ஓட்டுநரின் இருக்கை -1
ஓட்டுநரின் இருக்கை -1
---------------------------------
சிறு வயதில் இருந்தே ஓட்டுனர்கள் மேல் எனக்கொரு பித்து இருந்திருக்கிறது.
ஊரின் கோயில் அருகில் மின்வாரிய அலுவலகம் இருந்தது. மூங்கில்த் தப்பை அழியுடன் அகலமான பண்ணையார் வீடு போல் இருக்கும். இரண்டு நீளமான சுவரால் பிரிக்கப்ட்ட தாழ்வாரங்கள் உண்டு. மேஜை நாற்காலிகள் போட்டு கிளார்க்குகள் அமர்ந்து இருப்பார்கள். இங்கு உச்சிமாகாளி என்று ஒரு வயர்மேன் வேலை பார்த்தார். இருட்டாய், கரடு முரடாக இருப்பார். அவரைக் கண்டால் எனக்கு பயம். பின்னர் அவர் சிறுவர்களிடம் விளையாட முயற்சிக்கிறார் என்று அறிந்தேன். அவர் விளையாட்டு என்பது விதையைப் பிடிக்க பையன்களை விரட்டுவது. அந்தக் கால கிராமங்களில் இப்படி ஒரு விதைப் புரட்சி இருந்தது. தெருவில் சிறுவர்கள் நடக்க முடியாது. இது ஒரு விளையாட்டு.
இந்த அலுவலகத்திற்கு சாதனங்கள் ராஜபாளையத்தில் இருந்து ஜீப்பில் அல்லது லாரியில் வர வேண்டும். ஜீப்பில் J.E வந்திருக்கிறார் என்பார்கள். அன்று சிரிப்பே இல்லாமல் வேலை பார்ப்பார்கள். ஜீப் டிரைவர் எனக்குப் பிரியமானவர். அப்போதெல்லாம் டிரைவர் இருக்கையில் உட்கார முடிவது கடவுளைப் பார்த்த மாதிரி. ஜீப்பிற்கு ஒரு தனிச் சத்தம் உண்டு. பல நூறாயிரம் காலி பிளாஸ்டிக் கேன்கள் பிரண்டு உருளுவது போல் என்ஜின் ஸ்டார்ட் ஆகும். அதே கேன்கள் விட்டு விட்டுப் பறப்பது போல் உறுமிக் கொண்டே நிற்கும். அவை ஆடி அடங்குவது போல் என்ஜின் அணையும்.
வண்டி வந்து நின்றதும் , அந்தப் பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து ஐந்து நிமிடம் வண்டியில் ஏறி அமர்வது ஒரு கிளு கிளுப்பு. ரெக்ஸின் இருக்கை கண்ணாடியில் தண்ணீர் இழுபடுவது போல் அங்கங்கே கிரீச்சிடும்.நீளமான முன்னிருக்கை. ஓட்டுநர் இருக்கையும், பயணி இருக்கையும் இணைந்தது. நடுவில் கியர் கம்பி. ஸ்டீரிங், ஒலிக்கொம்பு எதுவும் ஒன்று அசையாது. ஒலிக்கொம்பை பௌவத் என்பார்கள். அந்த வயதிற்கு ஏதாவது எதிர்பாராமல் நிகழ வேண்டும். ஒன்றும் நடக்காது. அவர் துரத்துவது வரை இதில் உட்கார்ந்து பெரிய கிளர்ச்சியாய் இருந்தது. வண்டி போன பின்னும், ரப்பர் வாடையும், அதில் ஒட்டி இருக்கும் டீசல் புகை மணமும் நாசியில் நாளெல்லாம் இருக்கும்.
மூன்றாம் வகுப்பில் பேருந்தில் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு ஒரு சிறுவனுக்கு இதை விடப் பெரிது. வண்டிகளையும் டிரைவர்களையும் இன்னும் கவனிக்கலாம். எவ்வளவு கூட்டமானாலும் முண்டி அடித்து ஏறி டிரைவர் பின்னால் கம்பியைப் பிடித்து நின்று கொள்வதே என்னுடைய ஒரே நோக்கம். டிரைவர் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தில் கியர் கம்பியைத் தொடுகிறார், அப்போது கால்கள் என்ன செய்கின்றன. எந்தக் கால் என்ன செய்கிறது என்று நாள் விடாமல் கவனிப்பது. என்ஜின் பெட்டி ஒரு குட்டி யானை போல், கால் மடித்து அவர் அருகில் அமர்ந்திருக்கும். அதிலும் இரண்டு பேர் உட்கார்ந்து கொள்வார்கள். சில டிரைவர்கள் விட மாட்டார்கள். ஒரு இடத்தில், எந்த டிரைவர் நன்றாய் ஓட்டுகிறார், யார் புதிது , திணறுகிறார்கள் என்று புரிந்தது. யாருக்கு கியர் நன்றாய் விழுகிறது, யாருக்குத் தொல்லை செய்கிறது என்று விளங்கியது. ஒரு புதிய டிரைவர் வலது கையால் கியர் போடுவார். ஒரு கை விட்டு கியரை இயக்குவது ஆரம்பத்தில் எளிதல்ல. வண்டி ஓட்டும் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கவும் தெரிந்தவராக அவர் இருக்க வேண்டும். பஸ் கண்ணாடியில் என்ஜின் இணையும் இடம் வீட்டின் திண்ணை போல் இருக்கும். அதில் இரண்டு பேர் உட்கார்ந்து கொள்வார்கள். தனியார் பேருந்து டிரைவர்கள், இந்த இடத்தில் ஏனோ பெண்களை அமர வைப்பார்கள். இந்தக் திண்ணையில் ஒரு என்ஜின் பாதுகாப்பு வால்வு இருக்கும் சில நேரங்களில் ,இது தானாய்த் திறந்து நீராவி வெந்நீர் ஊற்றாய் பீச்சியடிக்கும். சமயங்களில் இதற்குள் கடைகளில் நிறுத்தி தண்ணீர் வாங்கி ஊற்றுவார்கள்.
