இந்த நாள்களில், அவனுடைய நடு வயதில் , சாப்பாட்டுத் தட்டில் கை வைத்து கூட்டு, காய்களை ஒரு முறை இழுத்துப் போட்டு சோற்றுடன் பிசைந்து உண்ணும் போது, மொத்தமாய் எல்லாவற்றையும் முதலிலியே ஒரே கலவையாய்ச் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. பார்க்க எப்படி இருக்கும் என்று தெரியாது.
அவனுடைய சிறுவயதில் அவரை அம்மாக்கள் பூச்சாண்டி என்பார்கள். சிலர் ஜோல்னாப் பை சாமி என்பார்கள். கன்னங்கரேல் என்ற முகம். எல்லாம் வெளுத்த தலை, வெள்ளைக் குறுந்தாடி. வயது அன்று அறுபத்தைந்து எழுபது இருந்திருக்க வேண்டும். தோலில் சுருக்கம் இருக்காது. தமிழ், தெலுங்கு இரு மொழிகள் பேசுவார். காவி வேட்டி அணிந்திருப்பார். இதை முக்கா வேட்டி என்பார்கள். துண்டும் இல்லை, வேட்டியும் இல்லை. ஒரு பக்கம் ஏற்றி மறுபக்கம் இறக்கி கட்டி இருப்பார். கையில் ஒரு நீளமான, அவர் கை பட்டே வழுத்துப் போய் பளபளக்கும் ஒரு தடி. இது இவர் தலைக்கு மேல் இருக்கும். என்றாவது இதை மூன்றாய் வெட்டி ஸ்டம்புகளாக ஆக்க முடியாதா என நினைத்திருக்கிறான். வலது தோளில் ஒரு சிறு காவி மூட்டை. இது அவரது இரண்டாவது வேட்டியும் கூட. படுக்கும் போது தலையணை. காலில் டயர் செருப்பு. கரண்டைக்காலில் எப்போதும் இருக்கும் புண்ணை மறைக்கும் ஒரு வெள்ளைத்துணிக் கட்டு.
இடது தோளில் ஒரு சுரைக் குடுவை. அந்தப் பெரிய அளவில் சுரைக்காய் இருக்குமா தெரியவில்லை. இன்றிருக்கும் ஒரு தர்ப்பூசணி அளவு இருக்கும். உள்ளே இருக்கும் உயிரை உருவிவிட்டு, வெயிலில் தோலைக் காய வைத்து, மேலே மெழுகு போல் எதோ பூசி , உறுதியாக்கப் பட்டிருக்க வேண்டும். நன்றாய் விரைப்பாய் இருக்கும். பகலில் உள்ளே பார்த்தாலும் அக்குடுவையின் கடைசியில், அதன் அடி ஆழத்தில் ஒரு துளி இருட்டு இருக்கும். இல்லை ஒளியின் எல்லை. அதன் இரு காதுகளிலும் ஒரு இரண்டு ஓட்டைகள், அதில் இரண்டு மூன்று கயிறுகளை திரிகளாய் விட்டுத் தோளில் மாட்டியிருப்பார். அதில் மேலே தோள் படும் இடத்தில் ஒரு துணியை அழுத்தாமல் கட்டியிருப்பார்.
அவருக்கு என்ன கண்ணேறு விழுமோ, ஒரு காலில் கறுப்புக் கயிறு இருக்கும். சிரித்தால் பொக்கை , ஆனால் இன்னும் அழகாக இருப்பார். இவருக்கு குழந்தைகள் என்றால் பிரியம். இவனென்றால் இன்னும் பிரியம்.
அவர் வீடு வாசல் எல்லாம் அந்த சப் ரெஜிஸ்டர் ஆபீஸ் திண்ணை தான். சப் ரெஜிஸ்டர் ஆபீஸ் அந்த ஊருக்கே முக மண்டபம் போன்றது. அங்கிருந்து பார்த்தால் பார்வையின் விளிம்பில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. அதுவரை எங்கேயோ கட்டப்பட்டு, சட்டென்று கட்டவிழ்ந்து அங்கங்கே வெளிப்படும் மேகங்கள். கூர்ந்து பார்த்தால் மலையிடை விழும் சிறிய அருவிகளைப் தெரியும். அதை எவ்வளவோ வருடங்களாய் அந்தப் பெரிய கண்மாயின் கரையில் நின்று பார்த்தபடி இருக்கும் ஆலமரம். நீரின் முடிவில் காடுபோல் தெரியும் கருவேல மரங்கள். அவைகளின் மேல் பனி வீழ்ந்தது போல் நூற்றுக்கணக்கான கொக்குகள், அவை அங்கங்கே பறந்தும், அமர்ந்தும் இருப்பது பனி நகர்வது போலிருக்கும். பின் கண்ணுக்கெட்டியவரை நீர் தான். இந்த நீர் மடைவழியேறி உட்புகும் நெல்வயல்கள், வாழைத் தோப்புகள். இதையெல்லாம் தாண்டி வரும் காற்றை வெற்றுடம்பில் வாங்கியவாறு , அந்தத் திண்ணையின் விளிம்பில் குடுவையைப் பக்கத்தில் வைத்து, கைமூட்டையை இடுப்பில் வைத்து, கம்பை நெடுஞ்சாண்கிடையாக சாத்தி வைத்துவிடுவார். முன்னால் இருக்கும் ரோட்டின் முனையில் காலுயர்த்தி நிற்கும் குதிரையின் மேலிருக்கும் அய்யனார் கோவில். ரோட்டின் பின்னே பெருமாள், கீழே கண்மாய் வழிந்து விழும் நீர்க் குளம்.
