Skip to main content

சைக்கிள் பதிவுகள் 12- Breath, James Nestor , மூச்சைப் பற்றி...

சைக்கிள் பதிவுகள் 12-  Breath, James Nestor , மூச்சைப் பற்றி... 


நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிறிய விஷயங்களையும் வியக்கும் அளவு பெரிதாக்கிச் செய்யும் கலை வெளி நாட்டவர்களுக்கு எப்படியோ உடம்பில் ஊறி இருக்கிறது. என்றோ ஒரு நாள் வியந்து, பின்னர் அதைப்போலத்தான் இது என்று அடுக்கி , அதற்குப் பெயர் கண்டு பிடித்து  மிகச்சாதாரணமாக  கடந்து செல்லும் விஷயம்தான் இதுவும். உதாரணமாக இப்போது இங்கு பிராணாயாமம் என்று ஒரு வார்த்தை எழுதினால், அடுத்த நொடி  நீங்களும் இதை ஒரு முழு நீள ஸ்குரோல் செய்து கீழே முட்டியதும் மூடி வைத்துவிட்டுப் போகலாம். ஏனென்றால் அதிலிருக்கும் வியப்பைப்  பிதுக்கி எப்போதோ வெளியில் எடுத்தாயிற்று. 

சில வருடங்களுக்கு முன் முதலில் ஒருவர் மூச்சை வைத்து பிழைப்பை நடத்துகிறார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்ததும் மீண்டும் அந்தக் கம்பெனி இருக்கிறதா என்று தேடினேன். அமோகமாய் இருக்கிறது. அவரும் ஒரு புத்தகம் எழுதிவிட்டார். அண்ட்ராய்டு , ஐபோன் ஆப் இருக்கிறது. பேட்ரிக் மெக்கேன் , Oxygen Advantage என்பது அவருடைய நிறுவனத்தின் பெயர். புத்தகத்தின் பெயரும் அதுதான். இவருடைய ஆஸ்துமா துயரங்களை காணொளியில் கண்டு ,கண்ணில் நீர் பூத்து, அவர் செய்யச் சொன்ன ஒரு சில மூச்சைப் பற்றிய கொத்து வேலைகளை செய்து பார்த்திருக்கிறேன்.  

அதில் ஒன்று இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். என்னவென்றால் இரவில் உறங்கும் போது வாயில் ஒரு பேப்பர் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு தூங்குவது. நம்முடைய குறட்டை மான்மியங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிளாஸ்திரி போட்டால், வாய் வழி இல்லாமல் மூக்கால் மூச்சு விடும் போது , குறட்டை கட்டுப்படுகிறது என நினைத்துக் கொள்கிறேன். தூக்கமும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. முதலில் சில நாட்கள் பதற்றமாய் இருந்தது. பின்னர் சரியாகிப் போனது. அப்பாவிற்கும் சோதித்துப் பார்த்தேன். ஆனால் காலையில் பார்த்தால் பிய்த்து ஓரமாய் வைத்து விடுவார். இதை எழுதுவதாலோ என்னவோ, இன்று எழும்போது பிளாஸ்திரி நெற்றியில் ஒட்டியிருந்தது.

Breath என்ற இந்தப் புத்தகமும் ஒரு ட்விட்டர் ஹாண்டிலில் தான் அகப்பட்டது. முத்து(கிருஷ்ணன்) தான் அவரும். ஸ்டாக் மார்க்கெட்டின் பிதா மகர்களைப் பற்றி, Eckhart Tholle போன்ற மேற்கோள்கள் இடுவார். இந்திய 'குடி' மார்க்கெட்டை 'புல்லிஷ்' என்று எழுதினார். பணம் சம்பாதிக்க பட்டப் படிப்பு தேவை இல்லை என்று ஒரு நூலில்(thread :-)) சொன்னார்.  சரிதான் நல்லது, நிற்க.

