Skip to main content

சைக்கிள் பதிவுகள் -1



நான் பள்ளி செல்லும் பருவத்தில் எங்கள் ஊரின்  ஒரு ஆசிரியர் தினமும் ராஜபாளையம் டவுனில் இருக்கும் Board High ஸ்கூலுக்கு சைக்கிள் ஓட்டியே வேலைக்குச் செல்வார். மிகப் பின்னர் தான் அவர் பி.டீ ஆசிரியர் என்று தெரிந்தது.அப்போது அவருக்கு 45-50 வயது இருந்திருக்கலாம்.அவர் நான் படித்த பள்ளிக்கூடத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும். போய்வர 24 கிலோமீட்டர். நான் அவர் செல்வதை என் பள்ளி பேருந்தில் இருந்து பல முறை பார்த்திருக்கிறேன். கருப்பு frame உள்ள வெகு தடித்த கண்ணாடி அணிந்து இருப்பார். அதை விட தடித்த lens இருக்கவே முடியாது, உள்ளிருக்கும் கண்கள் கண்ணாடி வழியாக காலை நேர பனி போல் தெரியும்.  திரண்டு வலிமையான கைகளால் handle bar -ஐ இறுக்கிப் பிடித்து , மிகவும் குனிந்து,வேகமாக ஓட்டுவார். பஸ் சைடு வாங்கி சென்று இருக்கும். அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்று குழந்தைகளை ஏற்றும் போது பெல் அடித்து பஸ்சை சைடு வாங்கி விடுவார். விடாமல் போட்டி போடுவார். 

ஆனால் அவர் இல்லாத போது அவர் சைக்கிள் விடுவதை எல்லோரும் கதைகளாகச் சொல்லிச் சிரிப்பார்கள். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள்.ஒரு நாள் அவர் தன் மகளை பின்னால் கேரியர் வைத்து ஓட்டிச் சென்றதாகவும் ,நடுவழியில் பாலத்தில் பிரேக் பிடிக்காமல் ஏறி இறங்கும் போது ,குழந்தை தூக்கி துண்டாய் கீழே விழுந்ததாகவும், இவர் மகள் இல்லாததை இறுதியில் ஸ்கூலில் இறங்கும்போது தான் அறிந்ததாகவும் சொல்லிச் சிரிப்பார்கள். இரண்டு நாள் கழித்து மீண்டும் அவர் எல்லாப் பெண்களையம்  வரிசையாகப் பேசி முடித்து மீண்டும் அப்புறம் அதே சைக்கிள் கதை. இவரை சில நாள் முன்னாள் கோவிலில் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். வயதாகி இருக்கிறது. கோவிலில் விளக்கை ஏற்ற நெடு நேரம் விளக்கில் இருந்த திரியைத் தேடி காற்றில் துளாவியபடி இருந்தார். பாட்டை முணுமுணுத்தபடி நான்கு திரிமுனைகளிலும் விளக்கு ஏற்றி முடிய பத்து நிமிடம் ஆனது .முன்பு ஒருமுறை இவர் தான் கிணற்றில் அறுந்து விழுந்த தோண்டியை , வெகு நேரம் பாதாள கரண்டி போட்டு தேடியும் கிடைக்காமல், எல்லோரும் கிணற்றையே  கவிழ்ந்து பார்த்து கொண்டிருந்த போது , யாரும் எதிர் பார்க்காத ஒரு தருணத்தில் , கிணற்றில் மடார் என்று குதித்து (ஊர்ப்பக்கம் சொருக்கு என்பார்கள்), உள்ளே மூழ்கி தோண்டியுடன் வெளியே வந்தார். (ஏறி வெளியே வந்து குதூகலத்தில் ஏனோ 'தாயோளி ' என்றார்).

எது இவரை கிணற்றில் குதிக்கச் செய்ததோ அதே தான் தினமும் 24 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வைத்திருக்க வேண்டும்.

இதைபோல் எதோ ஒரு கிறுக்கு இப்போது என்னைத் தொற்றி இருப்பதாலும், மேலும், இதை எல்லாம் எழுதி வைத்தால் பின்னால் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் நினைத்து எழுத முயல்கிறேன் . 

