மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள்
மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள்
-----------------------------------------------
வருடத்திற்குப் பல முறை மதுரை செல்கிறேன். பல வருடங்கள் இப்படிச் செல்கிறேன்.
இந்த முறைதான் தெரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறேன். நான் சொல்வது பிரதான சாலையில் அல்ல.
வீட்டுப் பகுதிகளில், மனிதர்கள் இரவில் நடமாடும் இடங்களில் விளக்கு எரிகிறது.
முன்னெல்லாம் நம் வீட்டு குழல் விளக்கை தெருவுக்காகப் போட்டு வைக்க வேண்டும். எனக்கு எல்லா தெரு விளக்குகளும் ஒரே நேரத்தில் எரிவது பேரதிசயம்.
மாணிக்கம் தாகூர் இப்பகுதியில் வசிக்கிறார், அவரே எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் .அதுவாக இருக்குமோ என்று நினைத்தேன். இதன் முன்னாலும் அவர் தான் என்ற மறு சிந்தனை வந்தது.
இரண்டாவது, சாலையின் மேல் ஒரு ஸ்கூல், குறுக்குச் சாலையில் இன்னொன்று என்று வீட்டின் அரைக் கிலோமீட்டரில் இரண்டு கல்விக் கூடங்கள். ஒரு கிலோமீட்டரில் இன்னும் சில பாட சாலைகள் உள்ளன. இதன் நடுவில் தான் முள்ளென டாஸ்மாக் இருந்தது. சிலர் ஒதுங்கிப் போவார்கள். சிலர் சாஸ்வதம் போல் ஏற்றுக் கொண்டு நடமாடுவார்கள்.
இந்த டாஸ்மாக் அரசின் விதிகளின் படி மூடப் பட்டிருக்கிறது. குடியை ஒழித்தால் உடம்பிற்கு என்ன நன்மையோ அது இந்தப் பகுதிக்கும் ஏற்பட்டிருக்கிறது. டாஸ்மாக்கை எதிரில் குப்பை போட ஆளில்லை. குடித்துவிட்டுச் சலம்புபவர்கள் இல்லை. வெறியுடன் கடை திறக்கக் காத்து நிற்பவர்கள் இல்லை. போதாமல் பாதி போதையில் திரிபவர்கள் இல்லை. இடம் கழுவி விட்டது போல் இருக்கிறது. கோயிலெல்லாம் பள்ளிச் சாலைகள் என்றார் பாரதி. டாஸ்மாக் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் வீட்டுப் பக்கம் பள்ளிக்கூடம் வேண்டும்.
மூன்றாவது கோயில்களில் கண்ட மாற்றம். சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் என்று இரண்டு பெரிய கோயில்களுக்குச் சென்றேன். சிறப்பு தரிசனம், இருபது ரூபாய் மட்டும். ஏற்கனவே ரசீது கிழித்துத் தயாராக இருந்தது. இதுவே எனக்குத் தனியாகத் தெரிந்தது.
இதைவிட மேலாக, அர்ச்சகர் தட்டில் விளக்கும், விபூதியும் , குங்குமம் மட்டுமே இருந்தது. தாள்களைக் காணவில்லை. யாரும் தாள்கள் போடவும் இல்லை. போட்ட ஒரு சிலவும் சிறு தாள்கள் மட்டுமே. பட்டர் அதைக் கையால் தொடவில்லை. சங்கரன் கோவில் சன்னதியில் என் முறை வந்ததும், என்ன செய்வதென்று தெரியவில்லை. நூறு ஐம்பதை விட்டு இருபதைத் தட்டில் போட்டேன். அவர் கண்கொண்டே பார்க்கவில்லை. தாள்ப் பையில் போட்ட விபூதி குங்குமம் கேட்டேன். அதெல்லாம் இப்போது இல்லை என்று சொன்னார்.
திருவில்லிபுத்தூரிலும் நாமம் போட்டவர்களும் இதையே செய்தார்கள். ரங்க மன்னார், வலது பக்கம் ஆண்டாள் நாச்சியார் , இடது பக்கம் கருடாழ்வார் , ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பெரியாழ்வார் அம்சம் என்று உடம்பிலே ஒரு சதை இல்லாத பெரியவர் விளக்கைத் தூக்கிக் காட்டினார். எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் என எத்தனை வருடங்கள் இங்கு இருக்கிறாரோ?
ஊரில் வெள்ளம் வந்தால் எல்லாம் அடித்து தள்ளிக் கொண்டு போகும். எல்லோருக்கும் பொது வெள்ளம். இவர் போன்ற எறும்புகள் ஒதுங்க முடியுமா? எந்த இலையில் ஏறிப் பிழைப்பார்கள்? எறும்புகளுக்கும் சேதாரம் இருக்கிறது.
இன்னும் பத்து வருஷத்தில் AI எல்லோரையும் சுபிட்சமாக்கும், பணம் என்ற ஒன்று தேவையில்லை என்று மேற்கில் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment