. முந்திய எறும்பைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அது மட்டும் ஏன் முந்தியபடி இருந்தது. எல்லாம் சேர்ந்து அந்த உணவை சிறிது சிறிதாக இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தன.
அருணாச்சலம் புத்தகத்தில் இருந்த ஏறுவரிசை நிரலியையும் அந்தப் படத்தையும் மீண்டும்ஒரு முறை பார்த்தான். பத்து உறுப்புள்ள ஒரு வரிசை. அதை நோக்கி நோக்கி என்னும் ஒரு கை , மாற்றியமைக்கும் இன்னொரு கை. இல்லை இல்லை, ஒரே கூட்டில் இரு பறவைகள், ஒன்று உண்டிருக்கிறது; இன்னொன்று அதைப் பார்த்தபடி இருக்கிறது. எல்லாம் அறிந்த பார்க்கமுடியாத, புரிந்து கொள்ள முடியாத கை. மண்ணில் ஒன்றுமாய் இல்லாத செடி எங்கிருந்தோ இலையாய் , காம்பாய், தண்டாய் , மரமாய் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்போல எண்கள் ஒவ்வொன்றாய் நகர்ந்து அவை இடம் சேர்ந்தன. இப்பொழுது அந்த நிரலியை தானே விசையழுத்தி உள்ளேற்றினான். இரண்டு சங்கிலித் தொடர்கள் , முதல் சங்கிலி முதலில் இருந்து முடிவு வரை, இரண்டாவது சங்கிலி இரண்டாவதில் ஆரம்பித்து, அந்தத் தரவு வரிசையை முடிவது வரை சுற்றி வர வேண்டும் . இரண்டில் இருக்கும் எண்களையும் ஒப்பிட வேண்டும். சிறியதாய் இருந்தால் கீழே தள்ள வேண்டும். பெரியதாய் இருந்தால் செய்வதற்கொன்றுமில்லை, ஆண்டவன் கருணையில் அடுக்கியே இருக்கிறது. ஓட விட்டுப் பார்த்தான். சில தடுக்கி விழல்களுக்குப் பின் , முடிவில் ஏறு வரிசை வந்தது. ஒன்று அடுக்க, மற்றொன்று திரையில் எழுத என்று பிரித்து நிரலியை அலங்கரித்துப் பார்த்தான். பின்னர் எப்போதும் எடுத்துக் கொள்ளாமல், நினைவகத்தை தேவைக்கேற்று எப்படிப் பயன் படுத்துவது என்று பார்த்தான்.
இது ஏன் அன்று அப்படி நடந்தது என்று தெரியவில்லை. மதிய சிற்றுணவு சாப்பிட்டு வந்து என்றும் போல் அன்று சட்டையை ஹாங்கரில் மாட்டி , மனோகர் படுக்கையில் படுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. மீண்டும் உட்கார்ந்து இன்செர்சன் சார்ட் போட வேண்டும் போல் இருந்தது. மேலும் இந்த வாரம் தேர்வில் உ போட்டு ஆரம்பிக்க வேண்டியதில்லை என்று நினைத்தான்.

Comments
Post a Comment