Skip to main content

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 2

நாட்குறிப்பு 21/50 - முதல் அத்தியாயம்

எனது அலுவலகம் இருப்பது  நகரின் மையத்தில்.
எதிரில் கப்பன் பூங்கா , அடுத்த தெருவில் சட்டமன்றக் கட்டிடம்.
பக்கவாட்டில் கிரிக்கெட் மைதானம், MG ரோடு, சர்ச் ஸ்ட்ரீட்.

காலையில் எளிதில் தென்படும் காட்சி கல்யாண போட்டோஷூட்.
குறிப்பாக சர்ச் வீதியிலும் விதான் சௌதாவின் முன்னரும். 

கொஞ்சம் மேல்தட்டு என்றால் சர்ச் வீதி pub-முன் ஷூட். 
மிடில் கிளாஸ் என்றால் இன்றுபோல் விதான்சௌதா முன்னால் , பசவண்ணர் வெண்கலக் குதிரைச் சிலை தெரிய நடக்கும். 

தெரு விளக்குக் கம்பியில் மணமகன் ஒருகால் ஊன்றி நிற்க, பெண் சேலை நுனி பிடித்து நடந்து வர வேண்டும்.
முதல் மூன்று டேக் தோல்வியில் முடிந்தது.

பையன் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார்.
போட்டோக்காரர்கள் விடுவதாக இல்லை , சிக்கலாகத் தெரிந்தது.

நான்காவது டேக்கில் மணப்பெண்ணுக்கு முதலில் இருந்த சிரிப்பு இல்லை.
நானும் வந்துவிட்டேன், ஷூட்டும் முடிந்திருக்கும் .


நாட்குறிப்பு  22/50 ஒரு எறும்பாவது...

சாயங்கால ரயில், மேடையில் மண்புழு போல் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது.
என் போன்ற எறும்புகள் மனதினுள் தள்ளுமுள்ளிற்கு ஆயத்தமாகின.
புழு நெருங்க நெருங்க எறும்புகளின் வேகம் கட்டில்லாமல் ஆகும்.
அது கருணையுடன் நின்றதும்,  அடித்துப்  புகுந்து சீட்டை மொய்க்கும்.

அமர்ந்த எறும்புகள் ஆசுவாசமாய் ,தோற்ற முகங்கள் கைப்பிடி தேடி. 
இரண்டுமில்லாதவர்கள் அடுத்த அரைமணிக்கு கடவுளின் குழந்தைகள்.  

ஒரு மாணவன் பரிசுக் கோப்பையை நடுவில் நிறுத்தி அமர்ந்திருக்கிறான். 
கோப்பையும்  இடுப்பில் கைகள் வைத்து குழந்தை போல் நின்றிருக்கிறது.  
தன்னுடைய பதக்கத்தை  அதன் கழுத்தில் மாட்டியிருக்கிறான்.
மாலைச் சூரியன் அவன் முகத்தை அக்கோப்பையைப்போல் ஒளிரச் செய்திருக்கிறது.       

அவன் ஒரு எறும்பாவது கேட்கும் என்று காத்திருக்கலாம்.
எறும்புகள் சொல்லில்லாமல் சுற்றி நின்றன , அமர்ந்தன  நீங்கின.
நெடு நேரம் இருவரும் ஒரு இருப்பாய் மட்டும் இருந்தனர்.

இந்த எறும்பும் அவன் இறங்கும் போதும் பார்த்துத்தான் நின்றது. 

நாட்குறிப்பு  - 23/50 அருகில் பார்க்கும் உண்மை 

நம் உள்ளங்கையை ஜூம் செய்துகொண்டே போனால் என்ன ஆகும்?
உள்ளங்கை கைரேகைகள் பெரிய சாலை, ஏர்போர்ட்  போல் தோன்றலாம்.
படம் பிடித்தால் பார்ப்பவர் சிரமப்பட்டுப் போவார்.

உண்மையை ஜூம் செய்துகொண்டே போனால் வேறு மாதிரி ஆகிவிடுகிறது.
நேற்றும் அப்படி நடந்தது.

அடிப்படை உண்மை அலுவலகத்தில் இரண்டு பேருக்கு எப்போதும் பிடிக்காது. 

