Translate

அன்றாடக் குறிப்புகள் - சிறு உடற்பயிற்சிகள்

அன்றாடக் குறிப்புகள் - வேலையும் உடலும்

------------------------------------------------------





உடற்பயிற்சியும் செய்யும் வேலையும் ஒன்றாகி விட்டால் நேரம் மிச்சம். முன்னால் சைக்கிளில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். போக வர இரண்டு மணி நேரம். இப்போது தொய்வு விழுந்ததில் இருந்து திரும்ப ஆரம்பிப்பது மலைப்பாய் இருக்கிறது. இது மழைக் காலம், வழியில் விளக்குகள்,இல்லை நாய்கள் உண்டு. சைக்கிளில் ஜாமில் சிக்குவது இன்பமல்ல. சைக்கிளில் ப்ரேக் என்ன செய்தாலும் சரியாக வருவதில்லை. புதுசு தான் வழி போல் தெரிகிறது. இப்படி மனம் வழிக்கு வருவதாய் இல்லை. சைக்கிள் உடற்பயிற்சி என்பதை விட, எனக்கு யோசிக்கும் இடம். இது போகட்டும்.


வேலைக்கு மெட்ரோவில் போய் வீடு வந்தால் தானாக நடையளவு ஏழு கிலோமீட்டர் காண்பிக்கும். இடையில் இருக்கும் கப்பன் பார்க் மதிய நடை சேர்த்து இந்தக் கணக்கு. இது இரண்டரை கிமீ. காலையில் நேரச் சிக்கல் இல்லை என்றால், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி, விதான் சௌதாவின் வெண்கலக் குதிரைச் சிலைகளைப் பார்த்தபடி நடப்பது. இது ஒரு கிமீ. நல்ல காற்றும் வெயிலும் இலவசம். எல்லா நாளும் முடியாது. ஒரு சில நாள்களில் காலாற கமர்சியல் ஸ்ட்ரீட் வரை போய் வருவதும் உண்டு. அரேபியன் டீ என்று ஒரு கடை சிவாஜி நகரில் இருக்கிறது. இதைத் தேடிப் போவது வழக்கம்.


இருக்கும் வீட்டில் இருந்து வெளி வாசல் 1.8 கிமீ. ஒரு புனேரித் தேநீர் குடிக்கலாம். இப்போது எலுமிச்சைத் தேநீர். குடியிருப்பின் எல்லா வீடுகளையும் ஒரு சுற்று சுற்றினால் 1.8 கிமீ. இப்படி உடலுக்கும் மனக் கணக்குகள் இருக்கின்றன.


நடந்தபடி கணினி வேலைபார்க்கும் மேஜைகள் இருக்கின்றன. நின்ற படி வேலை பார்கும் மேஜை அலுவலகத்தில் இருக்கிறது. ஆனால் ஒரு நாளும் நின்று வேலை பார்த்ததில்லை.  இப்போது ட்ரெட்மில் போல நடக்கும் மேஜைகள் வந்துள்ளன என்கிறார்கள். இது நல்ல யோசனை.


மனமிருந்தால் இதை விட எளிய பயிற்சிகள் இருக்கின்றன. நீங்கள் மெட்ரோ பயணி, பஸ் பயணி என்றால் நேரடி உபயோகம் இருக்கிறது.


1. வலுக்கட்டயமாக படிகளை உபயோகம் செய்வது. மெட்ரோவில் நான்கைந்து மாடி ஏறி அடுத்த ரயில் மாறவேண்டும். கூட்டு பிரார்த்தனை போல், சேர்ந்து படியேறலாம். நிறையப் பேர் செய்வார்கள், சேர்ந்து கொள்வது எளிது.


2. எப்போதும் இரண்டாவது ரயில் பயணம் நின்றபடியே. 15 நிமிட பயணம். மேலிருக்கும் கம்பிகள் உடற்பயிற்சிக் கம்பிகள் என்றே எனக்குத் தோன்றும். தொங்கினால் சிரிப்பார்கள். காலில் வலு இல்லாமல், கைகள் தொடந்து புல் அப்ஸ் செய்யலாம். ஏழு நிறுத்தங்கள், நினைப்பது போல் உடல் எடை தூக்குதல் எளிதல்ல, கை வலிக்கும், நல்ல எடைப் பயிற்சி.


3. படிகள் ஏறுகையில், கால் பலம் இல்லாமல், கைகளால் கைப்பிடிக் கம்பியை இழுத்து மேலே ஏறுவது. கயிறு இழுத்தல் போல், நம் உடலை நாமே கைகளால் இழுப்பது.


4. காலுறைகளை , காலணிகளை உட்காராமல், சுவரில் சாயாமல், நின்றபடி மாட்டுவது. இதுவும் எளிதல்ல, பழகிக் கொண்டிருக்கிறேன்.


5. முன் கால்(குதிங்கால்) மட்டும் வைத்து வீட்டினுள் கொஞ்சம் நடப்பது. டோ வாக். நினைவில் இருந்தால், செய்வது எளிது.


6.உணவுக்குப் பின் 25 சிட் அப்ஸ். நாற்காலியைப் பிடித்தபடியோ, பிடிக்காமலோ செய்யலாம். இது ஒரு நடை நடப்பதற்குச் சமம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சாப்பிட்டு முடித்து நடந்தால், நீரிழிவு கட்டுக்குள் வரும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.


7. உட்கார்ந்தபடி வயிற்றை உள்ளே இழுத்துப் பிடிப்பது, புட்டத்தைச் விரைத்து இருக்கையில் அழுத்துவது, கையைக் கால் மேல் வைத்து, காலை உயர்த்த முயற்சிப்பது. இவைகளை ஐசோமெட்ரிக் உடற்பயிற்சிகள் என்கிறார்கள்.


நேரமோ இடமோ என்றும் பிரச்சனையல்ல. இடைவிடாமல் போனைப் பார்ப்பதும், இதற்கான பிரக்ஞை இல்லாமல் போவதும் தான் சிக்கல்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2