நேற்று பெய்த இந்த வருட முதல் மழையில் ஊரெல்லாம் நான் கீழே குறிப்பிட மறந்த கோரமங்களா அகரா சாலையில் உள்ளே நுழையும் போது , ஒரு தர்பூசணி தள்ளுவண்டிக்காரர் , என்னைப் போகாமல் தடுத்தார். எட்டிப் பார்த்தால் இவர்கள் பதிக்க வேண்டிய குழாய்களெல்லாம் தரை மேலிருக்க, மழை நீர் பள்ளத்தை நிறைத்து , ரோட்டில் திகைத்து நின்றது. வண்டிக்காரர் ஏன் சொன்னார் என்று விளங்கியது. ஊரெல்லாம் சுற்றி ஒன்றிற்கு இரண்டு புனேரி டீயை குடித்து வீடு வந்து சேர்ந்தேன்.
இதை நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். இந்தக் குமுறலை தகுதி உயர்த்தி இங்கே பிரசுரித்தால் இதமாக இருக்கும் என்று தோன்றியது.
யாருக்கு நன்றி தெரிவிப்பது என்ற தலைப்பு, அசோகமித்திரனின் கதை. கதையைப் படித்துமுடித்தவுடன் மறக்கவே மறக்காது.
வாழ்வில் எல்லாவற்றுக்கும் அட்ஜஸ்ட் செய்து கொள்வதே வேலையாகிவிட்டது. நாம் வண்டிகள் ஓட்டும், நடக்கும் சாலைகளுக்குக் கீழே என்னவெல்லாம் போட்டு புதைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெரும் வியப்பாய் இருக்கிறது. கால் கீழே சாக்கடை , ரோட்டின் ஓரமோ , பாதியிலோ , நடுவிலோ, ஒரு பக்கம் மட்டுமோ , இருபக்கமோ ஓடிக்கொண்டிருக்கின்றன. தனி வீடு, வீடுகள், குடியிருப்புகள், அடுக்கு மாடிகள், கடைகள், அலுவலகங்கள், எல்லாவற்றிலும் இருந்து கிளம்பி, தெருவாய் , ஊராய், நகரமாய் , துளியாய், தாரையாய் , சிற்றோடையாய், வாய் அகண்ட கால்வாயாய் சாக்கடை. நகரின் முக்கியமான மேயோ ஹால் என்னும், சிவில் கோர்ட் இருக்கும் , போலீஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் இருக்கும், மால்கள் இருக்கும் , பிரிகேட் ரோடு நடக்கும் தூரத்தில் இருக்கும் , இந்த பிரபல இடத்தில் , பல நாள்களில் சாக்கடை கொப்பளித்து சாலைக்கு வந்துவிடும். ஒரு வெந்நீர் ஊற்று போல் சாலையெங்கும் சன்னமாக ஓடியபடி இருக்கும். இந்தச் சாலை கீழ் நோக்கி சரிந்திருக்கும் ஆதலால் , கிளம்பிய ஊற்று மெல்லிய அலைகளை உண்டுபண்ணி , விரைவாக ஓடும். சாலை முழுவதும் மெல்லிய திரைபோல் மூடியபடி ஓடும். இதையும் யாரும் கண்டுகொள்ளாமல் போகலாம் தான். காரில், வண்டியில் செல்பவர்களுக்கு என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் அதிலிருந்து கிளம்பும் மணம் , அது தான் எனக்கும், பலருக்கும் தாண்டும் வரை சிக்கல். பல வீடுகளில், அலுவலகங்களில் , தெரு, ஊர் , நகர் கடந்து, மணி, நாள், வாரம், பார்த்து வருவதாலோ என்னவோ, இதையெல்லாம் கலந்த ஒரு மணம் , அந்த இடத்தில் வீசும். இது வேறு எங்கும் நுகர முடியாது. பாதாள சாக்கடைகளுக்கே உள்ள மணம். H2SO4 நுகர்ந்திருப்பீர்கள், இதைப்போல் ஆயிரம் மடங்கு வீரியம் உள்ளது.
