அறிவின் விளைவா உறுதிப்பாடு?
சில தினங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தளத்தில் வெளியான இந்த கேள்வி - பதில் எனக்கு மிக முக்கியமாகப் பட்டது.
இதற்க்கு முன் இதே கருத்தை பலமுறை ஜெமோ சொல்லியிருந்தாலும், இந்த முறை இதைத் தொகுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
கேள்வியின் சுருக்கம்:
1) நம்முடைய இறப்பை எவ்வாறு எதிர் கொள்வது ?
2) நெருங்கியவர்களின் இழப்பை எப்படி எதிர் கொள்வது?
பதிலின் தொகுப்பு:
-இது ஒரு அடிப்படைக் கேள்வி. அடிப்படைக் கேள்விகளை இரண்டு வகையாக எதிர் கொள்ளலாம்.
1. தன் அனுபவ வழி. இது உங்கள் வழி. இதை நிரூபிக்கவோ , விளக்கவோ வேண்டியதில்லை. நீங்களே மேலும் தேடி கண்டடைய வேண்டும்.
2. தத்துவார்த்தமான வழியில் எதிர் கொள்ளல். அஅதாவது இதற்கு முன் தத்துவங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது.
-இதற்க்கு நம் மரபில் சொல்லப் பட்டிருக்கும் வழி. இன்ப துன்பங்களில் சமநிலையோடு வாழ்வது. இதை ஸ்திதப்ரஞன்(ஒரு மனதோடு நெறியில் நின்று வாழ்பவன், ) என்று சொல்கிறார்.
-மேலிருக்கும் இந்த தத்துவத்தை, அதில் உள்ள விழுமியங்களை , நிறுத்துப் பார்த்து ஏற்றுக்கொள்வதற்க்கோ , மறுப்பதற்க்கோ மட்டுமே நம் சிந்தனை பயன்படலாம்.
-சிந்தனை இங்கு முட்டி நின்று விடுகிறது.
-இந்த விழுமியங்களை வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு சிந்தனை உதவாது.
-விழுமியங்கள் கடைபிடிக்காதவரை பயனற்றவை.
-மேலே சொன்ன சமநிலை வாழ்க்கையில் உரசி ஏற்றுக்கொள்ளும் போது தான் கைகூடும். அதுவரை ஸ்திதப்ரஞன் என்று சொல்லிக்கொள்ளலாமே ஒழிய நமக்கு பயன் ஏதும் இல்லை.
-களத்தில் நிற்பவர்களே , மேலும் கேள்விகள் வழியாக இந்தச் சமநிலையை அடைய முடியும்.
-எனவே செயல் இல்லாத சமநிலை இல்லை. அதாவது தியரி மட்டும் உதவாது.
3. மேலே சொன்ன கேள்விக்கான பதில், அப்படியே கீழே குறிக்கிறேன்.:
"நம் மரணம் நமக்கு எப்போது பொருளற்றுப் போகும்? நாம் வாழ்ந்தோம் என உணரும்போது. நாம் செய்யவேண்டியதைச் செய்தோம் என அறியும்போது. வாழ்வை இயற்றி நிறைந்தோம் என உணரும்போது. அப்படி பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் தங்களுக்குரிய களத்தில் பெருஞ்செயலாற்றியவர்கள்.
பிறர் மரணம்? அதைக் கடக்க நாம் அவர்களுடனான உறவுகளை கடக்கவேண்டும். பற்றற்ற நிலையை அடையவேண்டும் துறவு வழியாக அதை நோக்கிச் செல்லவேண்டும். இந்திய மதங்கள் துறவு இல்லாமல் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் நிலை முழுமையாகச் சாத்தியமில்லை என்றே சொல்கின்றன. உலகியலில் இருந்தபடி அதை முழுமையாக எய்த முடியாது என்றே நானும் எண்ணுகிறேன்.
எய்தலாம். தன்னலம் மிகுந்தும் கருணையற்றும் ஆகும்போது. அது விடுதலை அல்ல. அந்நிலையில் தன் மரணம் மிகமிகப்பெரிதாக ஆகிவிடும். அது இரும்புக்குண்டு போல தன் கழுத்தில் தொங்கும்.
