இரு வனபிரஸ்தங்கள்
இரு வனபிரஸ்தங்கள்
----------------------------
மைசூர் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்புகள் அசோகர் கால கல்வெட்டுகளிலும் , சங்கப் பாடல்களிலும் வருகின்றன.
'பெரும்புல் வைப்பின் எருமையூர் நன்னாட்டு' என்ற வரியின் எருமையூர் இதுதான் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எருமை என்ற சொல் 'மகிஷ' எனும் வேர்ச் சொல் குறிப்பது.
புராணக் கதைகளின் படி இப்பகுதியை ஆண்டவன் மகிஷன் எனும் அரக்கன். இவன் கொடுங்கோல் ஆட்சி அகற்ற பத்து நாள் போரிட்டு அவனை வென்றாள் அன்னை சாமுண்டி.இதைக் குறிப்பது தான் இன்றும் கொண்டாடப்படும் பத்து நாள் தசரா. மகிஷாசுர மர்த்தினி வதம் செய்து குடியிருக்கும் ஊர் மகிசூர். மகிசூர் மருவி மைசூர் என்றானது.
அசோகர் மகிஷ மண்டலத்திற்கு புத்த பிக்குகளை அனுப்பிய சான்றுகள் உள்ளன. பௌத்தத்தைப் பரப்ப மகாதேவர் என்ற துறவி மகிஷ மண்டலத்திற்குச் சென்றதை இலங்கையின் மகாவம்சம் சொல்கிறது.
சந்திரகுப்த மௌரியர் அசோகரின் தாத்தா. இவர் வாழ்ந்தது கிமு மூன்றாம் நூற்றாண்டு. இவர் தான் இந்திய வரலாற்றின் முதல் பேரரசர். அலெக்சாண்டருக்குப் பின் வந்த செலுக்கஸ் நிகேடரை வென்றவர். வடக்கை முழுதுமாய் ஆட்சி செய்தார். படைகளுடன் விந்திய மலை தாண்டிய முதல் மன்னர். தக்காணப் பீடபூமியின் சில பகுதிகள் இவர் ஆளுகையின் கீழ் இருந்தன. சங்கப் பாடல்களில் மோரியர் பற்றிய குறிப்புகள் உள்ளன. "மா கெழு தானை வம்ப மோரியர்" என்று போகும் சங்கப் பாடல் அவர்கள் படை தேர்கொண்டு வந்ததையும், தேர் மலையில் உருள பாதை அமைத்தையும் சொல்கிறது.
இந்தியாவின் துறவியான அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்த மௌரியர் . உச்சத்தில் சக்கரவர்த்தி திகம்பரர் ஆகிறார்.
அவருக்கு பாடலிபுத்திரத்தில் ஒரு நேரத்தில் பதினாறு கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன. திகம்பரர்களால் இன்றும் குறிப்பிடப்படும் இந்தக் கனவுகள் கவித்துவமானவை. இவை பின்னால் சமண மரபுக் கதைகளில் வருகின்றன. கரை கடக்கும் கடல், நடுவானில் மறையும் சூரியன், கன்றுகள் இழுக்கும் சகடம், சேற்றில் சிக்கிய தாமரை, வற்றிய ஏரி போன்ற கொடுங்கனவுகள். இந்தக் கனவுகளின் பொருள் கொள்ள ஆசிரியர் பத்ரபாகுவை நாடுகிறார். கனவுகள் வரப்போகும் பன்னிரண்டு வருடப் பஞ்சத்தைக் குறிப்பதாக அவர் சொல்கிறார்.
கிமு 298-ல் மகதத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அக்காலத்து கல்வெட்டுகள் வறட்சியையும், அதற்கான அரசின் நிவாரண நடவடிக்கைகளையும் பதிவு செய்திருக்கின்றன.
படைகளும், வெற்றியும், தோல்வியும் இயற்கைக்கு முன் செயலற்று நிற்பதைக் கண்டார். அரியணை துறக்கிறார்.மகன் பிந்துசாரன் பொறுப்பை ஏற்கிறான். ஆசிரியர் முன் அரச உடை களைந்து வெள்ளாடை அணிந்த சங்கத் துறவியாகிறார்.
தன் ஆசிரியர் பத்ரபாகுவுடன் , பன்னிரண்டாயிரம் திகம்பரர்களுடன் ஜைனத்தைக் காப்பாற்ற பாடலிபுத்திரத்தில் இருந்து தட்சிண பாதம் நோக்கி நடக்கிறார். அவர் வந்து சேர்ந்த இடம் மைசூருக்கு அருகில் இருக்கும் சிரவணபெலகோலா. அன்றைய பெயர் காதவர்ப்பா. இவர்கள் இருந்த மலை சந்திரகிரி என இன்று அழைக்கப்படுகிறது.
பத்ரபாகு தான் இறக்கப் போவதை அறிகிறார். சந்திரகுப்தரை அருகில் வைத்துக் கொள்கிறார். துறவிகளில் ஒரு பாதியை தமிழகத்திற்குள் செல்லப் பணிக்கிறார். மதுரையைச் சுற்றிய திருப்பரங்குன்ற மலைப் பகுதிகளில் இவர்கள் தங்கிய இடம் எண்பெருங்குன்றம் என்று அழைக்கப் படுகிறது. இவர்கள் தான் தெற்கின் சமணத்தின் வேர்கள்.
