Translate

பாதாளக் காற்று ...

பாதாளக் காற்று ....

------------------------





கோடை போய் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. ஊரின் ஒதுக்குப் புறம், காற்றைத் தடுக்க யாரும் இல்லை. மரங்களையும், செடிகளையும் சன்னமாய் ஆட்டிவிட்டுச் செல்கிறது. மீண்டும் திரும்பி வந்து மற்றுமொருமுறை. 

யூக்கலிப்டஸ் மரம் யானையென தலையையும் காதையும் சரித்து ஆட்டியபடி இருக்கிறது. அதன் பக்கக் கிளையில் புல்புல் அமர்ந்து அலகை உரசித் தீட்டுகிறது. அதன் சிறகுகள் மெலிதாய் காற்றில் அசைகின்றன. 

வெள்ளை வண்ணத்துப் பூச்சி படபடத்துப் பறந்து கடுக்கன் பூவில் அமர்கிறது. மலர் நுகர்கையில் அதன் சிறகுகள் அதிர்கின்றன. ரெட்டை வால் குருவி சுற்றுச் சுவரில் உட்காருகிறது. வாலில் தெரியும் இரண்டு கரு மீன்கள் காற்றில் அளைகின்றன. 

புல்லின் தோடும், மடலும் லேசாக ஆடுகின்றன. ஒரு சிற்றெறும்பு காற்றில் திசை மாறிப் பின் வழி செல்கிறது. 

பூக்களை உதிர்த்து இலை மட்டும் கொண்டுள்ள வசந்த மரத்தின் ஒரு இலை நிலத்தில் உதிர்கிறது. காற்று அதை இன்னொரு சருகுடன் தள்ளிச் சேர்க்கிறது. பின்னர் அவை கூட்டமாய் பிளாஸ்டிக் பை கசக்கும் ஒலியுடன் , பேச்சும், சிரிப்புமாய் கூடிப் பிரிகின்றன.

தையல் குருவி காற்றில் அசையும் செம்பருத்தியின் காலைப் பற்றி அமர்ந்து , அதன் கழுத்தில் துளையிட்டு மது உறிஞ்சிப் பறக்கிறது. பின்னரும் செம்பருத்தி காற்றில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. கருங்குருவி காற்றில் பறக்கும் பூச்சியைக் காற்றிலேயே கொத்திப் பற்றி நிலத்தில் புரட்டி உண்கிறது.

என் சட்டை நுனி காற்றில் படபடக்கிறது. டம்ளருக்குள் காப்பி படபடக்கிறது. மூச்சின் நுனியில் மீசை மயிர் அசைகிறது. மயிர்க்கால்கள் ஆடுவதைப் பார்க்கிறேன். நானும் ஒரு கணம் மரமென உணர்கிறேன்.   

மரங்கள் விண்ணில் இருந்து முளைத்தவை. ஒவ்வொரு மரமும் உறைந்த சூரியன். 

அணுக்கள் இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கின்றன. பிரிந்தும், சேர்ந்தும், விசை கூட்டியும், குறைத்தும். விசையின் அளவே காற்றும் தீயும்.

காற்று என்பது மிக மெல்லிய தீ.  

இங்கிருக்கும் எல்லாம் விண்ணும் ஒளியும் தான், அல்லவா. 
ஆம். விண்ணில் முளைத்தவை.

ஓய்வாய் இன்னும் சிறிது நடந்தேன்.

பாதாளக் சாக்கடை  ஒன்றில் கால் மிதித்து அதன் வாயிலில் நின்றேன். சூடான காற்று காலில் பட்டு மேலேறியது. 
நன்றாய் உள்ளே கவனித்தேன்.
சிறைக் கம்பியை முட்டி பாதாளத்தில் ஒரு செடி காற்றில் தலையசைத்தது. 


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2