ரஜினியைப் போல் இருந்த ஒருவர் எனக்கு லட்சிய டிரைவர். ஸ்டைலுக்காகப் பிறந்தவரோ இல்லை அவரைப் பார்த்துத்தான் செய்வாரோ , அவருடைய நகல் இவர். ஸ்டைல். இரண்டு பட்டன் திறந்து இருக்கும். நாடியில் வழியும் கம்பிளி மீசை, காதுகளில் அருவியென விழுகும் மயிர் என்று அவர் தான் இவர். அன்று அவரை ஒட்டி நின்ற என்னிடம், 'தம்பி டவுசர் பையில பலகாரம் வச்சுருக்க...' என்று வண்டி ஓட்டியபடி, என்னைப் பார்க்காமல் கேட்டார். கிளம்பும் முன் வீட்டில் இருந்து எடுத்துச் சொறுகிய காரச்சேவுப் பொட்டணம் உள்ளே இருந்தது. 'அதெல்லாம் ஒண்ணும் இல்லையே ' என்றேன். 'இல்ல இருக்கு...எறும்பு மொக்கிது...என்ன பண்ணப்போற...கடி எறும்ப எப்படி விரட்டப் போற..' என்றார். எனக்கு இன்னும் நூறு எறும்புகள் உள்ளே கடிப்பது உணர்வில் எழுந்தது.
பின்னர் ஒரு நாள் கண்டக்டரும் டிரைவரே என்று கண்டு கொண்டேன். இது எனக்குப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. தகுதியெல்லாம் ஒன்று, ஒரு கணத்தில் பிரித்து வழி மாற்றி விடுகிறார்கள்.கண்டக்டர் பக்கம் கவனம் திரும்பியது. என்றாவது தோளில் தொங்கும் சில்லறைப் பை நமக்குக் கிடைக்காதா என்பது மட்டுமே முதலில் ஏற்பட்ட எண்ணம். விரல் இடைகளில் பிதுங்கி வழியும் ரூபாய் நோட்டுக்களும், அவர் குலுக்கி எடுக்கும் சில்லறைகளும் பண ஏக்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. இறங்கி எத்தனை பால் பன் , பப்புள்கம் வாங்கலாம் என்று தலைக்குள் கணக்குகள் ஓடும். அவர் இடைவிடாமல் எழுதும் நம்பர்கள் என்ன , ஏன் என்ற கேள்விகள் மண்டையில் குடைந்திருக்கின்றன. பழைய டிக்கெட்டைக் காட்டி கூட்டத்தில் கண்டக்டரை ஏமாற்றலாம் என்ற தெருப்பேச்சில் ஏமார்ந்து ஒரு முறை மாட்டியிருக்கிறேன். அந்தக் காலத்தில் நடத்துனர்கள், திடீரென்று பரிசோதகர்கள் ஆகி விடுவார்கள். ஆட்களை எண்ணி, டிக்கெட் கணக்காய் கிழிந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவர் என் பழைய டிக்கெட்டை வாங்கி நம்பரைக் காணாமல், ஊரில் இருந்தவர் பார்த்து , விஷயம் வீடு வரை தெரிந்து விட்டது. டிக்கெட் காற்றில் பறந்து விட்டது என்பது தான் அப்போது பஸ்ஸில் பிரபலமான பொய்யாக இருந்திருக்கிறது. பெரியவர்கள் உறக்கமில்ல, கண்ணசந்துட்டேன் என்பார்கள். ஏறி இருக்கை கிடைத்ததும், கண்ணை மூடி , இறங்கும் போது மட்டும் திறப்பார்கள்.
