Translate

'மறக்க முடியாத மனிதர்கள்' - வண்ண நிலவன் - சென்ற தலைமுறை ஆடம்பரம்



சில நாட்களாக வண்ணநிலவன் எழுதிய 'மறக்க முடியாத மனிதர்கள்' வாசித்துக் கொண்டிருந்தேன்.

மாம்பழந்தானே என்றாலும் எல்லோருக்கும் அதை லாவகமாய் நறுக்க வருவதில்லை. அப்பா நன்றாக ரசித்து மாம்பழம் வெட்டுவார். என் மாமனார் அதன் தோலை ஒரு பச்சைத் தடமில்லலாமல் சீவி எடுப்பார். அவருக்கு அது குழந்தை மென்மை. குழந்தைக்கு தலை மழிப்பது. அது எல்லா நாவிதர்களுக்கும் கை வருவதில்லை. என் பையன் முதல் தலைமழிப்பு, முடியெல்லாம்  ரத்தத்தில் ஒட்டி, கண்ணிலும், மூக்கிலும் நீர் கொட்டி போராய் முடிந்தது நினைவில் வருகிறது. ஒவ்வொரு தோலுக்கும் தனிக் குணம் இருக்கிறது. மேலும் எல்லாக் கத்திகளும் எல்லா வேலைகளையும் செய்வதற்கில்லை. கத்தியின் கூறும், தோலின் பதமும் அறிந்தவர் கை தேர்ந்த திருத்துநர் ஆகிறார்.

அப்படி மாம்பழம் வெட்டுவது போன்ற எழுத்து வண்ண நிலவனுடையது. அவரால் மறக்க முடியாத பத்து எழுத்தாளரகளைப் பற்றிய தொகுப்பு.

படித்து முடித்தால் அவருடைய வாழ்வின் கோட்டுச் சித்திரம் மிக அழகாக வெளிப்படுகிறது. தன்னைச் சிறிதும் நடுவில் நிறுத்தாமல் எழுதிய தன் வரலாறு போல் தோன்றியது. யார் நெருக்கம், யாரிடம் வியப்பு, யார் சக எழுத்தாளர்கள் என்று தொனியில் தெரிந்து விடுகிறது. எதுவும் நேரடியாய் வெளிப்படுவதில்லை. தி.க.சி, வல்லிக்கண்ணன் சொல்லும்போது மரியாதை விகுதி தானாய் வருகிறது. விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரை தோழமையின் உரைகல். முப்பது ரூபாய் சம்பளத்தில் வக்கீல் குமாஸ்தாவாக இருக்கும் இவர், பிழைப்பு தேடி அவரை நம்பி சென்னைக்குப் பயணிக்கிறார்.  அவர் நிலை கொள்ளாமல் திருநெல்வேலியில் பெரியப்பா துணிக்கடையில் வேலை பார்க்கத் திரும்புகிறார். இவரும் கொஞ்ச நாளில் திரும்புகிறார்.

விக்ரமாதித்யனைப் பற்றி இப்படி எழுதுகிறார்.

"அவரது கடிதங்கள், நேர்ப்பேச்சு எல்லாமே நமக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும். அடுத்த வேளைச் சாப்பாடு என்ன என்று தெரியாது. இப்படி ஒரு நாளல்ல பல நாள்கள் தொடர்ந்திருக்கிறது. ஆனால், அவர் வாயிலிருந்து சோர்வாக ஒரு சொல்கூட வந்ததில்லை. இன்னும் அவரது இந்தக் குணம் மாறவில்லை. நாம் ஏதாவது கஷ்டத்தைச் சொல்லிப் புலம்பினால் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘யோவ், என்னையா இதெல்லாம் ஒரு விஷயமாய்யா ? எல்லாம் சரியாயிரும்யா... பேசாம இரும்’ என்பார்."

திருநெல்வேலி எழுத்தாளர்களின் குறுக்கு வெட்டு வாழ்க்கை வெளிப்படுகிறது. மணிக்கொடி ஆசிரியர் சி.சு.செல்லப்பா தாமிரவரணியில் வல்லிக் கண்ணனுடன் குளிக்கையில், இவரை ஆற்றங்கரையில், வண்ணதாசன் அறிமுகம் செய்கிறார். செல்லப்பா வந்திருந்த காரணம் கல்லூரிகளில் புத்தகம் விற்பது.கலாப்ரியா, கி.ரா, வண்ணதாசன் உள்ளிட்ட எல்லா திருநெல்வேலி எழுத்தாளர்களும் தினமும் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். 

