'மறக்க முடியாத மனிதர்கள்' - வண்ண நிலவன் - சென்ற தலைமுறை ஆடம்பரம்
சில நாட்களாக வண்ணநிலவன் எழுதிய 'மறக்க முடியாத மனிதர்கள்' வாசித்துக் கொண்டிருந்தேன். மாம்பழந்தானே என்றாலும் எல்லோருக்கும் அதை லாவகமாய் நறுக்க வருவதில்லை. அப்பா நன்றாக ரசித்து மாம்பழம் வெட்டுவார். என் மாமனார் அதன் தோலை ஒரு பச்சைத் தடமில்லலாமல் சீவி எடுப்பார். அவருக்கு அது குழந்தை மென்மை. குழந்தைக்கு தலை மழிப்பது. அது எல்லா நாவிதர்களுக்கும் கை வருவதில்லை. என் பையன் முதல் தலைமழிப்பு, முடியெல்லாம் ரத்தத்தில் ஒட்டி, கண்ணிலும், மூக்கிலும் நீர் கொட்டி போராய் முடிந்தது நினைவில் வருகிறது. ஒவ்வொரு தோலுக்கும் தனிக் குணம் இருக்கிறது. மேலும் எல்லாக் கத்திகளும் எல்லா வேலைகளையும் செய்வதற்கில்லை. கத்தியின் கூறும், தோலின் பதமும் அறிந்தவர் கை தேர்ந்த திருத்துநர் ஆகிறார். அப்படி மாம்பழம் வெட்டுவது போன்ற எழுத்து வண்ண நிலவனுடையது. அவரால் மறக்க முடியாத பத்து எழுத்தாளரகளைப் பற்றிய தொகுப்பு. படித்து முடித்தால் அவருடைய வாழ்வின் கோட்டுச் சித்திரம் மிக அழகாக வெளிப்படுகிறது. தன்னைச் சிறிதும் நடுவில் நிறுத்தாமல் எழுதிய தன் வரலாறு போல் தோன்றியது. யார் நெருக்கம், யாரிடம் வியப்பு, யார் சக எழுத்தாளர்கள் என்று ...