விளையாட்டுப் போக்காக Nike Run Club (NRC ) -app ஐ , என்ன இருக்கிறது பார்ப்போம் என்று தரவிறக்கம் செய்தேன். முழுவதும் அப்பிக் கொண்டது. ஓடும் போது பயிற்சியாளர்கள் காதில் பேசுகிறார்கள். ரொம்ப எளிதாக நம்மை ஸ்ட்ரெட்ச் செய்கிறார்கள். ஒரு சவால் தான் , எனக்கும் நன்றாக தான் இருந்தது. நீங்களும் முயற்சிக்கலாம்.
தெரியாமல் இன்னும் ஒன்றைச் செய்து விட்டேன். ஒரு 21 கீ மீ ஓட்ட டரில்லை ஆரம்பித்தேன். 14 வாரம், இப்போது ஐந்திலேயே கஷ்டம் தெரிகிறது. இந்த வாரம் 12.8 கீ . மீ எதிரில் இருக்கிறது. இது ஒரு தன்னை ஆற்றும் முயற்சியே.
முதலில் வலியைப் பற்றி எனக்கு தெரிந்ததை இங்கு சொல்லியாக வேண்டும்.
வலி என்னும் பரிசு , Pain : Gift Nobody Wants என்னும் புத்தகத்தை பால் ப்ராண்ட் என்பவர் எழுதியிருக்கிறார். இவர் ஒரு அறுவைசிகிச்சை மருத்துவர். இவர் கதையே தனியாக எழுத வேண்டுவது. இவர் தன் வாழ்வு முழுதும் வலி பற்றியே ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரது வாழ்வின் முடிவில் எழுதியதுதான் இந்த புத்தகம். அவர் வாழ்க்கை, ஆளுமை இந்த momoirs வழியாக மிகப் பெரிதாக விரிவதைக் காண முடியும்.
பால் ப்ராண்ட் 1914ல் தமிழ்நாட்டின் கொல்லிமலையில் பிறக்கிறார். அம்மாவும் அப்பாவும் கொல்லிமலையில் மிஷனரிகளாக வாழ்கிறார்கள். கொல்லிமலை என்று பெயர்வரக் காரணமே அங்கிருந்த மலேரியா பரப்பும் கொசுக்கள்(Anopheles) தான் என்கிறார். மலேரியா என்பது அங்கு சகஜம், அதுவாக வந்து செல்லும். பாம்புகள் வீடுகளில் சாதாரணம், கடித்த 11 அடியில் ஆளை சாக வைக்கும் கட்டு விரியன்(eleven-step-adder) இருந்திருக்கிறது. அவரை டோலியில் தூக்கிச் செல்பவர்களின் கால்களில் அட்டைகள் ரத்தம் குடித்து அட்டைகள் வீங்கி இருப்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. வீட்டினுள் எல்லாம் கரையான்கள். அப்பா கரையான்களின் புற்றை ஒரு நாள் உடைத்துக் காட்டுகிறார். உள்ளே போக , வர வழிகள் இருப்பதைக் காட்டுகிறார். ஒவ்வொரு கரையானும் தனியாகவும் , ஒரு பிடிபடாத சேர்ந்த அமைப்புடனும் இருப்பதைக் காண்பிக்கிறார். ஒரு துண்டு புற்றை உடைக்கிறார்கள். ஒரு பெரிய பிரளயமே நிகழ்ந்து, பின் ஒரு இடத்தில அதன் ஒரு கூட்டமே உடைவை சரி செய்ய ஆரம்பிக்கிறது.
தீ மிதிப்பவர்கள்,கன்னத்தில் அலகு குத்தி வெளியே எடுப்பவர்களைக் கண்டு பயப்படுகிறார். அப்பா அவர்கள் உடம்பை வலி தாங்க பழக்கப் படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இவர் செய்து பார்க்கிறார், முடியவே இல்லை.
வலி என்பது எங்கும் பரவி இருப்பதை பார்க்கிறார். ஆனால் இவர்கள் வலியை எவ்விதம் பார்க்கிறார்கள் என்பது பெரிய திறப்பை அளிக்கிறது.
பின்னர் பெற்றோர்களை விட்டு படிப்புக்காக இங்கிலாந்து செல்கிறார். முதலில் கட்டிடக்கலை , carepentry படிக்கிறார். பெற்றோர்களிடம் திரும்பிச் செல்ல வேண்டி மருத்துவப் பள்ளியில் ஒரு வருடப் படிப்பில் இணைகிறார். முதலுதவிதான் இங்கு முக்கிய பயிற்சி. பிணம் போல் வந்து சேரும் ஒரு பெண் , தன் முதலுதவியால் பல மணி நேரங்களில் பிழைப்பதைப் பார்க்கிறார். திரும்ப 5 வருடம் மருத்துவம் படிக்கிறார். இடையில் அப்பா மலேரியாவால் கொல்லிமலையில் இறக்கிறார். அவர் எழுதிய கடிதங்கள் இறந்த பின்னும் சில வருகின்றன. 1946ல் திரும்ப இந்தியாவுக்கு திரும்பி CMC -ல் தன் தொழுநோய் ஆராய்ச்சியை செய்தார். இன்றும் இவர் துவங்கிவைத்த பணிகள் தொய்வுறாமல் நடைபெறுகின்றன.
