Skip to main content

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2


தமிழ் இலக்கியத்தில் திருமலை பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இருக்கிறது. பின்னர் சங்கப் பாடல்களிலும் ஒரு சில குறிப்புகள் வருகின்றன.இதன் பின்னர் சிலப்பதிகாரத்தில் திருவேங்கடத்தை சுட்டும் பாடல் வரிகள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் ஒருவர் தவிர மற்ற எல்லோரும் பாடியிருக்கிறார்கள். மொத்தம் 204 பாசுரங்கள். திருவரங்கத்தை அடுத்து பாடல் எண்ணிக்கையில்  இரண்டாவது. கம்பரும் வேங்கடத்தானை குறித்திருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் மூவரும் (கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள்) மதுரை நோக்கி வரும்போது உறையூரில் தங்கி மதுரைக்கு வழி கேட்க, வழி சொல்பவர் குறிப்பதாக திருமலை வருகிறது. மதுரைக் காண்டம், காடு காண் காதை, வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். இது இரண்டாம் நூற்றாண்டுக் குறிப்பு.

கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில், நாடவிட்ட படலத்தில் திருமலையைப் பற்றிய சான்றுகள் வருகின்றன. இதுவும் சுக்ரீவன் சீதையைத்  தேடிச் செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப் பட்டது.

சிலப்பதிகாரத்தில் உறையூரில் மூவரும் தங்கியிருப்பது ஒரு அருகப் பள்ளி.  அங்கு மூன்று நிலவை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கிய முக் குடையின் கீழ் செங்கதிர் போல் சிறந்து விளங்கும் இருந்த அருகதேவன். கௌந்தியடிகள் அங்கு பரந்து இருந்த திருவரங்கச் சோலையில் வசித்த  முனிவர்க்கெல்லாம் சாரணர் தமக்கு அருளிய மொழிகளை கற்பிக்கிறார். அன்று இரவு உறங்கி எழுந்து, தென் திசை செல்ல எண்ணி மூவரும் ஒரு சத்திரத்திற்குப் போகிறார்கள்.

இங்கு மாங்காட்டு மறையோன் தென்திசை ஆண்ட பாண்டியனின் பெருமையை பாடிக்கொண்டிருக்கிறான். 'வேற்றரசர் பலரையும் தன் காலடியில் கொணர்ந்த வடிவம்பலம் நின்ற பாண்டியன், கடல் மேல் வேலினை எய்ய, கடல் பொங்கி எழுந்து பஹ்ருளி ஆற்றோடு , பல மலையடுக்குகள் கொண்ட குமரியை விழுங்கியது. இழந்ததற்கு இணையாக வடக்கே கங்கையையும், இமயத்தையும் கைப்பற்றி தென்திசை முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்டான்.' பலமுறை கேள்விப் பட்டிருக்கும் 'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள ' வரி இவர் சொல்வதாகவே வருகிறது.  

அவ்வந்தணனை நோக்கி 'யாது நும் ஊர், நீர் இங்கு வரக் காரணம் என்ன' என்று கோவலன் கேட்கிறான். இவரும் இப்போது உறையூரில் இருக்கிறார்.

அவன் சொல்லும் பதில் தான் முதலில் திருவரங்கத்தையும் பின்னர் திருவேங்கடத்தையும் சுட்டுகிறது. இவர்கள் மதுரை நோக்கி போக , அவர் திருவரங்கம், திருவேங்கடம் பார்க்கப் போவதாக சொல்கிறார்.

'உயர்ந்த பொன்மலையின் மேல், நீல நிறத்தில் எப்போதும் அகலாமல் நின்றிருக்கும் மேகம் போல் , ஆயிரம் தலை விரித்து நின்றிருக்கும் ஆதிசேடன் படுக்கை மேல், பலரும் தொழும் வண்ணம் , பரந்த அலைகளையுடைய காவிரியின் இடைக்குறையில் , திருமகள் விரும்பி உறையும் மார்பினை உடைய திருமால் பள்ளி கொண்டுள்ள கோலத்தையும்'

"நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்

பால்விரிந் தகலாது படிந்தது போல


ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்

பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த

விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்

திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்"


