Translate

அறியாமை (சிறுகதை)

அறியாமை   (சிறுகதை)

------------------------------



சிறிய இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட கம்பி வலை. கீழே ஆழமான குழி . வலையின் நடுவில் சிவந்த பாறை  என அசைவற்ற ஆட்டின் இறைச்சி . ஒரு  புலி முன்னங்காலைத் சற்று தூக்கி, தலை தாழ்த்தி அதைப் பார்க்க நின்றது.  கண்கள் மாமிசத்தை ஊழ்கமென நோக்கின.மாயவலையென அறிந்து பின்னகரும் என நினைத்த பொழுதில், இறைச்சியை நோக்கி முழு உடலும் பாய்ந்தது. காதடைக்கும் சப்தத்துடன் கம்பி அறுந்து, வேங்கை படுகுழியில் விழுந்தது. படுக்கையில் ராமச்சந்திரன் அப்பா என அலறினான். குரல் கேட்டு மனைவி ராமச்சந்திரனை பலமுறை தட்டியபடி எழுப்பினாள். 

இடுங்கிய பற்களுடன் கண் விழித்தான். கைகள் அழுத்தமாய் கட்டிலின் விளிம்பைப் பற்றியிருந்தன.

அப்பா இறந்து ஒரு மாதம் இன்னும் முடியவில்லை. 

ராமசந்திரனுக்கு பொறுப்பு என்ற சொல்லின் அர்த்தம் விளங்க ஆரம்பித்திருந்தது. மாதத் தவணை முதல், வட்டிக் கடன் வரை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டே இருப்பார். இனிமேல் இல்லை. படிக்கும் பிள்ளைகள் வளர்ந்து விடும். பொறுப்பு அதிகமாகப் போவதை எண்ணினான். தன்னில் பாதி விட்டுப் போயிருப்பதை உணர்ந்தான். 

பெரிய கடன் சுமை ஒன்றும் ஏற்றி வைத்துப் போய்விடவில்லை. பண வகையிலும் அவர் இல்லாதது மிச்சமே. 

இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம். எல்லாமும் அவன் செய்த ஒரு பிழை. அறியாமல் செய்தாலும் அது அவனளவில் பிழை. அந்தக் குற்றவுணர்வு தான் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. வாழ்வு அறிதலுக்கும், அறியாமைக்கும் நடக்கும் இடைவிடாத ஊசலாட்டம். அறியாமல் இருப்பது நிம்மதியாகப்  பட்டது. உதாரணமாக வெண்டிலேட்டர் என்ற ஒரு சொல். அதை சருகென தாண்டிப் போயிருந்தால் இவ்வளவு துயரம் இருத்திருக்காது. ஆராய்ந்து தெரிந்து முடிவில் இப்படி வேறொரு துயரமும், வெற்றிடமும் இருந்திருக்காது.

அவனால் இப்போதெல்லாம் தூங்க முடிவதில்லை. துரத்தும் கனவுகள். விடாது கவ்வியிருக்கும் மருத்துவமனை நினைவுகள்.

அப்பாவிற்கு ஆஸ்பத்திரி ஐ சி யு வில் நீலப் பொடிக்கோடு போட்ட சட்டை போட்டிருந்தார்கள். மழித்த முகம், வெட்டிய முடியுடன் அழகாய் இருந்தார் .அப்போது விழித்தெழுந்த, தளிரென ஒளிர்ந்த  கண்கள். நர்ஸ் வைத்த நீள விபூதி நெற்றியில் நதியெனச்  சென்றது. வாய் வழியாக வாஷிங் மெஷின் ஹோஸ் பைப் குழாய் செருகப் பட்டிருந்தது. மூக்கின் வழியே உறிஞ்சு குழாய் போல  இரண்டு உள்ளே சென்றது.  வாயைப் பார்த்து நர்ஸிடம் எப்படிச் சாப்பிடுவார் எனக் கேட்டான். அவளுக்கு அக்கேள்வியை நம்ப இயலவில்லை. புனலைப் பொருத்தி ஆரஞ்சுப் பழச்சாற்றை மூக்குக் குழாயில் விடுவார்கள் என்றாள். மூக்கில் திரவம் நுழைந்து பொறையேறி கனவில் விழித்துக் கொண்டான்.