'அம்பி, நான் சிரமப்பட்டு உட்காந்து காலத் தூக்கி மேலே போடும்போதெல்லாம் கீழ தெரியுதான்னு பாக்கீரே...நீரு பாக்க முடியாது...காலேல குளிச்சு கோமணம் இறுக்குனா ராத்திரி தான் தொறப்பேன்...நீரு இருட்டி பொறவு வாரும்...அப்ப இருட்டிரும் பாத்துக்கோரும்... '
எதிரில் நின்றிருந்த அவன் கண் போகும் திசையை அவர் இன்றும் பார்த்து விட்டார். அவன் வாய் திறவாமல் சிரித்தான். அவன் சிரிப்பைப் பார்த்ததும் அவர் இன்னும் ஆழம் போனார்.
'அம்பி, நீரு பகல்ல பாக்கணும்னா ஜெயராம் ஓட்டலுகிட்ட போய்ப் பாரும்...அந்தால டீயைப் போட்டுக் குடுத்துட்டு இங்குட்டு டீ மண்டியை டின்னுல கொட்டுவான்..நீரு பின்னாடி நின்னா நல்லா பாக்கலாம்.. '
அவன் இப்போது பல் திறந்து சத்தமில்லாமல் சிரித்தான். அவர் ஒரு காலை மேலே தூக்கி நீட்டி , கீழே தொங்கிய காலின் இடையில் மூட்டையை உட்கார வைத்து பிரித்தார். ஒரு சிறிய செவ்வக மணிப்பர்ஸ், ஒரு கண்ணாடிக் கூடு, இரண்டு பழைய புத்தகங்கள். மேலே இருந்த புத்தகத்தில் சிவஞான போதம் என்று எழுதியிருந்தது.ஒரு நீளமான கழுத்தில்லாத காவிச் சட்டை ஒரு உடைத்த கட்டுப் பீடி, மற்றும் தீப்பட்டி.
'ஒரே உளுந்த வடயப் போட்டு யாருக்கும் குடுக்காம தின்னா , அம்பி ..என்ன ஆகும்? வடை இறங்கிப் போயி காலுக்கு கீழ சிக்கிரும்,
கேட்டீரா?..இன்னைக்கு ஊருக்கு ஆன வந்ததே..போயி சாணிய மிதிச்சீரா...போன தடவ சொன்னேன் உம்மட்ட... '
'யாரும் பாத்தா அப்பாகிட்ட சொல்லுவாங்க..' ஏற்கனவே இந்த மாதிரி ஏடாகூடமாக இவனுக்கு ஆகியிருக்கிறது. அப்பா லேசான தப்பானால் முறைப்பார். கொஞ்சம் தீவிரமான விஷயம் என்றால் நேராக அடிதான். பேச்சு, விசாரணை எல்லாம் கிடையாது.
'கண்மாய், கரிசக் காடெல்லாம் போய் விளயாடுதீரே...சாணிய மிதிச்சு ஒரு பத்து நிமிஷம் நின்னா முள்ளு குத்துனாலும் வலிக்காது...ஆனைக்கு முள்ளு குத்துனா வலிக்குமா?..சொன்னத கேக்க மாட்டேங்கீரே...இத விட்டுப்போட்டு கூட்டாளிக கூட ஆன நடுக்காலு எப்ப நீளும்னு நிக்கீரு '
'வாரும் போய் கப்பரைய கழுவிட்டு வருவோம்...' பையை விட்டு கம்பை ஊன்றி குளத்துப் பக்கமாய் நடந்தார்.
'இந்தப் புண்ணு சரியாவே ஆகாதா?' என்று அவன் கேட்டான்.
'அதும் உம்மல போலவே கூடவே வருது...என்ன செய்ய சொல்லும்...தினமும் கழுவிக் குளிப்பாட்டி வச்சா ஒன்னும் செய்யாது..இதுக்கு மேல இந்தக் கோலு இருக்கு கேட்டீரா...உம்ம கோலு எங்க இருக்கு சொல்லும் பாப்போம்.. ' அவன் மீண்டும் சிரித்தான்.