ஒரு எழுத்தாளருக்கு ஒரு அத்தியாயம். ஆனால் அதற்குள் மற்ற எல்லோரும் வந்து போகிறார்கள். அவர்களின் ஊரும் வீடும் துல்லியமாய்த் தெரிகிறது. நா.வானமாமலை தெருவில் இவரைக் கடந்து அவ்வப்போது நடக்கிறார், சிரிக்க மட்டும் செய்வார். இவருடை கதைகள் பிரசுரமானவுடன், தானே ஆராய்ச்சி இதழ் கூட்டத்திற்கு கூப்பிடுகிறார். சும்மா வந்து உட்கார்ந்து விட்டுப்போ என்கிறார். எழுத்தைப் பற்றிய திறனாய்வுக் கூட்டம். அதை இவ்வாறு  எழுதுகிறார். 

"ஒருதடவை நா.வானமாமலை தனது ‘ஆராய்ச்சி’ இதழின் சார்பாக மாதந்தோறும் நடத்தும் கூட்டமொன்றுக்கு ராஜநாராயணன் வந்திருந்தார். வந்திருந்தவர்கள் எல்லோரும் பேராசிரியர்கள். ஆனால், ராஜநாராயணன் பேசியதை எல்லோரும் உன்னிப்பாகக் கேட்டார்கள். என்ன பேசினார் என்று ஞாபகமில்லை. நான் வழக்கம்போல் மத்தியானச் சாப்பாடு (அருமையான சாம்பார் சாதம்) போட்டதும்,டவுனுக்கு மேட்னி ஷோ பார்க்க ஓடிவிட்டேன். நா.வா. நடத்திய கூட்டங்களுக்கு அந்த மத்தியான சாம்பார் சாதத்துக்காகப் போன பேர்வழி நான் ஒருவனாகத்தானிருக்கும். இன்றும் எனக்கு கூட்டம், பேச்சு, அதுவும் செமினார், கருத்தரங்கம் என்றாலே அலர்ஜிதான். ..பொதுவாக எழுத்து, பேச்சு எல்லாமே வெட்டி சமாச்சாரம் என்பதே என் அபிப்பிராயம். ‘எழுத்து’ என்பது பிழைப்பு என்பது தவிர, இதில் வேறு எதுவுமில்லை. வியாசரையோ, ஷேக்ஸ்பியரையோ படிக்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது. அவர்கள் எழுதாமல் போயிருந்தாலும் உலகத்துக்கு எந்த நஷ்டமுமில்லை."

புத்தகம் முழுதும் முக்கியமான கதைகளின் பெயர்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆங்கிலம் உள்பட.  அவரை முன் வைக்கவில்லை என்று முதலில் சொன்னேன். அவர் வாசிப்பை சொல்லிகொண்டே செல்கிறார். முக்கியமான வரிகள் அதன் போக்கில் வந்து விழுகின்றன. கிராவின் பகுதியில் 'கதவு' சிறுகதையில் ஆரம்பிக்கிறார். தலையாரி வரி கட்டாமல் கதவைக் கழற்றிக் கொண்டு போய்விடுகிறார். கதவு ஏழ்மையின் படிமமாக வருகிறது. பிள்ளைகள் கதவில் பஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். டிக்கெட் கிழிக்கிறார்கள். தீப்பெட்டி படம் ஓட்டுகிறார்கள். குழந்தையின் அப்பா ஒட்டிய படம் இன்னும் இருக்கிறது. இப்போது மணிமுத்தாறுக்கு பஞ்சம் பிழைக்கப் போனவர் வரவில்லை. அம்மா காட்டு வேலைக்குப் போயிருக்கிறார். அம்மா இல்லாத நாளில் தலையாரி நாலு பேருடன் வந்து கதவைக் கழற்றிக்கொண்டு போகிறார். குழந்தைகள் பீ பீ டு டும் டும் வாசிக்கிறார்கள். அம்மாவிற்கு வயிறு வலித்து அழுகை வருகிறது. வேறு வழியிருக்கவில்லை. கதவில்லாத வீட்டில் இருக்கிறார்கள். அக்கா சமைத்த கம்மங் கஞ்சியை நாய் குடித்துப் போகிறது. அம்மாவுக்கு சொல்ல பதில் இருக்கவில்லை. கதவை கிராம சாவடியில் பார்த்ததாக தம்பி வந்து சொல்கிறான். சாரணத்தியும் தைவாழைச் செடிகளுக்கு இடையில் கரையான் அரித்த கதவு நிற்கிறது. குழந்தைகள் தடவிப் பார்க்கிறார்கள்.

