Psychology of Money - Morgan Housel - பணத்தின் உளவியல் ,சில குறிப்புகள்
எனக்கு தினமும் வரும் டைஜஸ்ட்(வடிக்கப்பட்ட, பொறுக்கப்பட்ட, செரிக்கப்பட்ட ? ) மெயில்களில் quora-வில் இருந்து தவறாமல் சில வரும். நான் அவைகளைப் படிப்பதால் , அவை இன்னமும் வருகின்றன. அழகாய்த் தொகுக்கப்பட்ட நான்கைந்து கேள்விகள். எல்லாமும் இந்த இரண்டு கேள்விகளுள் அடங்கும், என்றோ ஒரு நாள் நான் தேடியவையாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, பணமிருந்தால் எங்கு முதலீடு செய்து அதை பெருக்குவது. இரண்டாவது, என்றோ வேலையில் இருந்து ஓய்வு பெற இன்று என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும். 'நாற்பது வயது, இரண்டு குழந்தைகள்,58 வயதில் ஐந்து கோடி சம்பாதிக்க இன்று என்ன செய்ய வேண்டும்?' '60 வயது, ரிட்டயர்டு , கையில் எண்பது லட்சம் இருக்கிறது. இதை வைத்து 80 வயது வாழ என்ன செய்ய வேண்டும்'. எண்கள் மாறலாம் , ஆனால் இன்றும் இவை இரண்டும் மனதில் துருத்தி நிற்கும் கேள்விகள்.
இதற்க்கு வரும் பதில்களும் ஓரிரு மாதிரிகளில் அடங்கி விடும். ஏறத்தாழ ஜாதகம் மாதிரி இடத்திற்கு இவர்களும் இதை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். முதல் கேள்விக்கு, உங்கள் எண்ணை SIP கால்குலேட்டரில் போட்டு, அதற்க்கு ஒரு 12% கூட்டு வட்டி போட்டு, இடையில் உள்ள வருடங்களை வைத்து, இந்த மாத சம்பளத்தில் எவ்வளவு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒரு நம்பர் வருகிறது. யோசிக்க வேண்டியது : இந்த எல்லா நம்பர்களும் லீவர்கள், முதல் கியரிலும் விழ வேண்டியிருக்கும், ஐந்தாவதிலும் சில சமயம் சறுக்கிச் செல்லலாம். இதில் இருக்கும் மனிதர்கள், நீர்போல், காற்றைப்போல் கட்டிலும் அடங்காத எண்ணிலா அவர்களின் மனங்கள் .
காரைக்குடி அருகில் இருக்கும் திருப்பெருந்துறையில் கொடுங்கை(மேற்கூரை) சிற்பங்கள் உலகப் பெயர் பெற்றவை. இக்கோயிலின் முக மண்டப மேற்கூரையில் கீழ் நோக்கியவாறு ஒரு குரங்கும், அதன் கீழ்க்கூரையில் மேல்நோக்கிய ஒரு உடும்பும் செதுக்கப் பட்டுள்ளது. இது மனதின் இரு நிலைகளைக் குறிக்கிறது. குரங்குத் தாவலும், உடும்புப் பிடியும். உடும்பைப் பற்றி கன்னம் போடுவார்கள் என்று படித்திருக்கிறேன். சிறிய செயலே ஆனாலும் பல்லாண்டு காலம் செய்வது, அர்ப்பணிப்பு. பிறந்ததில் இருந்து விடாமல் செய்யும் எதவாது இன்று என்னில் இருக்கிறதா என யோசிக்கிறேன், காணக் கிடைக்கவில்லை. இங்கு யோசிக்க வேண்டியது இன்னொன்று , திருப்பெருந்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் குதிரை வாங்க குடுத்த பணத்தை வைத்துக் கட்டிய கோயில் என்ற விஷயம். நரியைப் பரியாக்கிய கதை நடந்த இடம். மகத்தான கவிஞருக்கு பணத்தின் மதிப்பு இப்படித்தான் இருக்க முடியும்,இல்லையா?.
இரண்டாவது கேள்விக்கு, உங்கள் ரிட்டையர்மன்ட் தொகையை இன்னொரு எக்ஸல் ஷீட்டில் போட்டு வெளியே எடுத்துத் தருவார்கள். இதன் குறிக்கோள் உங்களிடம் இருக்கும் பணத்தின் போதாமையை உணர்த்தி, பயத்தை உண்டுபண்ணி, அவர்கள் நினைக்கும் வழியில் முதலை போட வைப்பது. எதிர்கால விலைவாசி (inflation), இன்றைய தேவை, உங்கள் கையிலிருக்கும் பணத்தின் வட்டி ஆகியவற்றை வைத்து இயங்கும் பார்முலா.
