Translate

பாரதியார் - ஒரு ஆவணப் படம்

பாரதியார் - ஒரு ஆவணப் படம்

--------------------------------------




வீட்டில் தொலைக்காட்சி வந்த புதிதில் , சியோலில் ஒலிம்பிக் நடந்து கொண்டிருந்தது. பையனாய் எனக்குப் பார்க்கவேண்டியதெல்லாம் கிரிக்கெட் மட்டுமே. எனக்கு திரைப்படங்களில் அப்போதும் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் துயரங்களை எதற்கு நாம் பார்ப்பது என்ற எண்ணம். நமக்கு நாமே நிறையப் படுவதற்கு இருக்கையில் எதற்கு வீணாய் என்ற என் புரிதல். பார்த்தாலும் சரியாக சோகம், துயரம் ஆரம்பிக்கையில் எழுந்து போய் விடுவது என் வழக்கம். இன்றும் அதே கொள்கை தான்.


கிரிக்கெட் தாண்டி நான் விரும்பிப் பார்த்த விஷயம் கிருஷ்ணசுவாமி எடுத்த ஆவணப் படங்கள். எப்போதாவது Nat geo டேவிட் அட்டன்பரோ படங்கள் மதியங்களில் காண்பிப்பார்கள். இதற்கும் கலர் டிவி இருந்தால் நல்லது. பெரும்பாலும் கருப்பு வெள்ளையே இருக்கும்.


ஆவணப் படங்களில் வரும் பேசுபவரின் குரல் இன்றும் வசீகரிக்கிறது. உதாரணமாக கிருஷ்ணஸ்வாமியின் ரமணர் பற்றிய ஆவணப் படம் திருவண்ணாமலையை தூரத்தில் இருந்து காட்டுவதில் துவங்குகிறது. ஊரின் வீடுகள் மலையின் கீழ் சிறு கற்கள் என மண்டிக் கிடக்கின்றன. நகரம் செங்கல் குமியலாய் தெரிகிறது. அங்கங்கே பொதிந்து வைத்த மரங்களில் ஊர் அசைகிறது.


அப்போது மலை இவ்வாறு பேச ஆரம்பிக்கிறது. 'நான் தான் அருணாச்சலம். நான் லட்சம் கோடி வருடங்களாய் இங்கு இருக்கிறேன். எனக்கு இந்த பூமியின் வயதிருக்கலாம். இல்லை, இந்த வான் வெளியின் வயதிருக்கலாம். இல்லை , இடைவிடாமல் ஓடும் காலத்தின் வயதிருக்கலாம்.'

 

'என்னைத் தேடி நூற்றாண்டுகளாய் மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னைத் தேடி வந்த பதினாறு வயதுப் பையனின் கதை இது. அவன் என்னிடம் கேட்டான் "நான் யார்" ? இந்தக் கேள்வி வேறு குரலில் ஒலிக்கிறது. மலைகளில் பட்டு எதிரொலிக்கிறது. குரல் மீண்டும் வந்து , அவன் முடிவில் கண்டது இது : நானே அவன் ; அவன் தான் நான்.'


இப்படித் துவங்கி கட்டிப் பிணைக்கும் இருபது நிமிட ஆவணப் படம்.


இரண்டு நாளாக எழுதப் படித்துக் கொண்டிருக்கையில் அப்படி ஒரு ஆவணப் படம் பார்த்தேன்.

https://www.youtube.com/watch?v=icSRo0sXMZM


பாரதி பற்றிய சக்திதாசன் என்ற ஆவணப்படம்.

அவர் தன்னை சக்திதாசன் என்று அழைத்துக் கொண்டது புதிய விஷயம். பாரதியின் வாழ்வை சாக்தம் என்ற ஒளியில் காட்டுகிறது.