இவர் அவர் செய்யும் வேலையில் எப்போதும் குற்றங்கள் கண்டுபிடிப்பார். 
அவர் சொன்னதும்  'எஸ் ... பட் ' என்று துவங்கி, நிமிடங்களுக்கு குறை சொல்வார்.
அதை நம்பர்கள் தரவுகள் துணையுடன் மேலுண்மைகள் போல அடுக்குவார்.
அதை நாலுபேரிடம் ப்ரோபோசல் என்று சொல்லி மகிழ்வார்.

அது பார்ப்பவர்களுக்கு தூரத்தில் தெரியும் மலை போல் உண்மை. 
ஆனால் மலையை காலால் ஏறிக் கடப்பது வேறல்லவா? 

அருகில் நடக்கையில் மலையும் தரையே, எவ்வளவு புடைத்ததென்றாலும்.
எனவே பூமியின் ஒரு அழகிய ப்ரோபோசல் தான் மலை.
இன்னும் ஜூம் செய்தால்  இயற்கையில் ஐம்பூதம் , மனிதனில் முனைப்பு.



நாட்குறிப்பு  - 24/50 அதுலித்தின் சோன் பப்டி

சிறுபிள்ளைகள் என்னைக் கண்டால் அம்மாவின் இடுப்பில் ஏறிக்கொள்ளும்.
தற்போதைய  விதிவிலக்கு நாலு வயது அதுலித்.

'மீனாட்சியம்மன் யாரு கட்டுனா ... நான்தான் கட்டினேன்' என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
சென்ற முறை பாம்பிற்காக புதர்களைத் தேடியிருந்தோம். 
' உங்க ஊர்ல தேடுனயா பாம்பு...' தலையசைத்து போட்டோவைக் காட்டினான்.

கால்பந்தைக் கண்டதும் ' எனக்குப் பிடிக்கத் தெரியாது' என்றான்.
கால்களை அகற்றி கைகளை இடுப்பில்  ஒட்டி  வான்பார்த்து  வைத்துக்காட்டினேன்.
கால்பந்து தன் கைகளில் சரியாய் நின்றது அவனைக் கிறுக்காக்கியது.  
வீடெல்லாம் ஓடிக் களைத்து  அம்மாவை பக்கத்தில் நிறுத்தி பார்க்கவைத்தான்.
அவனுக்கு அதிசயம் பந்தில் கண்ணெடுக்காமல் பழகிய ரன்னிங் கேட்ச்.

அரைமணி உதைத்ததும் , ட்ரிப்ளிங் பழகியதும் முகம் வியர்த்து செவ்வென்றிருந்தது.

அம்மாக்கள் என்னை லூசு என்று நினைக்கலாம் எனவே நிறுத்தினேன்.

வீட்டில் விட்ட மறுகணம்  , உள்ளேயிருந்த அந்த டப்பாவைக் கொணர்ந்தான்.
இரு விரல்களில் எடுத்து  என் உள்ளங்கையில் பொன்னிற சோன்பப்டி.
உள்ளங்கை ரேகைகளில் நாலு பப்டி  சரியாய் ஆயுள்ரேகையில் அமர்ந்திருந்தது. 

நாட்குறிப்பு 25/50  - முனைப்பழித்தல்

அந்த அட்டவணையில் பல இடங்களில் அவன் பெயர் இல்லை.
நியாயமாய் அவன் பெயர் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.
வேலை எல்லாம்செய்து முடித்தபின் , செய்தவர்கள் பெயர் எதிர்பார்க்கக்கூடாதா?

பெயரை அழிப்பவர்கள் வந்து வேலையையும் பார்க்கவேண்டும் அல்லவா?

இவனுடைய இடத்தில் இருக்கும் பெயர்களை மற்றுமொருமுறை படித்தான்.
அதே ஓரிரு பெயர்கள், வழக்கமான சதி என்று அவனுள் தோன்றியது. 
இந்த பெயர் அட்டவணை ஊரெல்லாம் அடித்து ஒட்டப்படும், விட்டால் சரியாகாது. 
இதை வைத்து வேறு கணக்குகள் போடப்படும்.

ஆனால் பெயர் மாற்றுவதும் பற்றில்லாமல் நேர்மறையாகத் தோன்ற வேண்டும்.

அட்டவணையை நடுவில் வைத்து விவாதம், அவனுக்கான இடைவெளி வந்தது. 

