Translate

ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு

ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு

---------------------------------------------------




ஓட்டுநரின் இருக்கை -1


பச்சை விளக்கு படம் ஒரு ரயில் டிரைவரின் கதை. சிவாஜி நடித்து, பீம்சிங் இயக்கியது. 


ஏ.வி.எம் சரவணன் ரயில் டிரைவரை மையமாக்கி ஒரு கதை எடுக்க விரும்புகிறார். பெயர் அகப்படாமல் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போது, தி.நகர் ரயில்வே ஸ்டேஷனைக் கடக்கிறார். அங்கு பச்சை சிக்னலைப் பார்த்ததும் டைட்டில் தோன்றி விடுகிறது, பச்சை விளக்கு. 


சிவாஜி , SSR,  அண்ணன் தம்பிகள். சௌகார் , விஜயகுமாரி. இந்த வரிசையில் யாருக்கு யார் ஜோடி தெரிந்திருக்கும். கதைச் சுருக்கம் இப்படிப் போகும். அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விடுவார். வளர்ப்பு அம்மாவும் இறந்து விடுவார். அவருக்கு மகள் விஜயகுமாரி. நாயகன் ஏழ்மையும் நோயும் கூடப் பிறந்ததா என்ற கேள்வி எழுந்து, தங்கையை டாக்டர் ஆக்க அண்ணன் சபதம் செய்கிறார். அண்ணன் ரயில் டிரைவர். சூழ்ச்சிகளுக்கு, இன்னல்களுக்கு நடுவில் படித்து ஒரு ஏழை டாக்டராகிறார்.


ஒளிமயமான எதிர் காலம்.


தங்கைக்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்ததும் அவர் பாடும் பாட்டு இது. கண்ணதாசன் வரிகள். எனது அக்கா இந்தப் பாடலை வாய்விட்டுப் பாடுவாள். அப்படித்தான் எனக்குப் பரிச்சயம். தங்கைக்கு கல்யாணமோ என்றே எண்ண வைக்கும் வரிகள். குங்குமச் சிலை, குடும்பத்து விளக்கு, அங்கயற்கண்ணி,கண்ணகி , கோவில் வாழும் தெய்வம். இவையெல்லாம் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தற்கு கண்ணதாசன் பாடிய வரிகள். உள்ளூர நம்பாமல் பாடியிருக்க மாட்டார், இல்லையா?. 


இதை இன்று எழுதும்போது மத்திய கல்வி மந்திரி ராஜினாமா செய்திருக்கிறார். என் மகள் ஜென்-z ஜெயித்ததாக 'அப்பா , என்னாச்சு பாத்தியா ' என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கிறாள். படிப்புதான் நம்பிக்கையும், அவநம்பிக்கையும் என்று இரண்டுமாகவும் இருக்கிறது. இன்று யார் ஜெயித்தார்கள் என்று தெரியவில்லை.


'ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

...

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்


குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்

கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக


மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக

வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக'


https://www.youtube.com/watch?v=vg1foNDP2X0


இப்பாடலைப் பார்த்து ரயில் டிரைவர் வேலை கொடூரம் தான் என்றே நினைத்திருக்கிறேன். பாடல் முழுதும் நாகேஷ் , கரி அள்ளிக் கொட்டுவதும், தலையில் கருப்புத் துணியும், முகத்தில் கரித்திட்டுகளும், பாடலில் சிவாஜிக்கு தலையாட்டி ஒத்து ஊதுவதும், லேசான அசைவுகளோடு ஆடிக் கொண்டே வேலை பார்ப்பதும் அப்படி எதுவும் சொல்லமுடியாமல் இருக்கும்.


தவிலும், நாதஸ்வரமுமாக பல்லவி தொடங்கும். சிவாஜியின் முகத்தில் நம்பிக்கையும், சந்தோஷமும், ரயிலின் தாளம் ஏற்றும் சக்கரச் சத்தமும், எதிர்பாராத மெல்லிய விசில் ஓசையும், எழும் புகை ஒலியும் , கண்ணை மூடிக்கொண்டால் ரயில் மயக்கத்தை உண்டு பண்ணும். யார் இது, மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன். 


ரயிலில் சக்கரம் சுற்றும் போது சூப்பர் இம்போஸ் ஆகி, நாட்காட்டியில் நாட்கள் ஓடிக்கொண்டே செல்லும். அதற்கு மேல் விஜயகுமாரி நடந்து படித்துக் கொண்டே இருப்பார். எல்லாமும் பொறியும், ஓட்டமும்.


இதனிடையில், ரயில் டிரைவர் ரயில் ஓட்டுவதை விட்டு வேற எல்லா வேலையும் செய்கிறாரே, ரயில் தானாக ஓடுமா? இந்தக் கேள்வியே என்னுள் பையனாய் இருக்கையில் எழுந்தது. பல விதமான வயர்கள், கடிகாரம் போன்ற முள் உள்ள எண் காட்டிகள், பெரிய அளவு கவிழ்ந்த சமையல் பாத்திரங்கள், நடுவில் இரண்டு கம்பிகள். இவர் வெளியே பார்த்து பாடிக் கொண்டிருந்தால் எப்படி? எப்படி பிரேக் போடுவார்? எப்படி வேகம் கூட்டுவார்? வழியில் ஆள் வந்தால் என்ன செய்வார்? மழை வந்தால் வைப்பர் உண்டா?


பச்சை விளக்கில் வரும் ரயிலை ஓட்டுவது மிகச் சிரமம் தான். அன்றெல்லாம் ரயிலில் நீராவி எஞ்சின்கள்.