வீட்டில் பாத்திரம் கழுவி அடுக்கும் ஈயப் பாத்திரத்தை  கையில் கொடுத்து நர்ஸ் மருந்து மாத்திரை வாங்கிவரச் சொல்கிறாள். டிஷ்யூ பேப்பர், டையபர், கையுறை வரை எல்லாமும் இருந்தது. மாத்திரை மருந்துகளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.  பெயர்களை இணையத்தில் தேடினான்.  முந்தைய மருத்துவமனையின் மாத்திரைப் பெயர்கள் ஏதும் இல்லை.. வில்லைகளில்  பொடி எழுத்துக்களை முடியாமல் கனவில் வாசிக்கையில் கண் நோக முழிப்புத் தட்டிவிடும்.

வேலை இடையில் அப்பாவுடைய கிழிந்த, சொட்டு ரத்தக் கரையுள்ள எட்டு முழ  வேட்டியோ, கையெழுத்தோ கண்ணில் விழுந்து நாளைக் கனமாக்கும். வாழ்வின் சீழ் போன்ற அந்தப் பத்து தினங்கள் நினைவுக்கு வரும்.

அம்மா அழைத்து அப்பா ஊருக்குச் செல்ல அடம் பிடிப்பதாகச் சொன்னாள். இப்போது என்ன ஊரில்? யார் இருக்கிறார்கள் அங்கு? முதலில் அவனும் பெரிதாக எண்ணவில்லை. அவரின் குணம் அப்படி. காரியத்தை விடாமல் சொல்லி நிகழ்த்தி விடுவார். தேதி நேரமும் வாங்கி வைத்துக் கொள்வார். பின்னர் அதை இடைவிடாமல் நினைவு படுத்திக் கொண்டே இருப்பார். நாமே பொறுமையிழந்து அக்காரியத்தை சீக்கிரம் செய்ய வேண்டியது ஆகும். ஊருக்கு டிக்கெட் போடக் கேட்டு, காலம் தாழ்த்தியதால், அவரே கைப்பையுடன் சொல்லிக்கொள்ளாமல் சென்றிருக்கிறார். 

மீண்டும் அம்மா அவனிடம் போனில் அப்பா சாப்பிடவும்  தூங்கவும் மறுப்பதாகச் சொன்னார். பிறந்த ஊரைப் பற்றிய புலம்பல். இது சரியென்று படவில்லை. தூங்காமல் ரத்த அழுத்தம் மேலும் கூடிவிடும் என்றார்கள். போனிலும் ஊருக்குப் போவதையே சொல்லிகொண்டு இருந்தார். நேரில் வந்து அழைத்துப் போகிறேன் என்று கெஞ்சிப் பார்த்தான். கேட்கவில்லை. 

பொறுமையைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்லும் கதை இது. புத்தர் துறவறம் கொள்ள எண்ணுகிறார். தந்தை கேட்க மறுக்கிறார். நின்ற இடத்தில் புத்தர் அசையாமல் நிற்கிறார். தந்தை வேறு வேலை இருந்தால் பார் என்கிறார்.  மாலையில் மகன் இன்னும் அதே இடத்தில் நிற்பதைக் கண்டதும் அச்சம் கொள்கிறார்.  உறங்கி விழித்தும் பையன்  அப்படியே  நின்றார். இன்னொரு  காலை. இன்னொரு  மாலை. நாலு நாட்களில் அப்பாவே வாழ்த்தி வழியனுப்ப வேண்டியிருந்தது.தன்னை வருத்திக் கொள்ள ஒருவர் எண்ணினால் அடுத்தவர் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. 

