Translate

அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை)

அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை)

--------------------------------------------------




அந்த இடம் எனக்கு ஹோமகுண்டம் என்றே தோன்றும். அதுவும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில். இடத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயரும் பொருத்தமே.

இறுதியாய் உடல் மண் நீரில் கரையும் இடம். ராமேஸ்வரக் கடல் அலைகளற்றது. ஆனால் இது அப்படியல்ல.


சதுரமாய் செங்கற்களை அடுக்கி நிறுத்தப்பட்ட இடுப்பு உயரச் சுவர்கள். அதற்குள் ஒரு சதுரமான உள்க்கூடு. மரக் கரண்டிகள், சில்வர் கிண்ணங்கள், ஓயாமல் பாத்திரங்கள் வைக்கப் படும், எடுக்கப் படும், , கழுவிச் சுத்தமாய் கவிழ்க்கப் படும் சத்தம். வெளியே சதுர மேஜைகளில் நின்றிருப்போர், இடம் தேடி அலைபவர்கள், எதுவும் அறியாமல் அமர்ந்து ஹோதாவில் மூழ்கியிருப்போர்.


இடைவிடாமல் உள்ளே நுழைந்தபடி இருக்கும் கார்கள், இறங்கியதும் பதறி அடித்து வரிசைக்கு ஓடுபவர்கள், கோதாவில் இடம் தேடச் சுற்றுபவர்கள். பல்லாயிரம் பேச்சொலிகள் கலந்து புது மொழியாய் விண்ணில் ஏறி கூரையை முட்டி, கீழே இறங்குகின்றன.


அங்கே நடுவில் வயிறென இருக்கும் இடத்தில் கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே என்று பக்கமெல்லாம் கிளைத்து எழும் நெருப்பு. நெருப்பை ஏற்றியும், இறக்கியும் காத்தபடி , ஆகுதியிட்டு வளர்ப்பவர்கள். நல்ல பசு நெய் ஆகுதி. மணிபூரக சக்கரம் இடைவிடாது சுற்றியபடி இருக்கிறது.


மண்ணெனக் குழைந்து, நினமென நீராகி , விசையெனக் காற்றாகி அந்த அன்னம் பிறிதோர் அன்னம் சமைத்தது. சற்று பெரிய வட்டங்களாய் , சிறிய வட்டங்களாய், இட்லியும், தோசையும், ரொட்டித் துண்டுகளென தன்னைத் தான் அந்த ஆகுதியில் சமைத்தது.


என் டோக்கனை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். எண் 1232. ஒலித்தது அதுவல்ல. எல்லோரும் அவரவர் எண்களைச் சரி பார்த்தனர்.


அன்னாத் புருஷ.


பரவெளியில் இருந்து ஆகாசம் . ஆகாசத்திலிருந்து காற்று. காற்றிலிருந்து நெருப்பு. நெருப்பில் இருந்து நீர். நீரிலிருந்து பூமி. பூமியிலிருந்து பயிர். பயிரிலிருந்து அன்னம். அன்னத்திலிருந்து புருஷன். அன்னமே அவனது தலை. வலப் பாகம், இடப் பாகம், கீழ்ப்பக்கம். அன்னமே அவனது ஆத்மா.


வெளி வாயிலில் இருந்த அன்னங்கள் அன்னத்தை, கண்ணாடிக்கு வெளியே யாசித்த அன்னங்களிடம் கொடுத்தன. அன்னங்களைவிட சமைத்த அன்னங்கள் குறைவாக இருந்ததால் அன்னங்கள் பொறுமையிழந்தன. வெள்ளைக் காகிதத்தை கவுண்டர் அன்னத்திடம் காட்டிக் காட்டி பேசிய வண்ணம் இருந்தன. எழுத்தில் இருந்தே அங்கு அன்னம் அன்னத்தைச் சமைத்துக் கொண்டிருந்தது. தன் எழுத்தை எங்கோ ஓர் அன்னம் புரிந்துகொள்ளவில்லை என்றே அந்த அன்னங்கள் எண்ணின.


காலி வயிறுகள் எல்லாம் கிணறுகள். கீழே ஓடிக்கொண்டிருப்பது அணையாது ஓடும் பசி எனும் நதி. கிணற்றுப் பசி நதிக்குத் தெரியாது.


அன்னம் பூதானம் ஜ்யேஷ்டம்.

அன்னத்திலிருந்தே பிராணிகள் உருவாகின்றனர். அன்னத்தினாலே வாழ்கின்றனர். அன்னத்திடமே சென்று சேர்கின்றனர். அன்னமே முதல் பிராணி. முதல் மருந்து. எல்லோருக்கும் மூத்தது.


இரண்டு மசாலா தோசைகள் வந்தன. என் டோக்கனைப் பார்த்தேன். 1232 சரியாய் இருந்தது. நிமிரும் முன், எனக்கு வர வேண்டிய டோக்கனில் இருந்த மசாலா தோசைகளை இன்னொரு அன்னம் தூக்கிக் கொண்டு ஓடியது. என்னை நம்பிய அன்னங்கள் என் தோல்வியை உணர்ந்து கொண்டன. என்னில் உள்ளிருந்த அன்னம் அவரைத் துரத்திப் பிடிக்கச் சொன்னது. நழுவியது தெரிந்த கவுண்டரில் இருந்த அன்னம் 'ஆப்கா, டோக்கன் கியா ஹை சார், ஆரஹா ஹை பாஞ்ச் மினிட் ' என்றது. தூக்கி ஓடிய அன்னம் ஒரு வயதானவரிடம் தோசையை வைத்தது. என்னுள் அனகாதச் சக்கரம் சுழன்றது.


//சஹனவாவது ஸஹநௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹை


எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக. எங்கள் இருவரையும் ஒன்றாகக் காப்பாராக. ஒன்றாக பிரம்மத்தை அறிவோமாக.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2