அடியின் அட்டவணை
சரியாக மாலை ஆறு முப்பது
எதோ ஒரு குட்டை கவுன் பெண்
யாராவது இரண்டு பழைய வீரர்கள் சொல்லும்
நேற்று அடியைப் பார்
போனைத் திற
இன்ஸ்டாவைத் துளாவு
பேஸ் புக் என்னவென்று பார்
வாட்சப் பார் ஒருமுறை
மணி ஏழு
இரண்டு வயதானவர்கள்
அதே குட்டை கவுன் பெண்
இன்றைய அடிக்கான திட்டங்களைப் பார்
கொஞ்சம்
ndtv
நியூஸ் 18
இந்தியா டுடே
எக்ஸ்பிரஸ் பார் சிறிது
இவை வழி ட்விட்டர் சென்று
முடியும் பொழுது திரும்பி வா
இடையில் ஆணுறை விளம்பரம் வந்தால்
தலை நிமிர்ந்து பார்
சிறிது
மணி ஏழு முப்பது
அடி
அடி
இன்னும் அடி
ஐயோ...எத்தனை கோடி
ஏன் அடியில்லை
போன முறை இங்கிருந்தாரே
ஏன் அவர் அங்கே
அங்கிருந்த இவர்
ஏன் இங்கே மட்டும் இப்படி
அடி
அடி
இன்னும் அடி
தரையில் விடாதே
வானில் மட்டுமே விடு
மணி ஒன்பது இருபது
ஏன் அடிக்கு அடி
ஏன் அடிக்கு அடி
மௌனம் இல்லையா
மௌனம் இல்லையா
மணி பதினொன்று
இவரா அவரா
இதுவா அதுவா
இன்னும் தெரியவில்லை
மணி பதினொன்று பத்து
கடைசியாய் அட்டவணையைப் பார்
கீழிறங்கியது மேலேற வழி என்ன என்று பார்
மறக்காமல் நாளை என்ன என்று பார்.
டிராபிக் சிக்னல் கவிதைகள் -1
இன்று காலை குளிரூட்டப்பட்ட
காரை ஒட்டிச் சென்று கொண்டிருக்கிறேன்
குறுக்கே மறித்துக் கடக்க யாரும் இல்லை
வாயில் இருக்கும் கெட்ட வார்த்தையை
வைத்துக் கொண்டு என்ன செய்வது ?
டிராபிக் சிக்னல் கவிதைகள் -2
சிவப்பு விளக்கில் இருந்து
நெடுந்தொலைவில் காரில் நிற்கிறேன்
மலையில் வழியும் சிறிய சிற்றோடை போல்
என் முன்னே சாலையில் கடைசிவரை
ஈருறுளி செல்ல வழியிருக்கிறது
ஒரு ஈருறுளி கடந்து சென்று
முன்னே முதலில் நின்றது
பின்னே இரண்டாவது சென்றது
மூன்றாவதின் பாதையை இப்போது
காரை மறித்து மூடினேன்
டிராபிக் சிக்னல் கவிதைகள் -3 - எதிரும் புதிரும்
போகும் பாதையில்
பாதி அடைபட்டிருக்கிறது
அந்த இடத்தில்
எனவே வரும் பாதையிடம்
போகும் பாதை பாதி
கடன் வாங்க வேண்டியிருக்கிறது
வருபவர்கள் கொடுக்க மறுத்தார்கள்
செல்பவர்கள் விட மறுத்தார்கள்
ஒருவர் சட்டென்று ஏறி
நடைபாதையை வழிப்பறி செய்தார்
பின்னர் எல்லோரும் செய்தனர்.
எண்களில் அடங்க முடியாமல் போதல்
இன்று உடன் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தார்
இல்லை...தேவையில்லாமல் ரோஷப் பட்டு விட்டார்
இல்லை...இடித்துத் தள்ளப் பட்டார்
இல்லை...வட்டத்திற்க்கு வெளியே விழுந்து விட்டார்
இல்லை...வரிசையில் கடைசியில் வந்து விட்டார்
இல்லை...எண்களில் அடங்காமல் போய் விட்டார்
இல்லை...வெண்ணெய் தடவாமல் இருந்து விட்டார்
இல்லை...அவ்வப்போது கத்தியை காட்டாமல் விட்டு விட்டார்
இல்லை...வேலை அதிகம் என்று நினைத்துவிட்டார்
இல்லை...பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கிவிட்டார்
இல்லை...தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்
இல்லை...இருப்பது போதும் என்று எண்ணி விட்டார்
இல்லை...கொஞ்சம் நிம்மதியாக இருக்க நினைத்தார்
Comments
Post a Comment