'எல்லாம் சரி, பெயர்களில் மட்டும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.
இன்னொருவருக்கு ஏன் சிரமம், நானே செய்வதில் மகிழ்ச்சி.
பெயர் டைபோவாக  இருக்கலாம், மாற்றுகிறேன் ' என்று அழித்துத் திருத்தினான்.  

திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜரை முனைப்பழிய பதினெட்டுமுறை நடக்கவைத்தார் .
இரவில் படித்தது நினைவில் வந்தது, தனக்கு ஒருமுறை ஆனது.

ஆட்டத்தில் இல்லை

நாட்குறிப்பு  26/50 சாலையில் ஒரு நீர்க்கோலம் 

முன்னெல்லாம் சாலை போடுவதென்றால் போட்ட சாலையை பெயர்த்து எடுப்பார்கள்.
அடிப்பள்ளத்தில் சரளை நிரப்பி, மண்போட்டு இடையில் தாரால் சமப்படுத்துவார்கள்.
மேலே மீண்டும் தார்குழைத்து கொட்டியபின் ரோடுரோலரால் அழுத்தி மூடுவார்கள் .  

இப்போதெல்லாம் தோண்டாமலே தாரூற்றி மூடும் சாலைக்குப் பழகிப்போனது.
ஜேசிபி இருப்பதால் தண்ணி லாரி வேகத்தில் சாலைப்பணி முடிந்துவிடும்.
இரவில் இல்லாமல் காலையில் சாலை தோன்றுவது  ஒரு அற்புதம்.

இரண்டுக்கும் நடுவில் இப்போது தாரே இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
கிலோமீட்டர் கணக்கில் உப்பு போல்  பெருங்கற்களை மட்டும் தூவுவது.
முதலில் குழிகளுக்கு இதுவே பரவாயில்லை என்று தோன்றும். 

ஆனால் ஓரிருநாளில் அந்தப் பகுதியே மேகமூட்டத்தில் இருப்பதாகப் தெரியும்.
புழுதியெல்லாம் கிளம்பி சுவர்களில் கூரைகளில் அமர்ந்திருக்கும்.
கடைகளில் படுதாக்கள் தொங்க ஆரம்பிக்கும், முகக்கவசங்கள் அணிய ஆரம்பிப்பார்கள்.

இப்போதைய தீர்வாய் முனிசிபாலிடி லாரியில் ரோடெல்லாம் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

யாரோ எங்கோ  ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள் எனத் தெரிகிறது. 

நிலைமை நீடித்தால் மாத்திரை,  மாஸ்க் , இன்ஹேலர் ஏதாவது கிடைக்குமோ?.


நாட்குறிப்பு - 27/50 கரிசல் 
பாராவின் வகுப்பின் அசைன்மெண்டாய்  வண்ணநிலவன் அழகிரிசாமி கதைகள் படித்தேன்.
மீண்டும் கரிசல் பூமியில் வாழ்ந்த அனுபவம்.

தினமும் பள்ளிமுடிந்து பையைக் கழற்றி விசிறியபின் கிரிக்கெட் கரிசாக்கட்டில்.
விழிகள் எட்டும்வரை கருத்த மண், நடுவில் கிளிப் போட்டமாதிரி கருவேல மரங்கள்.  
சொல்லில் விளங்காது, புல்லில்லாத ஸ்டெப்பியை கற்பனை செய்தால் கரிசல் .

ஆனால் மண்ணின் வீரியம் அந்தக் கதைகளில் வருகிறது.
பஞ்சத்தில் ஊரே காலியாகிக் கொண்டிருக்கும்போது மூதாட்டியை என்ன செய்வது?
நிலங்கள் வறண்டு, நீருக்கும் , உணவுக்கும் அல்லாடும் மனிதர்கள்.

கேப்பையையும், கம்பையையும் நாள் ஒருவிதமாய் சமைத்துப் பசியாறும் குடும்பம்.
பஞ்சத்திற்க்கு நடுவில் , இருக்கும் ஒரு தீப்பெட்டியை காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
பையன் ஒரு தீக்குச்சியைத்  திருடி பீடி குடிப்பதை சித்தி பார்க்கிறார். 

மரபில் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
கரிசலில் கிணற்றில் நாள்தோறும் இதை எடுப்பார்கள் , கொஞ்சமும் வரும்.

