Translate

பூக்கள் பூக்கும் தருணம்

பூக்கள் பூக்கும் தருணம் 




ஸ்ரீக்கு இப்போது ஒன்பது வயதாகிறது. ஒரு சில வருடம் முன் இவன் உடலுக்கும் என் உடலுக்கும் வித்தியாசமே இல்லாமல் ஒட்டியே இருப்பான். நான் வீட்டில் ஒரு இடம் இருந்து இன்னோரு இடத்திற்கு போன் பேச போனாலோ கூடவே வருவான். மீட்டிங்குகளுக்கு நடுவே நிச்சயம் ஓரிரு முறை கதவு திறந்து வருவான். மீட்டிங்கில் இருப்பது யார் என்று கேட்பான். mute -ல் இருக்கிறேனா என்று கேட்பான். 

எப்படியும் நாளுக்கு சிலமுறை தலைக்கு மேல் தூக்கி விர்ரென்று கீழே இறக்கச் சொல்லி சிரிப்பான்.வண்டிச் சாவியை எடுக்கும் சப்தம் கேட்டாலே உள்ளிருந்து வெளியே வந்து 'கடைக்கா ? நானும் வரேன், ஒன்னும் கேக்க மாட்டேன் ' என்பான். 'வண்டில போல, நடந்து போறேன்' என்றால் , 'பரவால்ல நானும் சும்மா வரேன்' என்பான். நான் அவன் தோளில் கைபோட்டவாறு நடப்பேன். பதிலுக்கு அவனும்  ஒரு மாதிரி எனது தோளைப் பிடித்து ,இறக்கி, வளைத்து கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தி வளைந்தவாறு என் தோள் மேல் கை போட்டு நடந்து வருவான்.

அன்று அவனுக்கு ஒரு பிரிண்ட்-அவுட் கடைசி நேரத்தில் எடுக்க வேண்டி இருந்தது, ஆனால் ஒரு சிக்கல். இதற்க்கு முன் ஒரு நாள் அவனுக்காக Ruby cube வாங்கிய அதே கடை. வாங்கி ஒரு மணிக்குள் எல்லா cube ஒரு பிளாஸ்டிக் பையில் அள்ளி வைக்கும் படி ஆனது. அடுத்த நாள் வேலை. கடைக்கு செல்ல முடியவில்லை. மறுநாள் அவன் அம்மா சொல்லி மாற்றி விட முயற்சித்தேன். ஆனால் கடைக்காரர் சேட் . நமக்கு தனியாக சென்றால் உறுதியான தோல்வி தான். அந்த சமயத்தில் எனக்கு ஹிந்தி வரும், நான் வருகிறேன் என்றான். கூட கூட்டிச் சென்றேன். அவர் சொன்னார் அன்றே வந்திருக்க வேண்டும். பையனுக்கு வாய் அடைத்து விட்டது, 'எனக்கு இனிமே cube வேண்டாம் என்றான்'. நானும் விட்டு வெளியே வந்தேன். இன்றும் அதே கடையா என்ற யோசனை எனக்கு. ' இல்லப்பா அன்னிக்கு தப்பு நம்ம மேல இல்ல. இன்னைக்கு நம்ம அதே கடைக்கு போலாம்' என்றான். 'இல்லப்பா முடியாது' என்றேன். இப்போதெல்லாம் இப்படியும் உண்டு. 

இரண்டு நாளுக்கு முன் ,  அவனுடைய அக்காவை pick up செய்ய அவனையும் கூட்டிச்சென்றேன். அவளுடைய தோழிகள் எல்லாம் வகுப்பு முடிந்து கூட்டமாக வெளியில் வந்தனர்.  எல்லோரும் இவன் தான் தம்பியா என்று கேட்டவாறு hi சொல்லி சென்றனர். அவளும் ஸ்ரீயை காட்டியவாறு எதோ பேசி சென்றாள். இவர்கள் எல்லாம் கூட்டமாக பேசி வெளியே வர, நான் இவனை முன் அழைத்தவாறு நடக்க முயன்றேன். தோளில் கையை வைத்து அணைத்து இழுத்தேன்.' அப்பா அக்கா friends எல்லாருக்கும் என்னைத் தெரியும்' என்றவாறே, தோளில் இருந்த என் கையை எடுத்து விட்டு விட்டு  தனியாக நடந்தான். .



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2