ஆனால் என்னவென்றால் ஒரு நூறடி தூரத்தில், திரும்ப அதுவாய் இன்னொரு நுழைவைத் தேடி பூமியில் சென்று விடும். பாவம் மனிதர்கள் ! இல்லையென்றால் நாடு நகரம் தாங்காது. இதே போல் சர்ஜாபூர் ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகிலும் ஒரு இடம் இருக்கிறது. பதினைந்து வருடமாய் , அதை சரி பண்ண என்னவெல்லாமோ செய்கிறார்கள். இந்த இடத்தில் சாலைக்கு கீழே ஒரு ஐம்பது அடி நீள சாக்கடை குறுக்கு நெடுக்காக கடக்கிறது. இரண்டு பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் தாண்டி, ஒரு ஏரியில் வெளியே வரும். இதுவும் சில நாட்களில் வெளியில் கசிந்து விடும். இந்த இடம் சரிவு. இரக்கம் என்று சொல்வார்கள். கருணை என்றும் பொருள். அதற்க்கு கருணை இல்லையென்றால் பெரிய திறப்பாய் ஆகிவிடும். அப்படி ஆகவில்லை, மனிதர்கள் இதற்குள்ளும் நடமாடுகிறார்கள், நோய் நொடி இல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் யாருக்கு நன்றி தெரிவிப்பது ?
அடுத்து வரும் கோரமங்களா உட்பகுதியை போர்க்களம் போல் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு பத்து JCB டோசர்கள், 100 மீட்டர் இடைவெளியில். குழி உள்ளே தெரியும் வண்ண வயர்கள் , வெளியே கிடக்கும் வயர்கள், அதை ஒட்டி குமிக்கப் பட்டிருக்கும் மணல் மேடுகள் , கட்டுவதற்குப் போடப்பட்டிருக்கும் கருமணல் , செங்கல், 'go slow , inconvenience regretted, என்று சொல்லும் தட்டிகள், பறந்து வெளியே வந்த, பறக்கத் துடிக்கும் காகிதப் பைகள், குடல் உருவி குமிக்கப்பட்டது போல், பூமியின் செம்மணல், கருப்பு மணல். இதன் நடுவே நிற்கும் கை விரித்த , மடக்கிய , மேலே தூக்கிய அடுத்த ஆணைக்கு நிற்கும் மேலும் சில JCB க்கள். இதை எல்லாம் பார்த்தும் பார்க்காமலும் அவர்கள் வேலையைப் பார்க்க வளைந்தும், நின்றும், நகர்ந்தும், வழி விட்டும், வழி வாங்கியும், முந்தியும், முந்தப் பட்டும் போய்க்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள்.
போகும் வழியெல்லாம் தோண்டியிருக்கிறார்கள். பெரிய பெரிய நீர்க்குழாய் , அப்புறம் சிறிய அளவில் சில இடங்களில் நீர்க்குழாய்கள், கொஞ்சம் பாதாள சாக்கடை வேலைகள். இப்போதெல்லாம் ஒரு சில இடங்களில் பெரிய பெரிய கேபிள்களை , உள்ளே கொஞ்சமும், முடியாத இடங்களில் கருணையுடன் வெளியே தெரியும்படி நடைபாதையில் அப்படியே விட்டுவிடுகிறார்கள். சாலையில் பல இடங்களில் குறுக்காய் தோண்டி குழாய் பதித்து விடப்பட்ட , சரியாக மூடாமல், வாய் பிளந்து பல நாள் இருக்கும். அது கரை உடைந்து பெரிதாகி, எப்போது சரியாகுமோ என்று நினைக்கும் போது என்றாவது ஒரு நாள் தார் பாய்ச்சி ஒட்டப் பட்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஜல்லிகளை மட்டும் பள்ளங்களில் கொட்டுகிறார்கள். இதுவாவது நடக்கிறதே, இதற்க்கு யாருக்கு நன்றி தெரிவிப்பது?
தண்ணீர் தேங்கும் பேருந்து நிலையத்தில் பஸ் இறங்கி கால் நனைந்து, செருப்பு பிய்ந்து , தலையில் மழை கொட்ட வீடு வருபவரின் கதை. முடிவில் அவர் நினைப்பது இது . "இவ்வளவு அசுத்தங்களின் நடுவிலும் மனிதர்கள் படுத்த படுக்கையாக விழுந்து விடாமல் செயல் படுகிறார்கள். இதற்காக யாருக்கு நன்றி தெரிவிப்பது?"
இது தான் கதை, இதற்காக யாருக்கு நன்றி தெரிவிப்பது?.
.jpeg)
Comments
Post a Comment