Translate

பஷீரின் பசியும் , என்னுடைய பசியும்

பஷீரின் பசியும் , என்னுடைய பசியும்

------------------------------------------------




சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தாமதமாகி விட்டது.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


சாப்பிட்டது செரித்தது தெரிந்த பின் அடுத்த வேளை உண்பவன் உடலுக்கு மருந்து வேண்டாம்.


செரித்ததா என்று எப்படி அறிவது? காலை எழுந்ததும் முதல் ஏப்பம் உணவின் மணத்துடன் வராமல் இருப்பது என்னுடைய அறிகுறி. மறுநாள் அப்படி ஆகி விட்டது. பல்லைத் தேய்த்துப் பின் அரை மணி மெதுவாய் ஓடினால் சரியாகும். ஆனால் நேரமில்லை.


குற்ற உணர்ச்சியில் நேற்று பகலில் உண்ண வேண்டாம் என்று முடிவு செய்தேன். வண்டி போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு நாள் பட்டினி போடலாம் என்று தோன்றியது.


திங்கள் கிழமைகளில் பொழுது வேகமாக ஓடிவிடும். அன்று ஒரு மணியில் இருந்து மூணு வரை தொடர் மீட்டிங்காகப் போனது. ஒரு மணி வரை எப்போதும் போல் கடுங் காப்பியில் உப்புப் போட்டுக் குடித்தேன்.


மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் நிதானமாய், பட்டினியைப் எப்படி சரியாகச் செய்வது என்று படித்துப் பார்த்தேன். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உப்புகள் குறையும்போது மூட்டுகள் உளையும். அப்போது எலுமிச்சை நீரும் உப்பும் கலந்து குடிக்க வேண்டும். எலக்ட்ரோலைட் வாங்கி வைத்துக் கொள்ள் வேண்டும். நெஞ்சு துடிக்கக் கூடாது, மயக்கம் வரக்கூடாது போல எச்சரிக்கைகள். ஓரிரண்டு வேளைகள் சமாளித்திருக்கிறேன். இது ஒரு ஆர்வம் போல் தொற்றிக் கொண்டது.


வீட்டுக்கு வரும்போது ஏழாகி விட்டது. குழந்தைகளுக்கு பலகாரம் வாங்கும் போது ஏக்கம் வருகிறதா பார்த்தேன். இல்லை. வீட்டில் ஏற்கனவே அறிவித்திருந்தேன். கெடுபிடி இல்லை. மேனேஜர் எட்டு மணிக்கு இரவுக் காட்சியை துவக்கினார். முடிகையில் ஒன்பதரை , ஒரு சிறு நடை. சமையலறைப் பக்கம் போகாமல் ஒரு நாள் முடிந்தது. படுக்கையில் படுத்தால் விடிந்து விடும். அப்புறம் காலை இரண்டாம் நாள் தள்ளிக் கொண்டு போய் விடும்.


இப்படியெல்லாம் எண்ணி, படுக்கையில் படுத்த பொழுது தான் தற்செயல் என்ற ரூபத்தில் சோதனை வந்தது.


அன்றுதான் முதலில் பஷீரைப் படித்தேன். ஓசூர் கண்காட்சியில் வாங்கியிருந்தேன். பஷீரின் கோட்டோவியத்தை கண்டபடி புத்தகத்தை விரித்தேன். கால் மடித்து அமர்ந்து முழுக் கவனத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் படம். அது காந்தியின் முகம்.


ஜன்ம தினம் என்ற முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.


ஒரு எழுத்தாளன் அன்றைய தினத்தை கோர்த்து எழுதும் டைரிக் குறிப்பாக வரும் கதை. அவருக்குப் பிறந்த நாள். நடுச் சாமத்தில் விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல், வெளியே திரிந்தபடி, நதியோரத்தின் விளக்கொளியில் எழுத அமர்கிறார். 'சூல் கொண்ட கார்மேகங்கள் போல் அந்நாளின் நினைவுகள் நெருக்கி அடித்துக் கொண்டு இருக்கின்றன'. இதை வைத்து எழுதினால் சிறுகதைக்கான வாய்ப்புண்டு என்று அவரே சொல்லிக் குறிப்பை எழுதுகிறார்.


அவ்வளவு நம்பிக்கையில்லாத கசப்பான நாளை, துளிக் கசப்பில்லாத எழுத்தாக எழுதியிருக்கிறார். நாளின் சம்பவங்களை கடிகார மணியில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அதன் முட்கள் போல பசியும், வறுமையும், நம்பிக்கையும், தோல்வியும் நாளெல்லாம் நகர்கின்றன. வெளிச்சமும், இருட்டும் மாறி மாறி வருகின்றன. இந்த ஒரு நாளையாவது களங்கமில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நாள் துவங்குகிறது. பசியால் இழுத்து அலைபட்டு , இரவில் எதிர்வீட்டு சமையல் காரன் பாத்ரூம் செல்லும் இடைவெளியில் பசி தாங்காமல் உண்வைத் திருடி உண்பதாக நாள் முடியும்.