'அருவிகள் வழிகின்ற திருவேங்கடம் என்னும் மிகவுயர்ந்த மலையுச்சியில் , தனது இருபுறமும் ஞாயிறு, திங்கள் கதிர் பரப்பி நிற்க, அவற்றின் இடைநிலைத் தானத்திலே மின்னலாகிய புத்தாடை உடுத்தி, வானவில் அணிகலன் பூண்டு, கருநீல மேகம் நிற்பது போல் , பகைவரை வருத்தும் சக்கரத்தினையும், பால்போலும் வெண்சங்கினையும், அழகிய தாமரை போன்ற தமது இரு கைகளில் ஏந்தி , அழகான கௌத்துவ மணி மாலையை தனது மார்பில் பூண்டு , பொன்னிறப் பூக்களாலான ஆடையையும் உடுத்துள்ள செங்கண்களையுடைய திருமாலின் நிற்கின்ற கோலத்தையும், எனக்குக் காட்டு என்று என் கண்கள் என் நெஞ்சத்தை இடைவிடாமல் கெஞ்ச , இந்த வழி வந்தேன்'

 

"வீங்கு நீரருவி வேங்கட மென்னும்

ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை

விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி

இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து


மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்


பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்

தகைபெறு தாமரைக் கையி னேந்தி


நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு

பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்


என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற

வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்"

நான் திருமலை சென்றுவிட்டு வந்து தேடிப் படித்து, இதை காற்றாடிக்குக் கீழ் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். சிலம்பின் மாங்காட்டு மறையோன் இவ்வளவு துல்லியமாக பாடி முடித்து விட்டு , வேங்கடத்தானை பார்க்கச் செல்கிறார். கோயில் நம் கண் முன் தூலமாய் என்றென்றும் நிற்கிறது. இதுவரை எத்தனையோ கோடிக் கண்கள் பார்த்திருக்கும். ஆனால் எல்லாக் கண்களுக்கும் அகப்படுவதில்லை. இளங்கோவைப் போல், கம்பனைப் போல், ஆழ்வாரைப் போல் சிலருக்கு அகப்படுகிறது. அவர்கள் எழுதி வைத்தது நம் கண்ணில் பட வேண்டியிருக்கிறது. இது எல்லாம் கூடி வர நம்மை மீறிய நிமித்தம் வேண்டும். 

நாங்கள் சென்ற அன்று பொது தரிசனம் என்னை பெரிய எரிச்சலுறச் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன். அந்தச்  சிலமணி நேர காத்திருப்பு ஏன் இவ்வளவு அலைச்சலை உண்டு பண்ண வேண்டும். இனிமேல் இங்கு வரக் கூடாது என்று பலமுறை எண்ணினேன், சிலமுறை வெளியே சொன்னேன். வைகுந்தம் காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படும் அந்த காத்திருப்பு இடம் மற்றும் அந்தக் காத்திருப்புமே இன்றைய திருப்பதியின் ஆன்மிக அனுபவம். இந்த கூட்டம், வேகம் என்னும் பொறியில் நாமும் இருந்து கொண்டே இருப்பதால், இந்த அடைப்புக்குள் சென்றதும், இது இன்னும் பல மடங்கு வேகம் கொள்கிறது. செய்ய ஒன்றும் இல்லை என்பதால் இன்னும் சிக்கலாகிறது. காலம் முன்னால் விரிந்து கிடந்து , செய்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் போது எரிச்சல் வருகிறது. என்னைப்போல் அங்கு இருக்கும் பலரின் நிலையம் இதுவே. பெரும்பாலோர் இடம் எல்லாம் அடைத்துப் படுத்துக் கிடந்தனர். வழி கொடுக்க மறுத்தார்கள். கால், கைகள் இல்லாத இடைவெளிகளில் வழி அதுவே உருவானது. மனிதர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். தன்னருகில் போகாது இதை சிலர் அடைத்தனர். காபி என்றதும், இதற்க்கு உள்ளேயே  இன்னுமொரு தள்ளு முள்ளு, பிரசாதம் என்றதும் இன்னும் தீவிரம். இதன் நடுவிலும் சிலர் அமைதியாய் , ஏதும் படாமல் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கைக் குழந்தை வாந்தி எடுத்தது. இந்த அழுக்கு , சிறிது சிறிதாய் மிதித்தும், அமர்ந்தும், படுத்தும் இல்லாமல் ஆனது. TV போட்டால் கோவிந்தா, ஒரு சிறு சாவி ஒலி கேட்டால் கோவிந்தா, காபி என்றால்  கோவிந்தா, சாப்பாடு என்றால் கோவிந்தா, இடிக்க வேண்டுமா கோவிந்தா, தள்ள கோவிந்தா, தள்ளாதே கோவிந்தா . குழந்தைகள் சிக்கலேதும் இல்லாமல் இருந்தன. ஸ்ரீ அன்று எல்லாவித சாத்திய கோணங்களிலும் உடம்பை வைத்துத் தூங்கினான். இரண்டு படிகளுக்கு இடையில், கால் அம்மா, தலை அப்பா. கதவு திறப்பார்களோ என்று பரபரப்பு அடைந்து எழுப்பினால் உடனே எழுவார், பின்னர் இல்லையென்றானதும் திரும்பி உறங்கி விடுவார். கதவு திறந்ததும் அதே வேகம், முந்துதல்; கடைசியில் வெளியே வரும்வரை ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் இந்தக் கூச்சலில் மனது நிதானம் கொண்டிருக்கலாம்.

