தத்துவமாதல்
தத்துவமாதல்
-------------------------------
அப்பா, நாளைக்கு காலேல நாலே முக்காலுக்கு அங்க இருக்கனும். அவன் அம்மா தூங்கிவிட்டிருந்தாள்.
மாடிப்படியில் இருந்து இறங்கியபடி சொன்னான். படித்துக் கொண்டிருந்த அக்காவின் பேனா நோட்டில் ப்ரேக் போட்டு நின்றது. 'எத்தனை தடவை, சொன்னதேயே சொல்லுவடா ..டயரிங் ஸ்ரீ'. சொல்லியபின் பேனா திரும்பப் பாதையில் பயணித்தது. அவனை ஊன்றிப் பார்த்தேன். அப்போது இரவு பதினோரு மணி. காலையில் செல்வதற்கு அரை மணி. கிளம்ப அரை மணி. மொத்தத்தில் தூங்கி எழுவதற்கு மூணே முக்காலைக் குறி வைக்க வேண்டும்.
அவனுக்கு இப்போதைய ஆசை கால்பந்து வீரனாக வேண்டும் என்பது . கனவு காணும் வயது. அவனே தேடிப் பிடித்த பைச்சுங் பூட்டியாவின் பயிற்சி நிறுவனத்தில் அவனைச் சோதிப்பதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது ஆடும் இடத்தில் அவனுக்குத் திருப்தி இல்லை.
நம்ம விட திறமையானவங்களோட விளையாடனும்பா..நம்ம கத்துக்கமுடியும்...கோச் சொன்னாரு
குடியிருப்பில் சுற்றி வரும் நடைபாதையில் தனியே இரவில் பயிற்சி செய்வான். அவனே உதைத்து, திரும்பி எடுத்து வந்து உதைக்க வேண்டும். வீட்டிற்குள் கால் நடுவில் பந்து உருண்ட வண்ணம் இருக்கும். மாடிப் படியின் கீழ் அவனுக்கு காத்திருப்பதாகப் படும். அதன் மேல் பல வித்தைகள் செய்வான். விழாமல் அதன் தலையில் ஏறியும் இறங்கியும் சவாரி செய்வான்.. பின்னால் இருந்து காலால் முன்னால் தூக்குவான். எடையைக் குறைக்கணும் என்பான். எண்டூரன்ஸ் பத்தல என்பான். அதைப் பற்றியே முழு நேரமும் மனதில் எண்ண ஓட்டம் இல்லாமல், இவ்வளவு முடியாது. அவன் உடலும் உள்ளமும் பந்துதான்.
எனக்கும் இந்த வயதில் விளையாட்டில் மோகம் இருந்தது. ராபின் சிங் எனக்கு பிடித்தமான கிரிக்கெட்டர். இளவயதில் என் ஆதர்சம். அவராகவே ஆகி விடலாம் என்றே நம்பினேன். அவருக்கு குறைந்தவனில்லை என்ற தெம்பு அன்று இருந்தது. அவரை இந்த வயதில் சிரத்தை எனும் சொல்லால் வரையறுத்துக் கொள்கிறேன். சிறந்த பீல்டர், மிலிட்டரி மீடியம் பந்து வீச்சு, இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங். நூறுக்கு மேல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.
இப்படி எவரோ, கனவோ இவனுக்குள்ளும் இருக்கலாம்.
ஏ சி யின் காற்று சீராக மிக மெல்லிய தூறலென கண்ணிமைகளில் விழுந்தது. எப்படியோ அவைகளை மூழ்கடித்திருந்தது.
மறுநாள் காலையில் எழுப்பாமல் எழுந்து விட்டான். தன் மேல் நிறைய நம்பிக்கை. சோதனையில் கலந்து கொண்டால் போதும். ஜெயிப்பது அதுவாக நடந்து விடும்.