எங்கள் ஊரில் நீளமான தெரு, ஒவ்வொரு அம்பது மீட்டர் இடைவெளியில் இரு பக்கமும்தெருக் குழாய்கள் போட்டு இருப்பார்கள். கோடை காலங்களில் தெரு வழி நடந்தால் எல்லா குழாயடிகளும் உணர்ச்சியின் விளிம்பில் இருக்கும். இரண்டு மூன்று பேர் காலியாகும் குழாயடிக்குள்  குடத்தை விட முயல்வார்கள். சில சமயம் வீட்டுக் கொடுப்பார்கள். பலமுறை subtle -ஆக  இடித்து வெளியே தள்ளுவார்கள்.ஒரு சில முறை பெருத்த வாய்ச்சண்டையாகும் (ஏட்டி தூ...என்று ஆரம்பித்து , பார்ப்பதற்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.) rare ஆக அடி பிடி ஆகும்.

இதை பெங்களூரின் ட்ராபிக்க்கிற்கு ஒப்பிடலாம். அங்கு குடங்களை போட்டு வரிசை இடம் பிடிப்பார்கள். இப்போதைக்கு  ரோட்டில் முன்கூட்டியே இடம் பிடிக்க முடியாது. இன்னும் இன்னும் டிராபிக் அதிகமாகும் போது காசு கொடுத்தால் இடம் கிடைக்கும் priority traffic lane -கள் வரலாம். இல்லை bookmytrip வழியாக வண்டிகளுக்கு பதிலாக road -களை ரிசெர்வ் செய்ய வேண்டி வரலாம்.  பெட்ரோல் டீசல் இவைகளை பற்றாக்குறை உள்ள இயற்க்கை வளங்கள் ( ?)  என்கிறார்கள். முக்கியமான சாலைகளும் இதில் சேரும் அல்லவா ...இன்றைய பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஒரு வழி இன்னும் பெரிய பிரச்சனைகளை மனதில் உருவாக்கி, நடைமுறை பிரச்சனையை மனதில் சிறிதாக்குவது.       

நான் மேல் சொன்ன வரிகளில் பெங்களூர் டிராபிக் உக்கிரம்  தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் வருவதை வைத்து மிரட்டியே இதை புரிய வைக்க முடியும். என்னால் மறக்க முடியாத டிராபிக் அனுபவம் இது தான் . இன்னும் ஐந்து நிமிடம் டிராபிக்கில் சிக்கி இருந்தால் என் பையன் பிரசவம் காருக்குள்ளே நடத்த வேண்டி இருந்திருக்கும் . காரை பார்க் செய்து முடித்து மேலே reception வந்தவுடன் பையன் பிறந்த செய்தி வந்ததை நினைவு கூர்கிறேன். ஆண்டவன் செயல் :-) 

இவ்வாறு சொல்லியும் , பேசியும் , செய்தும் தீராத டிராபிக் சிக்கலுக்கு வழி தேடியே சைக்கிள்-ஐ சென்று சேர்ந்தேன் 

ஒரு வழி 15-km , பஸ் என்றால் இரண்டு பஸ் மாற வேண்டும், 2 மணி பிடிக்கும். கார்/ஆட்டோ என்றால் 60-120 நிமிடம் ஆகும், செலவு மேற்படி. ஏனென்றால் மேல் சொன்ன வழி பெங்களூரு புற வழியில் தொடங்கி, சரியாக நகரின் குறுக்கே கடந்து நகரின் இதயத்தில் போய் முடியும். அதாவது சர்ஜாபூர் ரோட்டில் தொடங்கி, அகரா அனுமார் சிலை கடந்து , கோரமங்களா, சோனி சிக்னல் வழியாக, M.G ரோட்டில் வெட்டி, சின்னஸ்வாமி ஸ்டேடியம் மற்றும்கவர்னர் மாளிகை கடந்து cunnigham ரோட்டில் முடியும். ஏறத்தாழ 45-50 நிமிடங்கள், 10 நிமிட தேனீர் இடைவேளை போக.