நேற்று வீடு திரும்பும் வழியில் வழியெல்லாம் மழையும், வெய்யிலும், இரண்டுமில்லாத இறுக்கிய நிலையும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. எழுத்தும் வறுமையும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஒரு ஊரில் காரின் தலையைப் பிளக்கும் ஓசையுடன், பனிக்கட்டி போல் உறைந்து கண் முன்னால் விழுந்தது. இவர்கள் எல்லோரின் வாழ்விலும் வறுமையின் தீவிரம் என்பது, சாரலா, மழையா, பனிக்கட்டிப் பதமா என்றே இருந்திருக்கிறது. சு ரா மட்டும் இவரை அம்பாசடர் ஓட்டி கிருஷ்ணன் நம்பியைப் பார்க்க கூட்டிச் செல்கிறார். மற்றபடி இடைவிடாத அரசாங்கப் பேருந்துகள் , சைக்கிள், பெட்டிக்கடை வாசல்கள், கரையோரங்கள் என்று தான் வருகிறது. 

பின்னால் வருவது அவருடைய சுருக்கமான பத்து வரி பயோகிராபி. இதற்கெல்லாம் அப்புறம் தான் இவரிடம் இலக்கியம் வெளிப்பட்டிருக்கிறது. இவருக்கு திக்கு வாய் இருந்திருக்கிறது. பஸ்ஸில் பஸ் ஸ்டாப் பெயர் சொல்லுவதற்குள் அவமானம் தின்னுகிறது. இருபத்தேழு வயது வரை நண்பர்களின் ஓசிச் சட்டையை  மட்டுமே அணிந்திருக்கிறார்.

" தாதன்குளத்தில் ‘கொழும்புப்பிள்ளை அல்லது கருத்த முத்தையாபிள்ளை’ என்றால் சிறுபிள்ளை கூட, அந்த நீளமான மட்டப்பா போட்ட வீட்டில் கொண்டுவிட்டு விடும். வீடு தார்சா, உள்தார்சா, பட்டகசாலை, ரெண்டாங்கட்டு, அடுப்படி, புறவாசல் என்று வீதி நீண்டு கிடக்கும். ரெண்டாங்கட்டில் இருபத்தைந்து மூட்டை நெல்கொள்ளும் பெரிய குதிர். புறவாசலில் பெரிய மாட்டுக்கொட்டகை. மாட்டுக்கொட்டகைக்கு அப்பால் பெரிய தோட்டம். இந்த வீட்டுக்கு எதிரே தெற்குப்பக்கம் இன்னொரு வீடும் சொந்தமாக இருந்தது. அதை ‘தெக்குவீடு’ என்போம். பக்கத்தில் காடு இருந்தது. காட்டில் பெருங்கொண்ட புஞ்சை நிலங்கள். ஏராளமான பனைகள், கருங்குளத்தில் மூன்று வயல்கள். ‘பூ’வுக்கு இரண்டு வண்டி நெல்வரும். இவை எல்லாம் ஒன்பதாவது படிக்கும்போது மாயமாக மறைந்துவிட்டன. எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குப் பீஸ் பதினாறு ரூபாய்தான். இதற்கு வழியில்லை. மதுரைக்கு எழுதி அங்கிருந்த உறவினர் அந்தப் பணத்தை அனுப்பி உதவினார். இருந்த பாத்திர பண்டங்கள்கூட அடகுக்கடைகளைத் தஞ்சம் அடைந்தன. மண் பாத்திரங்கள் வாங்கும் படியாயிற்று. இதுவும் முடியாமல் 68 வாக்கில் வீடே இல்லாமல் போய்விட்டது. மூன்று தங்கைகளும் கிறிஸ்தவப் பள்ளிகளில் சாப்பிட்டுத் தங்கிப் படித்தார்கள். அம்மாவும் இன்னொரு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சமையல் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். அப்பா நண்பர்களை அண்டி வாழ்ந்தார்கள். நானும் என் பள்ளி நண்பன் வீட்டில் அடைக்கலம் புகுந்தேன். சாப்பாடு, படுக்கை எல்லாம் அங்கேதான். அந்தக் குடும்பம் வாங்கித் தந்த வேலைதான் குமாஸ்தா உத்யோகம்."

