Translate

நானும் (குறுங்கதை)

நானும் (குறுங்கதை)

--------------------





அந்த நகரத்தில் அண்ணனும் தம்பியும் சில மாத இடைவெளிக்குப் பின் அன்று சந்தித்தார்கள்.

தம்பி வீட்டின் கூடத்தில் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. பிள்ளைகள் ஆளுக்கொரு நாற்காலியில் இருந்தனர்.


காப்பி குடித்ததும் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை.


தம்பி வெளியில் எங்கோ பார்த்தார். தினம் வரும் தையல் குருவி அன்றும் சுவரில் ஆசுவாசமாய் இருந்தது. சுவரில் இருந்து குதித்துத் தாவி நடந்து நிதானமாய் பூமியைத் தேட ஆரம்பித்தது.


'பொண்ணு நல்லா படிக்கிறாளா?, என்ன ஸ்ட்ரீம் ...ஏ ஐ , மேத்ஸ் இல்ல ?' அண்ணன் கேட்டார்.


'ஏதோ படிக்கறா ' தம்பிக்கு அதற்கு மேல் தெரியாது. தம்பியின் மகள் ஏதோ பேச வந்தாள். பேசவில்லை.


'இவளுக்கும் ஏ ஐ அப்பவே இருந்துச்சு..நீ ஒன்பதாவதிலேயே ஏ ஐ , படிச்ச இல்ல"

வேலைக்குப் போகும் அண்ணன் மகள் தலையை ஆட்டினாள்.


தலை குனிந்திருந்த தம்பி பையனைப் பார்த்துக் கேட்டார்.

'இவன் ஒழுங்கா படிக்கிறானா..இன்னும் விளையாடிட்டுத்தான் திரியிறானா? அடுத்த வருஷத்தில இருந்து விளையாட்ட மூட்டை கட்டி வைச்சுரனும்...என் பிள்ளைகளுக்கு ஸ்போர்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியாது...வேலைக்குப் போனதுக்கு அப்புறமா T 20 பாக்க நான்தான் பழக்குனேன்...அதையும் நானே கத்துக்குட்டேன்'


'இன்னைக்கு ஸ்ரீலங்கா டெஸ்ட் சீரீஸ் ஆரம்பிக்குது...பாருங்க நல்லா இருக்கும்' தம்பி சொன்னார்.


'நம்மளால அதப் பொறுமையா பாக்க முடியாது...' 


காப்பி டேபிளைப் பார்த்து,

'இது என்ன புக் சிறுகதை எழுதுவது எப்படி..சுஜாதா...இவரு யாரு தெரியுமா...'

மகளிடம் காட்டினார் அவருக்குத் தெரியவில்லை. 'ஆம்பளையாக்கும் இவரு...வீட்டம்மா பேருல எழுதுனாரு' . புத்தகத்தை இன்னும் திறக்கவில்லை.


'இதப் படிச்சா நானும் சிறுகதை எழுதிரலாம் ..இல்ல?'


'சிறுகதை எழுதுவது எப்படிங்குறது அவரு எழுதுன ஒரு கதை...முதல் கதை..அதுவே புக் டைட்டில் ' தம்பி சொன்னார்.


'ஏமாந்து வாங்கிட்டயோ ?'


இப்போது தையல் குருவி மீண்டும் சுவரில் இருந்தது.


'நீ பத்திரிக்கைல எழுதிருக்கன்னு சொன்னாங்களே...சப்ஸ்கிரிப்சன் இல்லாம தொறக்கல..காட்டு பாப்போம்'


தம்பி தளத்தைத் திறந்து காட்டினார். 1959-ல் திபெத்தில் இருந்து தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தபோது, இந்திய அரசின் பக்கம் நின்று அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்த அதிகாரியைப் பற்றிய கட்டுரை. பின்னர் அவரும் லாமாவும் அதிகாரி இறக்கும் வரை நண்பர்களாய் இருந்தார்கள்.


'சூனியம்னு வார்த்தை வருதே....எழுத வேற நல்ல விஷயம் கிடைக்கலயா?' திபெத்திய பௌத்தத்தின் அந்த வார்த்தை அவர் கண்ணில் பட்டிருக்கிறது. தம்பிக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. மொத்தமாய் அதன் சாரத்தைச் சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அண்ணனே தொடர்ந்து பேசினார்.


'ஒனக்கு நினைவு இருக்கா ...நானும் படிக்கிறப்போ ஆண்டு விழா மலர்ல எழுதிருக்கேன்...நேரு பத்தின்னு நினைக்கிறேன்'.


கால தேச வர்த்தமானம் தாண்டி முனிவர்களையும் தோற்கடித்த அந்த நானும்.


தம்பிக்கு இப்போதும் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

அதன் தூய வெண்மையான அடிப்பகுதி காட்டி, தையல் குருவி தாழ்வாரத்தில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தது. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2