அன்று இரவில் ஆம்புலன்ஸில்  அவசரப் பிரிவில் சேர்வதாகிப் போனது. அவனுக்குத் தெரிந்த மருத்துவமெல்லாம் வைத்தியம் கூடாது என்பது. வந்தாலும் நடந்து ஆஸ்பத்திரிக்கு போனால் நல்லது. சிகிச்சை முடிந்து பஸ் பிடித்து வீடு திரும்ப வேண்டும்.  மிக முக்கியம் எமர்ஜென்சி பிரிவுக்குள் நேராக நுழையாமல் இருப்பது. ஞாயிற்றுகிழமைகளில், விடுமுறை நாட்களில் என்றால் இதுகூட நிகழலாம்.இதற்கெல்லாம் மேல் இன்னொன்று இருக்கிறது. அது ஆம்புலன்ஸ் வைத்து உள்ளே செல்வது.

வந்ததும் ஊருக்குப் போகவேண்டியிருப்பதை செவிலியர்களிடம் சொல்லியிருக்கிறார். இரவெல்லாம் பேசியபடி இருந்திருக்கிறார்.

மறுநாள் அவன் சென்ற போது எமர்ஜென்சியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க ஊசி போட்டிருப்பதாக நர்ஸ் சொன்னார். அம்மா மழை ஓய்ந்தது போல் இருக்கிறது என்றார்.

மருத்துவமனையில் முதலாளியும், முக்கியமான மருத்துவரும் ஒருவரே. காலை அவர் வரும் நேரம் மொத்தமும் ஸ்தம்பிக்கும். அமெரிக்காவில் படித்தவர். அவசர சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். புலரியில் ICU ரவுண்ட்ஸ் வருவது வழக்கம்.  இருபுறமும் எட்டுப் படுக்கைகள். மையத்தில் வெற்றிடம்.  உதவி மருத்துவர்கள் கொடுக்கும் அறிக்கைகளை வாங்கிப் படிப்பார். நோயாளிகளை அருகில் சென்று பார்க்க அவசியமில்லை.கூடத்தில் இருந்தே எல்லோரையும் பார்க்கலாம். 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவு கீழ் தளத்தில் இயங்கியது. படியிறங்கி செல்வது இருளைக் கிழித்துச் போவது  போல் தோன்றும். 

காலை ரவுண்ட்ஸுக்கு டாக்டர் அழைத்திருந்தார். கீழே இறங்கியதும் சில்லென்று குளிர் மயிர்களைத் எழுப்பி நிறுத்தியது. மைக் பிடித்துப் பேசும் மேடை போன்ற இடத்தில் டாக்டர்  நின்றிருந்தார். வலது புறம் டாக்டர்களும், அவர்களுக்குப் பின் செவிலியர்களும் நின்றிருந்தனர். தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உறவினர்கள் இடப்பக்கம் இருந்தனர். அப்போது எல்லாமும் வெளிப்படையாக வெளிச்சத்தில் இருந்தது.

ஏன் இப்படி எல்லோர் நோயின் நிலைமையும் அனைவரும் கேட்கச் சொல்ல வேண்டும். அறையில் வைத்து தனியே அழைத்துச் சொன்னால் போதாதா? அவனுக்குக் கேட்கக் கூச்சமாக இருந்தது.

'அழகப்பன் ரிலேஷன் யாரு'

ஒரு அம்மாவும் அப்பாவும் முன்னே வந்தார்கள். பெரியவர் வெள்ளை வேட்டி கட்டியிருந்தார். அவர்களுக்கு சிகிச்சைக்கு பணம்  கொடுப்பது கடினமாக இருக்க வேண்டும்.டாக்டர் கண் பார்வையில் நோயாளி  யாரென்று தெரிந்தது. அப்பாவின் அடுத்த அறை. பார்க்க கோளாறு எதுவும் தெரியவில்லை. ரத்த அழுத்தம் ஏறி இறங்குவதை திரை காண்பித்தது. கோடுகள் வரைபடங்களானது. சிறு குன்றென விழுந்து, மறுநொடி மலையென எழுந்தது. பின்னர் நதியென அமைதி கொண்டது. அடுத்து எழுந்து ஆர்ப்பரித்தது. பையனின் கண்கள் மூடி இருந்தன. ஒடுங்கிப் போயிருக்கும் அந்த உடலுக்குள் நடப்பது ஆச்சரியமாய் இருந்தது. இல்லை, இவையெல்லாம் ஏதோ கணக்குகள் மட்டும்தானா?

