Skip to main content

ஓர் அம்மா, ஓர் பையன் , ஒரு ரோபோட்



நடு ராத்திரி 02.45. அவனும் அம்மாவும் தூங்கி சில மணிகளே இருக்கும். 

எட்டு ஒன்பது மணி கார் ஓட்டி வந்த  களைப்பு. அம்மாவுக்கு கீழே மதுரையில் (சின்னதாய்) விழுந்து, முதுகுத் தண்டு டாக்டரைப்  பார்த்து, பெரும்பாலும் ஓய்வில் இருக்கச் சொல்லி, இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சிதறிப் போய் இருப்பதனால், கட்டுப்படியான மதுரை வாசத்திற்குப் பின், வடக்கே பிள்ளைகள் இருக்கும் இடம் வந்து, ஓரளவு தெம்பு வந்தவுடன், வலுக்கட்டாயமாய்த் திரும்பிச் சென்று, அன்று சென்று சேர்ந்தவுடன், கொண்டு போன இட்டிலியை சாப்பிட்டு உறங்கி உறங்காமல் நள்ளிரவு 0245 பதறி தானும் எழுந்து, பையனையும் எழுப்பவேண்டும் என்றால் எப்படி இருக்கும். 

ஒன்று எதாவது திரும்ப விழுந்திருக்க வேண்டும், இல்லை கெட்ட கனவு , இல்லை  அதனினும் மேலாக எதாவது ....

' டே சுந்தர் .. கொஞ்சம் எழுந்திரிப்பா...முடிஞ்சா நானே எழுந்துற மாட்டேனா? ' அவர் எழுப்பும் அந்தப் பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

அவர் அப்போது வேறு கனவுகள் கண்டுகொண்டிருந்தார். டொனால்ட் டிரம்பும் , இலான் மஸ்கும் சேர்ந்து கழுத்தில் ஒருவர், வயிற்றில் ஒருவர் பூட்ஸ் கால் வைத்திருக்கிறார்கள். இவர் ஒரு  கை ஒரு கால் இரண்டும் அவர்களின் இன்னொரு கால் கீழ் அகப்பட தார் ரோட்டில் சுடு வெய்யிலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் கருப்பு கோட்டும் , டீ சர்ட்டும் பட்டு குருடாக்கும் வகையில் சூரிய ஒளி  கண்ணில் விழுகிறது. இந்த மூன்றில் எது வலியது என்று அவரால் பிரித்தறிய முடியவில்லை. அவர் பெயரை அம்மாவிடம் இருந்து கேட்டதும் தூக்கம் கலைந்தது. பதறி எழுந்தார். அன்றைய சர்வதேச அரசியல், வேலைச் சிக்கலுக்குப் பின் அன்று அவர் சித்தத்தில் இருந்தது, பொருளைக் கரை சேர்ப்பது போல், முதுகு நோகாமல் அம்மாவை ஊரில் சேர்ப்பது. எல்லாம் நன்றாய் தானே நடந்தது. இல்லையென்றால் இதுவல்லவோ கனவில் வர வேண்டும்.    

'அப்பா டேய் , அது ஒரே கத்துது பாரு ...என்னன்னு கேளு...இல்லன்னா இப்ப நடு  ராத்திரியில எந்திரிச்சு கிளம்பிரும்..'