அதிகமான உயரம் மனதிற்கு எப்போதுமே சவால்தான். மலை என்பதும் , மலைத்தல் என்பதும் இதிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால் தூரத்தை குறிக்கும் ஒரு வேறு சொல் உண்டா தெரியவில்லை- தொலைவு ?. தூரத்தைக் கடப்பதற்கு எவ்வளுவுதான் தியரிகள் இருந்தாலும் இதில் உள்ள கஷ்டம் செய்து பார்த்தால்தான் தெரியும். பெரும்பாலும் எனது சிக்கல் என்பது முதல் அடியில் தான். அதன் பின் அதற்க்கு ஒப்புக் கொடுத்துவிட்டால் எல்லாம் நடந்து விடும். தேதி குறித்து விட்டால் கல்யாணம் நடந்து விடுவதைப் போல. கோவில்களில் மிக நீண்ட வரிசைகளை நான் பார்த்து மலைத்து நிற்கும் போது , பலர் சரசரவென்று யோசிக்காமல் வரிசையில் ஒட்டிக் கொண்டு முன் சென்று விடுவார்கள். இங்கும் ரொம்ப யோசிக்கக் கூடாது. தினம் திருப்பதி தரிசனம் தான் , கஷ்டம் தான் ,ஆனால் கிடைக்குமா ?

முதலில் புறப்படுவதற்கு முன் ஒரே மலைப்பாக இருக்கும், மனது வேறு ஏதாவது வழி  கிடைக்குமா என்று தேடும். ஹெல்மெட் அணிந்தவனுடன் கொஞ்சம் ஒப்புக் கொடுக்கும். வீட்டை விட்டு வெளியே காலடி வைத்ததும் வழி இல்லாமல் சமாதனம் ஆகி விடும்.

எப்போதும் அடுத்து வரும் ஊர்தான் இலக்கு. முதலில் அகரா மேம்பாலம் குறி. அப்புறம் ரோட்டில் வலது  பக்கம் மாறி கோரமங்களா முதல் பிளாக் வரை சென்று , நான் வரும்போது குடிக்கும் டீக்கடை கடந்தால் ஐந்து கிலோமீட்டர் முடியும். இங்கு எதிர் திசையில் வந்தால் வருபவர்களை பார்த்து ஓட்ட வசதி. ஓரமாக வழி கேட்டால் கொடுத்து விடுவார்கள், சிக்னலில் நிற்க வேண்டியதில்லை.அடுத்து சோனி signalai மனதில் வேண்டி மிதிக்க வேண்டும். நெரிசலைக் கணித்து எதிராகவோ அல்லது நடைபாதையில் வண்டியைத் தூக்கி போட்டோ இப்பெரும் signalai, எல்லாக் கார்களும் காத்து நிற்கும்போது சந்தோஷமாகக் கடக்கலாம். 

5-6 வருடம் முன்பு முதல் முறை சைக்கிள் ஓட்டி M . G ரோடு வரை சென்று திரும்பியவுடன், கால் வலியெடுத்து காய்ச்சல் வந்தது. அதிகமாக தொடைகள் வலிக்கும். சீட்டில் பின் பக்கம் வலிக்காமல் அமர கொஞ்ச நாள் பிடிக்கும். நாம் நினைப்பதை விட நம் உடல் வலிமையானதே. சில நாள்களில் உடம்பு பழகி விடுகிறது. வழக்கமாக ஆபீஸ் சென்றவுடன் சுறுசுறுப்பாக ஆகி, மதிய சாப்பாட்டுக்குப் பின் மந்தமாகி , திரும்ப return ட்ரிப் முடிந்து சுறுசுறுப்பு மீண்டும் பிறக்கும். ஊர் செல்லும் வழியில் பல தடவை தனியான நெடுந்தூர cyclers -ஐ பார்த்திருக்கிறேன்.நாளில் 200-km ஓட்டுவதாக சொல்வார்கள். சமீபத்தில் பெங்களூரில் இருந்து லெபாக்ஷி (100km ) சைக்கிள் ஓட்டி வந்த இருவரை பார்த்தேன். இதையெல்லாம் காட்டித்தான் மனசை 30km ஓட்ட வைக்க வேண்டும். நாமும் ஒரு நாள் ...