ஆகவே தன் அகம்நிறையும் செயல்களை ஆற்றும் வாழ்க்கை வழியாக தன் சாவு குறித்த அச்சத்தையும் ஐயத்தையும் ஒருவன் எதிர்கொள்ளலாம். மிகப்பெரிய இலட்சியங்களுக்கும் செயல்களுக்கும் தன்னை ஒப்பளிக்கும்போது பிறர் மரணம் அளிக்கும் துயர்களிலிருந்து ஓரளவு விடுபடலாம். அவ்வளவே உலகியலாளனுக்கு இயல்வது. அதுவே போதுமானதும்கூட"
பெருஞ்செயல்கள் இப்போது தூரமாய் தெரிகின்றன. ஆனால் பெருஞ்செயல்களில் பங்கு பெறவாவது வேண்டும்.
"இந்திய மதங்கள் துறவு இல்லாமல் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் நிலை முழுமையாகச் சாத்தியமில்லை என்றே சொல்கின்றன. உலகியலில் இருந்தபடி அதை முழுமையாக எய்த முடியாது என்றே நானும் எண்ணுகிறேன்."
ஒரு சிறந்த துறவி அருகில் இருப்பவர்களின் இழப்பை எவ்வாறு எதிர் கொள்வார், எவ்வாறு படிப்படியாக அந்நிலைக்கு செல்கிறார் என்பது இந்தக் கதையில் சொல்லப் பட்டிருக்கிறது. குரு நித்ய சைதன்ய யதி அவரே சொல்வதாக கதை அமைந்திருக்கிறது.
அவர் ஒருநாள் குருகுலத்தில் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். குருகுலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் இறப்புச் செய்தி நடுவில் வருகிறது. ஒரு அஞ்சலிக்கு குறிப்பை குருகுல மாத இதழுக்காக சொல்லிவிட்டு , வகுப்பை அப்படியே தொடர்கிறார்.
சொன்னவர் நாளை நான் செத்தாலும் இது தான் நடக்குமா என்று கேட்கிறார். குரு ஆம் சந்தேகமில்லை என்கிறார். அவன் உங்களுக்கு அன்பே இல்லையா, அன்பே சிவம் இல்லையா என்று கேட்கிறார். இல்லை, இது நான் அறிந்தது இல்லை என்கிறார் குரு .இந்தக் கேள்விக்கு அவர் சொல்லும் பதிலே இக்கதை.
இவர் இந்தியா முழுதும் துறவியாக சுற்றிய 5 - 6 வருடங்கள் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இதில் காசியில் மட்டும் ஒன்றரை ஆண்டுகள் வாழ்கிறார். காசியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நான் காசிக்கு சென்றதில்லை, ஆனால் நகரம் கண்முன் விரிகிறது.
வைதிகர்கள், முதியவர்கள், நீத்தார் கடன் செய்ய வருபவர்கள், படித்துறையில் தங்கி இருப்பவர்கள், பலநாட்கள் நீராடுவதற்கென்றே அழுக்கு மூட்டையுடன் நடந்து வருபவர்கள்.
பனாரஸ் காசிக்கு மேலிருக்கும் நகரம். பனாரஸின் சாக்கடைகளை தொடர்ந்தால் கங்கையில் சென்று சேரலாம். இதை நான் மதுரையின் வைகை ஆற்றில் கண்டிருக்கிறேன். ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான , மிகவும் சந்தடியான தெருக்கள். படித்துறை என்பார்கள். கடைசியில் ஆற்றில் போய் முடியும்.
