Skip to main content

போக புத்தகம் - போகன் சங்கர் - புத்தக வாசிப்பு

Boga Puththagam (Tamil) by [போகன் சங்கர், Bogan Sankar]

Boga Puththagam (Tamil) 

https://tamil.wiki/wiki/போகன்_சங்கர்

மிகச் சாதாரணமாக, அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டே  இருக்கக்  கூடிய , அல்லது பார்த்து விட்டு எளிதாக கடந்து சென்ற விஷயங்களில் இருந்து  ஒரு கதையை தேர்ந்த படைப்பாளியால் உருவாக்க முடியும் . “Genius is seeing what everyone else sees and thinking what no-one else has thought.” போகன் சங்கரின் இந்த எழுத்துக்களில் பல இடங்களில் இது நிகழ்கிறது. 

நமக்கு மிக அருகில் இருக்கும் மனிதர்களே வருகிறார்கள். கூடே வேலை பார்ப்பவர்கள், யோகா வகுப்பு படித்தவர்கள், ஆசான் ,பக்கத்துக்கு வீடுகளில் வசித்தவர்கள், நண்பர்களின் வீட்டு மனிதர்கள், பேருந்தில், ரயிலில் உடன் வருபவர்கள்   - எத்தனை மனிதர்கள், எத்தனை கதைகள். ஆசிரியர் ஒரு சிறந்த கதை சொல்லி. கணக்கில்லாத அக்காக்களும் , தோழிகளும் கதையெங்கிலும் வருகிறார்கள். எனக்கு கோபல்ல கிராமம் படித்த ஞாபகம் வந்தது. இதே போல் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகளும். எல்லாக் கதைகளும் குதூகலத்துடன், சிரித்தபடி படிக்க வைக்கும் கதைகள். 

நான் ரசித்த சில கதைகளை கீழே தொகுத்திருக்கிறேன்.

கடல்புரத்தில் ஒரு அப்பாவுக்கு அஞ்சலி நாள். யார் யாரோ வந்து போகிறார்கள். கடலில் அலை.உள்ளே 'கரைச்சல்' செய்த அவர் பெண் குழந்தையை வெளியில் சேர் போட்டு உட்கார வைத்திருக்கிறார்கள். கையில் மிட்டாய் கொடுத்திருக்கிறார்கள். இவரிடம் கை திறந்து காண்பித்து 'அப்பா வாங்கிட்டு வர்ற மிட்டாய் இது இல்ல' என்கிறது. 

குடும்பத்துடன் வாழ ஆரம்பித்திருந்த ஒருவர் , மனைவியையும் , குழந்தையையும் டெங்குவிற்கு பலி கொடுக்கிறார். யாரும் இல்லாமல் வாழ்க்கை. ஆனால் பண்டிகை நாட்களை தனியே கடப்பது தான் சிரமம் என்கிறார். தீபாவளி அன்று நாள் முழுதும் சினிமா பார்த்தே கழிக்கிறார். 'சிரிப்புப் படம் போலிருக்கு இந்தச் சினிமா. ஒட்டவே முடியலை. சார். வரட்டா? அப்படியே ஆனந்த்ல ரெண்டாம் ஆட்டம் பார்த்துட்டுப் போயிடுவேன். அது ஏதோ அரசியல் படம்னு சொன்னாங்க.’

இவர் பையனை ஹிந்தி தேர்வுக்கு அழைத்து செல்லும் போது , தன்னுடைய CBSE நுழைவுத் தேர்வு நினைவுகள் வருகின்றன. இரு பெண்களுக்கு நடுவில் இவருக்கு இருக்கை. சுற்றிலும் பெண்கள்.பெயரில் கோமதி இருந்ததால் இக்குளறுபடி. பாதி நேரம் சென்ட் வாசனையை முகர்ந்த வாறே இருக்கிறார். தலையை சொரிகிறார். பொடுகு விழுகிறது. 'யாக்' என்கிறார்கள். ஒரு வழியாக தேர்வு ஆரம்பிக்கிறது. இவர் உள்ளே புகுந்து எழுதியவாறு இருக்கிறார் .இரு பெண்களும் இவரைப்  பார்த்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நேரம் ஆக பேப்பர் காண்பிக்க இருவரும் இருபுறமும் அரிக்கிறார்கள். இவர் தலை சொரிகிறார் , பொடுகு அவர்கள் மேல் அருவி போல் விழுகிறது.   

