எல்லா நாளுமே இரவு மீட்டிங்குகள் இருக்கும் . சில நாள் ஒன்றுடன் முடியும்.சில நாட்களில் 3 அல்லது நான்கு மீட்டிங்குகள் கூட இருக்கும். முடியும் போது நள்ளிரவு ஆகி விடும். நாள் துவங்கியதுமே அந்த நாள் எத்தனை மணிக்கு முடியும், இந்த நாள் அடுத்த நாளை எவ்வாறு நசுக்கும் என்று பார்த்து சந்தோஷமோ , அதிருப்தியோ அடைவது என் வழக்கம். அலுவலகம் திறந்த பின் இது இன்னும் சிக்கல் தான், ராத்திரி லேட் என்பது அடுத்த நாளின் ஆரம்பம் லேட்டாகலாம் என அர்த்தமாகாது .
இந்த வகையான மீட்டிங்குகள் பெரும்பாலும் ritual-கள் தான். ஒரு சில டெம்ப்ளட்க்களுக்குள் அடக்கி விடலாம். Goldratt -ல் படித்த இந்த வரிகள் தான் எனக்கு அடிக்கடி நினைவில் வரும்.
“Tell me how you measure me and I will tell you how I will behave. If you measure me in an illogical way… do not complain about illogical behavior…”
நான் பார்த்து எல்லா கம்பெனிகளிலும் பெரும்பாலும் எல்லா மீட்டிங்குகளும் 90% நேரம் defects (குறைபாடுகள்) சுற்றியே இருக்கும். எத்தனை மொத்தம், எத்தனை வரவு, எத்தனை வெளியேறியது ,யார் பேரில் உள்ளது, யார் கீழே போட்டு மேலேறி உட்கார்ந்திருக்கிறார்கள், இது எவ்வாறு ஊர்ந்து செல்கிறது, ICU/அவசர /மேஜர்/மைனர் எத்தனை , யார் பேரில் உள்ளது.
பொதுவாக ICU மற்றும் அவசர கேஸ்களுக்கே பெரிய மீட்டிங்கில் இடம் இருக்கும். நீங்கள் இந்த மீட்டிங்குக்கு முன்னால் உங்கள் பேர் அடி படாமல் பார்த்துக் கொண்டாலோ அல்லது நல்ல ஒரு கேஸ் பைலை ரெடி பண்ணி வைத்துக் கொண்டாலோ இதிலிருந்து விடுபடலாம். இல்லை என்றால் டிவி ஷோக்களில் வரும் anchor போல், எல்லோரும் பார்க்க உங்களை கொஞ்சம் முக்கி எடுப்பார்கள். நீங்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஜொலிக்கவும் முடியும். 40-50 பேர் இருப்பார்கள் , 5-6 பேர் ஏதோ பேசுவார்கள். மற்ற எல்லோரும் கேட்பார்கள். இல்லை mute-ல் போட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பர். ஒருவர் mute செய்ய மறந்து , பேசியவாறே குளிக்க துண்டு தேடினார், தெலுங்கில் கேட்டது நினைவுக்கு வருகிறது.
ஸ்ரீக்கு நேற்று தான் தேர்வு முடிந்தது. குதித்துக் கொண்டிருந்தான். ஒரு பஞ்சர் ஆன கால்பந்தை வீட்டுக்குள் சுவரில் படும்படி எத்திக் கொண்டு இருப்பது தான் அவனுக்கு பிடித்த பொழுது போக்கு. அவனே இரு பக்கமும் விளையாடுவான். பந்தை கடைந்து ஹாலில் இருந்து வளைத்து சுவரில் முட்டுவதற்கு முன் இடது காலால் வளைத்துத் தள்ளி, டைனிங் டேபிள் சேரில் படாமல், பிரிட்ஜ்ல் முட்டும் முன்னர் , சுவரில் உதைத்து தள்ளுவான். 'எஸ்' என்ற படி முஷ்டியை மடக்கி எதிரணிக்கு விளையாட ஆரம்பிப்பான்.
