உள்ளிருக்கும் காடு
உள்ளிருக்கும் காடு
------------------------
ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க் கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன்.
எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன்.
ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார். நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை அசைக்காமல் பார்த்த வண்ணம் நின்றது. நிறுத்திய வண்டிதான் நகர வேண்டியிருந்தது.
மலை மேல் வண்டி ஓட்டுவது எனக்கு பெரிய கிலி. ஆனால் வேண்டியும் இருக்கிறது. சென்றமுறை முள்ளியங்கிரி ஜீப் பயணத்தில் மனம் மரண விளிம்பில் இருந்தது நினைவில் வருகிறது.
எதிரில் எப்போது வண்டி வருமோ என்ற எண்ணமே என்னுள் இருந்தது. மனிதன் மலையைச் சுற்றி உளியால் செதுக்கிய பாதை. மலைக்கு அது சிறு மடிப்பு. பெரிய துணியின் சிறு கசங்கல். அதன் தோல் சுருக்கம். எறும்பென அந்தப் பேருந்து அதில் சுற்றிக் கொண்டிருந்தது. ஒற்றைக் கையுடன் டிரைவர். அந்தக் கால கியர் பாக்ஸ் வண்டி. பழைய வண்டிக்கும் இறுதியில் கான் புகுதல் இருக்கிறது.
இப்போது இன்னொரு வயதான எறும்பு எதிரில் வந்து விட்டது. தெய்வாதீனம் என்பது இதுதான். எதை நம்பி இந்த டிரைவர் தினமும் போகிறார். சரியாக கொஞ்சம் பின்னால் மலையில் தாயின் இடுப்பு மடிப்பு ஒன்று இருந்தது. ஒரு வண்டி கீழே இறங்கி, மற்றொன்று இடுப்பில் ஏறியது.
ஒரு யானை கருங்கல்லென பச்சைப் புதருள் நின்றது. கண்கள் ஒளிகொண்டன. பாறை அசையவே இல்லை. வண்டி நகன்றது. பேருந்தின் ஜன்னல் கம்பியில் ஒரு அட்டை உடல் தூக்கி நெம்பி சிறு வில்லென நெளிந்தது.
இன்னொரு நாள் மைசூர் கடந்து மசினகுடி காட்டின் உலாவைப் பார்த்தேன். வேறொரு காணொளி. இப்போது NAT GEO , டிஸ்கவரிகளுக்கு க்கு இணையான காட்சித் தரத்தில், பக்கத்திலுள்ள காடுகள் பார்க்கக் கிடைக்கின்றன. தரமான ஒளிப்பதிவாளர்கள் காட்டைப் பார்த்துப் பதிவு செய்திருக்கிறார்கள். பறவையைக் காட்ட அதன் பெயர் தானாக திரையில் விழுகிறது. மரங்களையும் செயற்கை நுண் செயலிகள் கண்டுபிடிக்கின்றன. மீண்டும் மீண்டும் யானைக் கூட்டங்களையும், காட்டெருமைக் கன்றுகளையும், காட்டு நாய்களையும் பார்த்தபடி இருந்தேன். மைனாவின், கிளிகளின் ஒளி துல்லியமாய்க் கேட்டது. சில்வண்டின் காதைக் குத்தும் ஒலிக்கு நடுவில் வண்டி போய்க்கொண்டிருந்தது. இரண்டு மயில்கள் நடுச் சாலையில் நின்று வழிவிட மறுத்தன. கரையான் அரித்துக் கொண்டிருந்த மரப்பொந்தில் இரண்டு கோட்ட்டான்கள் உட்கார்ந்திருந்தன. மரத்தில் எறும்பு ஊறுவது தெரிந்தது. நான் இருக்கிறேன் என்ற இடைவிடாத பறவை ஒலிகள். திடீரென மழை பிடித்தது. விண்ணில் இருந்து இறங்கிய ஒவ்வொரு துளியையும் மண் குழந்தையென வாய் கூப்பிப் பருகியது.