ஜேம்ஸ் நெஸ்டர் எழுதிய இந்தப் புத்தகமும் மூச்சைப் பற்றியது. ஒரு யோகா முகாமிற்கு சென்று, மூச்சுப் பயிற்சியின் போது உடலில் ஏற்பட்ட நல்விளைவுகளை அவர் தொடர்ந்து ஆராய்ந்ததைப் பற்றிய புத்தகம் இது. தொடர்ந்து என்பது பத்து வருட காலம். அவர் இந்தியா வந்தது தெரிகிறது, பிரான்ஸ் சென்றிருக்கிறார். சீனா, ஜப்பான் வருகிறது. பல நாகரிகங்களில் மூச்சைப் பற்றிய எழுத்தையும் , தொன்மங்களையும் தேடி இருக்கிறார். கீதை, தாந்திரிக ,புத்த , ஜைன மேற்கோள்கள் வருகின்றன. எனக்கு தோன்றிய மனக்குறை, தென்னிந்தியா பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. தமிழ் இலக்கியம் இல்லாமல் பரவாயில்லை,ஒரு திருமூலர் கூடவா இல்லை?   

அறிவியல் புலத்தையும் முழுதாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். இடது மூக்கின் சுவாசம் தானியங்கி நரம்பு மண்டலத்தையும், வலது மூக்கின் வழி விடும் சுவாசம் இச்சை வழி நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது என்று தரவுகளுடன் குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் தானே தன் உடம்பில் சோதிக்கிறார். இடது மூக்கில் சுவாசித்து விட்டு , உங்கள் HRV பார்த்தால் , அது கூடும்.

வாயின் வழி மூச்சுவிடுவதன் தீய விளைவுகளை சொல்வது தான் இப்புத்தகத்தின் முக்கியமான செய்தி என நினைக்கிறேன். குறட்டையை அளக்க ஆப் ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். பரிணாமத்தில் மனிதனின் வாயின் அளவு சிறிதானதே பிரச்சனைகளுக்கு காரணம் என்று சொல்கிறார். பல்லாயிரம் வருட மண்டை ஓடுகளை வைத்து ஆராய்ச்சி செய்து இதைச் சொல்கிறார்கள். நாக்கு வாயினுள் அடங்காமல் , பற்களை வெளியே தள்ளுகிறது. பற்கள் கோணலாகி , வாயின் வழியே மூச்சு விட ஆரம்பிக்கிறோம். இது வாயினுள் இருக்கும் சதைகளை இன்னும் தளர்த்துகிறது. இது சக்கர வியூகமாகி வெளியில் வர முடியாமல் இன்னும் சிக்கலாகி விடுகிறது. எளிய பயிற்சிகளின் மூலம் சில நாள்களில் இதை மாற்ற முடியும். நாக்கை வளைத்து சில முறை வாயின் உத்திரத்தில் நிறுத்துவது.விரைப்பாக முடிந்தவரை பின்னுக்கு நாக்கை இளுப்பது போன்ற பயிற்சிகள்.  இதற்க்கு முறையான வைத்தியமும் இருக்கிறது.

இவரும் , இவருடைய ஆராய்ச்சி நண்பர் மற்றொருவரும் பத்து நாட்கள், இதில் ஆராய்ச்சி செய்யும் இந்திய வம்சாவளி  மருத்துவரின் மாதிரிகளாக ,மூக்கை முழுவதுமாக அடைத்து, வாயின் வழியே மட்டும் சுவாசிக்கிறார்கள். இந்த பத்து நாட்களை இவர் கதை போல் விவரிக்கிறார். தூக்கமின்மை, ரத்த அழுத்தம், தூக்கத்தின் நடுவே மூச்சுத் திணறல் (sleep apnea), அளவுக்கு அதிகமான இதயத் துடிப்பு, நாவில் வறட்சி , பகலில் ஏற்படும் அழற்சி , கவனமின்மை போன்று,  சொல்லிக்கொண்டே போகலாம். 

முன்னே சொன்ன இந்த மண்டை ஓடுகளை ஆராய்ச்சி செய்பவர், ஒரு பெண், அவர் இதற்கெல்லாம் காரணம் புதிய உணவு முறை என்று சொல்கிறார். முக்கியமாக மாவு, ஜூஸ் போன்று அரைத்த உணவுகள். கடினமான கடித்துச் சாப்பிடும் முறைமைக்கு ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார். சூயிங் கம் மெல்வது வாயை உறுதியாக்க உதவும் என்கிறார்.