'பையன் கண்டிஷன் அப்படியே தான் இருக்கு. இம்ப்ரூவ்மென்ட் தெரியல...உறுதியா ஒன்னும் சொல்ல முடியாது. ட்ரீட்மென்ட் நல்லாக் கொடுக்குறோம்...கன்டின்யூ பண்ணிப் பாப்போம்'. என்ன ஆனது என்பதை அறிய ஆவல் எழுந்தது. தலையில் அடி விழுந்திருக்குமோ என நினைத்தான். அவர்களுக்கு கேட்க கேள்விகள் இருக்கவில்லை. முகம் இறுக்கமாகி ஆண்  வெளியேறினார். தாய் தலை குனிந்து இடத்திலேயே நின்றார். டாக்டரின் மேல்சட்டையில் இருந்த பெயர் அட்டையைக்  கவனித்தான். இந்துப் பெயரும், கிறித்தவப் பெயரும் பாதி பாதி இருந்தது. அன்பை அறிய அவருக்கு இரண்டு வழிகள் பிறப்பிலேயே இருந்தன. ஆனால் பத்து நாட்களில் அவர் நம்பிக்கை தொனிக்கும் ஒரு சொல் சொல்லியதில்லை. அப்படி நேர்கையில் நம்பிக்கையின் வாசலிலேயே நின்று கொள்வார். உள்ளே நுழைந்ததே இல்லை. அவர் அணிந்திருந்த கருப்புக் கோட், யானைத் தோல் போலத் தோன்றியது. கருமை எனும் யானை வயிற்றின் இருள் கிழித்து வெளி வந்த சிவன். நாளும் இருளைத்தான் கிழித்தபடி இருக்கிறார். இருளைப் பார்த்த கண்கள் வெளிச்சத்தில் கூசுவது போன்று பழக்கபடாதது அவர் அன்பு.

'கங்காதரன் ரிலேசன் யாரு?'

அவனுடைய அழைப்பு. சற்று முன்னால் சென்றான். கூண்டில் ஏறுவதைப் போல உணர்ந்தான். அடங்காமல் சண்டை போட எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

அப்பா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார். இவனுக்கும் தூக்கமில்லாதது நினைவில் வந்தது. அறையின் குளிர் பழகிப்போய் தூக்கம் வந்தது.

'பேஷன்டுக்கு உடம்புல கார்பன் டை ஆக்சைடு நிறய தேங்கிருக்கு...அவரால வெளியேத்த முடியல. ஹிஸ்டரில சி எச் எஃப் ட்ரீட்மெண்ட்ல இருக்காரு...பிளட் பிரஷர் ஜாஸ்தியா இருக்கு...பில்ட் அப் அதிகமானா சிரமம்...விட்டா மூளைய பாதிக்கலாம்...ரெண்டு நாள் வெண்டிலேட்டர் பிரிஸ்கிரைப் பண்றேன்...செலவாகும்.. உங்களுக்குப் பரவாயில்லயா?'

தலையை மட்டும் ஆட்டினான். அவனால் எப்போதும் வேறு ஒன்றும் செய்ய முடியாது. 

'ஒரு நாளைக்கு இருபதாயிரம் பக்கம் சார்ஜஸ் ஆகும்...ரெண்டு மணி நேரம் டைம் எடுத்துட்டு பார்ம் நிரப்பிக் கொடுங்க...வி வில் மானிட்டர் பர்தர்.'

