Translate

தில் பசந்தும், காங்கிரஸ் பன்னும்

தில் பசந்தும், காங்கிரஸ் பன்னும்

-------------------------------------------




தில் பசந்த் என்றால் மனதிற்கு மிகவும் பிடித்தது என்று பொருள்.


இருபத்தைந்து வருடங்கள் முன் பெங்களூரில் புதிதாய் இருந்தபோது சில விஷயங்கள் ஆச்சர்யப் பட வைத்தன.


பை டூ டீ.


மொழி தெரியாத ஊரில் கடையில் என்ன சொல்லி எப்படிக் கேட்பது என்று மனமொழியை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இல்லை பார்த்தோ கேட்டோ வேண்டிய சொல்லைத் தெரிந்து கொள்ளலாம். பொருளைக் குறிக்கும் ஒரு சொல் தான் எவ்வளவு முக்கியம்.

மற்ற சொல் இலையாய் , சருகாய் காற்றில் கரைந்தாலும், பழம் போல் ஒரே ஒரு சொல் கடைக்காரருக்கு புரிந்து விட்டால் போதும். இப்போதும் இந்தத் திண்டாட்டம் இருக்கிறது, அப்போது சொல்லத் தேவையில்லை.


டீ என்பது மொழிகளைத் தாண்டிய சொல். அன்று தமிழ்நாட்டு டீக்கடை பார்த்த கண்களுக்கு ஒரு பேக்கரி என்பது ஸ்டைல் ஸ்டேட்மென்ட். ஏதாவது ஒரு கிழவர், இல்லாதவர் நாளெல்லாம் சம்பளத்திற்கு தூக்கி ஆற்றுவது போல் இல்லை. இவர் கால் சட்டை அணிந்திருப்பார். தேநீர் உப தொழில். அவர் வளர்த்து வைத்திருக்கும் , கண்ணாடி வழியாகத் தெரியும் கேக்குகளும், உறைந்த பொன்னிற பிஸ்கட்டுகளும் பொதிந்த பொறைகளும் மட்டுமே ஆட்களை ஈர்ப்பவை. அதில் ஒன்றொன்றிற்கும் தனி இடங்கள் இருந்தன. எத்தனை வடிவங்கள், எத்தனை அவதாரங்கள். நின்றவை, கிடந்தவை, அமர்ந்தவை. சிற்பம் போல் பார்த்து அழகு செய்பட்டவை. ஒரு சில பிஸ்கட்டில் மட்டும் ஏனோ துளைகள் இருக்கும். சிலவற்றில் கிரீடங்கள் உண்டு. கூலி சேதாரம் இல்லாத தங்கத்திற்கு பிஸ்கட் என்றல்லவா பெயர். மண் ,பொன் என்று ஒரு வரிசை. இதில் மைதாவையும், சீனியையும் சேர்க்க வேண்டும். இந்த வரிசைக்கு நம்மை என்றும் மீறுபவை என்று பொருள்.


பத்து பேரோ, நூறு பேரோ டீ பிளாஸ்க்கில் ஏற்கனவே இருக்கிறது. அன்று டீ கேட்டால் ஒன்னரை ரூபாய் குட்டி சில்வர் டம்ளரில் கொடுப்பார்.


பலர் பன் ஒன்றும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். டீ + பன் சேர்ந்து டிப்பன் ஆகியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டீயில் முக்கிய பன்னைத் தின்று , பன் எட்டாத போது தேநீரை வாய் மடக்கில் குடித்துப் போவார்கள். பலர் புகைத்த படி குடிப்பார்கள்.


பலர் பை டூ டீ என்று கேட்பார்கள். என் பார்வையில் எல்லாம் ஒன்று தான். கடைக்காரர் கவுண்டரில் அதே டம்ளர்களைத் தான் நிரப்பி வைத்தார். ஏதோ சிறப்புத் தேநீர் என்று நினைத்தேன். அடுத்த நாள் காலையில் தனியாகச் சென்று 'பை டூ டீ' கேட்டேன். இன்னொரு முறை சொல்வது சரிதானா என்று முகத்தால் கேட்டார். நானும் அழுத்தமாய் ஆம் என்று தலையாட்டினேன். இரண்டு டம்ளர்களில் தேநீர் கொடுத்தார். இரண்டு முக்கால் டம்ளர்கள். ஒரு டீயை பாதியாகப் பிளப்பது பை டூ என்று விளங்கியது. பாதிக் கோப்பைத் தேநீர், இன்னோர் பாதி நம் உடன் வருபவருக்கானது. பாதி விலை. என்னிடம் வேறு மொழியில்லாததால் இரண்டு கோப்பையும் அடுத்தடுத்து அன்று குடித்தேன்.


