Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள்
சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் 6 மணி நேர தூக்கமும் தேவை இல்லை என்றும் , தாம் மூன்று மணி நேரமே தூங்குவதாகச் சொல்லக் கேட்டேன்.நானும் இவ்வாறே நினைத்து கொண்டிருந்தேன் .தூக்கம் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அது நம்மைத் தேடிக் கண்டடையும் . இதை பற்றி பெரிய கவலை இல்லாமல் இருப்பதே நாம் செய்ய வேண்டியது.
ஆனால் சரியான தூக்கம் இல்லாத நாட்களில் கண் இமைகள் தூங்கும் வரை வலிப்பதையும் , எழுத்துகள் சற்று தெளிவில்லாமல் இருப்பதையும் உணர்கிறேன். முன்னை விட இப்போது ஆள், ஊர் பெயர்கள் வேண்டும் போது நினைவில் வருவதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் crossword புத்தகக் கடையில் இப்புத்தகம் காண நேர்ந்தது.
Mathew Walker நரம்பியல் விஞ்ஞானி , தூக்கத்தைப் பற்றி 20 வருடங்களாக ஆராய்ந்து வருபவர், பேசி வருபவர். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்கிறார்.
இனி புத்தகத்தைப் பற்றி...
இந்திய ஆன்மிக அறிதலின் உச்சம் என்று அத்வைதத்தையே பலரும் சொல்வார்கள். அதன் சாராம்சம் என்பது ஆழ்ந்த தூக்கத்தை (சுஷுப்தி) உயர்ந்த அனுபவமாக்கி , விழித்திருப்பதை(ஜாக்ரத்) பிறழ்வு நிலை என்று தலை கீழ் ஆக்குவது.
இப்புத்தகமும் இந்தக் கேள்வியுடன் துவங்குகிறது. கருவில் இருக்கும் குழந்தை முழு நேரத்தையும் தூங்கியே கழிக்கிறது. அதன் மூளை உடம்பின் வளர்ச்சிக்கு வெகு முன் செல்வதாலும் REM sleep (கண் அசைவு தூக்கம் ) ஆரம்பித்து , உறுப்புகள் இல்லாமல் உறுப்புகளுக்கு கட்டளைகள் செல்வதால் மட்டும் தான் குழந்தை உதைப்பதாக தாய் உணர்வதாக சொல்கிறார். பிறந்த குழந்தையும் பெரும் நேரத்தை தூங்குவதில் கழிக்கிறது. ஆக மனிதனின் இயல்பு நிலை என்பது தூக்க நிலை தானா ?
இரண்டாவதாக ,மனிதன் உணவைத் தேடுவதற்கும் , சந்ததியைப் பெருக்குவதற்கும் செலவாகும் நேரம் முன்னை விட அதிகரித்துக் கொண்டே போகும் போது , தூக்கம் என்பது இயற்கைக்கு தேவை இல்லை என்றால் என்றோ இல்லாமல் போய் இருக்கும். முன் எப்போதும் இல்லாத அளவு தூக்கம் சார்ந்த நோய்கள் பெருகி உள்ளன. ஒட்டு மொத்த உளவியல் மருத்துவமும் தூக்கம் சார்ந்தே இருக்கிறது.
ஆனால் இன்று தூங்குவதை குற்றம் போல் செய்ய வேண்டியுள்ளது . பட்டுக்கோட்டை பாட்டு இன்றும் சொல்லப்படுகிறது. தூங்காமல் படிக்கும் குழந்தைகளை உயர்த்திப் பிடிப்பதும், கண் அயராமல் வேலை பார்ப்பவர்களை ரோல் மாடல்களாக வழிபடுவதும் கூடி உள்ளது.பின் இரவில் வரும் மெயில்கள் இன்றும் ஒரு மதிப்புடனே படிக்கப் படுகின்றன.
தூக்கம் என்பது ஒரு செயல்முறை(process ) . தானாக இயற்கை வடிவமைத்தது. மனிதனால் புரிந்து கொள்ள முடியாதது. உலகில் தூங்காத உயிரே இல்லை. அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். புழு தூங்குகிறது என்பது ஆச்சர்யம். ஆக தூக்கம் என்பது 50 கோடி வருஷம் பழையது. யானை 4-மணி நேரம், அணில் 16 மணி தூங்குமாம்.
circadian ரிதம் (மெலடோனின்), sleep pressure (அடினோசின் chemical மூலம்) - இவை இரண்டும் சேர்ந்து தூக்கத்தை வரவழைக்கின்றன. இதே இரண்டும் இணைந்து 8 மணி நேரத்துக்குப் பின் நம்மை எழச்செய்கின்றன. நாம் தூக்கத்தை தள்ளிப் போடுவதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் முதல் காரணம். .
தூங்காதவரை அடினோசின் சுரந்து கொண்டே இருக்கும். தூக்கத்தின் போதுதான் இது வெளியேற்றப் படுகிறது. இதற்க்கு எட்டு மணி நேரம் பிடிக்கும். சரியாய் எட்டு மணி நேரம் தூங்காத போது இது பகலில் அசதியையும் , சோர்வையும் வரவழைக்கிறது. இவ்விரண்டு ரசாயனங்களும் சம வேண்டும்.
ஒரு நாள் தூக்கத்தை இரண்டு பெரிய பகுப்பாக்கி அளவிடுகிறார்கள் (Polysomnography/electroencephalography (EEG)).