'டெய்லி கிளாஸ் காலேல அஞ்சு மணிக்கு...வாரம் மூணு நாள்...ஆறரைக்கு முடியும்...நேர அங்கருந்து ஸ்கூல் போறேன்...' தேர்வுக்கு முன்னரே அடுத்தகட்ட தயாரிப்பு தலைக்குள் இருந்தது.
'பாப்போம் பா..வந்து வேலைக்குப் போனும்'
'நல்ல ஸ்கூலுப்பா...மிஸ் பண்ணக் கூடாது...ஸ்டேட் டோர்னமென்ட்ஸ்...இண்டர் ஸ்டேட் ஆடலாம்'
இன்னும் விடிய நேரம் இருந்தது. ஓரிரண்டு மைனாக்கள் சத்தம் போட்டன. செம்போத்து குரலெடுத்துக் கத்தி நின்றது. விளையாட்டுப் பை எந்நேரமும் தயாராகவே இருக்கும். கதவோரம் கருப்பு நாய் போல் படுத்திருந்தது.
மைதானம் வைட்பீல்டில் இருக்கிறது. நான் பிழைப்பிற்கு வந்த ஊர். அவனுக்கு இது வேர் விடும் ஊர்.
மைதானத்தை அடைந்த நேரம் யாரும் இருக்கவில்லை. ஒரே கார் நின்றது. ஐந்தடிக்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்தது.
மைதானத்தின் ஆறு கம்ப விளக்குகள் தூய வெள்ளை வெளிச்சத்தைத் தரையில் கொட்டிக் கொண்டிருத்தன. கூர்ந்து பார்க்கையில் ஒவ்வொரு விளக்கும் தனி அருவியாய்த் தோன்றியது. ஒளிக் கற்றைகள் அடர்த்தியாகி திடப்பொருள் என்றாகின. ஒளி விசை கொண்டிருந்தது. ஒளியின் அருவிகள் கலந்து மைதானத்தை தடாகமென மாற்றியிருந்தன. பச்சைப் புல் தடாகம். ஓரிருவர் அதில் மிதந்தபடி இருந்தனர். அவர்களின் உடல் விளிம்புகளில் வெள்ளை ஒளி ஒட்டி இருந்தது.
ஐந்து மணிக்கு மைதானம் களை கட்டியது. அப்பாக்கள் திண்டுகளில் அங்கங்கே உட்கார ஆரம்பித்தனர். யாருக்கும் யாரையும் தெரிய வேண்டியதில்லை. அவசியமும் இல்லை. பந்து விழுந்து பின் எம்பி எழும் ஓசையும், கால்களில் முட்டும் ஒலியும், பயிற்சியாளரின் விசில் சத்தமும் மட்டுமே கேட்டது.
பயிற்சியாளரை அணுகித் தேர்வுக்கு வந்திருப்பதைச் சொன்னேன். பெரிய மைதானத்தின் இன்னொரு பாதிப் பிரிவிற்குள் அனுப்பினார். பையன்கள் எல்லோரும் இவனை விடப் பெரியவர்களாகத் தெரிந்தார்கள். உறுதியான நீளக் கால்கள்.அரும்பு மீசைகள், குறுந்தாடிகள் சில இருந்தன. பயிற்சியாளர் பின் கை கட்டி வெள்ளைக் கோட்டிற்கு வெளியே நின்றிருந்தார். தெளிவான மலையாளி . வட கிழக்கு பயிற்சியாளர்கள் கண்ணில் படவில்லை. அவரும் இந்த நேரம் என்னைக் கணித்திருப்பார். 'லெட் ஹிம் பிளே சார்...வில் ஸ்பீக் டு யூ ஆப்டர் தி செஷன்.'
அவன் விளையாடுவதை நான் ஊன்றிப் பார்ப்பதில்லை. சொல்லப்போனால் சிறிதும் பதட்டம் கூட்டும் சினிமாவோ, செய்தியோ, எதையும் இப்போது பார்ப்பதில்லை. அடுத்தவர் பதைபதைப்பு அது. இது அப்படியில்லை. சிறியதேனும் இவன் சம்பந்தப் பட்டது. நடப்பது நடக்கட்டும். விளையாட்டு விளையாடுபவனுக்கானது. பார்ப்பவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு. எனக்குத் தேவையில்லை.