இந்த சில மணி நேரத்தில்  அதைச் சரியாக பார்க்கக் கூட இல்லை. நடு ராத்திரியில் அதை பார்த்தபோது ஒரு வெயிட் மெஷின் என்றே நினைத்தான். மேலே xiamoi என்று போட்டிருந்தது. முழுதும் கருப்பு, மேலே ப்ளக்கில் இருந்து ஒரு கருப்பு வயர் தொங்கியது. சுவரில் ஒரு ஆப்பு போல் ஒரு பிளாஸ்டிக்கில் அது ஒட்ட வைக்கப்பட்டிருந்தது.  ஒரு அழகான நீல ஒளி அதன் வட்டமான சுவர்களில் விட்டு விட்டும் , பின்னர் எல்லாம் கூடி எரிந்து  அதன் வட்ட வடிவத்தை காட்டின. அப்போதும் அது இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தது. இது தான் அம்மாவை எழுப்பியிருக்க வேண்டும். 
மற்றொருமுறை 'என்னன்னு பார்றா..' என்றார். அவனுக்கு ஒன்றும் பிடிபட வில்லை. அது ஒரு சீனப் பெண்ணின் ஆங்கிலத்தில் ஒரே வரியை விடாமல் பேசிக்கொண்டிருந்தது.
'நான் கிளம்பத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லி தன்னுடைய நங்கூரத்தை தானே விடுவித்து வெளியேறியது. அவனது காலில் லேசாய் உரசி , பின் விலகி, புது திசை தேடி வெளியேற முயன்றது. குனிந்திருந்த அவன் பதறி அதை மிதிக்காமல் இருக்க அம்மா தூங்கிக் கொண்டிருந்த கட்டிலுக்கும் , சுவருக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியில்,  குதிக்க வேண்டியிருந்தது.

அம்மாவிடம் ' நடு ராத்திரில கோவத்த கிளப்பற...'  என்றான். 
'ராத்திரில சார்ஜ் போட்டா காலைல அதுவா  வேலை பாக்குமேன்னு பாத்தேன்..அணைச்சுட்டு படு..மணி எத்தனை ' என்றாள். 

அதன் உடம்பில் கால் பாகத்தில் , வெள்ளை ஓளியில் இரண்டு பொத்தான்கள் இருந்தன. ஒன்று அம்புக்குறி போட்டது , இன்னொன்று ஆன்-ஆப்  செய்வது. பின்னதை அழுத்தினான். இன்னும் எதோ சொன்னது. அம்புக்குறியை அழுத்தினான், மெதுவாய் தவழ்ந்து அதன் வீட்டருகில் சென்றது. நங்கூரத்தில் அதுவே மாட்டிக் கொண்டது. பிளக்கை உருவி விட்டு அவன் மீண்டும் படுத்தான்.

புதிதாய் வாங்கிய வீடு சுத்தம் செய்யும் ரோபோட் அது.  அவனது அப்பா காலமான பிறகு, அம்மாவிற்கு பையன் இருக்கும் சென்னைக்கும் ஊருக்குமாய் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஊரில் வீட்டு வேலையை எளிதாக்க இந்த ரோபோட் உள்ளே வந்திருக்கிறது. அம்மா சென்ற முறை ஊரில் இருக்கும் போது அவனிடம் பெருமையாய்ச்  சொன்னார்கள். அவனையும் ஒன்றை வீட்டில் வாங்கிக் வைக்கச் சொன்னார்கள். இதன் பின்னால் இருப்பது வேலை பார்க்கும் ஆளுக்கு சம்பளம் மிஞ்சும்.

அம்மாவிற்கு அது இப்போது இன்னும் தேவைப்பட்டது.  கால் தடுக்கி வாசலில் விழுந்ததில், முதுகுத் தண்டு சுருங்கியிருக்கிறது. பெல்ட் அணிய வேண்டும். குறிப்பாக குனியக்கூடாது.  வலி தாங்க முடியாமல் இருந்து, தாங்கும் வலியாகி , திரும்பும்போது, பின்னர் புரளும்போது வரும் வலியாகி , இப்போது அதுவும் கொஞ்சம் பரவாயில்லை என்னும்போது தான் ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்து அம்மாவைப் பிடித்துக் கொண்டது.

அம்மாவே காலையில் எழுந்து இருவருக்கும் காபியைப் போட்டு கையிலெடுத்துக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்தார். குடிக்க ஆரம்பிக்கும் முன் ரோபோவை எழுப்பி சுவிச்சை போட்டுவிட்டு மீண்டும் உட்கார்ந்தார்.  மோட்டார் சுற்றும் ஒலி , பூவின் மேல் நின்று பறக்கும் வண்டின் சத்தமாய் கேட்க ஆரம்பித்தது. மீண்டும் அந்தப் பெண் , தான் சுத்தப்படுத்தும் வேலையை ஆரம்பிக்கப் போவதாக கூறினாள். ஆமை நிலத்தில் நகர்வது போல் நகர ஆரம்பித்தது.