கண்ணதாசன் பத்திரிக்கை நின்றதும், தஞ்சாவூருக்கு பிழைப்புத் தேடி வருகிறார். உறவினர் சொல்லிச் சேர்த்துவிட்ட வேலை. கட்டிட மேஸ்திரி. மனம் ஒப்பவில்லை. அதை இப்படிச் சொல்கிறார்.

இந்த ஊரிலாவது வாழ்வு அமையுமா ? அப்படி நடக்கவில்லை. அது கட்டடத்தில் மேஸ்திரி வேலை. கண்ண தாசனிலும், கணையாழியிலும் சிறுகதைகள், கவிதைகள் என்று புழங்கி விட்டது மனசு. சிமெண்டும், செங்கல்லும், மணலும், ஆட்களை விரட்டி வேலை வாங்குகிறதும் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரியிருந்தது. இரண்டு நாள்கள்கூட நிற்க முடியவில்லை.

எழுத்தின் போக்கில் அந்தக் காலத்தின் ஆடம்பரம் என்று சில விஷயங்களைச் சொல்கிறார். வீட்டில் ஃபேன் சைக்கிள், ரேடியோ, கடிகாரம், கைக்கடிகாரம்,  எல்லாம் அந்தஸ்தைப் குறிப்பவை என்கிறார். இவை அறுபதுகளின் பட்டியலில் இடம் பெற்றவை. 

நான் பார்த்த எண்பது தொண்ணூறுகளிலும் இந்தப் பட்டியல் விஷயங்கள் அப்படியே தான் இருந்தன. எங்கள் பக்கத்து வீட்டில் மின்சார இணைப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும்பாலும் பள்ளிக்கு சைக்கிளில் தான் வருவார்கள். ஆக சில விஷயங்கள் அத்தியாவசியம் ஆகின..

எங்கள் வீட்டிலும் ஒரு டேபிள் ஃபேன் வாங்கினார்கள். வீடுகளில் ரூம்கள் கிடையாது. கூடத்தில் அப்பா படுப்பார். அவருக்கு நடுவில் காற்றாடி இருக்கும். கூடத்தையும் ரேளியையும் பிரிக்கும் வாசலில் அவர் தலை இருக்கும். ரேளியில் அல்லது நடையில் நாங்கள் தூங்குவோம். கிழக்கு மேற்காக தம்பி. கீழே வடக்கு கிழக்கில் அக்கா, நான், அம்மா. காற்று மேலிருந்து கீழே வரவேண்டும். ஆடம்பரம் வந்தால் சுற்றி ஒரு வரிசை வருகிறது. அதிகாரம் அமைகிறது. நள்ளிரவில் வேலை முடிந்து வந்தால் இழுத்துப் பின்னால் வைத்து விடுவார். காற்று குறைந்துவிடும். எல்லோரும் தெருவில் கயிற்றுக் கட்டிலில் தூங்குவார்கள். பெரும்பாலான வீடுகளில் காற்றாடி இல்லை. யாரும் இன்று போல் மணி பார்த்து காரியம் செய்ய மாட்டார்கள். ரேடியோ நிகழ்ச்சியை வைத்து நேரம் கணிப்பார்கள். கிராம பஞ்சாயத்தில் தொலைக்காட்சிகள் வைத்தார்கள். குளிர்சாதனம் வந்தது.

ஆனால் இந்தியாவில் எந்தப் பொருளும் எவருக்கேனும் இன்னும் ஆடம்பரமாகவே இருக்கிறது. டேபிள் ஃபேன் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது என்னை ஒரு ஆட்டோ கடந்தது. வேலைக்கு பெங்களூர் புலம் பெயர்ந்த இரண்டு வட இந்திய இளைஞர்கள் உள்ளே இருந்தனர். இடம் பெயர்கிறார்களோ, இன்று காலை வந்து இறங்கியிருக்கிறார்களோ தெரியாது. மடியில் ஒரு காஸ் அடுப்பு, ஓரிரண்டு அட்டைப் பெட்டிகள், தோள்ப்பைகள், அப்புறம் கால் நடுவில் ஒரு டேபிள் ஃபேன்.  

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2