ஒரு யாசித்தல்
ஒரு யாசித்தல்
------------------
------------------
என்னுடைய நடைபாதையில் எனக்கு அது முக்கியமான இடம். நான் இருக்கும் இந்தச் சாலை பத்து வருடப் பழக்கம். சாலையே இல்லாமல் இருந்த காலம் தொட்டு, இப்போது இரண்டு வழிச் சாலை வரை. வழியில் ஒரே ஒரு டீக்கடை. ஐயங்கார் பேக்கரி. நானே பார்த்து எத்தனையோ கை மாறியிருக்கிறது. இப்போது எதிரில் ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது. கிழக்கே இருக்கும் கடையைப் பார்த்து முப்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. கடைக்குப் பின்னால் ஓடும் சாலையில் இறங்கினால் கோபசந்திரா கிராமம். சுரைக்காய் , திராட்சைத் தோட்டங்கள் பார்க்கலாம். அதுவே எனது வழிப்பாதை.
நான் இங்கே போகும் மாலை வேளைகளில் , எதிர் நிற்கும் புளிய மரத்தின் பின்னால் முழு வானமும் தெரியும். இதைத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தொடுவானம் வரை விண்முட்டும் கட்டிடங்கள் எதுவும் சூரியனுக்குக் குறுக்கே வராது. எல்லாம் தாண்டி பொன்னொளி புளியமரத்தில் விழும். இலைகள் நுனிகளில் தளிர் ஒளி கொள்ளும்.
நாளில் ஓரிரு முறையேனும் இங்கு வந்து போவது என் வாடிக்கை. தலை பின்னிக் கொண்டை முடிந்த பையன் பல வருடங்களாக டீ மாஸ்டராக இருக்கிறான். நான் லெமன் டீ கேட்டவுடன் கொடுத்தால், மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பொருள். பெரும்பாலும் ஹத்து நிமிஷா ஆகுத்தே என்பான். இல்லை என்று அர்த்தம்.
இந்தப் பகுதிகளில் கிரிக்கெட் மைதானங்கள் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். புல் தரை மேயப்பட்டது. இரவு விளக்குகள் உண்டு. வார இறுதிகளில் கூட்டமாக விளையாடிவிட்டு இளைஞர்கள் இந்தக் கடையில் தான் இளைப்பாறுவார்கள்.
இன்று நம் குண்டு டீ மாஸ்டர் பையனுக்கு வேலை கெடுபிடியாகி விட்டது. சிலர் சக்கரையில்லாமல் கேட்டனர். சிலருக்கு சக்கரை அதிகம். காப்பி, டீ க்கு நடுவில் பழங்களைத் தோல் உரித்து ஜூஸ் போட வேண்டியிருத்தது. பால் பாக்கெட்டை வெட்டி மில்க் ஷேக்குகள் ஆக்கினான். பாலைப் பிரித்து கொதிக்கும் பால் போகினியில் தளும்பும் வரை ஊற்றினான். வால் பாத்திரத்தை வைத்து பாலை டீயென, காப்பியென மாற்றினான்.
கிரிக்கெட் விளையாடிக் களைத்த பையன்கள் ஏக்கமான முகங்களுடன், தங்கள் கோப்பைக்காக காத்திருந்தனர். அத்தனை குத்திய கண்களும் அவன் கைகளைப் பார்த்தபடி இருந்தன. அந்தக் குறுகிய சமையலறையின் உள்ளிருந்து இரண்டு சுவர்களில் டம்ளர்களை நிரப்பிய படி இருந்தான். யாசித்த கைகள் அவற்றை எடுத்து முலைப் பாலென உறிஞ்சின.
யாராவது ஒருவர் டம்ளரை எடுத்துக் குடிக்க விலகியதும், அந்த வெள்ளைப் பெண் நாய் எதிர்பார்ப்பில் மெதுவாய் ஓடி அவர் அருகில் வந்தது. அதன் குட்டிகள் போட்டு அப்போது ஒட்டிய வயிறு உள்ளேயும் வெளியேயும் போய் வந்தது. வற்றி உலர்ந்த பால் மடி அலை போல் அசைந்தது. அருகில் போய் ஓரிருமுறை வாலை ஆட்டி அண்ணாந்து பார்த்தது. அவருடன் ஓரிரு அடிகள் எடுத்து வைத்தது. ஒன்றும் ஆகாது என்று தெரிந்ததும் அடுத்து டம்ளரை எடுப்பவரிடம் ஓடியது.
நான் நின்ற அரைமணியும் ஆர்வம் குன்றாமல் கண்களில் நம்பிக்கையுடன் யாசித்தது.
கடைசியில் ஒருவர் ஒரு பன் வாங்கி அதன் எதிரில் போட்டார். அதுவும் ஒரு அன்னையின் பால் மடி என்றே தோன்றியது.
இன்றும் நேற்றைப் போல் பகல் புழுங்கி மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. விண்ணின் துளிகள் இறங்கி வந்தன. மண் உதடு கூப்பிக் குடிக்க ஆரம்பித்தது.

Comments
Post a Comment