Skip to main content

உள்ளேயும் வெளியேயும் தாழிடுதல்

உள்ளேயும் வெளியேயும் தாழிடுதல்

2001 செப்டம்பர் 11 அன்று இரட்டை விமானத் தாக்குதல் உலக வர்த்தக மையத்தில் நடந்தபோது நான் பெங்களூரில் (பச்சிளம் பாலகனாக) இருந்தேன். அன்று வேலை முடித்து வந்தவுடன் ஒரு விமானம் மாபெரும் கட்டிடத்திற்குள் புகுந்து சாம்பல் கிளம்புவதையும், கட்டிடம் சரிந்து விழுவதையும் ஒரு ஆயிரம் முறை காட்டினார்கள். நண்பர்கள் சேர்ந்து இரவு நீள TV பார்த்த ஞாபகம் இருக்கிறது.புஷ் வந்து ஆவேசமாகப் பேசினார். அவரை விடுமுறையில் இருந்து கூட்டிக் கொண்டுவந்தனர். போர் வரும் என்றனர், பொருளாதாரத் தடைகள் வரும், பொருளாதாரம் பின் தங்கும் , வேலைகள் போகும் என்று பேசிக்கொண்டார்கள் செய்தி வாசிப்பவர்கள். எப்படியோ அது கடந்து போனது.