இந்த புத்தகம் 90களில் எழுதப்பட்டது. இந்தியர்கள் வலிக்கு பழக்கப்பட்டவர்கள் என்கிறார். இவரே அமெரிக்காவிலும் வேலை பார்த்திருக்கிறார். அமெரிக்கர்கள் சின்ன வலியையும் பொறுப்பதில்லை என்கிறார். இவர் மருத்துவம் படித்து முடித்துப் பின் இந்தியா திரும்பி தொழுநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார். தொழுநோயாளிகளுக்கு வலி நரம்புகள் செயலிழந்து போவதாலேயே , ரணம் பெரியதாகி கை , கால்களை இழக்க வைக்கிறது. இவர்களுக்கு செயற்கையாக வலியை உண்டாக்க ஆராய்ச்சிகள் செய்கிறார். வலி என்பது ரொம்ப சிக்கலான செயல்முறை, இங்குதான் படைத்தவன் இருப்பதை உணர்கிறேன் என்று சொல்கிறார்.
வலி என்னும் செயலை மூன்றாகப் பிரிக்கலாம்.
1.சமிக்கை - சிக்னல்: இது வலி கிடையாது. ஒரு பிரச்னையை உணர்தல் - சென்சிங். இது இடத்திற்கு இடம் வேறுபடும். காலில் ஒரு தாங்கும் சக்தி, இதுவே வயிற்றில் வேறுமாதிரி . தசையின் வலிமை , உறுப்பின் முக்கியத்துவத்தைப் இவற்றைப் பொறுத்தது.
இவ்வாறு நூற்றுக் கணக்கான வலி உண்டுபண்ண வேண்டிய அலைகள் உடம்பில் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கண்ணை மூடி கூர்ந்து நோக்கும் போது இது தெரியும், பல இடங்களில் ஒரு நேரத்தில் வலி இருப்பது போல் இருக்கும் . இவை உறுப்புகளின் அருகில் இருக்கும் நரம்புகளில் நிகழ்கின்றன.
2.வலியின் கதவு : இவ்வாறு உடலில் வலி உண்டுபண்ண வேண்டிய உணர்வுகள்(லட்சக் கணக்கில் ) மூளையின் ஒரு பகுதியில் சேர்கின்றன. மூளையின் கீழ் பாகத்தில் இது நிகழ்கிறது. இதை ஒரு கதவு என்கிறார்கள் - "pain gate ". எல்லா வலிகளும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முடியாது. ஒரு தரம் பிரித்தல் நிகழ்கிறது. ஒரு சில வலிகளே அடுத்த கட்டம் மூளைக்குள் நகர்கின்றன.
3.வலி : வலி இந்த மூன்றாவது கட்டத்தில் தான் ஏற்படுகிறது. வலியென்னும் உணர்வுக்கு மூளையே காரணம். போட்டியில் கீழே விழும் ஒரு குழந்தை , எல்லோரும் பார்க்கும் போது அழுகாமல் இருப்பதையும், வீட்டுக்குள் சென்றவுடன் முழுவதையும் பார்க்கிறோம்.
இந்த மூன்றாவது கட்டத்தை வைத்து வலியை நாம் ஆள முடியும். உதாரணமாக ஒரு தலைவலி,கால்வலி, செருப்பில்லாமல் தார் ரோட்டில் நடந்தால் சரியாகும். இங்கு கல் குத்தும் போது உண்டாகும் வலி மூளையைக் குழப்பி , இந்த வலியை முன்னே இழுத்து தலைவலியை பின் தள்ளி சிறிது ஏமாறுகின்றன.அதே போல் மனதை வலிக்கு பழக்குவதால் , வலியை கடக்க முடியும். விளையாட்டுகளில் ஈடுபடுவது தான் இதற்க்கு சிறந்த வழி.
பொதுவாக விளையாட்டுகளில் இதுதான் நிகழ்கிறது. கைதட்டுகளும், போட்டியும்,பாராட்டுகளும் வலியை சமாளிக்கச் செய்கின்றன.
நீண்ட தூர ஓட்டம் என்பது வலியைத் தாங்குவது தான். ஓடும் போது வேலை அழுத்தங்கள், மற்ற கவலைகள் எல்லாம் ஏன் பின் செல்கின்றன?. அப்போது நம் மூளைக்கு எல்லா நோக்கமும் நம் அடுத்த மூச்சைப் பற்றியது தான்.
(மேலும்)

Comments
Post a Comment