மேலே சொன்ன மாங்காட்டு மறையோனிடம் மதுரை செல்ல கோவலன் வழி கேட்கிறான். அவர் சொல்லும் கொடு வழி கேட்ட பின் யாரும் அங்கு போக மாட்டார்கள். கீழே படித்துப் பாருங்கள்.

'அமைச்சரோடு  அரசனும் நெறிபிறழ்ந்து நடக்க, அதனால் நல்லாட்சி இல்லாமல் துன்பப்படும் மக்களைப் போல, கோடை காலமாகிய அமைச்சனும்  , கதிரவனாகிய அரசனும் கூடி முறைமை தவறி, தான் முன் உருவாக்கிய நலன்களை தானே அளித்தான் கதிரவனாகிய அரசன். அதனால், குறிஞ்சியும், முல்லையும் திரிபடைந்து , காட்டு வளத்தையும் , மலை வளத்தையும் இழந்து, தம்மை வருவோரை நடுங்கும்நடி செய்யும் பாலையாய்  இருக்கின்றன. இந்தக் கோடையில் அல்லவா நீ கண்ணகியுடன் வந்திருக்கிறாய்'

கற்பாறைகளும், சிறுகுன்றுகளும், வழி தெரியாமல் வழி மயக்கமும், நீரில்லாத கானல் நீரும், கலந்து கிடக்கும் இந்தப் பாலையைக் கடந்து...

கொடும்பாளூர் சென்று அங்கு சிவனின் சூலத்தைப் போல் மூன்றாய்ப் பிரியும் வழியில் ஒன்றில் சென்றால் மதுரையை அடையலாம். வலப்பக்க வழி சிறுமலை  , நடுவழி  அழகர்கோவில் , இடைவழி கான் வழி.   '

ஏன் சொல்லவருகிறேன் என்றால் ஒரே நாள் இரவில் கிளம்பி, அடுத்த நாள் மாலை வீடு திரும்ப இருந்தாலும் நமக்கு இடைவெளியில் பொறுமை இருப்பதில்லை.

கம்பன் கிட்கிந்தா காண்டத்தில் சீதையை தன் வானர சேனைகளை அனுப்பி தேடச் செய்ய, யார் யார் எந்தப் பக்கம் என்று சொல்லும் பொழுது, ராவணன் இருக்கும் இடம் தெற்கே என்று ஊகித்து, அனுமன் தலைமையில்  ஒரு படை தெற்கு நோக்கிப்  போக வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு நீண்ட வழி வரைபடத்தை அளிக்கிறான். இதுவே நாட விட்ட படலம். பாதாளம், பூலோகம், மேலோகம் எல்லாம் சென்று தேட வேண்டும் என்று சொல்கிறான். 

கிட்கிந்தை என்பது இன்றைய மத்திய பிரதேசம் என்று கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி, ஆயிரம் கொடுமுடிகளுடைய பெரிய திருமால் தானோ என்று தோன்றும் விந்தியம் தாண்டி , தேவர்கள் வந்து நீராடும் பூ மிதக்கும் தேன் வண்டுகள் ரீங்கரிக்கும் நர்மதையைக் கடந்து, ஏம கூடம் என்னும் மலை கடந்து, அகிலும் சந்தனமும் மணக்கும் விதர்ப்பம் கடந்தால் ,  தண்டகாரண்யம் அடைவீர். பின்னர் முண்டகத்துறை என்ற அகத்தியன் வசித்த மலையில் தேடுங்கள். மரங்கள் அடர் சோலையில் தவம் செய்யும் முனிவர் கண்டால் உம் அகத்துயர் விலகும். சூரியனும் உள்ளே புக முடியாத காடு அது. அதன் பின்னால் பர்வத மலையில் இருக்கிறது. 

'முத்து ஈர்த்து, பொன் உருட்டி, மணி உருட்டி, ஆயர் மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து புனிதம் ஆன கோதாவரி ' இங்கு உற்பத்தியாகிறது. இதைத் தாண்டி ஆறுமுகன் வாழ் கவன நதி. இது கடந்து கொங்கணம், குலிந்த தேசம் கடந்தால் அருந்ததி மலை.