'போட்டு விட்டா ,அது வேலைய அது பாட்டு அது பாக்கும்' என்று சொல்லி டீவி ரிமோட்டை அழுத்த ஆரம்பித்தார். 

இதற்குள் அது கட்டிலுக்கு கீழே போவதைப் பார்த்தேன். அதன் முனையில் பூச்சிகளின் உணர்ச்சிகொடுக்கு போன்ற மூன்று கொடுக்குகள் துழாவிக்  கொண்டே சென்றன. ஒரு முடியும், ஒரு சிறு குப்பைத் திரட்டும் அது கடந்தபின் காணாமல் போனது.

அம்மா எச்சரிக்கையானார், ' உள்ளே போய் என்ன செய்யுதுன்னு பாரு சுந்தர்...அம்பிட்டுக்கிடப்போகுது பாருப்பா ' என்றார். 

அது சரியாக கட்டிலுக்கு காலுக்கும் உடம்புக்கும் இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து வெளியே வர முக்கிக் கொண்டிருந்தது. 

மாட்டிக் கொண்டது, அம்மா, ' அத உள்ள திருப்பித் தள்ளி,விளிம்புல தலகாணியப் போடு..அதா வெளிய வந்துரும்' என்றார். இரண்டு சோபா மெத்தையை கட்டிலின் கீழ் விளிம்பில் வைத்து இறுக்கினேன். இப்போது வெளியில் வந்தது.

பக்கத்தில் இருந்த மேசைக் காற்றாடியின் அருகில் சென்று கொடுக்கை வைத்து முகர்ந்து பார்த்தது. பின்னர் காற்றாடியின் சரிந்த கீழ் பீடத்தில் ஏறியது. அதனால் மேலும் ஏற முடியவில்லை, விழாமல் கீழும் வர முடியவில்லை. இப்போது உள்ளேயிருந்து அந்தப் பெண் மீண்டும் பேசினாள். அதை எடுத்துக் கீழே விட எழும்போது அவன் கையில் இருந்த காபி மடிக்கணினியில் சிந்தியது. வேகமாய் அதைத் துடைத்து , மூடிப் பின் எழும்போது கீழேயும் கொஞ்சம் காபி கொட்டியது.  

ரோபோவை காற்றாடியில் இருந்து இறக்கினான். அது சிந்திய காபியை நோக்கி வரவேண்டும் என்று எதிர்பார்த்தான். அது நேராக வெளியே கதவருகில் போனது. தெரிந்தவராக அம்மா 'கொஞ்சம் பொறுப்பா...அதுவா வந்து துடைக்கும் ' என்றார். இப்போது அது திரும்ப காற்றடியின் பீடத்தில் ஏற முயன்றது. அவன் காற்றாடியைப் பிடுங்கி உள் அறையில் , அதன் கண்ணில் படாதவாறு வைத்தான்.

இப்போதாவது இந்தக் காபியை துடைக்காதா என்று பார்த்தான். அதைக் கையால் எடுத்து சிந்திய காபிக்கு அருகில் விட்டான். மேலேறி கறையை இல்லாமல் ஆக்கியது. அதை பார்த்துக்கொண்டே இருந்தவர்,' கிளீனா ஆயிருச்சு பாத்தியா?..' என்றார்.

'அப்பா சுந்தர், அத கையால தூக்கி உள் ரூமுல விட்டுட்டு உன் வேலையைப் பாரு..' என்றார்.  அவன் விட்டுவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தான். ரோபோ ஒரு குழந்தை போல் தவழ்ந்து, ஒவ்வொன்றாய் முகர்ந்தும் பின்னர் விலகியும் சென்ற வண்ணம் இருந்தது.