வென்டிலேட்டர் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றியது. சுற்றி இருந்த மனிதர்களைப் பார்த்துத் தயங்கினான். ஏனோ முன்னே தெரியாத அம்மனிதர்கள், நர்சுகள் அகந்தையின் குறுக்கே வந்தனர்.கேள்வியை அடக்கி விட்டான். பின்னர் ஆக்சிஜன் மாஸ்க் போல ஏதோ ஒன்றாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டான்.  வண்ணங்கள் ஏழு. ஏழா? இல்லை ஒரு நிறம் தான் எல்லாம். வெள்ளை. தூய ஒளி வெள்ளை. நிறம் கலப்பது பார்வையில் அல்லவா.. கேட்டறிதல் என்பதும் என்ன? மற்றவர் புலனறிதல் மட்டுமே. அறிதலில்  இருந்து அறியாமை. பின் மீண்டும் அதில் இருந்து இன்னோர் புதிய அறிதல். கரையில்லாத, ஓயாத, அறிதலும் அறியாமையும். உறித்து  முடிவில் தொடக்கமற்ற அந்த மாபெரும் அறியாமையை அடையலாம். கேள்வி கேட்டு என்ன ஆகிவிடப் போகிறது? அவர் வித்தை நமக்கு எதற்கு?

இமைகள் தானாக மூடின. தூங்கக் கூடாது. இல்லை, முடியாது. வெளியில் இறங்கி பைபாஸ் ரோட்டில் டீக்கடை தேடினான். மருந்துக் கடைகளும், துணிக்கடைகளும், சிறிய பெட்டிக்கடைகளுமாய் இருந்தன. வாங்கி வைத்த தேநீர் ஆடை கட்டியிருந்தது. டம்ளரின் விளிம்பில் ஈ ஒன்று அமர்ந்தது. இரண்டு கால்கள் குளம்பில் சிக்கி , உள்ளே விழும் நிலையில், சுவற்றைப் பிடித்து எழுந்து பறந்தது. உத்வேகம் எழ டீயை ஒரே மடக்கில் உறிஞ்சினான்.

செவிலிப் பெண் மீண்டும் வந்து அழைத்தாள். 'சார், வெண்டிலேட்டர் டிசைட் பண்ணிட்டீங்களா...டாக்டர் கேக்கறார்'.

படிவங்களில் கையெழுத்திட்டான். இரண்டொரு வரி படித்தான். உறுதிமொழி, சாத்தியமான பாதிப்புகள். படித்தால் இன்னும் சஞ்சலம். கையில் கொடுத்து விட்டான்.

முதுகு சாய்த்து அப்பாவை படுக்க வைத்திருந்தார்கள். குட்டி யானையின் துதிக்கை போல் வாயில் ஒரு குழாய் வெளியே வந்திருந்தது. மூக்கிலும் இரு குழாய்கள் சென்றிருந்தன. குழாய் மேடை போல் நின்ற ஒரு தள்ளு பலகையில் அவை இணைந்தன. ராமச்சந்திரனுக்கு முதலில் பார்த்ததும் தொண்டை கரகரத்து, தும்மல் வரும் போல இருந்தது.  திரையில் புது எண்கள் தோன்றி மறைந்துகொண்டே இருந்தன. எண்களின் வண்ணங்களுக்கு பொருள் உண்டு. சிவப்பான எண்கள் சத்தமிட்டன. பதறி மீண்டும் தானாய் நிதானமடைந்தன.  குன்றுகள் போலும் வரைபடங்கள். திரையின் விளிம்பில் தோன்றின. நடுவில் காடுகள் உதித்து , சிகரமென உயர்ந்தன. மறுவிளிம்பில் கருந்துளை ஒன்றில் விழுந்து இல்லாமல் ஆயின. மூச்சையும், காற்றையும் இடைவிடாமல் அளவிட்டன.