மேலே கூறிய  இடங்களையெல்லாம் கடந்தால் தான் வேங்கடம் வரும். வேங்கடத்தானையும் மலையையும் நான்கு  பாடல்களில் சொல்லி , முடிவில் இதை நீங்கள் தரிசித்தால் பாவம் எல்லாம் விலகும் , அதனால் நீங்கள் முக்தி அடைவீர்கள். எனவே உள்ளே போகாமல் விலகி இன்னும் மேலே  செல்லுங்கள், உங்களுக்கு வேறு வேலை கீழே தொண்டை நாட்டில் இருக்கிறது என்று சொல்கிறான் கம்பன். 

'வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி,

      நான் மறையும்,மற்றை நூலும்,

இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்,

      நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு

புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த

      மெய்யேபோல் பூத்து நின்ற

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய

      வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ.'


தென்மொழிக்கும் , வடமொழிக்கும் எல்லையாய், நான் மறைக்கும் , எல்லா நூல்களுக்கும் , அதில் உள்ள பொருள்களுக்கும் அந்தமாய், அறிவுக்கு வரம்பாய்,  அருகில் நிற்பதற்கு பொருள் ஏதும் இல்லாததாய், புகழுள்ள உடம்பே போல் பூத்து நின்ற , தேன் கூடுகளால் நிரம்பப்பெற்ற ,  ஓங்கிய வேங்கடம்.


'இருவினையும், இடைவிடா எவ் வினையும்,

      இயற்றாதே, இமையோர் ஏத்தும்

திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும்,

      முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,

''கரு வினையது இப் பிறவிக்கு'' என்று உணர்ந்து,

      அங்கு அது களை, கடை இல் ஞானத்து,

அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்;

      ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்.


இருவினைகளையும், இடைவிடாமல் தினம் தொடர்பு கொள்ளும் எந்த வினையும் செய்யாமல் வாழ்வதும்  , தேவர்கள் புகழும் செல்வ வாழ்க்கையும், பிச்சை எதிர்பார்க்கும் தாழ்வான வாழ்க்கையும் எல்லாம் ஒன்றாக நோக்கித் தெளிந்து, இந்தப் பிறப்புக்கு காரணம் அந்த நல்வினை தீவினை என்று உணர்ந்து, அதை அந்த இடத்திலேயே களையும் தத்துவ ஞானத்தை அடைந்த , இருவினைகளுக்கு பகைவர்கள் என்று சொல்லப்படும் ஞானிகள் வாழ்கின்றனர் அந்த மலையில். போக முடியாவிடில் , இருக்கும் திசை நோக்கி வணங்கலாம்.


'சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

      நிறை ஆறும், சுருதித் தொல் நூல்

மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும்

      மணித் தடமும், வான மாதர்

கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு

      வருடுதொறும் கிளக்கும் ஓதை

போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும்

      உறங்கு இடனும், பொருந்திற்று அம்மா!


வஞ்சனை ஒழிக்கும் மறையோர் வாழும்,  வேதம் தெரிந்த தவத்தோர் வாழும், ஆசிரமங்களையும் , மேகங்கள் உறங்கும் ரத்தினங்கள் கொண்ட இடமும், யானைக் கன்றும், புலிக்கன்றும் ஒன்றாய் உறங்கும் வண்ணம் , வான மாதர் இசையை ஒத்த , கின்னர யாழ் நரம்பின் இசை எழும் மலை. 


கோடு உறு மால் வரைஅதனைக் குறுகுதிரேல்,

      உம் நெடிய கொடுமை நீங்கி,

வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப்

      புறத்து, நீர் மேவு தொண்டை -

நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்;

      அதன்பின்னை, நளி நீர்ப் பொன்னிச்

சேடு உறு தண் புனல் தெய்வத் திரு நதியின்

      இரு கரையும் தெரிதிர் மாதோ.


இத்தகைய சிகரங்கள் இருக்கும் அம்மலையை நெருங்குவீர்கள் என்றால் , உங்கள் கொடிய பாவங்கள் நீங்கி, விடுதலை அடைவீர். அதனால் விலகிச் செல்லுங்கள். அப்புறத்தில் தொண்டை நாடு, விலகிச் சென்று தேடுங்கள்.

இந்த வரியும் சுக்ரீவன் நமக்குச் சொல்வது போல் இருக்கிறது. விலகிச் சென்று நமக்கும் இன்னும் தேட வேண்டியிருக்கிறது. (TBC)


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...