அன்றாடக் குறிப்புகள் - திக்குத் தெரியாத காட்டில்
திக்குத் தெரியாத காட்டில் -1
------------------------------------
போன வாரம் அமேசானில் இரண்டு பொருட்கள் வாங்கினேன்.
ஒன்று எட்டாம் வகுப்பு கணிதப் புத்தகம். இரண்டாவது பள்ளிக்கூட சீருடைக் கருப்புக் காலணி.
புத்தகம் அடுத்த நாள் வந்துவிட்டது. காலணி அன்றே வந்தது.
புத்தகம் தப்பு என்று சொல்லி விட்டாள். அது வேறு RS அகர்வால். இதுவல்ல அது. (அவர் இன்னுமா எழுதிக் கொண்டிருக்கிறார்).
தப்பானதை அவளும் மகளும் சேர்ந்து திருப்பி வெளியில் அனுப்பி விட்டார்கள். அதாவது வலையுலகில் மட்டும். ஒரு வாரமாக இன்னும் பொருள், பொருள் உலகில் , அதாவது அலமாரியில் இருக்கிறது.
காலணி பிரித்ததும் தெரிந்தது அது குழந்தை அளவு. அதையும் வீட்டை விட்டு வெளியேற்றி உத்தரவு போட்டாயிற்று. ஆனால் பொருள் வெளியேறவில்லை.
அமேசான் என்று காட்டின் பெயர் வைத்ததும் பொருத்தமே. துளாவிப் பார்த்து ஒரு ஃபோன், புகார் செய்யலாம் என்றால் சொடுக்க எதுவும் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துப் பின் பத்து நிமிடம் வளைத்து வளைத்து தேடினாலும் ஒன்றும் இல்லை. ஏற்கனவே ஐட்டம் ரிஜெக்டட் , ரிடர்ன் ரிசீவ்ட் என்று அதுவே வலையுலகில் குழி தோண்டிப் புதைத்து விட்டது. அடுத்த கட்டம் ரீபண்ட் இனிஷியேட்டட் , அதில் இணையாத கோடுகள் நாலு நாளாய் அங்கேயே நிற்கின்றன. அதன் பின்னால் ரிஃபண்டட். இரண்டிலும் சரிக்குறிகள் விழுந்து கோடுகள் இணைய வேண்டும். பொருள் திரும்ப வந்து விட்டது என்று தேதி காண்பிக்கிறது. இரண்டும் மேஜையில் அடுத்தடுத்து அப்படியே இருக்கின்றன. பத்து நிமிடம் சுற்றி வளைத்துத் தேடினால், திரும்பத் திரும்ப 'continue shopping' என்ற பட்டன் மாத்திரம் முன்னால் வந்து கொண்டிருக்கிறது.
திக்குத் தெரியாத காட்டில் -2
-------------------------------------
பல வருடமாய் பிரிண்டர் வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாரம் குறைந்தது பத்து பக்கம் வெளியில் பதிப்பிக்க வேண்டியிருக்கிறது. சில பக்கங்கள் கலரில் வேண்டியிருக்கிறது.
இதற்கு எனக்கு ஒரு வழக்கமான கடை இருக்கிறது. கடையை இரண்டாக வகுந்து ஒரு பக்கம் சிறிய மாளிகை வியாபாரம். இரண்டாவதில் எலெக்ட்ரிக் சாமான்கள் நடுவில் அச்சுப் பொறி, பிரதிப் பொறி எல்லாமே. பெரும்பாலும் பல்புகள் , கூண்டுகளில் பெட்டிக்குள் இருக்கும். கணினியைப் பார்த்து அமர்ந்திருப்பார். வண்ணம் பத்து ரூபாய், கருப்பு வெள்ளை இரண்டு ரூபாய். ஆல் இன் ஆல் அழகுராஜா கடை நினைவு வரும். எந்நேரமும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். ஒருவர் இருபது லட்ச ரூபாய் மருத்துவ கட்டணத்தை பிரதி எடுத்துக் கொண்டிருந்தார். நோயாளி பிழைத்தாரா தெரியவில்லை. பணம் பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணம் காரியத்தை முடிக்கவும் ஆகும். வீட்டில் அச்சிட்டால் இவை எல்லாம் பார்க்க முடியாது. இந்தக் கடைக்காரர் தான், எங்கு என்ன கிடைக்கும் என்று எனக்குச் சொல்பவர்.
விஷயத்திற்கு வருகிறேன். HP கடைக்காரர் ஐந்து நிமிடத்தில் என்னை அவர் பக்கம் இழுத்து விட்டார். இரண்டு நாள் இன்னொரு அம்மாள் சொதப்பிக் கொட்டியிருந்தார். வீட்டில் யாருக்கோ அழைப்புக் கொடுத்து என்னிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இவரிடம் எல்லா பதில்களும் இருந்தன. அதில் எடுத்த வண்ணப் படங்களை கோப்பில் காட்டினார். விலையில் கச்சிதமாய் ஒரு இடத்தில் நின்றார். என்னாலும் மேல் நகர்த்த இயலவில்லை. ஆன்லைன் விலையும் ஒத்து வந்தது.