வறட்சியில் தண்ணீரால் வரும் சண்டைகள் பார்த்திருக்கிறேன், தீக்குச்சி ?
தண்ணீரும் குளிர்ந்த நெருப்பு தான், வேறுபாடு வெப்பநிலையில். 

ஆட்டத்தில் இல்லை 

நாட்குறிப்பு  28/50 சர்ஜாபூர் ரோடு, பெங்களூர் , சிறிய (பின்னோக்கி) நடை

சிறிதுநாள் முன்பு காலி செய்த பழைய பகுதிக்குப் போயிருந்தேன்.
2010ல் கிரகப்பிரவேசத்தில்  மாமனார் இத பெங்களூருன்னு சொல்லப்பிடாது என்றார்.
அன்று கம்பெனிகளால் கட்டித்தொங்க விடப்பட்டுள்ள அவுட்டர் ரிங்ரோடு இல்லை.  
கடைகண்ணிக்கு ரொம்ப நடக்கணும் என்றார், அவருக்கு மகளைப் பற்றிய கவலை . 
கோவிலில்லாத ஏரியாவில் தமிழ் பூக்கடை அம்மாவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.
பக்கத்திலிருந்த ராணுவ முகாமில் வியாழக்கிழமை காலை 'சும்மா' குண்டுகள்  வெடிப்பார்கள்.
அரைமணி காது வயிறு சுவரெல்லாம் அதிர , அவரும் ஆடிப்போவார்.

2கிமீ நடந்தால் ஒரு  ஸ்பென்சர், அப்புறம் அந்த நகரின் ஒரே டோடல் மால்.
வாரஇறுதிகளில் வெளியூரில் இருந்து வந்து மலிவுவிலைப் பலசரக்கு வாங்கிப்போவார்கள்.

இன்று அதே இடத்தில் zepto நிறுவனம் வைத்திருக்கிறது. 
அங்கே பொறியாளர்கள் 10நிமிட சேவைக்கு அல்கோரிதம் செய்கிறார்கள் என்கிறார்கள்.

பத்துநிமிட மருந்து, மேக்கப், வீட்டுவேலை விளம்பரங்கள் , சூப்பர்மார்க்கெட்டுகள் கோடௌன்களாய். 
மக்கள் நடுவில் ,எலிகள் போல் டெலிவரி பாய்ஸ், நரம்புகள் ?    

கல்லூரியில் ஆபரேஷன்ஸ் ரெசெர்ச் பாடத்தில் transportation problem இருந்தது.
நாமெல்லாம் அதன் பகுதிகளே ,demand-supply-from-to , மற்றும் ஒரு அல்கோரிதம்.


நாட்குறிப்பு  29/50 முழுநேர ஓட்டுனராயிருத்தல்

நேற்று ஒரு வேலைப்பட்டறைக்கு வாடகை வண்டியில் போய்வர வேண்டியிருந்தது. 
12-மணிநேரத்தில்  , ஐந்து மணிநேரம் டிரைவருடன் வண்டிக்குள்ளே கழிந்தது.

துபாய் முதலாளி 6-மணிக்கு எழுப்பி சவாரிக்கு போகச்சொல்லியிருக்கிறார் .
பெரும்பாலும் மௌனம் , பாட்டு கூடாது,  (ராஷ்) டிரைவிங் கூடாது.

நிறுவனங்கள் அமைதி தேடி வரும் இந்த இடத்தில் இறங்கியாகிவிட்டது.
இந்த இடத்தில் அவருக்கு சாப்பிடக் கட்டாது, மையச்சாலை 5-கிமீ.

சாயங்காலம் அவருக்கும் என் தோழர்களுக்கும் கிலோமீட்டர் கணக்கில் தகராறு.
இருவேளை சோற்றுக்கணக்கு சேராது என்று இவர்கள் சொல்லிவிட்டார்கள்.

நெரிசல் குறையவில்லை , இன்னும் நான் மட்டும் வீசப்பட வேண்டும்.

டிரைவருடைய சிறுமகள் போனில் வீட்டுப்பாடம் கேட்டது, அம்மாவைக் கேள் என்றார்.

நாளைக்கு  ஒரு பேக்கேஜ், இரண்டு ஏர்போர்ட் சவாரி என்றார். 
சோற்றுக்கணக்கை தீர்த்து, மூன்றில் ஒரு சாக்லேட் மகளுக்கென கொடுத்தேன்.

