இன்று இவ்வாறு ஒரு சனிக்கிழமையில் இவ்வளவு வசதியாக வேலையெல்லாம் ஒதுக்கி வைத்து (பில் கட்டுதல்,பெயர் மாற்றுதல் இன்ன பிற ), காலை காபி குடித்தபின் இந்த ஒரு அழகான சுய புராணத்தை டைப் செய்வேன் என்று நீங்கள் சொல்லியிருந்தால் , 25 வருடங்களுக்கு முன் நானே நம்பியிருக்க மாட்டேன்.
எனக்கு 1997-ல் பி.எஸ்சி படித்து முடித்தவுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிதான்இருந்தது. பாதிக்கும் மேல் நண்பர்கள் மேல் படிப்பையே தேர்ந்து எடுத்தார்கள். பேப்பரை பார்த்து காத்து இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் அட்மிஷன் அழைப்பு வரும். கல்லூரியை பொறுத்து இது முதல் பக்கமா , obituary , classified பக்கத்திலோ இருக்கும்.அதை பார்த்து DD எடுத்து அனுப்பினால் அவர்கள் அப்பிளிகேஷன் அனுப்புவார்கள். இவர்கள் ஒன்றாய் கூடி பூர்த்திசெய்த வண்ணம் இருப்பார்கள். செமஸ்டர் வரிசையாக மார்க் எழுத வேண்டும். நடக்கும் கடைசி செமஸ்ட்டரை என்ன செய்வது என்பது தான் FAQ.
என் நினைப்பு வேலை நோக்கி ஏன் சென்றது என்று இன்று யோசித்தால் ஒரே காரணம் over confidence ஆக மட்டுமே இருக்க முடியும்.
இந்த அதீத நம்பிக்கை எங்கு இருந்து வந்தது என்று பார்த்தால் இரண்டு காரணங்கள் என்று படுகிறது.
ஒன்று: 25 வருடத்திற்கு முன் கணிப்பொறியில் படிப்பவர்கள் அரிது, படித்தாலும் ஆசிரியர்களாக வேலைக்கு சேர்பவர்கள் இன்னும் அரிது. இவர்கள் இங்கிருந்து எப்போ வெளியேறுவது என்று தான் இருப்பார்கள். மொத்தத்தில் நம்முடைய அண்ணன் அக்கா நமக்கு பாடம் சொல்லி குடுத்தால் எப்படி இருக்கும். எனக்கு கடைசி வருஷத்தில் இருந்த ஒரு ஆசிரியர் , ஒரே தெருவில் வசிப்பவர். பல வருடங்கள் கூட விளையாடி வருபவர். இவர் இரண்டு மூன்று வயது மூத்திருந்தாலும் பெயர் சொல்லி கூப்பிட்டே பழக்கம். ஆனால் வகுப்பில் சார் என்று சொல்ல வேண்டும்.வகுப்பில் நுழைந்தவுடன் சார் என்ற வார்த்தை உள்ளேயே சிக்கி நின்று விடும். அவரும் பெரிதாக்க மாட்டார். சரி இவர்கள் எல்லாம் வேலை பார்க்கும் போது நமக்காக ஒரு இடம் இருக்காதா ? இப்படி ஒரு நினைப்பு. ஆனால் தமிழ் , ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் தரம் வேறு.ஆங்கில பேராசிரியர் வரதராஜன் ஒரு மணி நேரம் விடாமல் ஆங்கிலம் பேசுவார். புத்தகத்தை பார்க்க மாட்டார்.திடீரென்று கேள்வி கேட்பார். மாணவர்கள் தமிழ் உரைப்பர். அவர் ஆங்கிலமே உரைப்பார். இதன் எதிர் முனை தமிழ் ஆசிரியர். ஆனால் இது நம் கண்ணுக்குள் விழாது.