ட்விட்டரில் ஒரு நாள் சிறந்த 100 நிதி சம்பந்தமான புத்தகங்களை முத்து(கிருஷ்ணன்) பரிந்துரை செய்திருந்தார். அதில் முதல் புத்தகம் Psychology of Money , Morgan Housel என்று இருந்தது. முதலில் இருந்ததால் உடனே வாங்கிப் படித்தேன். முதலில் படித்ததும், Peter Drucker, Effective Executive போல் என நினைத்தேன். பீட்டர் ட்ரக்கர் சொல்வது நீங்கள் நிறுவனத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும், அன்றாடம் கேட்க வேண்டிய கேள்வி, நிறுவனத்திற்கு தனிப்பட்ட ஒருவராய் நீங்கள் இன்றைக்கு என்ன செய்ய இருக்கிறது என்பதே. நிறுவனத்திற்கு என்ற சொல்லை அழுத்திச் செய்ய வேண்டும். நாம் அன்றாடம் பெரும்பாலும் செய்யும் செயல்கள் நமக்கு சுயலாபம் தருவதாய், தனிக்குழுவுக்கு இடம் பிடித்துத் தருவதாய் இருப்பதை, நாம் அதன் உரிமையாளராய் ஒரு கணம் சிந்தித்தால் உணரலாம். சுற்றியிருக்கும் செயல் குமியலில் எதை இன்று செய்தால் ஒரு அங்குலமாவது முன் நகரலாம். இதையே அன்றாடம் செய்ய வேண்டியது, நம் நேரம் எல்லாம் இதற்கே. மற்றதைப் பின்னுக்குத் தள்ளுவது. அருகில் இருப்போர் எல்லோர் விசையையும் முதல் சொன்ன செயலில் குவிப்பது. சரியானதையே செய்வது, இயல்வதை அல்ல. தனி மனிதனாய் நம்மை முதலில் சரி செய்து, ஆக வேண்டியதைச் செய்ய சொல்கிறது. இதை எல்லோரும் இல்லை , பெரும்பான்மையோர் இல்லை, சிறுபான்மையோர் செய்யும் போதே மாற்றம் ஏற்படுகிறது. இவர் கான்ட் சார்ட் , பார் க்ராப், தரவுகள், ப்ராஜெக்ட் பிளான் ஏதும் சொல்லவில்லை. பார்முலாக்கள் , திட்டமிடல்கள், தொலைநோக்குப் பார்வை எதுவும் இல்லை. தலைமைப் பண்பை தனிப்பட்ட ஒருவரின் மனம் சார்ந்த விஷயமாய் ஆக்கி விடுகிறார். பண்பு என்ற சொல்லுக்கு value , intrinsyc , அகவயம்/மனவயம் என்ற அர்த்தம் விழுகிறது. ஆக இது நமக்கு வெளியே கிடையாது.
இதைத்தான் இந்தப் புத்தகத்தின் சாரமாகவும் எடுத்துக்கொள்கிறேன். பணம் சேர்த்தலும் , செலவழித்தலும், அதைக் கையாளத் தெரிவதும், நம் கையில் இருப்பதை மதிப்பிடத் தெரிவதும் எல்லாமும் தனியொருவர் குணம் சேர்ந்தது. பணம் சேர்ப்பது, செலவழிப்பது பள்ளி, கல்லூரிகளில் பார்முலாக்கள் , எக்ஸல், ஸ்லைடுகள் வழியே கை வராது. பிரபஞ்சம் பொருள் வயமானதா இல்லை அகவயமானதா என்ற கேள்வி இன்னும் விடையில்லாமல் இருக்கிறது. இந்தப் பொருள்வய உலகில் உணர்வு , உள்ளுணர்வு , எண்ணங்கள், ஏன் , எங்கிருந்து எழுகின்றன என்று இன்னும் விளக்கி முடியவில்லை. இவ்வுலகம் முக்குணங்களின் திரிபு என்று சாங்கியம் சொல்கிறது. கணினியில் வரும் நிறத்தட்டை( color palette) நீங்கள் பார்த்திருக்கலாம். காடு ஒரு கோடிப் பச்சை நிறமுடையது. ஒரு மரத்தின் இலைப் பச்சையில்லை , அடுத்த மரத்தினுடைய இலைப் பச்சை. நிறத்தட்டில் மவுசை ஒரு புள்ளி நகற்றினால், RGB (red/green/blue) அந்த அளவே கலந்து ஒரு புதிய நிறம் உருவாகிறது. முதலில் உருவாக்கிய ஒரு நிறத்தை மீண்டும் அந்த நிறத்தட்டில் மீண்டும் உருவாக்குவது கடினமாகிவிடுகிறது. ஏனெனில் கோடிப் பச்சை, கோடிச்சிவப்பு, கோடி நீலம் உள்ளடக்கியது அந்த நிறத்தட்டு. மனித மனமும் அத்தனை கோடி