அடுத்தது தில் பசந்த்.


காலை உணவில்லாமல் இருக்க ஏதோ ஒரு ஐயங்கார் பேக்கரியில் தான் பயின்றேன் என்று தோன்றுகிறது.


பூவாய்த் துருவிய தேங்காயை நிறம் போகாமல் நன்கு வறுத்து , நிதானமாய்ச் சீனியில் பிரட்டி , மேலே உலர் திராட்சை, பச்சை, மரகத பச்சை வண்ண, காய வைத்துக் கெட்டியான பழ வில்லைகள் சேர்த்து ஒரு பூரணம். பாலும் , எண்ணையும் கலந்து பிசைந்த மைதாவில் கொஞ்சம் கனத்த சப்பாத்தி. மேலே பூரணத்தை அழுத்தி மூடவேண்டும். ஓரங்கள் தரங்கப் போதிகை போல், சுருட்டி அலையென உறைந்து எழுந்து நிற்க வேண்டும். நடுவில் கடலின் அமைதி, அமிர்தம் இருக்கும் இடம். சுடுமனையில் வைத்து இறக்கினால் வண்ணத்துப் பூச்சியென பொன் ஒளி கொள்ளும். கூட்டுப் புழுவின் வளர்சிதை மாற்றம். அதற்குப் பெயர் வண்ணத்துப் பூச்சி என்றால் இதற்கு தில் பசந்த். வண்ணங்கள் பெயர் சொல்லித் தீர்ந்து போய் வண்ணத்துப் பூச்சி என்று சொல் விக்கி நின்றது. தில் பசந்த் என்றால் மனதிற்குப் பிடித்தமான என்று பொருள். உயர்ந்த அன்பை வேறு எப்படிச் சொல்ல முடியும். அனுபவிப்பது மட்டும் செய்யக் கூடுவது. நறுக்கிய முக்கோணத் துண்டை நடுவை மென்று , இனிப்பற்ற உப்பு மட்டுமேயான ஓரங்களை கடைசியில் தின்றால், டீ குடிக்க வாய் சரியாக இருக்கும். துண்டு இரண்டு ரூபாய் என்று நினைவு. ஒரு துண்டு தின்றால் அடுத்து மதியம் சாப்பிடலாம். ஏப்பங்கள் தேங்காய் மணக்கும். மதியம் பத்து ரூபாய் மினி மீல்ஸ் தர்ஷிணியில் கிடைக்கும். மூன்று பூரிகள், ஒரு கிண்ணம் சோறு, தட்டின் எல்லைகளில் சிறு கிண்ணங்களில் அணிவகுத்த பொரியல், ரசம், சாம்பார், அப்பளம், தயிர், பாயசம். துண்டு ஊறுகாய். பூரிக்குப் பதில் சப்பாத்தி சேர்த்தால் இரவுணவு , பதினைந்து ரூபாய். நாளுக்கு முப்பது ரூபாயில் சாப்பிட முடியும்.


யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றால் இன்று நகரத்தில் ஐயங்கார் பேக்கரியும், தர்ஷினியும், சாகரும் என்று தான் நினைவில் தோன்றுகிறது. யோகத்திற்கு பி கே எஸ் ஐயங்கார் என்றால் பேக்கரிக்கு திருமலச்சார். இவருக்கு 1890-களில் சிக்கப் பேட்டையில் இனிப்புக் கடை இருந்திருக்கிறது. கடைக்கு வரும் ஆங்கிலேயரிடம் ரொட்டி செய்வதை பயின்றிருக்கிறார். அவர் இப்போதிருக்கும் எம்ஜி ரோட்டின் தாஜ் வெஸ்ட் எண்டில் தங்கி இருந்திருக்கிறார். அன்று அவர் ஆரம்பித்தது BB பேக்கரி என்பது . பெங்களூர் பிரதர்ஸ் பேக்கரி. இன்றும் இது இருக்கிறது. HSR சாலையில் ஒன்று இருந்தது, (மாற்றிய பெயர் , பெங்களூர் பிராமின் பேக்கரி). இப்போது இல்லை. இவரிடம் பயின்றவர்கள் ஹாசன் பேக்கரி என்று அவ்வூரில் தொடங்கி மீண்டும் பெங்களூர் வருகிறார்கள். இவர்கள் வழி வந்தவர்கள் இப்போது அக்மார்க் ஐயங்கார் பேக்கரிகள் நடத்துவதாகச் சொல்கிறார்கள். ஹாசன் ஐயங்கார் பேக்கரி என்று தனித்துப் பெயர் போட்டுக் கொள்கிறார்கள். சூர்யா பேக்கரி, BB பேக்கரி , ஹாசன் பேக்கரி இன்றும் அவர்கள் வழி வந்தவர்களால் நடத்தப் படுகின்றன. லாபம் இப்போது கம்மி என்கிறார்கள்.


வேலைக்குப் போகும் புதிதில் ஐடிபிஎல் பாதை காடு மண்டிக் கிடக்கும். மாரத்தள்ளி ரயில்வே பாலம் கடந்து கீழிறங்கினால் இடது பக்கம் ஐடிபிஎல் செல்லும் வழி. இன்றைய குண்டலஹள்ளி. பைக்கில் நண்பனும் நானும் சேர்ந்து போவது வழக்கம். அங்குதான் இன்று வரை தொடரும் இன்னொரு பழக்கம் தொற்றியது. ஆறு கிலோமீட்டர் நீள ஐடிபிஎல் வரை கடைகள் கிடையாது. ஏன்,அப்போது ஐடிபிஎல் -லிலேயே நல்ல கடைகள் கிடையாது. எனவே பேக்கரியில் தேநீர் நிறுத்தம் உண்டு. நாளின் முதல் தேநீரும் கடையிலேயே. கல்யாணம் நடந்திருக்கவில்லை. பேக்கரிக்காரர் ஒரு வெண்ணெய்ப் பொறை (பட்டர் பன்) செய்வதைப் பார்த்து உன்னப் பழகினேன். பொறையை இரண்டாய்ப் பிளந்து நடுவில் ஒரு முழு அமுல் வெண்ணையை கத்தியால் இழைத்துத் தடவி , மீண்டும் மூடி , நான்காய் நறுக்கிக் கொடுப்பார். இதைத் தின்று வேலை பார்த்தால், மதியம் ஆந்திரா மீல்ஸ் வரை பசி தாங்கும். இப்போதும் ஒரு சில இடங்களில் பட்டர் பன் பார்த்தால் கண் படபடக்கிறது. ராமேஸ்வரத்திலும்(ஓட்டல் பெயர்) காலையில் கைபடாமல் எடுத்துக் கொடுத்து ஒருவர் நேற்று சாப்பிட்டதைப் பார்த்த படி நின்றேன்.


காங்கிரஸ் பன் என்று ஒரு பண்டம் உண்டு. இது காங்கிரஸ் கடலையை பொறையில் வைத்த மசாலாப் பொறை. பெருங்காயம் , கருவேப்பிலை , மஞ்சள், கடுகு, கரு மிளகு, உப்புடன் சிறிது எண்ணெய் பொடித்த மசாலாவை, இரண்டாகப் பிளந்த வேர்க் கடலையில் தடவியது. இதை பொறையில் நடுவில் வைத்த பன்னுக்கு காங்கிரஸ் பன் என்று பெயர். ஏன் காங்கிரஸ் என்ற பெயர்? 1969-ல் காங்கிரஸ் சரியாக கடலையைப் போல் இரண்டாகப் பிளந்தது. அப்போது வைத்தது இப்பெயர்.


ஆனால், தில் பசந்த் , என்ன ஒரு பெயர் ...



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2