முன்பெல்லாம் படிக்காவிட்டால் எருமை மேய்க்கத்தான் லாயக்கு என்று வைவார்கள்.
மேய்ப்பது என்றும் எளிதல்ல, இன்று அதற்கான சொல் என்ன?

நாட்குறிப்பு  30/50 -நாய் படும் பாடு 

குடியிருப்பின் வாட்ஸப் மியூட்டில் இருப்பதால்  பார்ப்பதற்குள் பிரச்சனை காலாவதியாகியிருக்கும்.

ஆனால் ஒரு விநோதப் பிரச்சனை தேடிப் படித்தேன்.

இருக்கும் ஒரே (பெண்) தெருநாய் இன்னொருவரைத் துரத்திவிட்டது. 

டாக் லவ்வர்ஸ்/பெற்றோர் ஒரு பக்கம். துரத்தல்  குரைப்புக்குப் பயந்தவர்கள் எதிர் பக்கம்.
தத்துவம் என்றதும் எழுத்துக்குக் கொண்டாட்டம் வருவதுபோல்,  WA சண்டைக்கு.

உணவு சப்ளை செய்துகொண்டிருந்த இரு பெண்கள் கூண்டிலேற்றப்பட்டனர்.
தடுப்பூசி, விதைநீக்கம் , ரெகுலர் செக்கப் செய்திருப்பதாக வாதாடினர்.
 நாய் நம் எல்லோருக்கும் முன்னேயே இங்கிருக்கிறது. ஆனால் அதற்கு EV வண்டிச் சத்தம் பிடிக்காது என்றார்.

சான்றிதழ்களைக் காட்டச் சொன்னார்கள், மற்றொருவர் சுப்ரீம்கோர்ட் உத்தரவைப் பகிர்ந்திருந்தார். 

உணவிடுபர்கள் அதன் பெற்றோர் ஆனால் சமரசம் என்று முடிவானது.

நான் நடக்கும்போது தலையை நிலத்தில் வைத்துப் புல்லில் படுத்திருந்தது.
என்னை நாலடி வந்து முகர்ந்துவிட்டுப் போகும், இன்று இல்லை. 

உலகம் பெரிது, நேற்றும் இன்றும் அதன் இடம் காணாமலாயிருக்கிறது. 

நாய் கமிட்டிக்குப் பயந்து ஒதுங்கிப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.


நாட்குறிப்பு  31/50 - இரண்டு நான்

உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்கையில் அழைத்துபோகும்படி மகள் ஏற்கனவே சொல்லியிருந்தாள்.
ஜிம்மின் கருவிகளை இயக்கக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாள்.

சென்றதும் 20 நிமிட மெதுஓட்டம் , எலிபிட்டிக்கல் மிதித்தல் பத்து நிமிடம்.
கை , கால் , தோள் , மார்புக்கான  கருவிகளை கற்றுக் கொடுத்தேன்.

இடையிடையே கைக்குட்டையும் , நீரும் வேண்டுமா என்று நீட்டினேன்.
தம்ப்ஸ் அப் கேட்டு அடிக்கடி செக் செய்துகொண்டிருந்தேன்.

45வது-நிமிடத்தில் பெஞ்சில் அமர்ந்தவள் அப்படியே கண்கள் சொருக சரிந்தாள். 
தலைபற்றி நிறுத்த முயற்சித்தேன், அவள் கைகள் காற்றில் அளைந்தன.

சிலநொடிகள் படுத்து எழுந்ததும் முகத்தில் நீர் தெளித்து விசிறினேன்.
பின்னர் மறுபடி சரியத் தொடங்கினாள், ஒருவர் காருக்கு ஓடினார்.

மருத்துவர் இசிஜி பார்த்து, 'ஜிம்  வாஸ் டூ மச் ' என்றார்.

நேற்றைய குற்றவுணர்ச்சியில் காலையில்  டீ குடித்து ஏரிக்குப் போனோம்.

செம்மார்புக் குக்குறுவான், சிறகு உலர்த்திய நீர்க்காகம், காட்டினேன்.
கடைசியில் உள்ளங்கை அளவு குட்டி  கிங் பிஷர், அம்பாய்ப் பறந்தவண்ணம்.