இன்னொரு காரணம் எப்போதும் போல் புத்தகங்கள் தரும் அதீத தன்னம்பிக்கை. கடைசி வருஷத்தில் யஸ்வந்த் கனேட்கர் எழுதிய சில புத்தகங்கள் படிக்க கிடைத்தது. Projects in C , System Programming, Born to Code in C(H&S) போன்ற சில புத்தகங்கள். இன்று இப்புத்தகங்கள் தேய்க்கப்பட்டுவிட்டன. அன்று காலேஜில் C language papers கிடையாது.COBOL என்று ஒன்று உண்டு. இதில் பாதி நேரம் compile செய்யவே போய் விடும். தேர்வு எழுதும்போது பாதி நேரம் மார்ஜின் கோடு போட்டுக் கொண்டே இருந்தால்? பலவேறு செக்ஷன்ஸ் இருக்கும், space/tab கணக்கு எல்லாம் இருந்ததாக நினைவு. ஒரு வழியாக compile செய்து ஓட்டினால் மயங்கியவரை சோடா தெளித்து எழுப்புகிற மாதிரி. இது போக இது அன்றைய மாமாக்கள் language ஆக இருந்தது. அருகில் போனால் Y2K problem பற்றி சொல்வார்கள். இல்லெயென்றால் அந்த காலத்தில் road census எடுப்பதற்கு பொடி கட்டங்கள் மட்டுமே கட்டப்பட்ட ஒரு நோட்டு இருக்கும். ஒருவர் நாள் பூராம் முச்சந்தியில் உட்கார்ந்து 1,1 என்று கட்டங்களில் எழுதி பக்கம் தீர்ந்ததும் கூட்டி போடுவார். 'அண்ணேன் எதுக்கு இது ' என்றால் 'உங்க ஊருக்கு ரோடு போடவா வேண்டாமான்னு இதுல போற வண்டிக கணக்கு பாத்து முடிவெடுப்பாக' என்பார். இதே போல் ஒரு கட்டம் கட்டி மாமாக்கள் ABCD எழுதிக்கொண்டு இருப்பார்கள். என்ன என்றால் 'pseudocode எழுதறேன் , அடுத்து இத COBOL -ல எழுதணும் ' என்பார்கள்.
இப்போது மேலே கண்ட புத்தகங்களில் உள்ள ப்ரோக்ராம்களை -ஐ ஒரு வழியாக படித்து type செய்தால் திரையில் மாயாஜாலங்கள் நிகழும். எல்லோரும் நம் பின் குழுமுவார்கள். நம் பெயருள்ள text -கள் திரையின் மூலைகளில் முட்டி மிதந்தபடி சுற்றி வரும்.நாலாபுறமும் எழுத்துக்களை பெரிய மலர் தோரணம் போல் கட்டி , நடுவில் பெரிய எழுத்துக்களை உட்கார வைக்கலாம். சிஸ்டம் சைடா ,அப்ப்ளிகேஷன் சைடா எதுல போற , இது எரிப்பதா புதைப்பதா போன்ற கேள்வி. வழி தவறிய/தவறப்போகும் ஆடுகள் முன்னதயே சொல்லும்.மேலே சொன்ன வேண்டாத வேலைகளில் ஈடுபடும். ஒரு மேல்படிப்பு விண்ணப்பமும் செய்யாமல் இவ்வாறாக பொழுது கழிந்தது.
இறுதித் தேர்வு எழுதிய இரண்டாவது தினமே சென்னை நோக்கி வேலை தேடி புறப்பட்டேன்.எல்லோருக்கும் போலவே, ஒரு ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்ட , இறங்கியவுடன் கை கூடப்போகும் வேலை எனக்கும் இருந்தது. 'தம்பி, நேத்தே வந்து இறுக்கப்பிடாதா , இப்பதானே வேற ஆளு வந்து வாங்கிட்டு போறாங்க ' என்ற பலசரக்கு வியாபார ரீதியில் முடிந்தது.இறங்கி அடுத்த நாள் நேராக அவர் வீட்டுக்கு சென்றேன்.இவர் இருந்த வீட்டில் இருவர். காலையில் அரிசியும், நிறைய பசி பருப்பும் ஒன்றாக குக்கரில் போட்டு தண்ணியாக இறக்கி, தட்டில் ஊற்றி உப்பில்லாமல் ஸ்பூன் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். 'நான் இந்த சனிக்கிழமை abroad போறேன் , டைம் இல்ல , வந்து பார்க்கிறேன் ' என்றவர் இது ஒனக்கு முக்கியமான இடம் என்று தி.நகர் தாண்டி பர்கிட் ரோடு என்று (ஞாபகம்) ஒரு ரோட்டில் இறக்கி, 'பாரு ,இந்த ரோட்ல ரெண்டு பக்கம் கம்பனிஸ் தான். resume நிறைய பிரிண்ட் பண்ணிக்கோ. ஒவ்வொண்ணா vacancy இருக்கா கேட்டு resume கொடு. ஏதவாது கிளிக் ஆகிடும். இது மாதிரி இன்னும் சில areas இருக்கு.ஒரு மேப் வாங்கி வச்சுக்கோ.ரோடு டீடெயில்ஸ் நான் தரேன். அதுக்குள்ளே ட்ரிப் முடிஞ்சு வர பார்க்கறேன் ' என்றார், ஆனால் பல வருடம் கழித்து வந்தார். தலையை ஆட்டினேன்,இதை செய்வதில்லை என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டேன். இந்த இடம் படிப்புக்கும், நினைப்புக்கும், நடப்புக்கும் உள்ள இடைவெளியை காட்டியது. தலை மாட்டில் கை வைத்து ஊஞ்சலில் படுத்த வண்ணம் வேலை ஆகாது என்று தெரிந்தது.