வலது மூக்கு ஆக்ஸிலரேட்டர் என்றால்  , இடது மூக்கு பிரேக். முன்னது ஓட்டம், பதற்றம் , பின்னது நிறுத்தல் , ஓய்வு. ஜார்ஜ் கேடலின் என்று ஒருவர் 1800 களில் அமெரிக்க பழங்குடி சமூகங்களில் , உடல்நலத்தை , மூக்கின் வழி மூச்சு விடும் அவர்களின் வழக்கத்தை பதிவு செய்கிறார். இவர் இதை தேடிப் பிடித்திருக்கிறார். இதைப் போன்ற எண்ணற்ற பெயர்களை புத்தகம் முழுதும் குறிப்பிடுகிறார். 

பல வருடங்களுக்கு முன்னர், இரண்டு மூன்று வயதே ஆன மகளுக்கு சளி காய்ச்சல். யாரோ சொன்னார்கள் என்று CMH மருத்துவமனையின் எதிரே இருந்த ஒரு சிறு மருத்துவமனைக்கு குழந்தை மருத்துவரிடம் கூட்டிச் சென்றோம். குழந்தை வரிசை வராததால் அம்மா மடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. வரிசை வந்ததும் உள்ளே போனோம். மருத்துவர் ஒரு அறுபது வயதிருக்கலாம். எதிரில் உட்காரச் சொல்லிவிட்டு, பழைய பேனாவில் இருந்த ரீபில் குழாயை மூடியைத் திறந்து கழற்றினார். பின்னர் ஒரு புது ரீபிலை பாக்கெட் கிழித்து எடுத்தார். பள பள என்ற ஒரு சிறு பிளேடை மேஜையின் கீழ் இருந்து எடுத்தார். கழற்றிய ரீபிலை புது ரீபிலுடன் அள்வு பார்த்தார். அதே அளவு இதை வெட்டினார். 'ஆபரேஷன் சக்ஸஸ் ' என்று சிரித்தார் . சரியான ரீபில் வருவதில்லை, ஆனால் அவர் விடுவதில்லை என்றார். பின்னர் குழந்தையைப் பார்த்தார். பிரச்சனை வாய் வழி மூச்சு என்றார். தூங்கும் குழந்தையின் இரண்டு உதடுகளையும் தன் கையால் ஓட்டினார். குழந்தை உடல் பதறி மூச்சு முட்டி கண் விழித்தது. வாயால் மூச்சு விடக்கூடாது என்றார்.

முப்பது வயதில் இருந்து ஒவ்வொருவருக்கும் சதைகள் , எலும்புகள் பலம் இழக்க ஆரம்பிக்கின்றன. நாம் நுரையீரல் சிறிது சிறிதாக  வலு இழப்பதை அறிவதில்லை. வயதாவதால் என்பது இதுவே ஆகும். நுரையீரல் வலு என்பது நீளமான, மெதுவான , ஆழ்ந்த மூச்சில் தான் உள்ளது. கார்ல் ஸ்டப் (Carl Stough) என்பவர் 1960 களில் ஓபரா பாடகர்களுக்கும் , நீச்சல் வீரர்களுக்கும் மூச்சுப் பயிற்சி அளித்து புகழ் பெற்றவர். இவர் பயிற்சியளித்து உச்சமாக 1968-ல் 12 நீச்சல் வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றனர். தடகளப் போட்டிகளில் வெல்வதற்க்கு மூச்சு சரியாக விடுவது மிக முக்கியம். வெளியே விடும் மூச்சு இழுப்பதை விட நீண்ட நேரம் இருக்க வேண்டும். உச்சத்தில் 1:4 என்ற விகிதத்தை சிலரால் பயிற்சியால் அடைய முடிகிறது.  