நேற்று டிரம்ப் இந்த மாதிரி ஒட்டுமொத்த பொருளாதார உலகத்தில் ஒரு விமானத்தை மோதியிருக்கிறார். முன்னவர் மோதியவர்களை துரத்தினார். இங்கு மோதியவர் , அவரே தான். யாரை விரட்டுவது ? விடுமுறையில் கோல்ப் விளையாடுகிறார் என்று சொல்கிறார்கள். இது ஒரு விளையாட்டாக இருந்தால் பரவாயில்லை. இல்லையென்றால் சிக்கல் தான் என நினைக்கிறேன். 1991-ல் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தை திறந்தார். நான் இந்த பூமியில் பிறந்த பின் பார்த்த நடந்த உருப்படியான சமாச்சாரம் இது ஒன்று தான். இதற்க்கு முன்னர் உள்நாட்டிலே எல்லாவற்றுக்கும் பெர்மிட் வாங்க வேண்டும். ஜெயகாந்தன் சிகரெட் , மதுவிற்கு அரசாங்கத்திடம் பெர்மிட் வாங்குவதைப் பற்றி எழுதியிருக்கிறார். நான் பார்த்து போனுக்கு எழுதிப்போட்டு வருடக் கணக்காய் காத்திருப்பார்கள். அசோகமித்திரன் வருடக்கணக்காய் காஸ் வாங்க காத்திருப்பத்தை கதையில் சொல்லியிருக்கிறார். ராஜபாளையத்தில் ஒரே ஒரு ரெடிமேட் துணிக்கடை இருந்தது. பெயர் குமார் ஷர்ட்ஸ். சட்டை மட்டுமே கிடைக்கும். ஒரே ஒரு தையல்காரரிடம் தீபாவளிக்கு ஊரெல்லாம் குமியும். தைக்கக் கொடுத்தால் அவர் ஒரு அட்டையில் தையல் துணிகளை ஓரமாய் வெட்டி ஸ்டேப்ளர் போட்டுக் கொடுப்பார். நாம் அட்டவணையைப் பார்த்து எப்படித் தைக்க வேண்டும் என்று சொல்லலாம். தீபாவளி அன்று கிடைக்குமா என்பது சொல்ல முடியாது. அட்டையைக் குடுத்தால் துணியை தேடு தேடு என்று தேடுவார்கள். இது எல்லாம் ஹை பை தையல்காரரிடம். நம் ஊரில் கணேசன் மூலையில் குமித்து விடுவார். அளவை பென்சிலால் துணி மேலேயே எழுதுவார். நூல்களை கலர் மாற்றிக் கொடுப்பார். துணியைத் தைத்தாலும் பட்டன் தைக்காமல் பல நாள் நடையாய் நடக்க வேண்டும். நிமிஷத்துக்கு யாரவது வந்து திட்டிச் செல்வார்கள். அவர் பலம் என்பது திட்டு வாங்கிக் கொள்வது.
அக்கம் பக்கம் கரியடுப்புகளில் சமைப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்புறம் திரியடுப்பு வந்தது. திரியை மாற்றி நுழைப்பது , நுண்மா நுழைபுலம் இல்லாமல் முடியாது. அப்புறம் ஒரு மாதிரி பம்ப் அடுப்புகள் வந்தன. முதலில் பற்ற வைத்தபின் குப்பென்று மேலெழும், பின்னர் பம்பை அடித்தால் நீலம் கலந்து எரியும். எரிய ஆரம்பித்தால் , நம் பேச்சும் அடுப்பில் கரையும். ஏரோபிளேனில் போகும் சத்தம் வரும்.
சமையல் குக்கர் என் வாழ்வில் இல்லாமல் இருந்து பின்னர் ஓரிடத்தில் பார்க்கக் கிடைத்திருக்கிறது. ஈயப் பானைகள் தெருவில் விற்பார்கள். வசதியுள்ளவர்கள் வெண்கலம் உபயோகிப்பார்கள். சில்வர் என்பதும் நடுவில் முளைத்தது. இரும்பில் கதவுகள் பெரும்பாலும் என் இளவயதில் பார்த்ததில்லை. கதவுகள் மரத்திலேயே இருக்கும். பாதிக்கு மேல் செருப்பு அணியமாட்டார்கள். ஒரே ஷூ பாட்டாவாக இருந்திருக்கிறது.
இரு சக்கர வாகனம் என்றால் TVS 50, பஜாஜ் M80, சேடக் மற்றும் போலீஸ்காரர்கள் ஓட்டும் புல்லட் என்று இருந்திருக்கிறது. கார் என்றால் அம்பாசடர் , இல்லையென்றால் பிரீமியர் பத்மினி. பஸ்கள் லேலண்ட் மற்றும் டாடா மட்டும்.
பல்பொடி மட்டுமே வீடுகளில் இருந்திருக்கிறது. லைப்பாய், லிரில் , மைசூர் சாண்டல் அவ்வளவே. லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டி வீடுகளில் உபயோகம் செய்வார்கள்.
பத்தாவது , பன்னிரண்டாவது முடிந்த கையுடன் வீட்டில், தெருவில் பெரியவர்கள் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பெயர் பதியச் சொல்வார்கள். சீனியாரிட்டி வரிசையில் வேலைக்குக் கூப்பிடுவார்கள் என்று சொல்வார்கள். யாருக்கு அப்படி வேலை கிடைத்ததோ தெரியவில்லை.பதிய இருக்கும் கூட்டமும் சொல்லி மாளாது. இரவே வந்து இடம் பிடித்து படுத்திருப்பார்கள். மாவட்டத்திற்கு ஒரே எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச், அப்புறம் அடி பிடி இல்லாமல் வருமா.
எம்பிளாய்மென்ட் நியூஸ் என்று மாதமொருமுறை செய்தித்தாள் நூலகத்திற்கு வரும். வந்த அன்று படிப்பதற்கென்று மட்டும் அண்ணன்கள், அக்காக்கள் வருவார்கள். நோட்டில் , பேப்பரில் கஎதையோ குறித்துச் செல்வார்கள். அதில் பாதி ராணுவ, விமான, கப்பல் படை வாய்ப்புகள்.
வங்கிகளில் கிளார்க்குகள் ஆபீசர் போன்றவை காணக் கிடைக்கும். பாட்டி தாத்தாக்கள் சர்வீஸ் கமிசன் எழுதச் சொல்வார்கள். ஊருக்குள் வேலை இல்லாமல் பாதிக்கு மேல் இருப்பார்கள். பலருக்கு வேலையே இல்லாமல் வயது கடந்து வாழ்வு இரக்கமில்லாமல் நிற்காத ரயிலாய் கடந்து போயிருக்கிறது. அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் கதை படித்திருப்பீர்கள். இல்லையானால் கூகிளில் தேடி படிக்க வேண்டும்.
இதையெல்லாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது என்றால், வீட்டில் , வெளியில் நாம் பார்க்கும் பொருள்கள் ஒரு இருபது முப்பது வருடத்திற்கு முன் இருந்ததில்லை. இன்றிருக்கும் வாய்ப்புகள் ஒரு இருபது முப்பது வருடத்திற்கு முன் இல்லை. இப்போது குடை ராட்டினம் இறங்குகிறதோ என்னவோ தெரியவில்லை.
அன்று மன்மோகன் செய்ததை இன்று டிரம்ப் தலைகீழாக்கி செய்திருக்கிறார்.
அமெரிக்கா தன்னை உள்பூட்டு, வெளிப்பூட்டு இரண்டும் போட்டு பூட்டிக்கொண்டு விட்டது. பூட்டை உடைத்தால் தான் உண்டு.
கொஞ்சம் ஏக்கமாய் இருக்கும் போது பழைய படங்களைப் பார்த்து அந்த நாட்களின் வாழ்வை அசைபோட்டுப் பார்ப்பேன். மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம். எல்லோருக்கும் இது குலைந்து பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் இருக்கலாம், எனக்கும் உள்ளே இருக்கிறது.
இல்லை எல்லாம் பூச்சாண்டியா ?

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...