பின் வரப்போகும் இந்த 48 நாள் சென்னை வாசம் மூவருடன் ஆனது, என்னையும் சேர்த்து. எனது பாட்டி , அக்கா (ஒன்று விட்ட ). கல்யாணம் ஆன புதிது. அக்காவின் கணவர் ராணுவ வேலை , தனியே விட்டு செல்லும்படி ஆனது. இவருக்கு சென்னையில் வேலை. என்னை இங்கு மேலதிக பாதுகாப்புக்காகவும் பணித்து இருந்தார்கள். ஐயோ பாவம். அந்த வயதில் நமக்கு பசிக்காத நேரம் தூங்கும் போது மட்டும் தான்.
தாம்பரம் தள்ளி சேலையூர் என்னும் ஊர். சட்டென்று சினிமாவில் பிளாஷ் பாக் வெட்டி ப்ளாக் அண்ட் வைட் படம் மாறுவது போல தாம்பரத்திலிருந்து சேலையூர் பஸ் ஏறியவுடன் காட்சிகள் மாற ஆரம்பிக்கும். நிறைய வேட்டியை மடித்து கட்டியவர்கள் வருவார்கள். கடாய் பெட்டி ஆயாக்கள் வண்டி ஏறுவர். கோழி , சேவல்கள் தெருவில் திரிந்தவாறு இருக்கும். மாட்டை கம்பு அடித்து பொட்டலில் கட்டி இருப்பார்கள். சிறிய வைக்கப்போர் இருந்தது. தெருவில் சாணி தெளித்து பெருக்கி இருப்பார்கள். நாங்கள் இருந்த வீட்டுக்கு ஒரு பெண் வீட்டு ஓனர். 55-60 வயது இருந்திருக்கலாம். இரண்டு வீடுகள் மாடியில், இரண்டாவது வீடு காலி. இவர் மற்ற எல்லா விஷயத்திலும் சாது.பாட்டியுடன் தெலுங்கில் சிரித்து பேசிய வண்ணம் இருப்பார். ஆனால் தண்ணீர் என்று வந்து விட்டால் அனல் பறக்கும். அலாரம் வைத்து இரண்டு மணிக்கு ஒரு முறை வந்து 'தண்ணி ரொம்ப செலவு பண்றீங்க, இப்பிடி இருந்தா சரிப்படாது' என்பார் . அக்கா இவர் மேலே வந்தாலே கொஞ்சம் மிரண்டு விடுவார். ஒரு பக்க சேலையை இடுப்பில் சொருகியபடியே நடமாடுவார்.
