இரு சக்கர வாகனம் இருபது வருடம் ஓட்டிக்கொண்டு இருப்பவரிடம் லைசென்ஸ் இல்லை என்றால் நம்ப மாட்டீர்கள். நான் பார்த்து குழந்தையாய் இருந்த , இன்று பதின்மராய் உள்ள ஓரிருவர் லைசென்ஸ் எடுத்திருக்கிறார்கள், ஆனால் இன்னும் வண்டி பழக வேண்டும். பரவாயில்லை என்று சொல்லக்கூடாது தான். இது ஒரு deterrance (தடை) தான். இது போக நம் வண்டி 30-40 க்கு மேல் செல்லாது, வண்டிக்கும் 4-5 கி மீ சுற்றளவின் உள்ளேதான் உபயோகம் - பால் , தயிர் , வீட்டில் போரடிக்கும் போது தோழனாய் உடன் வருவது . லைசென்ஸ் எடுப்பது இன்னும் கணக்கற்ற, செய்ய வேண்டிய, பெருகிக் கொண்டிருக்கும் செயல்களில் ஒன்றாய் உள்ளது.
டிராபிக் போலீஸ் - இல்லை - டிராபிக் இன்ஸ்பெக்டர் எப்போது எங்கு இருக்கலாம் என்று எளிதாக சொல்லிவிட முடியும். போலீசுக்கு பைன் வாங்கும் அதிகாரம் கிடையாது. கேஸ் புக் செய்யலாம் .இன்ஸ்பெக்டருக்கே இந்த அதிகாரம் உண்டு. இவர் தன் படை பரிவாரங்களுடன் நின்று வசூல் செய்வதை பார்த்திருப்பீர்கள். இவர் நின்று வசூல் செய்யும் இடங்களுக்குக்கான ஒரு மேப் உள்ளது. சில மேம்பாலங்களின் அடியில், நோ-free left தாண்டியவுடன் , மக்கள் U - turn -ஐ எளிதாக்க வேண்டி wrong ரூட் வரும் இடங்கள்.
நான் பார்க்க கான்ஸ்டபிளே இன்ஸ்பெக்டர்-ஆகி இருக்கிறார் , ஆனால் இடம் மட்டும் மாறாது. மாட்டுபவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நீங்கள் எழுதிய விதிகளை மீறக்கூடாது. ஹெல்மெட் முக்கியம், சிக்னல் ஜம்ப் செய்யக் கூடாது, ஒரு போதும் one-way -ல் செல்லக் கூடாது. இவை உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் சில எழுதாத விதிகளும் உள்ளன.
சிக்னல் கடக்கும் போது முதல் 5 பேரில் செல்லக் கூடாது.
சிக்னல் முடியும் போது கடக்கும் கடைசி 5 பேராய் இருக்க கூடாது. இங்கு நீங்கள் உங்களை நீங்களே தாம்பாளத்தில் நிறுத்தி போலீசுக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தப்பித் தவறி இவ்வாறு சிக்கினால் நேராக ரோட்டை பார்த்து ஒட்டவும். போலீசின் முகத்தை, குறிப்பாக கண்களைப் பார்க்கக் கூடாது.புது வண்டி வாங்கி குங்கும,சந்தன, மாலையுடன் வண்டியில் திரியக் கூடாது. நம்மை வண்டியை வாங்கி 30 நிமிடத்தில் போலீஸ் பைன் போட்டார். கடைசியில், மாட்டுவதற்கு சில நொடிகள் முன் தப்பித்து ஸ்பீட் செய்யப் பார்க்க கூடாது. போலீஸ் இங்கு தான் விஸ்வரூபம் எடுப்பார்.இதைப் படித்து முடிக்கும் போது நான் சொல்வது ஏன் விளங்கும்.
ஆனால் மேலே சொன்ன இந்த தியரிகள் எல்லாம் ஒரு டிராபிக் போலீசை நேரில் கண்டவுடன் உதவாமல் போகும்.
சமீபத்தில் இவ்வாறு ஒரு நாள், காதில் ear buds -டன் நான் கடக்கும் போது , நான் பார்த்த போலீஸ் ஒரு ஒரு வண்டியாய் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.நடுவில் நடந்தவாறே இதைச் செய்து கொண்டிருந்தார்.யாரும் நிறுத்தவில்லை.
இவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். கான்ஸ்டபிளுக்கும் , இன்ஸ்பெக்டருக்கும் நடுவில் இருப்பவர். முன்னேற முயற்சி செய்து கொண்டிருப்பவர். வடிவேலுக்கு ஒரு படத்தில் ரேஷன் கார்டு வைத்து ஜோசியம் சொல்பவராக வரும் அந்த நடிகர் போன்றே இருப்பார். எப்பவும் தொப்பியை கழற்றி கையிலே வைத்து இருப்பார். கடைகளில் புகுந்து அடிக்கடி சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். இந்த ஏரியா அடுத்த இன்ஸ்பெக்டர் இவராகத் தான் இருப்பார்.
நான் என் கண்களால் சிக்னலை பார்க்காமல், முன் செல்பவர்களை வைத்து சென்று கொண்டிருந்தேன். சிகப்பு விழுந்த பின் கடந்து விட்டேனா? யாரும் நிறுத்தாமல் சென்றது இவரை கோபம் அடையச் செய்திருந்தது. நாடு ரோட்டில் வந்து என் வண்டியை ஹாண்ட் பார் தடுத்தி நிறுத்தினார். என்ன செய்வதென்று தெரியாமல் நிறுத்தி விட்டேன். இன்று ஆதி அந்தமும் வெளியே கொண்டு வந்து விடுவார். பைன் கணக்கை மனதில் எண்ணத் தொடங்கினேன். கூடிப் போனால் 250 டு 500க்குள் அடக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இவ்வாறு நான் எண்ணிக் கொண்டிருக்கையில் , அவர் என் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தார். ஒரு வாரியாக காலை வைத்து சமாளிக்கப் பார்த்தேன். அதற்குள் "ஓகி, ஓகி, பேகா ஓகி" என்றார். அதற்க்கு மேல் ஏதேதோ சொன்னார் , ஆனால் என் காதில் ear buds இருந்தது. இப்போது இதை எடுத்து என்ன என்று கேட்கலாம் என்றால் இரு பிரச்சனைகள். ஒன்று, இவர் எடையை என்னால், ஒரு கையால் ,ஒரு நொடி கூட சமாளிக்க முடியாது. ஒரு கையை எடுத்து,இவரை கீழே வீழ்த்தி , நாம் வீழ்ந்து பின் லைசென்ஸ் பிரச்சனை வெளியே வந்தால்? HSR layout-ல் ஒரு முறை டிராபிக் போலீஸ் வண்டியை இடித்த ஒரு இளைஞனை நினைவு கூறுகிறேன். இரண்டாவது, ear buds -டன் வண்டி ஓட்டுவது குற்றம் என்கிறார்கள். இதை எடுக்கப் போய் வினை ஆகி விடுமா?
'இன்னு பேகா ஓகிரி ' என்றார். என் வேகத்தில் பொறுமை இழந்தார். எட்டி அவரே accelarator -ஐ முறுக்கி விடுவார் போல் இருந்தது. இவர் ஒரு மாதிரி வளைந்து வண்டியின் திசையை அவரே தீர்மானித்தார். அவர் சாய்ந்த பக்கம் வண்டி அதுவாகச் சென்றது.
இப்போது தான் அவர் முன்னால் போகும் இன்னொரு வண்டியை என் மூலமாக துரத்துகிறார் என்று தெரிந்தது. யார் அவர் இந்த மாலை 6 மணி முழு ஜாமில், சிக்னல் ஜம்ப் செய்த் பின், இவ்வாறு தப்பித்து விடலாம் என நினைத்தது. இப்போது accelarator -ஐ தெம்பாக இயக்கினேன். அடுத்த 50 மீட்டருக்குள் அந்த வண்டியை நெருங்கினேன். என்னை overtake செய்து அந்த வண்டிக்கு குறுக்கே நிறுத்தச் சொன்னார். எனக்கு நன்றி சொன்னவாறு , அந்த காரை ஓரங்கட்டினார்.
நண்பா! இன்று நீ , நாளை நான்.

Comments
Post a Comment