உயர்நிலைப் பள்ளி செல்கையில் படிகளில் நிற்பதும், தொங்குவதும் கிளர்ச்சியாய் இருந்திருக்கிறது. வண்டியில் கூட்டம் இல்லையென்றால் சப்பென்று இருக்கும். படியின் ஓரமாக பையை வைக்க ஒரு இடம் இருக்கும். ஆனால் அங்கு ஏற்கனவே ஒரு சிறு சந்தையே இருக்கும். ஒரு பக்கம் காய்கறி மூட்டைகள் நிறுத்தியிருப்பார்கள். கடை வியாபாரிகள் சுற்றி அமர்த்திருப்பார்கள். பையை மீண்டும் எடுப்பது தான் சவால். படியில் பயணம் செய்வது அழகான அனுபவம். படியில் பயணம், நொடியில் மரணம் என்று மூன்று படிகளிலும் எழுதியிருக்கும். இரண்டாவது படியில் ஒரு கால், மூன்றாவதில் ஒரு கால் வைத்தால், பின்னிருக்கையின் சாய்மானம் முதுகில் சரியாய் உட்காரும். பின்னர் பேருந்து காற்றில் அலையும் படகு என்றாகும். நெல் வயல்களும், வாழைத் தோட்டங்களும், கண்மாய்களும், சரக்கு மாட்டு வண்டிகளும் அந்தக் காற்றுக் கடலில் தோன்றி மறையும். இந்த அரை மணிப் பயணம் அரசனின் ஊர்வலம் போன்றது தான் .
வண்டி நிற்கும் முன்னர் இறங்கிவிடுவது , இன்னொரு ஹீரோயிசம். எவ்வளவு வேகத்தில் உங்களால் இறங்க முடிகிறதோ, அவ்வளவு ஹீரோ (என்ற நினைப்பு, வேறென்ன). ஊரில் பஸ் நிறுத்தத்தின் முன்னர் இரண்டு வளைவுகள் உண்டு. ஒன்று 70 பாகை. மற்றொன்று 90. எழுபது பாகையில் தெரு முனை. தொண்ணூறு பாகையில் பிள்ளையார் கோவில் சுற்றுச் சுவரின் மேற்கு மூலை. திறமை இருந்தால் நிறுத்தத்தின் முன்னரே இறங்கலாம். அண்ணன்மார்கள் கிசுக் என்று ப்ரேக் சத்தம் வருகையில் காலை தரையில் ஊன்றி விடுவார்கள். நாமும் இறங்கலாம் தான், வீட்டில் சொல்லி விடுவார்கள். அண்ணனமார்கள் கையில் பை கிடையாது. ஒரு நோட்டும், சாப்பாட்டுச் சம்படமும் மட்டுமே இருக்கும். நமக்கு புத்தகப் பையே வினையாக முடியலாம். காக்கித் துணிப்பைகள் புத்தகப் பைகளாக இருக்கும். வீட்டில் வயர்க் கூடையில் எடுத்துப் போகச் சொல்வார்கள். இதைச் சுமந்து படியில் ஓடும் பஸ்ஸில் இறங்க முடியாது.
என்னுடைய பஸ் பயணத்தில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருக்கிறார். யாரென்றே தெரியாமல் பக்கத்தில் உட்கார்ந்து வந்திருக்கிறேன். அவர் கதை விகடனில் வந்து, அவர் முகம் பிடிபட்டது. மேலாண்மறை நாடு என்பது அவர் ஊர். எங்கள் ஊர் வழியாக ஒரே பஸ் போகும். பலசரக்குக் கடை வைத்திருந்தார். சரக்குகள் ராஜபாளையத்தில் இருந்து வாங்கிப் போவார்.
பின்னர் தெருவுக்குள்ளேயே கண்டக்டர்களும், டிரைவர்களும் முளைக்க ஆரம்பித்தனர். எதிர் வீட்டில் அண்ணன், தம்பி இருவரும் கண்டக்டர்கள். முனையில் ஒரு டிரைவர் இருந்தார். ITI படித்து பிட்டர் ஆகி , டிரைவிங் லைசென்ஸ் , ஹெவி டிரைவிங் லைசென்ஸ் என்று ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள்.
இப்போதும் சாலையில் காரைப் பார்த்தால் ஓட்டுபவரின் திறமையை மனம் எடை போடுகிறது. இரண்டு கைகள் பிடித்துக் கார் ஓட்டினால் குறையாகப் படுகிறது. நிமிர்ந்து சீரியஸாக ஓட்டினால், ஏன் இவ்வளவு இறுக்கம் என்று தோன்றுகிறது. என்றாவது லாரி, அதுவும் கன்டெய்னர் லாரி ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
சில மாதங்களாய் மெட்ரோவில் போய்க் கொண்டிருக்கிறேன். முதல் பெட்டி டிரைவர் இருக்கும் பெட்டி. நான் ஏறும் நிறுத்தம் முதல் நிறுத்தம். தலை வாலாக மாறும். டிரைவர் இறங்கி நீள நடந்து மறுபுறம் முதல் பெட்டிக்குச் செல்வார். அந்த ஒரு சில நொடிகள் காக்பிட் தெரிந்தது. மீண்டும் ஆசை முளைவிட ஆரம்பித்தது.
(மேலும்)

Comments
Post a Comment