தில் பசந்தும், காங்கிரஸ் பன்னும்
தில் பசந்தும், காங்கிரஸ் பன்னும் ------------------------------------------- தில் பசந்த் என்றால் மனதிற்கு மிகவும் பிடித்தது என்று பொருள். இருபத்தைந்து வருடங்கள் முன் பெங்களூரில் புதிதாய் இருந்தபோது சில விஷயங்கள் ஆச்சர்யப் பட வைத்தன. பை டூ டீ. மொழி தெரியாத ஊரில் கடையில் என்ன சொல்லி எப்படிக் கேட்பது என்று மனமொழியை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லை பார்த்தோ கேட்டோ வேண்டிய சொல்லைத் தெரிந்து கொள்ளலாம். பொருளைக் குறிக்கும் ஒரு சொல் தான் எவ்வளவு முக்கியம். மற்ற சொல் இலையாய் , சருகாய் காற்றில் கரைந்தாலும், பழம் போல் ஒரே ஒரு சொல் கடைக்காரருக்கு புரிந்து விட்டால் போதும். இப்போதும் இந்தத் திண்டாட்டம் இருக்கிறது, அப்போது சொல்லத் தேவையில்லை. டீ என்பது மொழிகளைத் தாண்டிய சொல். அன்று தமிழ்நாட்டு டீக்கடை பார்த்த கண்களுக்கு ஒரு பேக்கரி என்பது ஸ்டைல் ஸ்டேட்மென்ட். ஏதாவது ஒரு கிழவர், இல்லாதவர் நாளெல்லாம் சம்பளத்திற்கு தூக்கி ஆற்றுவது போல் இல்லை. இவர் கால் சட்டை அணிந்திருப்பார். தேநீர் உப தொழில். அவர் வளர்த்து வைத்திருக்கும் , கண்ணாடி வழியாகத் தெரியும் கேக்குகளும், உறைந்த பொன்னிற பிஸ்கட்டுகளும் ...