ஆனால் மனதும் இப்படி அன்றாடத்தை காடெனப் பெருக்கி எடுக்கிறது. நகரில் வருவதும் போவதும் பெரிய செயலாகிப் போகிறது. அடுத்ததையும் அதற்கு அடுத்ததையும் பெருக்கியபடி இருக்கிறது. மற்றவர் உள்ளிருக்கும் காடும் நமக்குள் இறங்குகிறது. வெளிவராத முடியாத, வேறு எதற்கும் மனம் கொடுக்காத கீழே இறங்காத சவாரியாக முடிகிறது.
குடகில் கண்ட மிகச்சிறிய கருப்பு நத்தை நினைவில் எழுந்தது. காப்பிச் செடிகளின் சூழ நாற்காலியில் மழையின் நடுவே அது பத்து சதுர அடியைக் கடப்பதை பல நிமிடம் பார்த்தபடி இருந்தது நினைவில் வந்தது. துபாரே யானை முகாம், துதிக்கையின் கனம், மேப் இல்லாமல் வழி தவறியது என எல்லாமும் கண்முன் வந்தது.
மடிக்கேரி மலைமேல் இருக்கும் ஊர். வெள்ளையும் பழுப்பும் சாம்பலுமாய் வீடுகள் சிறு செங்கல்கள் போல் முகட்டில் இருந்து தோன்றின. நீர்வழிய வசதியாக மேலே ஆமை ஓடுகள் என கூரைகள். வீடுகளை மீறிய மரங்கள். நகரின் மத்தியில் மடிக்கேரிக் கோட்டை. உள்ளே கரையான் பற்றிய மண்ணேறிய கைவிடப்பட்ட அம்பாசடர் கார் இருந்தது. வெளியில் விநாயகர் கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான கோட்டைகளும் இந்த அம்பாசடர் நிலையில் தான் இருக்கின்றன. ஆனால் இதை இந்திய தொல்லியல் துறை நன்றாகவே பராமரிக்கிறது. இதில் கடைசியில் வாழ்ந்த சிக்க வீர ராஜேந்திரனையும், லண்டன் சென்று ஆங்கிலேயரை மணந்து பெயர் மாற்றிக்கொண்ட விக்டோரியா கௌரம்மா புகைப் படங்களை அரண்மனையில் பார்த்தேன்.
குடகைப் பற்றிய மாஸ்தி எழுதிய சிக்கவீர ராஜேந்திரன் நாவலைப் படித்தேன். நேரில் பார்த்த மடிக்கேரே கோட்டையை, ஓம்கார நாதனின் கோவிலையும் புத்தகத்தின் வழியே நினைவில் மீட்டினேன். காலத்தில் பின்னே சென்று இதைச் சரடில் இணைக்கும் நாயக்கர் கால வரலாறையும், ஹலேரி மன்னர் வரிசைத் தொடக்கத்தையும் படித்தேன். ஹைதரும், திப்புவும் அதில் வந்து இணைந்தார்கள். தொட்ட வீர ராஜேந்திரனும், சிக்க வீர ராஜேந்திரனும் பின்னர் அதே சங்கிலியில் வேறொரு இடத்தில் கண்ணிகளாய் இணைந்தார்கள். இறுதியில் ஏதோ ஒரு ஆங்கிலேய ரெஸிடென்டும், சதி செய்ய மைத்துனரோ, மாமனாரோ என்று இன்று வரை இருக்கும் மனிதச் சங்கிலி அது.
வரலாறு என்பதும் மனிதர்களால் வரையப்படும் காடு. தள்ளி நின்று பார்க்கும் ஓவியம் அல்ல, அருகில் நின்றால் தெரிவது. வரலாறு தனி விருப்பு வெறுப்புகளின் வழியே திரண்டு வருவது. காட்டைப் போலவே கட்டற்றது. மாஸ்தி போன்ற பெரிய எழுத்தாளர் எழுத்தில் வரைந்து காட்டும் சித்திரமும் அதுவே. அதில் சிக்க வீர ராஜேந்திரனின் தலைக்குள் இருந்தது, விரிந்தபடியே செல்லும் உக்கிரமான காடு மட்டுமே.


Comments
Post a Comment