1) Non - REM - கண்விழி அசையாத தூக்கம் / நான்கு நிலைகள் உள்ளது - Stage 1- 4. ஆழ்நிலை உறக்கம் இதில் அடக்கம். தூக்கம் தொடங்கும்போது அதிகமாகவும் , அதிகாலையில் குறைவாகவும் இருக்கும்.
2) REM - கண்விழி அசையும் தூக்கம். பெரும்பாலும் கனவுகள் வருவது இங்குதான். முதலில் குறைவாகவும், தூங்கி முடிக்கும் போது அதிகமாகவும் இருக்கும்.
ஒரு sleep cycle என்பது 90 நிமிடத் தூக்கம். இது இரண்டு வகைத் தூக்கமும் கலந்தே இருக்கும்.
இதுவரை இது தகவல் மட்டும் தான். இவை இரண்டுக்கும் நாம் தூங்கும் போது தனித் தனி வேலைகள்.
ஆழ்நிலை உறக்கம் என்பது வளர்ச்சி சம்பந்தப்பட்டது. ஓய்வுக்கானது, உடம்பும், தசைகளும் தளர்கின்றன. மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது.
வயது செல்ல ஆழ்நிலை உறக்கம் குறைவதில்லை. தூக்கம் குறைவதினாலேயே வயதாகிறது.
கண்விழி அசையும் தூக்கம் நினைவு , ஞாபகசக்தி சம்பந்தப்பட்டது. போக இது நமக்குள்ளே இருக்கும் ஒரு மருத்துவர் போன்றது. கனவு காண்பது என்பது பெரிய உணர்ச்சி வடிகால் ஆகும். REM என்பது ஒரு இயற்கையின் மகத்தான இயக்கம் என்று Walker குறிப்பிடுகிறார். மூளையின் எல்லா பாகங்களும் செயல் நிலையிலேயே இருக்கின்றன. visual cortex (காட்சி சம்பந்தப்பட்டது),motor cortex (இச்சை செயல் சம்பந்தப்பட்டது), hippocampus (நினைவு சம்பந்தப்பட்டது), amygdala (fight /flight சம்பந்தப்பட்டது) - இவை மூன்றும் நினைவு நிலையில் இருப்பதை போன்றே செயல் படுகின்றன.ஆனால் பெருமூளை மட்டும் ஆப் செய்யப்பட்டுள்ளது. பெருமூளையே பகுத்தறிவு சம்பந்தப்பட்டது. காலை எடுத்து வைக்கும் முன்னர் தேவையா என்று கேட்பது அல்லது எதையும் விசையுடன் செய்ய வைப்பது. இதனால்தான் வரம்பில்லாமல் எதையும் கனவு காண முடிகிறது. ஆனால் செயல் எதுவும் நடப்பது இல்லை. இப்படி வாழ்க்கையின் மோசமான ,கடினமான தருணங்களை கனவாக ஆக்கி மீண்டும் (மீண்டும்) மறுநிகழ்வு செய்து நம்மைக் கடக்க வைக்கிறது.
Non REM/REM தூக்கத்தின் நடுவே நடக்கும் ஒரு periodic அலையே ஞாபகத்திற்கும் மறதிக்கு உள்ள வித்தியாசம் என்கிறார்.
மேலே சொன்ன எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தூக்க இழப்பு என்பது நாளடைவில் நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு வாரம் தூக்க இழப்பு ரத்த அழுத்தத்தை , சர்க்கரை நோயை உண்டாக்கும். நாளடைவில் இதயப் பிரச்சனைகளுக்கு வழிவிடும் (chapter 8). Alzheimer's disease, மறதி நோய்க்கு ஒரு வலுவான காரணம் தூக்க இழப்பே என்கிறார்.
இன்னும் சில விஷயங்கள்.
1. பகல் தூக்கம் பயனுள்ளது, இரவிலும் தூங்க முடிந்தால். Ussain Bolt , போட்டிகளுக்கு நடுவே தூங்கி எழுவது உண்டாம்.
2. காபி தூக்கத்திற்கு மிகவும் கெடுதி. உடலில் இருந்து நீங்க 12 மணி நேரம் பிடிக்கும்.
3. தூக்க மாத்திரைகள், alchohol உண்மையில் மயக்க மருந்து வகையைச் சேர்ந்தவை. நாம் மயக்கத்தை தூக்கமாக நினைத்து ஏமாறுகிறோம். ஸ்கேனில் இவை தூக்கம் போல் இல்லை என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
4. தூக்கத்தில் ஒரு போதும் விட்டதைப் பிடிக்க முடியாது. போனது போனதுதான்.
5. பாதி இப்போது , பாதி அப்புறம் தூங்க முடியாது. மேல் இருக்கும் இரண்டாவது படத்தை இன்னொரு முறை பார்க்கவும்.
6.தற்போதைய smartwatch-கள் தூக்கத்தை அளவிடுகின்றன. மேல்கண்ட graph அதில் வருகிறது.பெரும்பாலும் சரியாகவே உள்ளது.
இதை எழுதி முடிக்க இன்று பகல் தூக்கத்தைப் பறிக்க வேண்டி ஆனது.
இவர் முடிவாக வேலையை விட்டாவது , இல்லை , லீவு போட்டாவது தூங்கச் சொல்கிறார்.
பார்ப்போம், நாளை திங்கள் கிழமை.
https://www.amazon.in/Why-We-Sleep-Matthew-Walker/dp/0141983760


தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
ReplyDelete