டிரைவர் காக்பிட்டில் பெரிய நிலக்கரி அடுப்பு இருக்கும். இது பயணம் முழுதும் எரிந்துகொண்டே இருக்க வேண்டும். வயிற்றின் நெருப்போ இல்லை அதன் தலைக்குள் ஓடும் சிந்தனை நெருப்போ? இந்த நெருப்பில் ஒரு நீர் கொதிகலன் கொதித்தபடி இருக்கும். இது பல்லாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள உலை. இதிலிருந்து எழும் நீராவி, மேலே செல்லாமல், பிஸ்டன்கள் வழியாக சக்கரங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும். டிரைவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நெம்புகோல் சக்கரத்தில் செல்லும் நீராவியை குறைக்கவோ, கூட்டவோ செய்யும். ஒவ்வொரு சக்கரத்தின் பிஸ்டன் இன்னொன்றுடன் இணை பட்டிருக்கும். அந்தக் கால ரயில்களில் முதல் கோச் கொதிகலனாகவும் , இரண்டாவது நீர்த்தொட்டியுமாகவே இருக்கும். கலனின் வெப்பம் அதிகமாகி , நீராவி வெளியேறுவது தான் நாம் பார்த்த புகை. விசில் சத்தம் உருவாகவென்று தனிக் குழாய் இருந்திருக்கிறது. ஓட்டுநர் கயிறை இழுத்தால் அழுத்திய காற்று ரயிலின் அந்த அடையாள ஒலியை எழுப்பியது.


இந்த வேலையில் சத்தமும், வெப்பமும், மிகப் பெரிய சவால்கள். இன்று பெரும்பாலும் இந்தியா முழுதும் போக வர இரண்டு தனிப் பாதைகள் இருக்கின்றன. அன்று அப்படியில்லை. ஒரே பாதையில் தான் எல்லா ரயில்களும் போய் வர வேண்டும். விபத்துகள் இல்லாமல் இருக்க ஸ்டேஷன் மாஸ்டர் கையில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே நுழைய வேண்டும். அடுத்த நிறுத்தத்தில் கொடுத்து வேறு வாங்க வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களில் இதை போகும்போதே வாங்கும் சாமர்த்தியம் வேண்டும்.இதனால் எப்போதும் ரயில் டிரைவர்களுக்கு கண் பரிட்சை விசேஷமாய் நடத்தப் படுகிறது.


இன்றிருக்கும் மின்சார ரயில்களில் இவ்வளவு சிரமம் இல்லை. ரயில்கள் பாதையுடன் பேசிக்கொள்ளலாம். இவைகளுக்குள் பறவைகள் போல் மின்னணுச் சமிக்ஞைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டு அறையுடன் தானாக தகவல் பரிமாறிக் கொள்ளும். தானே வேகத்தை அமைத்துக் கொள்ளும். அடுத்த ரயில் எங்கே இருக்கிறது என்று தெரிந்து , ஆபத்திற்கு முன் அதுவே நின்று கொள்ளும். கதவு எந்த இடத்தில் எந்தப் பக்கம் என்று அதற்கே தெரியும். 


கதவை மூடி , ஸ்டார்ட் செய்ய வேண்டியது. கொடுத்த வேகத்தில் போக வேண்டியது மட்டும் தான் டிரைவரின் வேலைகள். டச்வுட், ஏதேனும் ஆபத்து நடந்தால், அதை எதிர்கொள்வது. 


T போன்ற ஒரு நெம்புகோல். முன்னே இழுத்தால் வேகம். பின்னால் இழுத்தால் பிரேக். கொடுத்த வேகத்தை விடக் கூட முடியாது. இது அடுத்த ஸ்டேஷன் ரயில் எங்கு இருக்கிறது, ஓட்டு மொத்த ரயில் வலை எவ்வளவு வேகத்தில் இருக்கிறது, பின் தங்கி இருக்கிறது, இன்று கூட்டமா என்றெல்லாம் கணக்கெடுத்த முடிவின் படி மையத்தில் இருந்து செலுத்தப் படும். WIFI மூலம் எல்லா ரயில்களும் இணைக்கப்பட்டு, நொடிக்குள் பலமுறை , அவை நடைபாதை மின்னணுக் கருவிகளுடனும், மையக் கட்டுப்பாட்டு அறையுடனும் தகவல் பரிமாறிக் கொள்கின்றன. பழுதானால் ஏற்று நடத்த டூப்ளிகேட் தகவல் சாதனங்கள் இருக்கின்றன. இதை Siemens போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரித்து விற்கின்றன. ரயில் நெட்வொர்க் என்று தனித்துறை இன்று இருக்கிறது. இத்தனை ரயில்கள், இவ்வளவு தூரத்தை, என்ன வேகத்தில் கடந்தால், எங்கு எந்த நேரத்தில் இருக்கலாம் என்று கணித்து வரைபடத்தை உள்ளே செலுத்தினால் அநேக வேலை முடிந்தது. அப்புறம் நாள் எல்லாம் மேற்பார்வை மற்றும் கட்டுப்படுத்துவது. மட்டுமே.


தானாக இயங்கும் கார்களைப் பற்றி இன்று பெரிய அளவில் பேச்சு இருக்கிறது. மெட்ரோ ரயில்கள் இதே வழியில் தான் இயங்குகின்றன. சேனம் கட்டிய குதிரை போல் ஒரே வழி தான். சார்ஜிங் பிரச்சனை இல்லை. எப்போதும் பிளக்கில் சொருகியே இருக்கிறது.


இதைத் தேடித் தெரிந்து கொள்ளும் முன் எனக்கு இருந்த கவலை எங்கு டிரைவர் மொபைல் ஃபோன் பார்த்துக் கொண்டிருப்பாரோ என்பதே. இருக்கலாம், ஆனால் ஒன்றும் பாதகமில்லை என்று எண்ணிக் கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2