வலது பக்கம் மேலே அட்ட்ரஸும் , நேர் கீழே yours failthfully மற்றும் கையெழுத்து , நடுவிலே கட்டம் கட்டி, பள்ளி , காலேஜ் பெயர்கள், முக்கியமாக மதிப்பெண் சதவீதம். இது தான் ரெசுமே என்பது. இதைத் தூக்கிக் கொண்டு காலையில் கிளம்பி விடுவேன். போக வேண்டிய இடங்களை ஞாயிற்றுக்கிழமை பேப்பர் தான் முடிவு செய்யும். பெரும்பாலும் செக்யூரிட்டி மற்றும் ரிசப்ஷனிலேயே மனுவை வாங்கி கொண்டு அனுப்பி விடுவார்கள். எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணம் எனக்கு மிக சந்தோஷமாய் இருந்தது ஞாபகம் இருக்கிறது. ரெட்டர்ன் டிக்கெட் வைத்துக் கொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம். எனக்கு பார்த்துச் சலிக்காது. ஒரு முறை அப்பாவின் பாக்டரியில் கன்வேயர் பெல்ட்டைப் பார்த்தேன். சிறு சுண்ணாம்புக் கற்கள் ஒரு பெரிய பெல்ட்டில் நகன்று சென்று ராட்சத கிலன்களின் உள்ளே மூழ்கி சூட்டில் பொன்னிறமாகிப் பின் காய்ந்த களிமண் போல் வெளியே வரும். மின்சார ரயில்கள் நகரத்தை இணைக்கும் மாபெரும் கன்வேயர் பெல்ட்கள் என்று தோன்றும். யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். காலையில் எல்லோரும் பெரும்பாலும் நியூஸ் படித்துக்கொண்டே இருப்பார்கள். மாலையில் தூங்குவார்கள். ஒரு அம்மா ஒரு நாள் காய்கறிகளை ஒரு அட்டையில் வைத்து நறுக்கினார். இறங்கியவுடன் எல்லோருமே படி நோக்கி ஓடுவார்கள். ஏறும்போது இறங்கியபின் குறைத்து நடக்கும் இடம் பார்த்து எல்லோருமே நிற்பார்கள். நமக்கு நேரம் என்பது பிரச்சனை கிடையாது. பொழுது ஓட்டுவது தான் பிரச்சனை. எல்லா ஸ்டேஷன்களிலும் இறங்கி காலாற நிறைய நடந்திருக்கிறேன். ஒரு முறை கிண்டியில் இறங்கி ஹிக்கின்போதம்ஸ் வரை நடந்தேன். அங்கு ரபி பெர்னார்ட் -ஐ பார்த்தேன்.
சில வாரங்கள் இவ்வாறாக பொழுது போய்க்கொண்டிருந்தது. ஆனால் பாட்டிக்கும் இரு அக்காக்களுக்கும் திசைக்கோளாறு தெரிய ஆரம்பித்துவிட்டது. நம் வீட்டில் நுழைந்தால் பேச்சை ஒரு செகண்ட் கூட்டாக நிறுத்தி விட்டு , பின் வேறு ஒரு டாபிக்-ஐ , தொடர்வார்கள் .
இன்னொரு அக்கா, இவர் கூட நடந்து கொண்டு இருக்கும் போதே , கப் என்று அப்போது தெருவில் பார்த்தவரை நோக்கி ,
' இவன் என் தம்பி. ஊர்ல இருந்து வந்திருக்கான். வேல தேடிண்டு இருக்கான் . ரொம்ப கஷ்டப்படறான் , கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் கிளாஸ் பாஸ் பண்ணிருக்கான் .ஆனா ஒன்னும் அமையல.' என்பார். 'சி.வி அனுப்புங்கோ , பார்க்கலாம்' என்பார் மாமா.
இவ்வாறு அமையப் பெற்ற ஒரு நேர்முகம் தான் Times of India - வில், எனது முதல் நேர்முகம். பேனல், ரூம் என்று எல்லாம் இல்லை.இவர் நேரடியாக என்னை அவர் வேலை பார்க்கும் பகுதிக்கே அழைத்துச்சென்றார். காலேஜ் லேப் மாதிரிதான் இருந்தது. அவர் ஒரு சுழலும் நாற்காலியில் சுற்றிய வண்ணம், வேலை பார்த்து கொண்டே என்னிடம் கேள்விகள் கேட்டார். என்ன தான் ஹிந்து/எக்ஸ்பிரஸ் வேகமாக படிப்பவனாக இருந்தாலும், ஒப்பீனியன் , columnists பெயர்கள் தெரிந்தாலும் ஆங்கிலம் படிப்பது பேசுவது ஆகாது, இல்லையா. சிந்திப்பது பேசுவது ஆகாது. நாவல் நெட்வேர் என்றால் என்ன என்று கேட்டார்? பின் நெட்ஒர்க் என்றால் என்ன என்று கேட்டார். அப்புறம் TSR பற்றிக் கேட்டார். இதற்கெல்லாம் முன் அறிமுகம் செய்யச் சொன்னார். பெயர் , காலேஜ் மற்றும் மார்க்கை சொன்னேன். அப்புறம் அவர் எதையோ எதிர்பார்த்து காத்து இருந்தார். நானும் மௌனமாக இருந்தேன்.சில மணித்துளிகளுப்பின் அவர் குனிந்து அடுத்த கேள்வியை கேட்டார். கேள்விகளுக்கிடையில் தன் வேலையை பார்த்த வண்ணம் இருந்தார்.