காலை முழுதும் சிங்கிள் சாயா தேடுகிறார்.கிடைக்கவில்லை. மதிய உணவுக்கு வரச் சொன்ன ஹமீது வீட்டில் இல்லை. வீட்டில் இவரைத் யாருக்கும் தெரியவில்லை. பேர் சொல்லாமல் வந்துவிடுகிறார். பதிப்பாளரை சாயாக்காக தேடிப் போகிறார். அவர் பெயரில் இவர் எழுதிய புத்தகங்கள் அடுக்கப் பட்டிருக்கின்றன். அடுத்து என்ன எழுதப் போற என்று கேட்டு, டீ வரவழைத்து அவர் மட்டும் குடிக்கிறார்.


"எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.

"சாயா கொண்டு வாடா."

பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.

"உங்களுக்குச் சாயா வேணுமா?"

நான் சொன்னேன், "வேண்டாம்."


இதைப் படிக்கையில் எனக்கு பசி உக்கிரமானது. தூக்கம் வராது போல் இருந்தது. மேலும் படித்தேன்.


மூன்றரை மணிக்கு தீக்குச்சி கேட்டு வரும் பையன் முகத்தைப் பார்த்து ஊர் போக வைத்திருந்த இரண்டணாவைக் கடன் கொடுக்கிறான். அதில் வாங்கிய தோசைக்கும் சாயாவுக்கும் தோழர் கங்காதரன் பங்குக்கு வந்துவிடுகிறார். அவரும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. எனக்கு அவர் சாப்பிட்டிவிடுவார் போல் இருந்தது.


"கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். "


பசிபோக்கும் தோசைக் காகிதத்தின் பின்னால் , இரும்புச் சங்கிலிகளால் கால் பிணைக்கப் பட்டு, பார்வை விண்ணை நோக்கி, பிரபஞ்சத்தை நோக்கி இருக்கும் ஒரு மாமனிதன். அவன் கால் கீழ் திறந்த புத்தகம்."விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.’

"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"


நான்கு மணிக்கு அலுத்துப் போகிறது. தலை சுற்றுகிறது. கோபம் வருகிறது. நாக்கு வறண்டு விட்டது. ஆறு மணிக்கு கடற்கரையில் மீண்டும் மகிழ்ச்சி. இப்படி இழுபட்ட நாளில் திருடி உண்பதற்கு முன் இப்படி யோசனை போகிறது. ஆனாலும் பசி வென்று விடுகிறது.


"மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது – எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்."


எனக்கும் அப்படித்ததான் தோன்றியது. லட்சக் கணக்கான ஒரு வேளை பசித்திருக்கும் உயிரிகளில் நானும் ஒருவன். என்ன பிரமாதம்.


பஷீரை விரட்டியது பசி எனும் கொடிய விலங்கு. அவர் அதைப் பழக்கப் பார்க்கிறார். அதட்டுகிறார், நயமாகப் பேசுகிறார், தள்ளி நின்று பார்க்கிறார். ஆனால் அது ரத்தம் குடிக்கும் மிருகம். அதை நன்றாகப் தெரிந்து, கடிக்காமல் , உயிர் குடிக்காமல் மட்டுமே அவரால் பார்த்துக் கொள்ள முடிகிறது.


நான் அனுபவித்துக் கொண்டிருந்த பசி இருள் போன்றது. புரிந்து கொள்ளப் பட வேண்டியது. கடந்து போக வேண்டியது. உணவு மேஜையில் எப்போதும் கவனிப்பது இது. உப்பு , ஊறுகாய் விடாமல் பார்த்த எல்லாவற்றையும் மனம் கேட்ட வண்ணம் இருக்கிறது. நாக்கு ருசியை மேலும் மேலும் என்று கோரிய வண்ணம் இருக்கிறது. பார்க்காத போது இச்சிக்கல் இல்லை. உணவு இல்லாத இடத்தில் கண்ணால் பயனில்லை. ஒன்றும் இல்லையெனில் மனம் தானாக அடங்குகிறது. உணவைப் பார்த்த வண்ணம், நல்ல பசியில் மனத்தை அடக்குவது கடினம்.


துறவியின் ஒரு நாள் என்ற காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாய்லாந்தின் புத்தத் துறவிகள் காட்டில் காலையில் எழுந்து ஊரினுள் சென்று யாசிக்கின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டினர், துறந்தவர்கள். மக்கள் மண்டியிட்டவாறு , வணங்கி பழமும் , உணவும் கப்பரையில் இடுகின்றனர். காலை ஒரே வேளை உண்கின்றனர். பகலெல்லாம் உடல் வேலையும், தியானமும், இரவில் சொற்பொழிவும் , கற்றலும். இடையில் பாலில்லாத தேநீர். அப்புறம் அடுத்த நாள். எல்லாமும் பழக்கமே.



 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2