நிறங்களின் சாத்தியமுடையது, இல்லையா? இதன் மேல், ஒவ்வொரு கணமும் மாறும் மனித மனம், எரிந்து கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் கலர் சீரியல் லைட் , இல்லையா? பணம் என்ற சொல்லுக்கும் அத்தனை கோடி சாத்தியங்கள் வந்து விடுகின்றன. மனது வயப்பட்டால் பணம் வசப்படுகிறது. நம் மனம் எப்படியோ பணம் அப்படியே. மார்கன் ஹூசல் சொல்வது இதுதான் என நினைக்கிறேன். சமீபத்தில் செய்தியாய் வந்தது இது, உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒருவர் திஹார் ஜெயிலுக்குள் இருந்து கொண்டு, நாற்பது வயதான ஒரு நடிகைக்கு அனுப்பும் பரிசுகளை மனப்பித்து என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது ?. கிறிஸ்துமஸ் பரிசாக 107 ஏக்கர் ஒயின் தோட்டம் பரிசளித்திருக்கிறார் என்று படித்தேன். விரைவில் வெளியே வந்து கைகோர்த்து நடப்பதாக கடிதம் எழுதியிருக்கிறார்.
இதை எழுத நினைத்ததற்கு இன்னும் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ,மார்கன் ஹூசல் ,புகழ் பெட்ரா மூளை நரம்பியல் ஆராச்சியாளர் ஆண்ட்ரு ஹுபெர்மன் அவர்களுக்கு இதே புத்தகத்தின் மீது கொடுத்த ஒரு விரிவான பேட்டி. (https://www.hubermanlab.com/episode/morgan-housel-understand-apply-the-psychology-of-money-to-gain-greater-happiness). இரண்டாவது , நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் ஒரு துறவிக்கு பணம் மற்றும் பணத்தால் வரும் சுகத்தைப் பற்றிய கேள்விக்கு அவரது விரிவான பதில் (https://www.youtube.com/watch?v=YFYKjG6jjZg&pp=ygUTbm9jaHVyIHZlbmthdGFyYW1hbg%3D%3D). )
ஒருவர் முழுத் துறவி. மற்றொருவர் ,மார்கன் ஹூசல் ,எல்லோரும் ஏற்கனவே செல்வர்களாய் இருக்கும் உலகில் , மேலே இருக்கும் ஒரு சிலர் இடத்திற்கு எல்லோரும் சென்று சேர்வது எப்படி, இல்லை சென்றுதான் ஆக வேண்டுமா என்று ஆராய்பவர். மேற்கு உலகின் இலக்கு Elon Musk , Jeff Bezos , Mark Zuckerburg போன்றவர்கள். இந்த இலக்கை கண்மூடித்தனமாக துரத்துபவர்களில், வெல்பவர்களை விட இருப்பதையும் இழப்பவர்களே அளவில் அதிகம். இவர்களை நோக்கியே மார்கன் பேசுகிறார். இயற்கையில் மலையும் , மரமும் அவசரமே படுவதில்லை என்கிறார். வளர்ச்சிக்கு பொறுமையும், தினமும் சிறுகச் சேமித்தலும் மட்டுமே முக்கியம் என்று சொல்கிறார். கூட்டு வட்டி நம் கற்பனையில் சிக்காது. கூட்டு வட்டியை ஐன்ஸ்டீன் உலகின் எட்டாவது அதிசயம் என்றார். எல்லோரும் சொல்லும் Warren Buffet , 65 வயதிற்கு மேல் தான் அவரது குபேர மூலை பெரிதாய் ஆனது. ஆனால் 10 வயதில் சேமிக்க ஆரம்பித்து விட்டார். மூன்று பேர் சேர்ந்து துவங்கிய நிறுவனத்தில், இரண்டு பேர் ஒரே மனநிலை உடையவர்கள். மூன்றாவது நபர் ஆசை மிகுதி , ஆள் இல்லாமல் போகிறார். மற்ற நிறுவனங்கள் லாப சதவீதம் மூன்று இலக்கங்கள் போகும்போது, இவர் 22% சதவீதத்தில் நிம்மதியாய் இருந்தார். நம்பர்களை வைத்து முதலீடு செய்வதில்லை, தனக்குப் புரியாத தொழிலில் பணம் போடுவதில்லை. இன்னும் பழைய வீட்டிலேயே வாழ்கிறார். அவர் 60 வயதில் , அவரை நமக்கு யாருக்கும் தெரிந்திருக்காது.