உதரவிதானம் இரண்டாவது இதயம் என்று சொல்லப்படுகிறது. நுரையீரல் சுருங்கி விரிவது உதரவிதானத்தைப் பொறுத்தது. 10% நாம் உதரவிதானத்தைப் பயன் படுத்துகிறோம். 70% சுருக்கி விரிப்பது நம் உடலின் பல தொல்லைகளை சரியாக்கி விடுகிறது. அதாவது, ஆழ்ந்த உள்ளிழுத்தல், முழுதாக காற்றை  வெளியிடுதல், இரண்டும் மெதுவாக செய்யவேண்டும். இவரது பழைய காணொளி கிடைக்கிறது. Exhale மிக இன்றியமையாத விஷயம். பல நோயாளிகளை இதை வைத்தே அவர் குணப்படுத்தியிருக்கிறார். உடல் களைப்பில்லாமல் உச்சக்கட்டத்தில் செயல்பட கரியமில வாயுவும், பிராண வாயுவும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். இதற்க்கு உள்ளிழுப்பதும், வெளியேற்றுவதும் ஆடி அசைந்து எதோ ஒரு புள்ளியில் நிற்க வேண்டும்.

இதைப் போலவே வேகமாய் மூச்சு விடுவது உடம்பை முறுக்கி வேகமாய் செயல்பட தூண்டுகிறது. மூச்சை உள்ளிழுத்து எல்லைவரை வெளியே விடாமல் பிடிப்பது இன்னொரு முக்கியமான பயிற்சி. கடலுள் மூழ்கி அடியாழம் செல்பவர்கள் இதையே செய்கிறார்கள்.  

இப்புத்தகம் ஒரு புனைவு போல் எழுதப்பட்டுள்ளது. இயற்கை , மனிதர்களைப் பற்றிய அவதானிப்புகள், பின்னி ஓடும் கதை போன்ற தொடர்ச்சி. முதலில் அவர் கதை வழியே அமையும் தொடக்கம். எல்லாவற்றையும் மீண்டும் தொகுத்துச் சொல்லும் ஒரு முடிவு. இப்படி ஒரு கட்டமைப்புள்ள புத்தகங்கள் வறட்சியான சுய முன்னேற்ற புத்தகங்களை விட படிக்க தூண்டுகின்றன.    

சில மாதங்களாய்  என்னை அறியாமல் வாய் சிறிதளவு திறந்து இருப்பதை உணர்கிறேன்.  சைக்கிளில் இரண்டு மணி நேரம் போக வர வாயின் வழி பெரும்பாலும் மூச்சு விட்டே பழகி விட்டது. தொண்டை வறட்சியாய் இருப்பதாய் உணர்ந்தேன். இப்போது வாய் மூடி மூக்கின் வழி ஒரு போக வர பயிற்சி செய்து பார்க்கிறேன். இதில் எதுவும் புதிதல்ல. ஒரு சென்று அலைந்து மீண்டு வருதல், அவ்வளவே.  

"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;

கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;

துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.


ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்

ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே


பன்னிரண் டானை பகல்இர வுள்ளது

பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்

பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்

பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. "


மூன்றும்  திருமூலர் திருமந்திரப் பாடல்கள். கடைசி இரண்டும்  புதிர்கள்.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சரியாக புரிந்துகொண்டேன்! உங்கள் பதிவில் உள்ள நுணுக்கமான பகுப்பாய்வுகள் மிகவும் சிறந்தவை. சில இடங்களில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் தெளிவினால் உங்கள் வாசகர்கள் இன்னும் மகிழ்ச்சியாக படிக்க முடியும். மிகவும் மரியாதையுடன் இங்கே சில சின்ன திருத்தங்களும் உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன:

    ---

    தொகுப்பும் சிரமமற்ற வாசிப்பு:
    - உங்கள் எழுத்து பாணி மிகவும் தகவல்தொகுப்புடன் உள்ளதால் சிந்திக்க வைக்கிறது. ஆனால் நீண்ட வாசகங்கள் சிலர் கவனத்தை இழக்கச் செய்யக்கூடும். சிறிய வரிகளை பிரித்து எழுதினால் வாசிக்க எளிதாக இருக்கும்.

    உதாரணம்:
    அசல்:
    “முப்பது வயதில் இருந்து ஒவ்வொருவருக்கும் சதைகள் , எலும்புகள் பலம் இழக்க ஆரம்பிக்கின்றன. நாம் நுரையீரல் சிறிது சிறிதாக வலு இழப்பதை அறிவதில்லை.”
    திருத்தம்:
    “முப்பதாண்டுகள் கழித்துப் பின், உடலின் சதைகள் மற்றும் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். அதேபோல், நுரையீரலின் திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கிறது. இது உடனடியாக உணரப்படாத ஒரு மாற்றமாக இருக்கும்.”