சாக்தம் பிரபஞ்சத்தை சக்தி வடிவாக உருவகப் படுத்துவது. இந்த உலகை பேராற்றலாக , பேரன்னையாக , எனவே பெருங்கருணையாக எண்ணி வழிபடுவது. ஆலமர் செல்வி, முதியோள் , காடுகிழாள் , பழையோள் போன்ற சொற்கள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.


அவர் 38 பராசக்தி பாடல்கள் எழுதியிருக்கிறார்.


எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்

விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர்

சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் , நூறாண்டு

பக்தியுடன் வாழும் படிக்கு


ஆவணப் படத்தில் இடையிடையில் இசையுடன் முழுப் பாடல்கள் வருகின்றன. சிக்கில் குருசரண், ராஜ்குமார் பாரதி பாடுகிறார்கள். நிரஞ்சன் பாரதி பாரதி வாழ்ந்த இடங்களில் சென்று பேசுகிறார். பேசும்போது அந்த இடத்தில் நின்று அதைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரே வசனம் என்று படித்து அறிந்தேன். பாரதியாய் நடித்தவர் பொருத்தமாய் இருந்தார். கண்ணை மூடிப் பார்த்தால் அவர் முகம் தெரிகிறது. இதன் முன் சாயாஜி ஷிண்டே முகம் தான் வரும். இளங்கோ குமணன், இசைக்கவி ரமணன் உணர்ச்சியுடன் பேசினார்கள். அன்றைய மொழி சரியாக இருந்தது. அவருடைய சிறுவயது சம்பவங்கள் அழகாக, நாடக பாணியில் இருந்தது.


பாரதி அரண்மனையில் இருந்து வேலை நீக்கம் செய்யப் பட்டது எனக்கு புதிய செய்தி. எட்டயபுர மன்னருக்கு பாரதி மிக நெருக்கம். சதி செய்யும் புலவர்கள் (காலிக்ஸ்) விவகாரமான ஈற்றடி கொடுத்து விளையாட்டாகப் பாடச் சொல்கிறார்கள். பாடி விடுகிறார். அதை மன்னரிடம் காட்டியதும் , பாரதியாரின் அரண்மனை வேலை போகிறது. எல்லாம் காசியில் நடக்கிறது. எல்லோரும் காசியில் பிடித்த காய் கறியை விட்டு வருவார்கள். அவர் வேலையை விட்டு வருகிறார். அந்த விவகாரமான வெண்பா ஈற்றடி , 'சாம்பலுக்கு மன்னன் சமம்' . இதுவும் வரலாற்றில் எவ்வளவு பெரிய தற்செயல்.


நிவேதிதா அம்மையார் அவர் குரு என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் வழியாக விவேகானந்தரையும், பரமஹம்சரையும் தொடர்ந்து கற்றிருக்கிறார். தேசத்தை பராசக்தியாக எண்ணியதும் , இவ்வளவு பாடல்கள் பண்ணியதும், அவர் வழிப்பட்ட பெண்ணியமும் தெரிந்தாலும், அதன் பின்னால் இருந்த இவ்வளவு வலுவான தத்துவப் பின்னணி தெரிந்திருக்கவில்லை.


சாக்தப் பார்வையில் அவருடைய வாழ்க்கை முழுதும் ஒரு மணியில் சொல்லப் பட்டிருக்கிறது.

காளிகாம்பாள் கோவிலில் இருந்த காளியைப் பார்த்தே ,

'யாதுமாகி நின்றாய், காளி எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் - நின்றன்

செயல்கள் அன்றி இல்லை ' என்று பாடியிருக்கிறார்.


என்னை நெகிழ்த்திய இன்னொரு இடம் கடைசியில் வரும் கோவிலில், கோபுர வரிசையில் இருந்த பாரதியார் சிற்பம். சரியான இடம் தான், ஆனால் உள்ளே இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். எழுத்தை விடக் கல் இன்னும் சாஸ்வதம். மேலே இருக்கும் திருவண்ணாமலை போல. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2