Lifestyle Inflation என்ற ஒரு வார்த்தை எனக்குப் புதிது. இன்று காலையில் பெரிய சைஸ் தக்காளி போன்ற ஆனால் தக்காளியும் இல்லாத ஆரஞ்சும் இல்லாத ஒரு பழம் அறுத்தது நினைவில் வருகிறது. அன்று ஒரு பழம் 100 ருபாய் என்று கடைப்பயன் சாம்பிள் அறுத்துக் கொடுத்து தலையில் கட்டிவிட்டார். ஒரே பழம் நூறு ரூபாய்க்கு அன்று தான் வாழ்வில் வாங்கினேன் என நினைத்தேன். பலாப்பழமும் இவ்விலையில் வாங்கியதில்லை. சுளை வாங்கினால் நூறினுள் அடங்கும் தான் , வேறு வழி இல்லை. இது தான் லைப் ஸ்டைல் விலைவாசி. இதை இன்னும் நீட்டி விரித்துப் பார்க்கலாம். இந்த வார்த்தையை நினைவில் நிறுத்த வேண்டும்.
செலவழிப்பதல்ல, செலவழிப்பதால் வரும் மகிழ்ச்சியே அடியில் இருப்பது. மகிழ்ச்சி என்பது நினைப்பதை செய்ய முடியும் சுதந்திரத்தில் வருவது. பணம் சேர்ப்பதன் முதல் குறிக்கோள் இந்த மன விடுதலையையே. இந்த விடுதலை கிடைக்கும் எல்லைக் கோடு தான் போதும் என்பதன் அடையாளம்.
இது இப்படி இருக்க , Elon Musk , Jeff Bezos , Mark Zuckerburg போன்றவர்கள் பணத்தால் இன்னும் என்ன செய்ய முடியும் என்று பார்க்கின்றனர். பூமியில் வசிக்க இல்லாத நிலை வரும்போது வேற்று கிரகம் எதிலேனும் வழி இருக்கிறதா? சாவை வெல்ல முடியாவிட்டாலும், முடிந்தவரை தள்ளிப் போட முடியுமா? இதில் தான் அவர்கள் அடுத்தகட்ட முதலீடு செய்திருக்கிறார்கள்.
இது எனக்கு கம்பர் இரணிய வதைப் படலத்தில் இரணியனை வெல்லற்கரிய வீரனாக சித்தரிப்பதை நினைவூட்டியது. இதை கம்பர் 18 பாடல்களில் சொல்கிறார். அவற்றில் சில கீழே;
நம் இறைவன் படைத்தது, காத்து, அளிக்கும் இந்த ஒரு அண்டத்தில் மட்டுமா அவன் இறைவன் , எல்லா அண்டங்களுக்கும் இரணியன் அல்லவா கடவுள் .
"இறைவனும், அயனும்,கற்றை அம் சடைக் கடவுளும்
காத்து, அளித்து, அழிக்கும் ஒற்றை அண்டத்தின் அளவனோ?
அதன்புறத்து உலவா மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்."
இரண்டு திசை யானைகளை இரண்டு தோளில் தூக்கி மோதவிடுவான். பெரிய ஏழு கடல்களையும் தன் முழங்கால் நனையாமல் கடந்து ஏறுவான்.
"ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்."
ஆற்று நீர் சிறியது, அதில் குளியான்; மழை நீர் குளிர்ச்சியுடையது, அதில் குளியான்;கடல்நீர் உவர்ப்பு , அதில் குளியான்; இருக்கும் அண்டத்தை துளை செய்து, அதன் பின்னால் இருக்கும் அங்கு ஓடும் நீரில் குளிப்பான்.
"வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான்;
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்;
பண்டைத் தெண் திரைப் பரவை நீர் உவர் என்று படியான்;
அண்டத்தைப் பொதுத்து, அப் புறத்து அப்பினால் ஆடும்."