ராஜபாளையத்தைச் சேர்ந்த சித்தர் சொல்லும் அவர் குருவின் (நவ சித்தர்)  கதை உள்ளது. பிரம்மச்சரியம் என்றால் இலக்கணம்  என்ன என்று சொல்கிறார். நவ சித்தரை  பெண்களே பார்க்காமல் வளர்க்கிறார் அகத்தியர். வளர்ந்ததும் மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். முதல் முறை பெண்களை பார்க்கிறார். நீங்கள் வைத்தியராக உள்ள இடத்திலே இப்படி நெஞ்சில் கட்டிகளுடன் மக்கள் திரிகிறார்களே , இது கொடுமை இல்லையா என்கிறார். அகத்தியரே உறைந்து நின்று விடுகிறார்.  

அப்பா பற்றிய கதைகள்( பௌத்த அவதாரே/கோபுரம் 1/அப்பா )   என் அப்பாவை(இன்று இல்லாத) மிகவும் நினைக்க வைத்தன. 

அப்பாவின் தகனம் செய்து முடிந்த மலையில் நிகழும் கதை. மற்றும் ஒரு முறை அப்பா இறந்த நாளை கண்முன் நிறுத்தியது. சிலர் வீட்டில் நீர் ஊற்றிக் கழுவுகிறார்கள். யாரோ வருகிறார்கள், கதறி அழுகிறார்கள். சித்தப்பா செலவுக் கணக்கு சொல்கிறார். மாமா  death certificate வாங்க சொல்கிறார். அம்மா எங்கோ மறைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சிலர் ராத்திரி படுக்க இடம் தேடுகிறார்கள். யாரோ சீட்டு விளையாடுகிறார்கள். "இந்தக் கூரையின்கீழ் இன்றொரு மூச்சு குறைகிறது" என்று முடிகிறது.

இவர் கயையில் சிரார்த்தம் செய்யும் போது, அருகில்  சிரார்த்தம் செய்யும் குடும்பம், சம்பிரதாரயமாக எதாவது ஒரு காய் , பழம் , இலையை விட வேண்டும். மங்குஸ்தான் , ஆல இலை , பாகற்காய் என்கிறார். அக்குடும்ப தலைவர் அதையே காப்பி செய்கிறார். அவர் மனைவி சுகருக்காக பாகற்காய் விட வேண்டாம் என்கிறார். கான்செல் செய்து மறுபடியும்  சுண்டக்காய் என்கிறார். இது வயிற்றுப்புண் ஆற்றும் இது வேண்டாம் என்று கான்செல் செய்ய ஓடுகிறார். 

ஒரு பொறுப்பான அப்பா , இருந்ததை சுற்றி இருப்பவர்களுக்காக செலவிட்டு, மேலே கடன்கள் வாங்கி, பொறுப்பினாலேயே  அலைக்கழிக்கப்பட்டு , நோயாளியாகி , தானே வைத்தியம் பார்த்து, இறுதியில் மனச் சிதைவில் சென்று விழுகிறார். மனச்சிதைவுக்குள் விழ வைக்கும் கடைசி சம்பவத்தை எழுந்தபின் திரும்ப நினைவுகூர்கிறார். கோவிலுக்கு வசூலிக்க கூட்டமாக தெருவில் வந்தவர்கள், இவரிடமும் நன்கொடை  கேட்கிறார்கள். இந்த கஷ்டத்திலும் இருபது ரூபாய் கொடுக்கிறார். வாங்க மறுக்கிறார்கள். அடுத்த தெருவில் இருக்கும் தம்பி 50 கொடுத்ததாக சொல்கிறார்கள். இருபது ரூபாயை திருப்பி கொடுத்து விட்டு செல்கிறார்கள். " பின்னர் அவரது பிரமைகள் விலகின. ஓர் அபூர்வ நாளில் அவர் அன்றைய சம்பவத்தை நினைவுகூர்ந்து கண்ணில் நீர் ததும்ப இவ்விதம் சொன்னார், ஒரு மன்னிப்புக் கோரல் போல ஏங்கிய குரலுடன், ‘அப்போது என்கையில் மொத்தமாகவே இருபது ரூபாய்தான் இருந்தது.’


போகன் சங்கர்; Bogan Sankar. Boga Puththagam (Tamil)  Kizhakku Pathippagam. Kindle Edition. 

 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...