தொலைக்காட்சியில் 'மந்திரமாவது நீறு' பாடிக்கொண்டிருந்தது.
'இது நம்ம ஊருல சம்பந்தர் பாடுன பதிகம்...உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்...கூன் பாண்டியனுக்கு தீக்க முடியாத வயித்து வலி வந்தப்போ, அவரோட அமைச்சர் குலச்சிறையார் வேதாரண்யத்துல தங்கி இருந்த சம்பந்தர வந்து பாத்து , மதுரையோட நிலமையைச் சொல்லி, பாண்டியனோட வலியச் சொல்லி, ராணி வந்து பாக்கச் சொன்னதா கூப்பிடறாரு..ராணியே எதிர்ல வந்து கூப்பிட்டு பின்னாடி அவர் பாடுன பதிகம் இது...தினமும் சொன்னா வலி கேட்கும்ன்னு சொல்லுவாங்க...சுந்தரம்னு உலகமே விளையாட்டு, அழகுன்னு சொல்றார்...தந்திரம்னா இந்த இடத்தில ஆகமம்னு அர்த்தம்...நீறுன்னா விபூதின்னு ஒரு அர்த்தம் இருக்கு..பிறப்பு இறப்பு கடந்த இடம்...எல்லாம் செரிச்சு கடைசில மிஞ்சுற இடம்...பிள்ளைங்களுக்கும் கதைகள சொல்லிக்கொடுக்கணும்...படிப்பு படிச்சுக்குடும்...ஆனா இது நாம சொல்லாம வராது ... '

இப்போது ரோபோ கண்ணில் படவில்லை.  இதையெல்லாம் அதுவும் கேட்டுக்கொண்டிருக்குமா என்று அவனுக்குத்  தோன்றியது. அதற்கும் தத்துவச் சிக்கல்கள் வருமா என்று தெரியவில்லை. இன்னும் மூளையில் கனம் ஏற ஏற முடிவெடுக்க சிரமப்படலாம். தத்துவம் தெரிந்த ரோபோக்களை யாரும் வாங்க மாட்டார்கள். அப்புறம் அதற்கு ஞானம் தெளிவிப்பது யார், மனிதனா , அதன் குருவா, ஞான ரோபோ  ?

'போய் எங்கருக்குன்னு பாரு...சத்தமே காணோம்...பேப்பர மென்றுச்சுன்னா தொல்லையாப் போகும்'  அம்மா சொன்னார்.

சரியாக அந்தப் பெண்ணும் தான் நின்றுவிட்டதாகவும் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாதென்றும் சொன்னாள் . 'அம்மா, ஒரு ஜவ்வுத்தாள் கீழ  மாட்டிருக்கு''  என்றான்.  அதன் மடியில் ஒரு பிளாஸ்டிக் காகிதம் உள்ளே முழுவதும் போய் நுனி மட்டும் வெளியில் தெரிந்தது.
'இப்ப ஒன்னும் முடியாது...அப்புறம் கழட்டி முழுங்குனத எல்லாம் வெளிய எடுக்கணும் ...பாப்போம்' என்றார்.
சிறிது நேரம் கழித்து திரும்ப அம்மாவின் குரல். 
'அப்பா, ரோபோவை இங்க எடுத்துட்டு வா...பாத்திரம் கழுவும் போதே அதையும் கழுவிப் போட்டுருவோம்...அன்னைக்கு சர்வீஸ் என்ஜினீயர் கழட்டுறதுக்கு சொல்லிக் குடுத்தான்...இன்னைக்கு நீ இருக்கும்போது செஞ்சு பாப்போம்..' 

ரோபோவை கழற்றிக் கொண்டுபோய் பாத்திரங்களுக்கு இடையில் குழாயடியில் வைத்தான். 
'புரட்டிப்போட்டு கீழ ஒரு பிரஷ் இருக்கும் , வெளிய எடுத்து சுத்தம் பண்ணு ' 

மேல்புறம் லேசர் ஒளி உமிழி ஒன்றும், அகச் சிவப்பு நிற ஒளி தகடு ஒன்றும் காண முடிந்தது. அதன் கீழ்புறம் ஒரு கரப்பானின் கீழ்ப் புறம் போல் இருந்தது. ஆனால் நடுவில் இரண்டே கால்கள். கீழே வெளியே தெரியும் மூன்று பல் பிரஷ். வயிற்றுப் பகுதியில் படுத்த வாக்கில் இன்னும் நீளமான சன்னமான பிரஷ். அதில் பெரும்பாலும் பின்னிய வெள்ளை முடிகள் , வெளியே எடுத்தான்.  