மைதானத்தை நடை சுற்றி வந்தேன். பெரிய பள்ளி வளாகம். சிறிய மாட்டுக்கொட்டில். பசுவும் கன்றும், எருமையும் கட்டியிருந்தன. சிதறிப் பரந்த வைக்கோல்கள் காற்றில் சிறிது இடம் மாறின. புதுச் சாணியின் தழை மணம் வந்தது. சில கோழிப் பெட்டிகள் இருந்தன. உள்ளிருந்த சேவல் , சில முறை சிறகடித்துப் பின், பெட்டிக்குள் இருப்பதை உணர்ந்து, உள்ளிருந்தே கொக்கரக்கோ கூவியது. கிழவனைப் போல் அதைப் பார்த்த வான்கோழி கொக் கொக் கொ கொ என்றது.
பின்னர் பள்ளியின் வெளியே இன்னொரு நீள நடை. பல வருடம் முன் என்னுடைய பழைய வேலை வழி. அப்போது மரங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அடுக்கு மனைகள் வந்து கொண்டிருக்கின்றன. நகருக்கு விரைவில் வயதாகிறதா, நமக்கு வயதாகிறதா தெரியவில்லை.
தொண்ணூறு நிமிடம் முடிந்திருந்தது.
விளையாட்டு முடிந்து, அப்பா, அம்மாக்கள் பையன்களின் விளையாட்டின் போக்கைப் பற்றி பயிற்சியாளரிடம் கதைத்தார்கள். பயிற்சியாளரும், பெற்றோரும் பிள்ளைகளை பேச்சில் விளையாட்டென்று உண்மையில் அழுத்தினார்கள். அடுத்த பெரிய வீரரின் பெற்றோர்களாய் இருக்கலாம். கிரிக்கெட் நிரம்பி வழிகிறது. இது அடுத்த கொள்கலமாக இருக்கலாம்.
பயிற்சியாளரை நோக்கி நடந்தேன்.
'எந்த டீம்ல இப்போ விளையாடறான்'
எனக்குத் தற்போதைய அணியின் பெயர் வாயிலும் மனதிலும் வரவில்லை. பழைய பெயருக்கும் அதே கதி. தோண்ட தோண்டத் தள்ளிப் போனது. விளையாடும் பள்ளி வளாகத்தின் பெயரைச் சொன்னேன். தடுமாறாமல் இருக்க கோட்டுக்கு வெளியே காலணியைக் கழற்றிக்கொண்டிருந்த அவனையும் துணைக்குக் கூப்பிட்டேன். நான் மேம்போக்காக இருப்பதை உணர்ந்து அவனிடம் பேசினார்.
எந்த டீம்ல விளையாடற?
டைனமிக் ஸ்போர்ட்ஸ்
என்ன லீக்ஸ் விளையாடிருக்க?
DPDL, ஸ்கூல் டீம்ல இருக்கேன்...லாஸ்ட் இயர் நாங்க தான் ஜெய்ச்சோம்..
பெரிய கிரவுண்ட்ல விளையாடிருக்கியா?
நோ சார்...ஹாஃப் க்ரௌண்ட் கேம்ஸ் ஒன்லி ..சிக்ஸ் பீப்பிள் டீம்
இன்னிக்கு என்ன கத்துக்கிட்ட.
ஸ்டாமினா முக்கியம்னு ..
அப்புறம்..?
.....
கார்னர் கொடி என்னும் கிரௌண்டின் மூலையைக் காட்டி, 'எத்தன தடவ அங்க போன...கடைசில ஸ்ட்ரெங்த் இருந்ததா' என்றார்.
என்னிடம் பேச ஆரம்பித்தார்.