காசி சாவின் நகரம். வயதானவர்களை தொட்டிலில் வைத்து கொண்டு வருகிறார்கள். பிணத்தை எரிப்பதற்காக சைக்கிளில் நெடுக்கு வாட்டில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். பிணத்தை இறக்கி ஓரமாய் வைத்து விட்டு டீ குடிக்கிறார்கள். இரண்டு முக்கிய மயானங்கள். அரிச்சந்திர காட் , மணிகர்ணிகா காட். நான்கடி சிதைகள். தலையும், காலும் வெளியே இருக்கும்.வயிறு முதலில் எரியும், நிணநீர் எரிந்தவுடன் கால் சர்வாங்க ஆசனமாக மடிக்கப்படும். இந்நிலையிலேயே எரிந்து முடிக்கும். எரியும் பிணமே அடுத்த பிணத்தை எரிக்கிறது.
இதை நான் youtube -ல் கண்டேன்.
அங்கு இவர் லாரி தார்ப்பாயை வைத்து செய்யப்பட ஒரு ஆசிரமத்தில் வசிக்கிறார்.இவரைப் போல துறவிகளுக்கு மத்தியில். இவர் அப்போது ஜூனியர். உண்வு சேகரிப்பதே இவர் வேலை. கடைகளில் நீத்தார் கடன் செய்தவர்கள் பணம் கொடுத்துச் செல்கிறார்கள். அங்கு சென்றால் உணவு கிடைக்கும். இதை நான் ராமேஸ்வரத்தில் பார்த்தேன்.
ஒருநாள் மழைக்காலத்தில் நீரில் அடித்துச்செல்லப்படும் பைத்தியக்காரரை , ஒரு படகு ஓட்டுபவர் தன உயிரையும் பொருட்படுத்தாது நீந்தி காப்பாற்றுகிறார்.
"நான் அருகே சென்றேன். இளைஞன் என்னை நோக்கிச் சிரித்து “பிழைத்துக்கொள்வான்” என்றான்.
அவனை வெறுமே பார்த்தபடி நின்றேன்.
பைத்தியம் எழுந்து அமர்ந்து நீரை பார்த்துக்கொண்டிருந்தது.
“மிக அபாயமான விஷயம்” என்றேன்.
“ஓர் உயிர் அல்லவா?”என்றான் அவன்.
“ஆம்” என்று நான் சொன்னேன்."
சட்டென்று பைத்தியம் எழுந்து அவனை உதைத்தது. அருகே கிடந்த கற்களை எடுத்து அவனை அடித்தது. அவன் சிரித்தபடி திரும்பி அதை பிடித்து தள்ளினான்.
ஒரு நாள் ஒரு வயதான பாட்டியின் சிதை பாதி எரிந்து எழுந்து உட்காருகிறது. இவர் காய்ச்சலில் விழுகிறார். அங்கு உடம்பு சரியில்லை என்றால் யாரும் பார்க்க மாட்டார்கள். நீங்களே பிழைக்க வேண்டும், இல்லை சாக வேண்டும். அக்கிழவி கனவில் வருகிறார். அச்சிதையில் உருகி எரிவதற்கான ஒரு தவம் அது. 14 வருடங்கள் காத்து இருந்து இருக்கிறார். ஒருவாறு பிழைத்து எழுகிறார்.
உடல் என்பது காகம். உள்ளம் நதியில் ஓடும் படகு போல. உள்ளம் உடலில் தான் இருந்தாக வேண்டும், காகம் பறந்து வந்து அமரும் படகு போல. சுற்றிப் பறந்து படகிலேயே வந்து காகம் அமர வேண்டும்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு துறவி அவரே கங்கையில் மூழ்கி உயிர் துறக்க முடிவு செய்கிறார். முன்னிரவில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறார். எல்லோரும் வந்து விடிய விடிய கொண்டாடுகிறார்கள். முடிவில் அதே படகுக்காரன் எல்லோரும் பார்க்க அவரைக் கைகளைக் கட்டி நதியில் தள்ளுகிறான். நித்யா இதைப்பார்த்து முடித்து மேலே ஏறி உணர்வில்லாமல் நடக்கிறார். அங்கு ஒரு கிழவி எரிந்து கொண்டு இருக்கிறது. ஒரு சாமியார் சப்பாத்தி தட்டி , சிதை நெருப்பில் சுட்டு இவருக்கு பாதி கிழித்து கொடுக்கிறார்.
Comments
Post a Comment