மரகதப்பச்சை பின்பக்கம், பறந்து திரும்பியதும், முன்பக்கம் அழுக்குப்பழுப்பு.  


நாட்குறிப்பு  32/50 - மூன்று தந்தையர் 

அவரை நடையில் பார்த்து முகமன் கூறியதும் பேச ஆரம்பித்தார். 
முகமோ உச்சரிப்போ ஏதோ ஒன்று ஒத்திசைவாகி, தமிழ் நுழைந்தது.  

மகள் குடும்பம் எதிர் குடியிருப்பில், இவரும் மனைவியும் இங்கே.
அரசாங்க வேலை ஒய்வு , மகன் வெளிநாட்டில், சென்னையிலிருந்து பெயர்க்கப்பட்டிருக்கிறார். 
இடம் பிடிக்கவில்லை  , ரூடின் இல்ல, என்று பலமுறை சொன்னார்.
ஏழு மணிக்கு தினமும் அமரும் இருக்கையைக் காட்டி , ஏதாவது செய்யணும் என்றார். 

செய்தித்தாளில் ஒரு முதியவர் மனைவியைக் கொன்று கைதான செய்தி. 
நான் மூன்று நாலு வருடம் இருப்பேன், பின்னர் மனைவி என்ன செய்வார் என்று செயல் செய்திருக்கிறார்.
பிள்ளைகளால் கிரியைக்கு வர முடியாததும் பேப்பரில் செய்தியாக  இருக்கிறது.

தயரதன் வில் முறித்து மணமாகியதும்  ராமனிடம் ஆட்சியை ஒப்படைக்க  எண்ணுகிறான். 
துறவு பற்றியும் ராமனிடம் பேசும் மகத்தான பாடல்கள் படித்தேன்.
கைகேயிடம் வரங்களை மறுபரிசீலனை செய்ய பல முறை கேட்கிறான்.
காடு செல்வதைத் தடுக்க காலில் விழுகிறான், இறப்பேன் என்கிறான்.
'ஈந்தேன் இவ்வரம்..என் சேய் வனம் ஆள..மாய்ந்தேன் நான் போய் வானுலகு ஆள்வேன்'

காலையில் சொன்னபடி, காடேறி மெய்யறிய இல்லாமல், ஓரிரவில் இறக்கிறான்.

இடம்பெயர்தல் இன்னும் சிக்கல்தான் இல்லையா?

நாட்குறிப்பு  37/50 - பூவின் எடை

அந்த ஓரடி சதுர இடத்திற்கு துரதிர்ஷ்டம் இருந்திருக்கிறது.

தேடிப்பிடித்து நட்டுவைத்த செவ்வந்திச் செடி வாடி இல்லாமல் போன இடம்.
பின்னர் நட்டிய செம்பருத்திச் செடியையும் விழுங்கி இருக்கிறது.
விதைகளை விழுங்கி விட்டுச் சலனமில்லாமல் இருந்திருக்கிறது.

எல்லோரும் சேர்ந்து ஆழமான பதியனில் மீண்டும் ரோஜா நட்டினோம்.
ஊரிலிருந்த போது  புதுத்தளிர் பார்த்து மகள் போன் செய்தாள். 
எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை, ஆனால் செடி வளர்வது போல் பட்டது.

சென்ற வாரம் அப்பா, ரோஜாவ மிதிச்சிட்டாங்க என்ற குரல்.
மையக்கிளையில் இருந்து பிரிந்த பூவிருந்த வலுவான பக்கக்கிளை தொங்கிவிட்டது.  

நூலைக் கட்டி கிளைகளை ஒட்டி , பக்கத்தில் கொம்பை பொறுப்பாய்  நிறுத்தினேன்.  
தொங்கிய தலை சில நாட்களில் நிமிர ஆரம்பித்தது.
முறிந்த கிளை  ஒட்டிவிட்டது, ஆனால் இத்தனை பூக்களா சிறுகிளையில்?

பட்டையும், செந்துருக்கமும் , மஞ்சளுமாய் மரங்கள் திருவிழா முகங்கள் போலிருக்கின்றன.
ஊர்  வெறிகொண்டு பூத்திருக்கிறது, பூக்கள் எடை கொள்ள ஆரம்பித்திருக்கின்றன . 

(முத்து)

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...