Translate

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி 
--------------------------------------------------



பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது.

சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும்.

எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு.

புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது.

இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழித்து எனக்குத் தெரிந்து ஏதேனும் தொழில்நுட்பப் பிழை இருக்குமா என்று பார்த்தேன். இல்லை.

இரண்டாவது, அதன் மொழி நடை. எல்லாவற்றையும் தமிழுக்கு வளைத்திருந்தால் சரியாக வந்திருக்காது. துறை சார்ந்த வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே விட்டிருப்பது, வாசிப்பின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

மூன்றாவது, நுணுக்கமான தகவல்கள். உதாரணத்திற்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் காய்கறி உண்பதால் குளிக்க வேண்டியதில்லை என்று நம்பியது; 'லிசா' என்ற அவருடைய மகள் பெயரை கம்ப்யூட்டருக்கு வைத்துவிட்டு, கேட்டால் 'Local Integrated Software Architecture' என்று மழுப்பியது; அவர் தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தை; நீம் கரோலி பாபாவைத் தேடி இந்தியா வரும்போது அவர் மறைந்துவிட்டது; காந்தியை உலகை மாற்றிய ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர் என்று ஜாப்ஸ் நினைத்தது... இப்படிப் பல நுண்ணிய தகவல்கள் நிறைய வந்துகொண்டே இருக்கின்றன. எனக்கு இவ்வகைப் புத்தகங்களை ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படித்து எளிதாக உள்வாங்க முடிகிறது.

நான்காவது, முக்கியமான மையக்கருத்துகளைச் சுற்றியே புத்தகம் அமைந்திருக்கிறது. உலகை மாற்றும் எண்ணம், பயனர்களை முன்னிறுத்துவது, தொழில்நுட்பத்தை அவர்களுக்காக மாற்றுவது, அதற்கான ஆளுமைகள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள், எப்படி அது செங்கலும் சுவருமாக இன்றிருக்கும் பிரம்மாண்ட நிலை வரை கட்டப்பட்டது என்ற ஒரு அடிநாதம் நூல் பிடித்தாற்போல் ஓடுகிறது. இந்தக் கட்டிடத்தின் மட்டம் எங்கெல்லாம் கோணியது, எப்படி அதை பூசி மெழுகி நேர்வழிக்கு இழுத்தார்கள் என்று சரடும் பின்னலுமாகப் போகிறது கதை. இதைப் படிக்கும் போது வெ. சாமிநாத சர்மாவின் 'கார்ல் மார்க்ஸ்' புத்தகம் நினைவில் எழுந்தது. முன்னும் பின்னும் அவரும் வந்து போகிறார், நினைவூட்டுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் தடுக்கி விழும் இடங்களைச் சொல்லி, "ஏனென்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்படித்தான் இருப்பார்" என்று ஆசிரியர் கடந்துபோகும் இடம் அருமை.

தொழில்நுட்ப மொழி வீரியம் குறையாமல் வந்திருக்கிறது. ப்ரொசெஸர், மெமரி, டை சைஸ் (Die size), ஆண்டெனா இருக்கும் இடங்கள் என்று எல்லாத் தகவல்களும் மிகச் சரியாக இருக்கின்றன.

கடைசியாக, ஆப்பிளை வெறும் ஒரு பொருளாக இல்லாமல் ஒரு பிம்பமாக, உணர்வாக மாற்ற வேண்டிய தேவையை பல இடங்களில் தொட்டுக்காட்டி இருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸும், அவருடைய பெப்சி மார்க்கெட்டிங் குருவும் இதற்கு மெனக்கெடுவதைத் தொடர்ச்சியாகக் காண முடிகிறது.

கடைசிப் பகுதிகளில் டிம் குக் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இறுதியாக, வரப்போகும் அடுத்த தலைமுறையைப் பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது.

ஆப்பிளைப் பற்றித் தமிழில் வெளிவந்திருக்கும் மிகக் குறிப்பிடத் தகுந்த, அவசியமான புத்தகம் என்றே நினைக்கிறேன்.






Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2