அப்பா கண்மூடியே இருந்தார். நெற்றியில் இன்னும் திருநீறு வைக்கப்பட்டே இருந்தது. மந்திரமாவது  பதிகம் பாடி கூன் பாண்டியன் சூலை நோய் தீர்த்த ஊர் இது. ஒரு முறை வந்து பார்த்த அம்மாவுக்கு விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. ஊசிகளால் துளைக்கப்பட்ட கைகளை ஒருமுறை பற்றி வெளியேறினார். பின்னர் வீடு திரும்பும் வரை மீண்டும் அங்கு வரவில்லை.

வெண்டிலேட்டர் பற்றி தேடித் தெரிந்து கொண்டது அவனை இன்னும் கவலை கொள்ளச் செய்தது. கொஞ்சம் விசாரித்திருக்கலாம் என நினைத்தான். அறிதல் அவனுக்கு எப்போதும் இன்பம். அன்று  கால்பந்தை உயரமாக உதைப்பதை ஒரு சிறுவனிடம் கற்றான். ஆனால் இந்த உள நெருக்கடியில் கற்றல் சோர்வாக இருந்தது.

அப்பா மறுநாள் கண் விழித்து விட்டார். வயர்களையும், குழாய்களையும் கண்டதும் அவனை ஜாடையில் திட்டினார். கை ஓங்கி அடிக்க முற்பட்டார். மறுமுறை செல்கையில் இரு கைகளையும் கட்டிலின் கம்பியில் துணி வைத்துக் கட்டி விட்டார்கள். இப்போது இன்னும் வசை தேடி, சொல் வெளியேறாமல்  கண்கள் சிவந்தன. வாய் பிளாஸ்டர் இடப்பட்டு குறுக்கே ஒட்டப் பட்டிருந்தது. அவர் தலையைத் தடவினான். நீவிக் கொண்டே இருக்கையில் அமைதியானார். 'ஒரு நாள் பொறுத்துக்கோ, நாளைக்குக் கழத்திருவோம்' என்றதும் தலையை அசைத்தார்.

தினமும் டாக்டர் ரவுண்ட்ஸ் வரும் தாழ்வாரத்தில் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டியிருந்தது. அந்த சில நிமிடங்களை வெறுத்தான்.அன்று பக்கத்து அறை பையன் இருக்கவில்லை என்பதை கவனித்தான். உயிர் பிரிந்துவிட்டது. வேனில் பிளாஸ்திரி கட்டி உடலை எடுத்துச் சென்றார்கள் என்று செக்யூரிட்டி சொன்னார். வெளில வந்துருங்க தம்பி, யார் போனாலும் உள்ள தூக்கி குழாய மாட்டி  வச்சுருவாப்ல' என்றார்.

அவன் நம்பிக்கை கொண்டு நின்றிருக்கும் போது, டாக்டர் அதைக் குலைக்கும் வகையில் தான் பேசினார். வெளிப் பார்வைக்கு அப்பா தேறி வருகிறார் என்று பட்டது. டாக்டர் நிலைமை கீழிறங்குவதாகத் தான் சொன்னார். ' அவருக்கு மல்டி ஆர்கன் பிராப்ளம்ஸ் இருக்கு...co2 பில்ட் அப் இன்னும் கோட்டுக்குள்ள வரல...அவரா ப்ரீத் பண்ற வரைக்கும் எதுவும் சொல்ல முடியாது...' . எப்போதும் மரண விளிம்பில் தான் பேச்சை முடிப்பார்.

அவருடைய பெங்களூர் மருத்துவரை அணுகி இவரிடம் பேச வைத்தான். 'டாக்டர்.சக்ரபாணி மல்டி டிசிப்ளினரி பேனல் ஆப் டாக்டர்ஸ் ஆர் அட்டென்டிங் டு ஹிம்...நார்மலைஸ் பண்ண கடுமையா முயற்சி பண்றோம்' . 

அவர் பலமுறை கேட்ட ஒரே கேள்வி நோயாளி  உள்ளே வரும்போது நினைவில் இருந்தாரா? அப்படியானால் எதற்கு செயற்கை சுவாசம் என்பதே. இவரிடம் நேர் பதில் இல்லை. அழைப்பு முடிந்ததும்  'பார்க்கலாம், ' என்று மட்டும் சொன்னார்.

