Translate

இன்றைய தியானம்

இன்றைய தியானம்

--------------------------------



இன்று வழக்கம் போல சைக்கிள் இடது ப்ரேக் தேய்ந்தது. அதற்கு இதுவரை பத்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் ஆகியிருக்கிறது. ஆகவே உடலில் எப்போதும் ஒட்டாது.

போய்ச் சரி செய்தால் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும். அப்புறம் இது போல் ஒவ்வாமை.


சரி செய்ய மேலும் கீழும் 12 கிலோமீட்டர் போக வேண்டும்.

சைக்கிள் வேர்ல்ட் அம்மாள் , எப்பவும் போல 'புல் சர்வீசா ' என்று கேட்பார். இப்போதெல்லாம் சைக்கிள் சர்வீஸ் ஆயிரம் என்கிறார்கள்.


சர்வீஸ் வேண்டாம், ப்ரேக் மட்டும் வேலை என்பேன். சிறு வேலை என்றால் மெக்கானிக் பிசியாக இருப்பார். சிறு பிள்ளைகளின் அப்பாக்களிடம் போட்டியிட முடியாது.

வீடு காலி பண்ணி மனைவி சகிதம் , சைக்கிளை காரில் போட்டு வந்திருப்பார்கள். அப்பா பேபி சைக்கிளில் மணி கட்டுவது, துணைச் சக்கரம் மாட்டுவது, வாட்டர் பாட்டில் சொருகுவது போல் இப்படி இடம் திருவிழா போல் இருக்கும். நமக்கு ஹிந்தி வராது. பேசாமல் வேடிக்கை பார்த்து நிற்க வேண்டியது தான். 'பையா, தோடா காம் ஹை..கித்னி பார் போல்த்திஹு' என்று சொல்லியோ, அம்மாளிடம் எஸ்கலேட் செய்து கவனத்தைப் பெற வேண்டும்.


அப்போது அவர் வந்து ப்ரேக் பேட் போச்சு என்பாரோ, வயர் போச்சு என்பாரோ, ப்ரேக் செட் போச்சு என்பாரோ அவர் மனநிலையைப் பொறுத்தது. இதனால் நேரம் போனாலும் எஸ்கலேட் செய்வதில்லை. போன முறை எழுநூறுக்கு பேட் மாற்றியாகி விட்டது.


அவருக்கு நல்ல மனது இருந்தால் வேகமாய் வேலை ஆகி விடும். சின்ன L கம்பியை சாவி போல் வைத்து ரெண்டு திருப்பு. இன்னொரு பெரிய L வைத்து இன்னும் சில இடங்களில் திருப்பு. அவ்வளவுதான், ப்ரேக் மூச்சுவிட ஆரம்பித்து விடும். அதற்கு முன் அது உடல் மட்டுமே. பிரேதம் போல் தொட்டாலும் பலன் இருக்காது. ஒரு சில வர்மப் புள்ளிகளில் அவர் தொட்டால் பிழைத்து மீண்டும் மூச்சு விடும். ஒவ்வோர் முறை சரி செய்த பின்னும், 'சே இதற்காகவா', இவ்வளவு தூரம் அழுத்தி வந்தோம் என்றிருக்கும். இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கும். பழைய யூ டியூப் பரிட்சைகள் தோல்வியில் முடிந்தது ஞாபகம் வரும்.


இந்த வர்மத் திருகை நாமே செய்தால் என்ன என்று தோன்றியது. இரண்டு L திருகிகள் தேடிப் பிடித்தேன். பத்து நிமிடம் போனது.


ப்ரேக் கம்பி எங்கிருந்து எங்கு போகிறது, எதைத் தொட்டால் எது நகர்கிறது என்று சாந்தமாய்ப் அமர்ந்து பார்த்தேன்.


டிஸ்க் ப்ரேக் , திருமாலின் திகிரி , பறவையின் மூக்கு போன்ற ஒரு கருப்புக் கிளிப்பில் இணைந்திருந்தது. அதற்குள் பேட் இருக்க வேண்டும். இதை வாங்கும் போது பார்த்திருக்கிறேன். மிகச் சிறிய குப்பை முறம் போன்று இருக்கும். சொரசொரப்பான இரும்பு உடம்பு. இது வயரை அழுத்தும் போது பறவையின் மூக்கு ப்ரேக் தட்டைக் கவ்விப் பிடிக்க வேண்டும். தட்டு போக்ஸ் கம்பிகளில் இணைந்திருந்தது. அதன் அழுத்தம் இறுதியில் டயரின் கழுத்தைப் பிடிக்கும்.


வயர் இழுத்தால் எல்லாம் சரியாய் நடப்பது போலத் தெரிந்தாலும், சிக்கல் தெரியவில்லை. இரண்டு முனைகளை இன்னும் இறுக்கிப் பார்த்தேன். ஒன்றும் பலன் இல்லை. இறுக்க வேறு இடங்கள் அங்கு இருப்பது போல் தெரியவில்லை. மெக்கானிக் எப்போதும் போக்ஸ் நடுவிலே எதையோ இறுக்குவது நினைவில் வந்தது. காசு போல் ஒரு தட்டு இருந்தது. நடு நெற்றியில் வைத்து இறுக்கினேன், நன்றாய் இறுகியது. இன்னும் நாலு முறையில் பிரேக்கிற்கு முழு உயிர் வந்தது.  


இப்போது சைக்கிளை மிதித்து மேல் காற்றில் அதே 12 கிமீ சும்மா போய் வந்தேன்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2