சார், இவன் சின்ன கிரவுண்ட்ல விளையாடிருக்கான்...பெரிய கிரவுண்ட் பெரிய ஷிப்ட், தொண்ணூறு நிமிஷம்..இட்ஸ் எ டிஃபரண்ட் பால் கேம்...ஸ்டாமினா பத்தாது...திஸ் இஸ் எலைட் டீம்...ஸ்டேட் லெவல் போட்டிகள் இருக்கும்...
'இப்போதான் இவனுக்கு பதிமூணு வயசு ஆரம்பிக்குது ......அண்டர் 15ல ரெண்டு வருஷம் ஆடலாம்' நானும் அழுத்திப் பார்த்தேன்.
பின்னர் 'இன்னொரு பயிற்சியாளர் பார்க்கட்டும்'. இன்னொரு முறை ஞாயிற்றுக்கிழமை வருவதென்று முடிவானது.
காரில் அவன் முகம் தொங்கிப் போனது. 'யாருமே பால் பாஸ் பண்ண மாட்டேங்கரங்கப்பா...டீம் கேம் இல்ல...யாரையும் தெரியாம எப்படி ஆடறது...பந்த ஒருத்தனே வச்சிட்டா டீம் எப்படி ஜெயிக்கும்...'
முகத்தில் வியர்வை மெழுகி , அங்கங்கே துளிகள் நிறைய நின்றன. நடுவில் கண்ணீரும் கலந்தது. விளையாட்டை மதித்து வரவேற்று சேர்த்துக் கொள்வார்கள் என்ற நினைப்பு குலைந்திருக்கிறது. பெரிய தடிப் பையன்கள், பயிற்சியாளர் உள்ளளவில் பயமுறுத்தியிருக்கலாம்.
உனக்கு சண்டே இன்னொரு சான்ஸ் இருக்குப்பா..யு வில் டூ வெல்
காபிக்கு நிறுத்துகையில் எதுவும் வேண்டாம் என மறுத்தான். கடைசியில் கேக் ஒன்றை பார்சல் கேட்டான்.
இடையில் ஓர் நாள் இருந்தது. பகலெல்லாம் பேச்சே இல்லாமல் போனது.
ஞாயிற்றுக்கிழமை இதற்கு மேலும் கவலை வரலாம். சாப்பிடப் பிடிக்காது. எனவே நல்ல சாப்பாடு சமைக்கும் எண்ணம் இருந்தால் சனிக்கிழமை செய்து விடு என்றான்.
அக்காவை டிரைனிங் சென்டரில் விட அவனையும் கூட காரில் அழைத்தேன். திரும்பும் வழியிலும் அமைதி. தன் மேல் இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்தது. கண்ணில் இன்னும் கவலை.
ஏதாவது பேசி நெருப்பைப் பற்ற வைக்க முடியுமா பார்த்தேன்.
கார் இசைப்பெட்டி மின்சாரக் கண்ணா என்று பாடிக் கொண்டிருந்தது.
'மின்சாரக் கண்ணான்னா அர்த்தம் தெரியுமா'
கண்ணு தெரியும்..மின்சாரம்னா தெரியாது...என்னப்பா?
எலக்ட்ரிசிட்டி..இந்த இடத்தில லைட்ன்னு அர்த்தம்... கண்ணுக்குள்ள சின்ன லைட் போட்டா எப்படி இருக்கும் ...ஹீரோயின் ஹீரோவ சவால் விட்டுப் பாடற பாட்டு...கம்பீரமா இல்ல...அவங்க கமான்ட் பண்றாங்க...அவர் ரெசிஸ்ட் பண்றார்...நல்லாக் கேளு..
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது...தண்ணி வலைக்குச் சிக்குமா...
அப்பா போரிங்...தண்ணி சிக்க பாத்திரம் வேணும்.....டாடி ஜோக்
அவன் சிரித்ததும் நானும் மிக வேணுமாய்ச் சிரித்தேன்.