எனக்கு நேற்றும் மீட்டிங் இருந்தது. ஒரு கையில் தட்டுடன் ஸ்பூனால் சாப்பிட்டவாறே ரூமில் நுழைந்தேன். கதவை மூட முடியவில்லை, லேசாக சாற்றி விட்டு உள்ளே வந்தேன். சேரை இழுத்து உட்கார்ந்தேன், டேபிள் மீது தட்டை வைத்தேன்.எப்போதும் sofa-ல் உட்கார்ந்தவாறு மடியில் கணினியை வைத்து பேசுவேன்.
மீட்டிங்குள் உள்ளே இருந்தவர் என்னுடன் பேச ஆரம்பித்திருந்தனர். ஒரு அமெரிக்க பெண் இருந்தார் கேட்டபடி. முதலில் நீலா அறைக்குள் வந்தாள் , எரிச்சல் வந்தது. அவளாக தட்டை எடுத்துச் சென்றாள். இன்னொரு முறை கதவு திறந்தது. மறுமுறை உணவு எடுத்து வந்தாள். அதை எவ்வளவு பெரிய கரண்டி வைத்து சாப்பிட்டாலும் முடிக்க முடியாது. எனக்கு இன்னும் கோபம் வந்தது. 'முதல்ல போ , நான் அப்புறம் சாப்பிடறேன் ' என்றேன். மறுபடி குறைத்து எடுத்து வந்தாள். இன்னும் கோபம் அதிகரித்தது. கோபத்தை கட்டுப்படுத்தி தட்டு, கதவு சத்தங்களைப் பொருட்படுத்தாமல் மீட்டிங்குக்குள் பேசிக் கொண்டு இருந்தேன். நடுவில் இன்னும் சிலர் மீட்டிங்குக்குள் வந்தனர், மேனேஜர், அவரின் மேனேஜர் , அவரின் மேனேஜர் எல்லாரும்.
இப்போது பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ உள்ளே வந்தான். என்னைத் தாண்டி ஓடி balcony கதவைத் சத்தத்துடன் திறந்தான். அங்கு இருந்த சுழலும் சேரை உருட்ட முயன்றான். அது சுவரில் முட்டி இன்னும் சத்தப் படுத்தியது. இப்போது தூக்க முற்பட்டான்.அது அவனை விட உயரமாய் இருந்தது. கீழே பட்டு சக்கரம் உருளும் சத்தமும் , பிளாஸ்டிக் முட்டும் சத்தமும் என்னை பொறுமை இழக்கச் செய்தது. சொல்லி விட்டு , mute செய்தவாறே எழுந்து சென்றேன்.
'வெளியே போ' , என்றேன்
'இல்லப்பா, நான்...' என்று எதோ சொல்ல வந்தான்.
'idiot உடனே வெளியே போ' என்று பெரிய குரலெடுத்து கத்தினேன்.
'சாரிப்பா..' என்றவாறு தலையைக் குனிந்து வெளியே சென்றான். கதவை படாரென்று இழுத்து மூடினேன்.
எனக்கே அதிர்ச்சியாய் இருந்தது.நான் அவனிடம் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. மிகுந்த குற்ற உணர்ச்சியாய் இருந்தது.
மீட்டிங் முடிந்து கதவை திறந்து வெளியே போனேன்.
'இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு' என்றாள் நீலா .
'நடுவில தொந்தரவு பண்ணிட்டே இருந்தா எப்படிம்மா' என்றேன்.
'நீங்க உட்கார்ந்து இருந்த சேர் சரி இல்லன்னு, சுத்துற சேர இழுத்து குடுக்கலாம்-னு போயிருக்கான். இத நீங்க அவனை சொல்லவே விடலையாம். வெளிய அனுப்பிட்டிங்களாம்.. '
ரூமில் எட்டி பார்த்தேன், தூங்கி விட்டிருந்தான்.

Comments
Post a Comment