    ---

    தகவல்களின் ஆழத்தை அதிகரித்தல்:
    - உங்கள் பதிவில் கார்ல் ஸ்டப் போன்ற ஆளுமைகள் பற்றி குறிப்பிடுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இதை இன்னும் விரிவாக எடுத்துரைப்பது உங்கள் பதிவை மேலும் மேம்படுத்தும்.

    உதாரணம்:**
    அசல்:
    “கார்ல் ஸ்டப் (Carl Stough) என்பவர் 1960 களில் ஓபரா பாடகர்களுக்கும் , நீச்சல் வீரர்களுக்கும் மூச்சுப் பயிற்சி அளித்து புகழ் பெற்றவர்.”
    திருத்தம்:
    “கார்ல் ஸ்டப் (Carl Stough) என்பவர் ஓபரா பாடகர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு 1960-களில் மூச்சுப் பயிற்சிகளை வழங்கி புகழ் பெற்றவர். இவரது பயிற்சிகள் நுரையீரலின் திறனை அதிகரித்து, வீரர்கள் 1968 ஒலிம்பிக்கில் 12 தங்கப் பதக்கங்கள் வெல்ல வழிவகுத்தன.”

    ---

    ஆதாரங்களுடன் தகவல்களை வழங்கல்:
    - சில கருத்துக்கள் (எ.கா., “வாயின் பரிணாமம்”) மிகவும் சுவாரஸ்யமானவை, ஆனால் வாசகர்களுக்கு விஸ்வாசத்தைக் கொடுக்க உறுதியான ஆதாரங்களை சேர்ப்பது நல்லது.

    உதாரணம்:
    “வாயின் பரிணாம மாற்றங்களால் குறைவான அளவுக்கு சுருங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஜார்ஜ் கேடலின் (George Catlin) பழங்குடியினர் வாழ்வியலில் மூக்கின் மூச்சை பற்றிய பதிவுகளை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.”

    ---

    பயிற்சிகளை தெளிவாக விளக்குதல்:
    - பயிற்சிகளைப் பற்றிய விளக்கங்கள் தெளிவாக இருந்தால் வாசகர்கள் எளிதில் அதை அனுசரிக்க முடியும்.

    உதாரணம்:
    அசல்:
    “நாக்கை வளைத்து சில முறை வாயின் உத்திரத்தில் நிறுத்துவது பயிற்சி.”
    திருத்தம்:
    “நாக்கை மெல்ல பின்னுக்கு இழுத்து, வாயின் உப்பரிப்பகுதியில் 10 வினாடிகள் வைத்திருக்கும் பயிற்சி. இது வாயின் தசைகளை உறுதியாக்க உதவுகிறது. தினசரி இதை மூன்று முறை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.”

    ---

    கடந்தகால பாரம்பரியங்களை அழகாக இணைத்தல்:
    - தென்னிந்திய பாரம்பரியங்கள், குறிப்பாக திருமூலரின் மூச்சுப் பயிற்சிகள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டால் பதிவின் மையப்புள்ளி மேலும் உறுதியாகும்.

    உதாரணம்:
    “திருமூலர் மூச்சுப் பயிற்சிகள் பற்றிய பல பாடல்களை திருமந்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ‘கும்பக’ம், ‘ரேசக’ம் ஆகிய பயிற்சிகளை அவர் முக்கியமாக குறிப்பிடுகிறார். இதன் மூலம் உடல், மனம் மற்றும் மூச்சின் ஒருங்கிணைப்பை அவர் விளக்கியுள்ளார்.”

    ---

    முடிவில்:
    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள ஒரு எண்ணப் பகிர்வு. மேற்கூறிய சில புள்ளிகளை எடுத்துக்கொண்டு, சிறு மாற்றங்களுடன், உங்கள் எழுத்து மிகவும் பிரகாசமாக இருக்கும். உங்கள் ஆழமான சிந்தனையை படிக்க நாம் அசந்தோம்! மிகுந்த மரியாதையுடன் இங்கே கூறப்பட்ட திருத்தங்களை எடுத்து நீங்கள் விருப்பமாக பார்க்கலாம். 😊

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...