பத்ரபாகு சந்திரகுப்தர் அண்மையில் சந்திரகிரியில் உடல் நீங்குகிறார். ஆசிரியர் நீங்கிய பின் ஒரு வருடம் தனிமையில் துறவியாக உலகில் வாழ்ந்தார். வரலாற்றில் அரசர்கள் மூப்பில் இரண்டு வழிகளைத் தெரிவதை நாம் பார்க்கிறோம். ஒன்று சித்தம் கலங்கி தனிமையில் இறப்பது. இன்னொன்று அறிவனாக இறப்பது. போரில் இறப்பது கணக்கில் சேராது ,அது கடமை . சந்திரகுப்தர் சல்லேஹனா என்று சொல்லும் உண்ணாவிரதம் இருந்து மைசூர் சந்திரகிரியில் உயிர் துறக்கிறார்.
சந்திரகுப்த பஸ்தி என்னும் இம்மலையில் அவருடைய பதினாறு கனவுகளும் கல்வெட்டில் இருக்கின்றன. அவர் ஆசிரியருடன் வாழ்ந்தாகச் சொல்லப்படும் குகை இருக்கிறது. இந்தப் பகுதியின் மன்னர்கள் சமணத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இங்கிருக்கும் அறுபதடி உயர பாகுபலி சிலை பத்தாம் நூற்றாண்டில் செதுக்கப் பட்டது. இது நின்ற நிலைத் தவம். நாட்கணக்காய் நிற்பதால் கால்களில் கொடி படர்வதையும், புற்றுகள் கட்டியிருப்பதையும் பார்க்கலாம்.
இந்த பாகுபலியின் கதையும் துறவின் கதையே. இதன் மையக் கதை திரைப்படம் ஆனதில் வியப்பில்லை.
இன்றைய தெலுங்கானாவின் போதன் என்னும் பகுதியை ஆண்டவர் ரிஷபதேவர். இவருக்கு இரண்டு மகன்கள். இளையவன் பாகுபலி , மூத்தவன் பரதன். தம்பி பெரிய பலசாலி. மக்கள் தம்பியை விரும்புகிறார்கள். அண்ணனுக்கு இதில் பொறாமை. அப்பா ரிஷபதேவர் நாட்டை இருவருக்கும் சரி பாதியாகக் கொடுத்து தீர்த்தங்கரராய் வெளியேறுகிறார்.
அண்ணனுக்கு பேரரசனாக ஆசை வருகிறது. தம்பி நாட்டை அபகரிக்க படை திரட்டுகிறான்.
போரில் ஆட்கள் மடிவதற்கு முன் மூன்று நிகற் போர்கள் ஏற்பாடகின்றன. முதலாவது , இருவரில் யார் கண் இமைக்காமல் இருப்பது, திருஷ்டி யுத்தம். இரண்டாவது கழுத்து வரை நீரில் நின்று , ஒருவர் மற்றொருவரை நீரால் அடிப்பது, ஜல யுத்தம். இரண்டிலும் அண்ணன் தோற்கிறான்.
மூன்றாவது மல்யுத்தம். தம்பி பெயருக்கே வலிமையான தோள் பொருந்தியவன் என்று பொருள். மற்போரில் வென்ற அண்ணனை தலைக்கு மேல் தூக்கி முதுகில் தரையில் கிடத்தி விட்டான். மார்பில் கால் வைத்துக் கொல்ல வேண்டும். கொலையின் விளிம்பில் இதெல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது. களத்தை விட்டு வெளியேறுகிறார். அண்ணனிடம் நாட்டைக் கொடுத்து பாகுபலி துறவியாகிறாரர். தன் தலைமுடியைத் தன் கையால் பிடுங்கி தலை மழிக்கிறார்.
முக்தி தேடி அப்பா ரிஷப தேவரை நாடுகிறார். கோமதகிரியில் போய் நின்று கொண்டு தவம் செய்கிறார்.முழு வருடம் கழிந்து விட்டது. காலைச் சுற்றி முட்களும், கொடிகளும் முளைக்கின்றன. புற்று உருவாகி , பாம்புகளும் நெளிகின்றன. முக்தி கிட்டவில்லை.
சகோதரிகள் சுந்தரியும், பிராமியும் கவலை கொள்கிறார்கள். ரிஷப தேவரிடம் சென்று வழி என்ன என்று கேட்கிறார்கள். அவர் 'அவனை யானை மேல் இருந்து இறங்கச் சொல்' என்று சொல்லியனுப்புகிறார். சகோதரிகள் மலையேறி 'அண்ணா, மத யானையில் இருந்து கீழிறங்கு ' என்கிறார்கள். ஆமாம், தான் ஏறி நின்றது நின்ற தவம் என்னும் இறுமாப்பின் மேல், அண்ணனை வென்றவன் என்ற செருக்கின் மேல் என்பதைத் தானே அறிந்தார். இறுதியில் முக்தியடைந்தார். இந்தக் கதை பத்தாம் நூற்றாண்டில் கங்கர்கள் ஆளுகையில் வருகிறது.

Comments
Post a Comment