அவர் குடுவையைக் கடைசிப் படியில் நின்றபடி நீரில் இறங்காமல், நீரை முகர்ந்து அதிலேயே ஊற்றினார். பின்னர் கை விட்டுக் குடைந்து கழுவினார். மீண்டும் நீர்பிடித்து உள்ளே ஊற்றினார். நிமிர்ந்து குளக் கரையின் சுவற்றில் இருந்த சுகாசனப் பெருமாளை பார்த்து 'என் அப்பனே , நாராயணா ' என்று குடுவையைத் தலைக்கு மேல் உயர்த்தி இருகையால் வணங்கினார். 'அம்பி, சாமி எப்படி ஒய்யாரமா கால மடிச்சு உக்காந்திருக்கு பாத்தீரா...எம்புட்டு எண்ணெயை தடவி குளிப்பாட்டிருக்காரு கோவில் அய்யரு பாத்தீரா...ஆனா என்னில்ல சுண்டலை நனைய ப் போடுதாரு... நமக்கு இனிமே தான் சோலி ஆரம்பம் ...' என்று கரைக்கு வந்தார்.
'நீரும் ஒரு பீடியைப் பத்த வக்கீரா' என்று உட்கார்ந்து ஒரு பீடியை உருவிப் பற்ற வைத்தார்.
'வீட்டுக்குள்ள நுழைஞ்சா தெரிஞ்சுரும்..' என்றான் அவன்.
'அதுக்கும் ஒரு வழியிருக்கு கேட்டீரா...' என்று சொல்லி புகையை உள்ளே முழுங்கினார். அந்த இருட்டில் கையில் இருந்த பீடிக் கங்கு அவனை உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. 'ஒரு ரெண்டு இழு இழுத்துப்போட்டு நேரா ஆலமரத்துக் கீழ வேர்ல முளைச்சிருக்கும் கொழுந்த ரெண்டு எடுத்து சவையும் ...வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நேரா புளிப்பானைக்கு போயி ஒரு கையளவு பிச்சி மென்னுரும் ...வாடைய அது எடுத்துக்கிடும்..கேட்டீரா ... '
பீடி இழுத்து முடித்து 'இப்ப நீரு வீட்டுக்கு போவும்..நான் தெருவுக்குள்ள போறேன்' என்று சொல்லி கப்பரையை தோளில் மாட்டி, மூட்டையை அப்படியே வைத்து ஊருக்குள்ளே ராப்பிச்சைக்கு கிளம்பினார்.
அவன் கொஞ்ச நாளாய் எண்ணிக் கொண்டிருந்ததை அன்று அவரிடம் கேட்டு விட்டான். அவனுக்கு அவர் செய்யும் வேற எல்லா செயலும் பிடிக்கிறது. அவர் போல் வாழலாம் தான் , ஆனால் அவர் ஊரெல்லாம் வாங்கிச் சாப்பிடும் அந்த விதம்தான் உறுத்துகிறது.
'எல்லார் வீட்ல வாங்கிற சாப்பாட்டையும் அதே கொப்பரைல போட்டா , சாப்பிட நல்லா இருக்குமா? சோறு, கொளம்பு, காய் வேற வேற வீட்டோடது வாய்க்கு நல்லா இருக்குமா?'
'அம்பி, நம்ம அடுப்பு பத்த வைக்கது இல்ல...வாங்கித்தான் வகுத்த நிரப்பனும்...முதல்ல சிரமமா இருக்கும்...அப்புறம் பழகிடும்...வகுத்துல அக்கினி கனகனன்னு எரிஞ்சாத்தான் போகணும்...இல்லைன்னா போப்பிடாது...எல்லாத்தையும் வாங்கி வந்து உட்காந்தப் பொறவு கண்ண மூடி எல்லாத்தையும் சேத்துப் பிணைஞ்சுறணும்...அம்பி பழச்சாறு சாப்டிருக்கீரா...கைபோட்டு பிணைஞ்சாத்தான் அந்த ருசி வரும்...நுனி நாக்குல இனிப்பு...உள்நாக்குல உப்பு...பின்நாக்குல புளிப்பு..அதுக்கும் மேல கசப்பு..சக்கரய மேல் நாக்குல போட்டீர்னா இனிக்காது, கேட்டீரா ...மொத்தமா பொட்டணம் போட்டா மூளைக்கு தெரியுமா..தெரியாது...நாக்குல மொத கவளம் விழும்போது அத உத்து நாக்குல நிக்க வச்சு மனசால பாத்தா , அப்புறம் உடம்பு உள்ள வாங்கிக்கிடும் கேட்டீரா ...சாப்பாட்ட மோந்து பாக்கக் கூடாது...'
'கெட்டுப் போன சாப்பாட்ட போட்டுற மாட்டாங்களா' என்றான் அவன்.
'யாரு அப்புடி போடுவாக ...அம்பி இன்னைக்கு நீருதான் நாறுன சோத்த உள்ள போட்டீரு' என்று சொல்லி திரும்பவும் உட்கார்ந்தார்.
.jpeg)
Comments
Post a Comment