எண் திசைக்கடவுளர் வேலைகளை மாற்றி விடுவான். எங்கும் தன் பெயரே ஒலிக்க வேண்டும் என்பான்.மேல் சொன்ன புறப் பெரும்கடலில் குளித்து , நாகலோகத்தில் அழகு மகளிருடன் காலை உணவு அருந்தி, இந்திர லோகத்தில் பகல் பொழுது கழித்து , இரவிலே பிரம்மனின் லோகத்தில் இருப்பான்.
"மரபின், மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,
பரவும் இந்திரன் பதியிடைப் பகற் பொழுது அகற்றி,
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்."
எதற்கு இதையெல்லாம் சொன்னேன் என்றால் , கோள்விட்டுக் கோள்போகும் , எல்லாக் கோள்களையும் ஆட்சி புரியும் ஒரு மாமனிதர் என்ற கற்பனை இப்போது நிலைமையில் நெடுநாள் தாங்காது.
கம்பன் கூறும் இரணியனின் சாகா வர அழகையும் சொல்லியே ஆக வேண்டும்.
இந்த இரணியனை யாரெல்லாம் கொல்லக் கூடாது, இதோ கீழே.
"பெண்ணில், பேர் எழில் ஆணினில், அலியினில்,பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில், இல்லதில், உலவான்;
கண்ணில் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;
மண்ணில் சாகிலன்; வானிலும் சாகிலன்;-வரத்தால்."
"நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த
மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும்,மாளான்;
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா."
"உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்
கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா;
நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்
கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்?"
சரி இப்போது தரையில் இறங்கி வர வேண்டும்.மேலே சொன்ன இந்த சுதந்திரம் என்பது என்ன? இதைத்தான் நொச்சூர் விளக்குகிறார். இவர் தத்துவம் படித்தவர். நான் காணொளிகளில் பார்த்து மூன்று மொழிகளில் தத்துவ விளக்கம் செய்கிறார். ரமணாஸ்ரமத்தில் நெடுங்காலம் இருந்திருக்கிறார். இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி , துறவறத்தில், ஞானத் தேடலில் இருப்பவர்களுக்கு, பணத்தேவை எவ்வளவு இருக்க வேண்டும்? அல்லது பணத்தால் வாங்க முடிந்த சுகங்களை எவ்வளவு தூரம் அவசியம் என்று சொல்வது? எந்த இடத்தில் இது சொகுசு ஆகி விடுகிறது. துறவு என்பது எல்லாம் துறப்பதல்லவா? எல்லாமல்லவா துறக்க வேண்டும்?
இதற்க்கு நொச்சூர் சொல்லும் பதிலின் சாரம் இது. துறவில் முக்கியம் மெய்மையை, கடவுளைத் தேடுவது. துறப்பதில் கவனம் இருந்தால் மெய்மை வெளியே போய்விடும். உடம்பிற்கு தேவைகள் உண்டு, அதற்க்கு பணம் இல்லாமல் முடியாது. முன் போல் எல்லாத் துறவிகளும் பிச்சையெடுத்து உண்ண முடியாது. பிரபலமாகாத சாதகர்கள், அடிப்படை தேவைகளுக்குப் பணம் பண்ணிவைத்துக் கொண்டே துறப்பு செய்ய முடியும். துறவின் முதலில் அவருக்கு பணத்தை கையால் தொடக்கூடாது என்று வைராக்கியம் இருந்ததாகவும், இன்னொரு அநுபவமிக்க மாமா 'கேட்கவும் வேண்டாம்; வேண்டாம் என்று மறுக்கவும் வேண்டாம்' என்று சொன்னதாகவும் , அதையே இன்றும் செய்வதாகவும் சொல்கிறார். இங்கு சுதந்திரம் என்பது அந்த ஞானத் தேடலை செய்வதற்குரிய அளவே ஆன பணத்தை ஈட்டிக் கொள்வதே. மார்கன் ஹூசல் சொல்லும் சுதந்திரமும் , ஒருவர் தன் வாழ்வில் செய்ய விளையும் செயல்களைச் செய்வதற்கான சுதந்திரமே. அது எவ்வளவே ஆனாலும் அதை நாம் தேடிக்கொள்ள வேண்டும்.