இதன் இடையில் என்னுடன் படித்து வேலை நோக்கி புறப்பட்ட ஒரு சிலர் வேலையில் land ஆகி இருந்தார்கள். அதில் ஒருவர் தன் வேலையை மாற்றி பெங்களூர் செல்வதாகவும், அந்த இடத்திற்கு என்னை சொல்வதாகவும் சொன்னார். வாய்ப்புகள் எப்படி என்றேன், கண்டிப்பாக என்றார். நான் சரி என்றேன். இது செங்குன்றம் தாண்டி எங்கோ என்று ஞாபகம். அப்போது landline போனில் தான் தொடர்பு கொள்ள முடியும். இவர் சொல்லி விட்டு சென்று பெங்களூரு சென்று விட்டார்(இவர் இன்று பெரிய வேலையில் இருக்கிறார், பல வருட US வாழ்க்கைக்குப்பின் ). நான் சென்ற அன்று மூக்கை சிந்தி, கண்கள் பனித்து பாட்டி அனுப்பி வைத்தார். நான் திங்கள்கிழமையில் இருந்து வேலை ஆரம்பம் என்று சொல்லி வைத்து இருந்தேன். ஒரு வழியாக ரயிலேறி , பஸ் மாறி நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் மனதில் எதிர் பார்த்தது, மவுண்ட் ரோடு போல் இரு புறம் கம்பெனி, மேல் நோக்கி போர்டுகளை பார்த்தவாறு செல்ல வேண்டும். சின்ன போர்டுகளை தவற விட வாய்ப்பு உண்டு. ஆனால் செங்குன்றம் இறங்கியதும் ஊருக்கே திரும்பி போய் விட்டமாதிரி ஒரு உணர்ச்சி வந்தது. தூரத்தில் கண்மாய் மாதிரி ஏதோ பெரிய மேடாக இருந்தது. சைடுகளில் மாட்டை கையில் பிடித்த வண்ணம், மெயின் ரோட்டில் விடாமல் பார்த்து ஓரமாய் ஒட்டிக் கொண்டு சிலர் போய்க் கொண்டு இருந்தார்கள். கண்மாய்க்குள் இருக்கும் ஒரு layout -களில் கம்பெனி இருந்தது. கேட் திறந்தே இருந்தது. கார் பார்க்கிங்கில் சிலர் நடமாடிக்கொண்டு இருந்தார்கள். ஒரு கார் நடுவில் இருந்தது. ஒரு நடு வயதுள்ளவர் நான் யார் என்று விசாரித்தார். மேலே சென்று முதலாளியை அழைத்து வருகிறேன் என்றார். இதற்குள் பக்கவாட்டில் இருந்த அறையில் ஒருவர் என் நண்பரின் பெயர் சொல்லி ' அவர் அனுப்பினாரா ' என்றார். அவுட் ஹவுஸ் போல் இருந்தது. இரண்டு பலகை போல் போட்டு , மேலே இரு கம்ப்யூட்டர் வைக்கப் பட்டிருந்தது. ஒன்றில் அவர் இருந்தார். ரெண்டாவது இடம் காலியாக இருந்தது. இதற்குள் மாடியில் கையில் ஒரு நாயைப் பிடித்த வண்ணம் முதலாளி இறங்கி வந்தார். எல்லோரும் இருந்த இடத்தில் இருந்து ஒரு இரண்டு அடி பின் நகர்ந்தனர். 'நீங்க தான் அவர் சொன்னவாரா ?' என்றார். 'ஆமா ' என்றேன்.' திங்கள்கிழமையிலே இருந்து வந்து இருங்க ' என்றார். சரியென்று தலை ஆட்டினேன்.
வீட்டில் ஏறியவுடன் பாட்டி 'என்ன ஆச்சு' என்றார்.
'சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.
தீபாவளிக்கு ஊருக்கு போறேன் ' என்றேன்.
Comments
Post a Comment