போட்டி என்பது இரண்டு பேர் சம்பந்தப் பட்ட விஷயம். மன அழுத்தத்திற்கும் வேகத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரு சிக்னலுக்கு இடையான தூரம் 500m என்றாலும் மிக வேகமாய் சென்று அடுத்த சிகனலில் செய்ய ஒன்றும் இல்லாமல் இருக்கும் போது டென்ஷனே உண்டாகிறது. கார் செல்வதை நாம் செல்வதாக நினைப்பதால் இந்த சிக்கல்.இதே காரை தள்ளுவது என்றாலோ , கூட சிறிது உடல் முயற்சி இருக்குமானாலோ இந்த சிக்கல் வராது. சைக்கிளைப் பொறுத்தவரை போட்டி என்பது கிடையாது. நமக்கு நாம் தான் போட்டி. கூட சிறிது மிதித்தால் வேகமாய் போக முடியும்.  ஒரு நண்பர் ஒரு முறை சொன்னார்  லாரி ஓட்டுபவர்கள் மற்ற ஓட்டுநர்களைப் போல் எரிச்சலடைவதில்லை ஏனென்றால் போட்டி அங்கு இல்லை. உண்மை.

பெரும்பாலும் இங்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் ஆட்களே சைக்கிள் உபயோகிக்கிறார்கள். சீருடை இல்லாமல் கலரில் ஓட்டுவார்கள். ஆனால் boot -ஐ வைத்து கண்டுபிடிக்கலாம். இவர்கள்தான் நேரத்திற்க்கு வேலைக்குப் போகிறவர்கள் . பள்ளிக்கருகில் ஒரு சில பள்ளி மாணவர்கள் சைக்கிளில் பார்க்கலாம். மற்ற ஊர்களைப் போல் பெண்களையோ , மாணவிகளையோ சைக்கிளில் பார்க்க முடியாது. பொதுவாக hobbyists வார இறுதி நாட்களில் தென்படுவார்கள். 

அப்பாவின் பின் உட்கார்ந்து பள்ளி செல்லும் மாணவர்கள் நம்மை ஒரு சாகசம் செய்பவன் போல் பார்ப்பார்கள். தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வார்கள். அன்று ஒரு ஆட்டோ ஓட்டுபவர் முந்தும் போது பார்த்து சிரித்தார். வேறு சிலர் up / down எவ்வளவு என்று விசாரிப்பார்கள். 

பெரும்பாலும் எல்லா இடத்திலும் அதே பிச்சைக்காரர் தான் தினம் தினம் இருக்கிறார். ரிச்மண்ட் ரோடு சிகனலில் ஒரு தள்ளு வண்டியில் முடமான கணவரை உட்கார்த்தி , அவர் ஏதாவது கையில் கடித்தவாறு வண்டியை முன்னால் பின்னால் நகட்டி 20-அடியில் நாள் பூராம் வேலை செய்வார். சர்ஜாபூர் பாலத்துக்கு கீழ் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு , கால் உபயோகம் இல்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவமானால்? இவர் அமர்ந்திருக்கும் போது தன் சூம்பிய கால்கள் மடங்கிவிடும். ஆனால் இறங்கி யாசிக்கும் போது , நான்கு கால் கொண்டு நடக்கும் விலங்கு போல் தெரிவார். ஆனால் நடக்கும் போதில் கால்களை கைகள்தான் சுமக்கும்.இரண்டு கால்களையும் bicep -களில் சுமத்தி கையை வைத்து நடந்து செல்வார். சைக்கிள் ஓட்டுவதை விட கண்டிப்பாக கஷ்டம்.  ஆனால் அன்று வேலை முடிந்து அருகில் பார்க் செய்திருந்த டிவிஎஸ் -50 ஏறி தானே ஒட்டிச் சென்றார்.     

Comments

  1. நன்றி மிகவும் இயல்பான எழுத்து நடையில் எழுதிய கட்டுரை சிறப்பாக உள்ளது.எனது சைக்கிள் என் அப்பாவின் மூலம் வந்தது பழைய ராபின் ஹூட் இன்றும் எனது பயன்பாட்டில் உள்ளது.சைக்கிள் எனக்காக காத்திருக்கிறது.நான் ஊருக்கு செல்ல வேண்டும் அதை பயன்படுத்த . நன்றி மீண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...