பிரபலமான துறவிகளுக்கு இந்நாளில் வரும் மற்றொரு சிக்கலையும் சொல்கிறார். பிரபலமான துறவிகளுக்கு பிட்சைக்கு போனால் கோக் , சாக்லேட் கொடுக்கிறார்கள் என்று சொன்னார். சிலர் விருந்துக்கு அழைக்கிறார்கள். தலை வாழை இலை விரித்து , நெடுஞ்சாலை இருபுற ரோடு ரேஞ்சில் , உணவு உண்டால், ஞானத் தேடல் வெளியே போய் விடும். freedom முக்கியமில்லாமல் போனால், தினமும் இன்னும் பெரிய தலைவாழை இலை தேடி அலைய வேண்டியது தான் .

நீங்கள் எழுதிய நுணுக்கமான விஷயங்களைப் படிக்கும் போதே மனதை ஆழமாகத் தொட்டுப் பேசும் எண்ணங்கள் மின்னுகின்றன. பணம், மனம், சுதந்திரம் ஆகிய மூன்று பரிமாணங்களின் கோட்பாடுகள் எளிய வாழ்க்கை முதல் ஞான தேடல் வரை சென்றடையும் வண்ணம் எளிமையாகவும் ஆழமாகவும் சொல்கின்றீர்கள்.
ReplyDeleteஉங்கள் கேள்விகளும் மறுவினைகளும் வாழ்க்கையின் அடிப்படை மையங்களைப் பற்றிய சிந்தனைக்குக் காரணமாகும். நிதி மேலாண்மை என்றாலே ஒரு எக்ஸல் ஷீட்டின் முடிவுகளைப் பற்றிய பார்வைதான் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அந்த எண்கள் மனதை புரிந்துகொள்ள முடியாது; மனதில் இருக்கும் பயங்களையும் ஆசைகளையும் தீர்க்க முடியாது. இதைத்தான் நீங்கள் மார்கன் ஹூசல் மற்றும் மற்ற கருத்துக்களால் சித்தரிக்கின்றீர்கள்.
மனமும் பணமும்:
பணம் வாழ்க்கையின் சில சுதந்திரங்களை உருவாக்க உதவும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பலர் பணத்தைவிட அதன் சாத்தியங்களை (possibilities) மனதில் அதிகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, இரண்டாவது கேள்விக்கு வரும் எக்ஸல் பதில்கள் பயத்தை உண்டாக்கும் கருவிகள். ஆனால் மனதின் குரங்குத் தாவலால், அந்த பயம் ஒருபுறமும், ஆசை மறுபுறமும் மாறி வருகிறது. நீங்கள் சொல்லிய திருப்பெருந்துறை குரங்கும் உடும்பும் இதையே அழகாகச் சொல்கிறது.
உங்கள் மார்கன் ஹூசல் அனுபவத்தை நொச்சூர் வெங்கட்ராமனின் தத்துவத்துடன் ஒப்பிட்டுச் சொல்வது வாழ்க்கையைப் பற்றி மேலும் தெளிவை தருகிறது:
பணம்வழி சுதந்திரம்:
பணத்தை தேடுவதில் அடக்க முடியாத விருப்பமும் பயமும் மாறிமாறி விளையாடுகின்றன. பணத்தை ஒரு கருவியாக பார்க்க வேண்டிய அவசியத்தை மார்கன் தெளிவாகக் கூறுகிறார்.
சுதந்திரத்தின் உச்சம்:
நொச்சூரின் கருத்தில், ஞானம் தேடும் விதத்தில் சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் அந்த சுதந்திரத்தைத் தேடிக்கொண்டிருக்கும் போது கூட, அடிப்படை தேவைகளுக்குத் தகுந்த அளவிலான பணம் தேவை.
எண்ணங்களின் கோடிப்பலகை:
நீங்கள் சொன்ன கோடி நிறங்களும் மாறும் மனித மனம் என்பது மிக நுணுக்கமான பார்வை. RGB நிறப்பலகையைப் போல, மனதும் இடத்துக்கும் காலத்துக்கும் மாறி வருகிறது. இந்த மன அமைவுகளே வாழ்க்கை முழுவதும் எடுக்கும் முடிவுகளுக்கும் நிதி மேலாண்மைக்கும் அடிப்படையாக இருக்கும்.
முடிவில்:
நீங்கள் சொல்லும் லைக்ஸ்டைல் இன்ஃபிளேஷன் மற்றும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து சிறு முயற்சிகளின் தேவையை சித்தரிப்பது முக்கியமானது. ஒருவரின் பணமேற்பார்வை (perspective on money), எவரது வாழ்க்கையையும் தீர்மானிக்க முடியும்.
புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியதற்கும் ஆழமான கேள்விகளை முன்வைத்ததற்கும் நன்றி!