அட்டைப் பெட்டியில் சுவரரோரமாய் இரண்டு நாட்களாய் நிற்கிறது. அதை இணைய உலகில் நிறுவ யாரோ வர வேண்டும்.
பொருளுலகில் அது காத்திருக்கிறது. அங்கு யார் என்ன செய்ய வேண்டுமோ தெரியவில்லை.
பிகு : மூன்றாவது நாளில் ஒருவர் வந்தார். வாங்கிய பிரிண்டர் பிரமாதம் இல்லை, சாதாரணமானது என்று மறைமுகமாச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
திக்குத் தெரியாத காட்டில் -3
--------------------------------------
பிடிஎஃப் -ல் ஒரு ஒப்புதல் படிவம் பையனுக்காக நிரப்ப வேண்டியிருக்கிறது. பேருக்குப் பக்கத்தில் கோடு விட்டிருக்கிறார்கள். அங்கு போய் இரண்டடி கொடுத்தால், நிலை காட்டி (கர்சர்) துடிக்கிறது. ஃபான்ட் வேறொன்றாக மொக்கையாய் விழுந்தது. போகட்டும். முகவரி என்ற இடத்தில் ஆப்பிள் எனக்குத் தெரியும் போடவா என்று முன்னே வந்தது. இப்போதெல்லாம் எழுத்தை அடிக்க விடாமல் அதுவே செய்வேன் என்கிறது. இது எப்போதும் தவறாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். சரி, அதைப் போட்டவிட்டுப் பின் அழித்தேன். மொபைல் நம்பர் எல்லாம் எழுதிய பின் கையெழுத்துக்கு இடம் விட்டிருக்கிறார்கள். இப்போது இதை நகல் செய்து கையெழுத்துப் போட்டு, ஸ்கேன் செய்து திரும்ப அனுப்ப வேண்டும் என்று நினைவு வந்தது. பரவாயில்லை, வழி இருக்கிறது என்று சமாதானமானேன்.
பின்னர் போட்டோவுக்கு ஒரு கட்டம் இருந்ததைக் கண்டேன். போட்டோ டிஜிட்டலில் இருந்தது ஒன்றை தேடிப் பிடித்தேன். கொஞ்சம் பழைய படம். பிள்ளை முகம். இதைக் கொடுத்தால் கோபிப்பார். பழைய அவரை அவருக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. கண்ணுக்குக் கீழ் இரண்டு துண்டுக் கன்னம் கூட்டத்து பஸ் பயணி போல் படியில் தொற்றிப் பறந்து கொண்டிருந்தது. விஷயத்திற்கு வருகிறேன்.
போட்டோவைத் திறந்து காபி செய்து படிவத்தின் அந்தக் கட்டத்தில் வேலை முடிந்தது என்று ஓட்டப் போனேன். 'டொக்' என்று சோஹைப் அக்தர் நூற்றைம்பது கிமீ பந்தை ராகுல் டிராவிட் தடுத்தாடும் அந்த புகழ் பெற்ற தடுப்பின் அதே ஒலி. மட்டையில் பட்டு பந்து அவர் காலின் கீழே அசையாமல் விழும். அம்மாவிடம் கொட்டு வாங்கிய பிள்ளை சேலையைக் கட்டி கண்ணில் துளியுடன் நிற்பதைப் போல. ஒட்ட மறுத்தது. மீண்டும் பலமுறை அதையே செய்தேன். மெய்டன் ஓவர், ஒன்றும் நிகழவில்லை.
கூகுளைப் போட்டேன். அதுவே AI வழியாக உபாயம் சொன்னது. அதையும் அப்படியே அம்புக் குறி தொடர்ந்து செய்தேன். ஒன்றும் நிகழவில்லை. அதுவே ஆன்லைன் போட்டு வறுத்து எடுக்கச் சொன்னது. பிடிஎஃப் -ஐ கொடுத்து வேர்ட் பார்மெட்டில் வாங்கினேன். எல்லாமும் மாறி இருந்தது, இதை மாற்ற இன்னும் பல மணி வேண்டும். இன்னொரு முறை அம்புக் குறி வழியாக மெனுக்களை தொடர்ந்து அழுத்தினேன். ஜெனிமியிடம் வேலை செய்யவில்லை என்று புகார் செய்தேன். இன்னும் வேறு ஏதோ செய்யச் சொன்னது.
முடிவில், ஒரு உண்மையான போட்டோவை ஒட்டி கையெழுத்துப் போட்டு, மீண்டும் ஸ்கேன் எடுக்கலாம் என்று நினைத்து வேலையைக் கைவிட்டேன். இப்போது ஒரு போட்டாவைத் தேடிப் பிடிக்க வேண்டும்.

Comments
Post a Comment