ஞாயிற்றுக்கிழமை காலை. இன்று திரும்பவும் சோதனை
மார்ச் ஏப்ரலில் இருந்த கடைசிச் சொட்டுக் குளிரும் மறைந்து விட்டது. தெருவில் இறங்கியதும் மெல்லிய நீராவி உடலில் ஒட்டியது. மரங்கள் கோட்டுச் சித்திரங்களாய் தெரிய ஆரம்பித்திருந்தன. தினமும் நடக்கும் ஒளியின் விளையாட்டு. கருவானம் மெல்லிய நீலம் கொண்டது. கருமை சிறிதென விலகி இலைகள் தளிர்ப் பச்சை கொண்டன. கருமை பழுப்பாகி கொன்றை மரத் தண்டானது.
வண்டியில் ஏறியதும் எதுவும் பேசவில்லை. எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா. இந்த வயதிற்கு ஏன் அச்சம்?. அப்படித்தானா தெரியவில்லை.
இறுக்கத்தை உடைக்க இசைப்பெட்டியில் பாட்டைப் போட்டேன். ஈஷா வெளியிட்டுள்ள தேவாரப் பதிகங்கள் ஒலித்தன.
வெளியில் இருள் முழுதும் விலகி இருந்தது. ஒன்றிரண்டு டெம்போ வேன்கள் சுமை இறக்கிக்கொண்டிருந்தன.
ஜக்கி தேவாரப் பதிகங்களுக்குச் சொல்லும் முன்னுரை வந்தது.
'தென்னாடுடைய சிவனே போற்றி ....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ...ஏகம்பத்துறை எந்தாய் போற்றி ....கயிலை மலையானே போற்றி போற்றி ...திருச்சிற்றம்பலம்...'
பெண்ணும் ஆணும் கலந்த குரல்கள் மௌனத்தில் முடிந்து பின், குடமுழவு ஒலித்தது. தொம் தொம்...தொம் அப்பாடலுக்குப் பின், தயக்கம் சிறிதும் இல்லாத நதி போல ஜக்கியின் குரல், மலையில் ஆரம்பித்து மண்ணுக்கென இறங்கி வந்தது.
எனக்கு அவர் குரல் பிடிக்கும். ஓஷோவின் அதே குரல்.
'சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றோர் நமக்குப் பக்தியும், சிரத்தையும் என்னவென்று காட்டினார்கள். இது ஏன் முக்கியம்? பக்தி என்பது நம்மைச் செயலில் கரைய வைப்பது. சிரத்தை நம்மை செயலில் முழுதுமாய்க் குவிப்பது. .கலை, படிப்பு, விளையாட்டு, அரசியல், தொழில், எல்லாவற்றுக்கும் பக்தி அவசியம்.
வெற்றிக்கு செயலில் கரைய வேண்டும். செயல் மட்டுமாக ஆக வேண்டும். அப்போது தான் மன நிறைவு, மகிழ்ச்சி. எட்டாத உயரத்தை எட்ட முடியும்.'
ஆங்கிலமானாலும், அவன் காதிற்குள் இது நுழையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தலை குனிந்தபடி தான் இருந்தான்.
அப்பா யாரு பேசறது?
ஜக்கி வாசுதேவ் ...இன்னிக்கு உனக்குத்தான் சொல்றாருன்னு நினைக்கிறேன்...
கொஞ்சந்தான் புரியுது...
ஃபுட்பால் விளையாடுறது மட்டுந்தான் ஒன்னோட வேலை...ஜெயிக்கிற தோக்கிற பயம் இல்லாம, கால் வலிக்கிற வரைக்கும் விளையாடறது,..
புரியுது...இவர் பேசின வேற பேச்சு இருந்தா போடு...கேட்டா நல்லாருக்கும் போலிருக்கு...ஐ ஆம் பீலிங் பெட்டெர் நவ்...
மைதானத்தின் வெள்ளை ஒளியில் அவன் இறங்கி நடந்தான்.
Comments
Post a Comment