ராமச்சந்திரன் சண்டைக்கு நிற்பது டாக்டருக்கு தெரிந்தது. அப்பா போகும்போதெல்லாம் விழித்தே இருந்தார். சொல்லில்லாமல் திட்டுவது புரிந்தது. தலையாட்டி , விழி சுருக்கி இறைஞ்சுவது போல் ஜாடை பண்ணினார். விடுவிக்கும் சூட்சுமம் அவனிடம் இருப்பதாகவே எண்ணினார்.

வெண்டிலேட்டர் மாட்டியிருந்தாலும், அணைத்துவிட்டு சுவாசத்தைப் பரிசீலிக்க வேண்டும். அதற்கு நான்கைந்து படி நிலைகள். அப்பா  முதல் படியில் இருக்கிறார் என்றனர். அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. இப்போது வலது கை மட்டும் கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் பழக்கமாயிருந்தது. சுவாசம் என்பதும் சொகுசும், பழக்கமும் தானா. சுவாசிக்காமல் இருப்பது சுகமாக இருக்குமா? 

அப்படித்தான் சொன்னார்கள். வெண்டிலேட்டர் பழகிவிட்டால் எடுப்பது கடினம். 

ஒரு வாரம் சென்று விட்டது. அப்பா சுவாசப் படிகளில் ஏறி இறங்கி விளையாட்டுக் காட்டியபடி இருந்தார்.

அன்று கழுத்தில் துளையிட்டு, குழாயை வாயிலிருந்து மாற்ற வேண்டும் என்றார்கள். வாயும், தொண்டையும்  பாதித்திருக்கிறது. சுவாசத்தில் முன்னேற்றமில்லை. எனவே காற்றுக்குழாயை நேராகப்  பிடித்து வெளி சுவாசத்தை இணைக்க வேண்டும். பிழைத்தால் கடுமையாகத் திட்டுவார் என்று நினைத்தான்.

டிரக்கியோஸ்டமி வேண்டாம் என்று மறுத்து விட்டான்.  வீட்டுக்குக் கொண்டு செல்லச் சொல்லிவிட்டார்கள். வெண்டிலேட்டர் நிறுத்தி விட்டால் வழியில் இறப்பார் என்றார்கள். ஆம்புலன்ஸ் வரை மட்டும் தங்கள் பொறுப்பு என்றனர்.

ஆம்புலன்ஸில் போக அவனுக்குத் துணிவிருக்கவில்லை. 

ஆனால் அப்பா வீட்டிற்கு நல்லபடியாகவே வந்து சேர்ந்தார். 

பேசவும் ஆரம்பித்து விட்டார். இதுவும் அறிதலில் இருந்து அறியாத ஒன்றை அறிவது தான் என்று எண்ணினான்.

அப்பா அவனை அருகில் அழைத்தார். நிச்சயம் திட்டத்தான் அழைக்கிறார் என்று நினைத்தான்.

'ஏண்டா, ஒரு நாளா பசிக்கவே இல்ல, சாப்பிடவும் இல்ல...மாயமா இருக்கே'

'மூக்குல ஜூசு ஊத்தினேன் பாக்கலயா' என்றான்.

'அதெப்படி, மூக்குல சாப்பாடு'' என்றார்.

'உனக்கு ஒரு வாரமா வாயில வெண்டிலேட்டர் டியூப் இருந்தது'

'ஆமா போன ஒரு வாரம் நான் எங்க இருந்தேன்..நினைப்பே இல்லயே ?' 

அவர் துன்பத்தை அல்லவா அவன் சுமந்து அலைந்தான்.

அறிதலுக்கு என்று வேறொரு மெயின் சுவிட்ச் இருக்கிறது என்று அவனுக்குப் பட்டது. 

தனக்கும் அந்த சுவிட்சை யாராவது கொஞ்சம் அணைத்தால் பரவாயில்லை போல் தோன்றியது. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2