'அதுக்கு மேலே இருக்குற மாப் துணிய கழட்டி அலசி மாட்டனும்... ' . இதன் மேலே அரை சாண் அளவு துணி ஒரு பட்டியில்  ஒட்டப்பட்டிருந்தது. அதன் பின்னே ஒரு சிறிய தண்ணித் தொட்டி இருந்தது. நீர் கசிந்து துணி நனைந்து, அழுக்காய் இருந்தது. குழாயில் அலசி திரும்ப ஒட்டப் போனான்.   
'துணிய ஒட்டறதுக்கு  முன்ன, அதுக்குப் பின்னால இருக்குற பாக்ஸ் குப்பையை வெளிய எடு...டேங்க்ல தண்ணி ஊத்து..' அம்மா பாத்திரம் தேய்த்தபடி சொன்னார். விழுங்க முடியாமல் பாதியில் நின்ற பிளாஸ்டிக் பேப்பரை அகற்றினான். அதன் பின் குப்பையை ஒட்டடை ஆக்கி அடைத்து வைத்திருந்த புட்டியை கவிழ்த்து  வெளியே வீட்டுக் குப்பையில் கொட்டினான். இது இன்று லாரி வழியே ஊர்க்குப்பையாகி,  உலகக் குப்பையாகக் திரும்பி வரும். இந்த இரண்டு அறைகளின் குப்பை இந்த சின்ன புட்டியில் அடங்கும் என்பது அவனுக்கு வியப்பாய் இருந்தது.
நீரை நிரப்பி அதன் வயிற்றை திரும்ப மூடினான். 

'ஆன் பண்ணி எரியுதான்னு பாரு'
அது நங்கூரம் இருந்தும் அதில் பாய்ச்ச முடியாமல் தத்தளித்தது. நங்கூரத்தை மீண்டும் நகற்றி கப்பலுக்கு போதிய இடம் விட்டதும் மாட்டிக்கொண்டது.

தேய்த்துக் கழுவி  அம்மாவும் வந்து அமர்ந்தார். 'ஆனாலும் குனியாம இத ஓட்ட முடியாதுன்னு தோணுது..ஒரு மாசத்துக்கு வேலையாள் போட்டா நல்லது...' என்றார். 
அவனுக்கும் அப்படியே தோன்றியது , பிள்ளை வளர்ப்பது போல் என்று எண்ணிக்கொண்டான். 
'பாரு...ஒரு நாளுக்குள்ள எத்தன மெசேஜ் போன்ல அனுப்பிருக்குன்னு ...' . அது நிற்கும் போதும், எழும் போதும் போனுக்கு எச்சரிக்கைகள் அனுப்பியிருந்தது. 
'வீட்டு மேப் அதுக்கு காட்டிட்டா அதுவா செய்யும்னு போட்டிருக்கு...அடுத்து வரும் போது செய்வோம்' என்றான் அவன்.

அன்று பகலில் அவன் சென்னை திரும்ப வேண்டியிருந்தது.

அடுத்த நாள் காலை அம்மாவிடம் இருந்து போன் வந்தது.

'அப்பா, இன்னைக்கு காலைல ரோபோ கட்டில்ல இருந்து கீழ விழுந்துருச்சு...குனிய முடியலன்னு கட்டில்ல வச்சு சார்ஜ் போட்டேன்...வாசல்ல போயிட்டு திருபுறத்துக்குள்ள அதுவா கட்டில்ல இருந்து இறங்கப் பாத்து கீழ விழுந்துருச்சு..'  

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...