Posts

Translate

அஸ்மி அல்லது பொருள் தொலைதல்

Image
அஸ்மி அல்லது பொருள் தொலைதல் ---------------------------------------------------- மறுநாள் டிரைவர் வேலையை நினைத்து முதல் நாள் இரவே யோசனையாக இருந்தது.இப்போதெல்லாம் ஊருக்குள் கார் ஓட்டுவது அதிகம் பீதியைக் கிளப்புகிறது. ஞாயிறு மதியத் தூக்கத்தையும் பலி கேட்டது இன்னோர் சோகம். ஏனோ காலை எழுந்ததும் நல்லூழ். சாரதி வேலை  கேன்சல் ஆனது. ஞாயிறு நேரம் கிடைத்தது குதூகலகமாக இருந்தது. மகிழ்ச்சியில் கட்டாயத் தூக்கம். என்ன செய்தும் வரவில்லை. எங்கேயோ தலை முட்டியது போல் இருந்தது. தொண்டையிலும், நாக்கிலும் சேர்த்து ரப்பர் பேண்ட் போட்ட மாதிரி மெல்லிய வலி. தூங்கியிருக்கிறேன் என்றும் தூக்கம் போச்சு என்று ஒரே நேரத்தில் நினைப்பு.   எண்ணியவுடன் முழிப்பு பொங்கி, குறட்டை வெடித்து, படுக்கையில் சிந்தி விட்டது. எழுந்து செய்ய ஒன்றும் இல்லை. சும்மா எப்படி இருப்பது. பையனை இரண்டாம் தடவை முடி திருத்த அழைத்துச் சென்றேன். குடியிருப்பின் பின் வாசல் வழி கோபசந்திரா கடந்து பிரதான சாலை செல்ல வேண்டும். எனக்கு இது ராபர்ட் ப்ராஸ்டின் 'ரோட் நாட் டேக்கன்'. அன்றெல்லாம் டிவி பார்க்கும் போதே தெரிந்தவர்கள் செட்டிங் என்பார்கள...

' ----------------------------------- '

Image
' ' --------------------------------- குருவிடம் பிரபஞ்ச ரகசியம் என்னவென்று கேட்டான். சிதம்பரம் நோக்கி கை காட்டினார். அங்கு கூட்டத்தில் ஒருவனாய் நின்றான். தெய்வத்தின் வலப்பக்கம் நீலத்திரை ஆடியது. மணி 7:30. பூசகர் திரையை விலக்கி ஒளி காட்டினார். அந்தரத்தில் ஒரு வில்வ மாலை. அதன் பின்னால் ஒன்றும் இல்லை.  

சென்னை என்னும் சோதனைச் சாலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
சென்னை என்னும் சோதனைச் சாலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ------------------------------------------------------------------------------------ நம் வாழ்வைப் போல் வரலாறும் தற்செயல்களின் ஒழுக்கு தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 1600-ல் கூட்டு முதலீட்டில் ஆரம்பமான கிழக்கிந்தியக் கம்பெனி , பல நாடுகளின் தலை விதியை நிர்ணயம் செய்வதாக இருந்தது. சென்னை , மும்பை, கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களும் அதன் பாதையில் வந்தன. அதன் கடல் பயணங்களும், ஆரம்பமும், வளர்ச்சியும் சென்னையின் ஆரம்பமும், வளர்ச்சியும் என இணை கோடுகளாகப் பார்க்கலாம். இன்றைய யூனிகார்ன் ஸ்டார்ட் அப் ஒன்றின் கதையே அது. முழுதும் வணிக நோக்கமும், வளர்ச்சியும் மட்டுமே குறிக்கோள்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஊடாக சென்னை நகர் உருவான கதை பற்றிய எனது கட்டுரை. https://madraspaper.com/chennai-new-airport-land-history/  

வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை ---------------------------------------------------------------------------------- வரலாற்றை வருடங்களின் கோர்வையாகப் பார்ப்பது சலிப்பூட்டும். யார் யாருக்கு மகன், எப்பொழுது பிறந்தார், எங்கே என்னென்ன சண்டைகள் , ஜெயித்தது, தோற்றது போன்றவை தகவல் அடுக்குகள் என்று தோன்றும். ஒரு வகையில் வரலாறு என்பது மாபெரும் தொங்கும் போட்டோ பிரேம்கள் தானோ என்ற எண்ணம் வருகிறது. ஸ்டாம்ப் அளவில் இருந்து, கட் அவுட் அளவு வரை தொகுத்துச் சேர்த்த போட்டோ ஆல்பம். அக்கால ஜமீன் வீடுகளில், மான் வேட்டைக்குப் போய் வந்த ஆதாரமாய், தோலை உருவி வைக்கோலில் அடைத்து, கொம்பு சொருகி சுவற்றில் அறைந்திருப்பார்கள். வரலாறும் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எல்லாமும் அப்படி இல்லை. ஒரு சொல்லோ, வரியோ நம்மை எழுந்து அமர வைக்கிறது. ஒரு பொறி. வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் பின்வருமாறு சொன்னால் அவரை என்னவென்று நினைப்பது? "வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே நான் விரும்பினேன். தனிப்பட்ட முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் எனது செயல்களைத் தீர்மானிக்கவில்லை. இப்படி நான் கூறினால், அத...

சல்லி வேரில் வெள்ளை மீன்கள்

Image
சல்லி வேரில் வெள்ளை மீன்கள் -------------------------------------------------- துறவி சிரசாசனத்தில் நின்றபடி இப்படி நினைத்தார். நீரின் வேர் கடலில் பூமியின் வேர் ஆகாயத்தில் மழையின் வேர் பூமியில் எதிரில் இருந்தவர் கண்மூடி தலைகீழாய் இருந்தார். சல்லி வேரென தரையில் படர்ந்தது முடி வாழ்வின் தழும்பென அதன் மேல் நீந்தும் நரை. மனிதனின் வேர் தலை.

எரர் 404

Image
எரர் 404 ----------- இருபுறமும் ஓடும் கறுப்பு நதி என்று துறவி மனதில் நினைத்தார். ஆசிரமத்தின் அடுக்களைச் சுவற்றில் பிள்ளையார் எறும்புச் சாரைகள் சிறு நூல் அசைவெனச் சென்றன. மேல் செல்லும் வரிசை அடுப்பருகில் தேங்காய்ப் பத்தையில் ஆரம்பித்தது. ஊறிய எறும்புகள் , தேங்காய் மூடியை பனிமலையெனக் காட்டின. கீழே சென்றவை துளியைச் சுமந்து சிறு குழியில் இறங்கி மறைந்தன. எதற்கென்று தெரியாமல், ஒவ்வொன்றும் தனக்கிடப்பட்டதைச் செய்தன. எதிர்பாராமல் சுவரிலிருந்து பூனை குதித்து, தேங்காய் மூடி தரையில் விழுந்தது. எறும்புகள் சிதறி, ஒட்டுமொத்த வரிசையும் திசையில்லாமல் தடுமாறின. மாணவன் பத்தையை திரும்ப அதே இடத்தில் வைக்கட்டுமா என்றான். இல்லை என்றார் துறவி .

3x (1+1) = 1

Image
3x (1+1) = 1 ------------- குகைக்குள் உள்முகந்து தியானத்தில் கண் மூடியிருந்தார் அத்துறவி. எப்போதோ கண் திறந்தார். மரக்கிளை அமர்ந்த பறவையொன்று விண்ணில் எழுந்து பறந்தது. மலையும் வானமும் அங்கேயே இருந்தன. ------- குழலென காற்று மரத்தை இசைத்தது. மயிர்களென எழுந்து ஆடின அதன் இலைகள். ஒரு இலை சுழன்று உதிர்ந்தது. அதை தோட்டக்காரர் பாய்ச்சிய நீர் சுமந்து கால்வாயில் விட்டது. இலையின் மற்றொரு பயணம் துவங்கியது. மரத்தில் இலைகள் இன்னும் ஆடிக் கொண்டிருந்தன. மரம் அசையாமல் இருந்தது. --------- நகைக்கடைக்காரர் வெல்வெட் மடிப்பில் பொன் ஆரங்களைப் பரப்பினார். காலை வெயில், இளங்காலை வெயில், உச்சி வெயில், மாலை வெய்யிலென பொன் நிறச் சாயைகள். அப்பெண் எதைத் தேர்வது என்று தடுமாறினார். அப்போது செய்கூலி என்ன, ஆண்டிக் எது , கிளாசிக் எது, டிரெண்டிங் எது என்று பிரித்துக் காட்டினார். பெண் இன்னும் முகவாயைத் தொட்டபடி இருந்தார்.  'எல்லாப் பவுனும் ஒன்னு தான். கோல்ட் பிஸ்கட் பார்க்கிறீங்களா மேம்.'