கண்ணி நுண் சிறுத்தாம்பு
கண்ணி நுண் சிறுத்தாம்பு
--------------------------------
நான் அவர் கடையில் நுழையும் போது மின்விசிறியின் மோட்டாரை மேஜையில் வைத்து தலை குனிந்திருந்தார். ஒரே அறை. அறையின் வாசலில் குறுக்காய் போட்ட மேஜை. இரண்டு பக்க மேஜைகள் 'ப' வடிவில் அதில் இணைந்தன. நடுவில் அவர். மேஜை தான் அவருடைய ஆபரேஷன் தியேட்டர்.
அவர் கடைக்கு நான் வருவது இரண்டாம் முறை. மேற்கில் சூரியன் அன்றைய பகலுக்கு விடை சொல்லி முடித்திருந்தது. நாளின் கடைசிக் கதிர்களின் பொன்னொளி அவர் மேல் பெய்து கொண்டிருந்தது. அந்தக் கடுமையான மேல் காற்றிலும் நெற்றியில் வியர்வை பளபளத்தது. அந்தச் சாலையில் கீழ் நடமாடும் மனிதர்களும், வண்டிகளும் அங்கிருந்து சிறிதாய்த் தோன்றினர். எதிர் வெயிலில் , இப்போது அவர் இருக்கை சிங்காசனம் என்று பட்டது.
என்னைப் பார்த்துப் பின் மீண்டும் மின் விசிறி மோட்டார் வேலையில் ஆழ்ந்தார். ஆட்டின் மண்டை ஓடு போல் இருந்தது. கயிறென மூன்று வயர்கள் வெளியே நீண்டிருந்தன. இரண்டு வட்டப் பாதையில் தாமிர வயர்கள் முடிச்சுகளாய்ச் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. ஒரு வயரைத் கையில் இருந்த வயரின் மின் விசையால் தொட்டதும், உள்ளிருந்த இன்னொரு பகுதி சிலிர்த்துச் சுழன்றது. மின்விசையை வாங்கிய தாமிர வயர்கள் மண் போல் அதை உறிஞ்சிக் குடித்தன. மின்விசிறியின் சுழற்சியாக வெளியேற்றின. அவர் இரண்டு மூன்று முறை , வயரால் வயரைத் தொட்டார். குதிரைகள் ரேஸ் கோர்ஸில் கதவுடைத்து வெளியே வருவது போல் கனைப்புடன் வெளியே வந்தன.
இந்த பூமியைச் சுற்றியிருப்பது காந்தப் புலம் என்றால் , பூமி ஒரு மாபெரும் மின் விசிறி. காற்றும், கோடையும் , வெப்பமும் , குளிரும் அதன் புலக் கடத்தல்கள். நாம் நடப்பதும், விண்ணில் பறப்பதும் எல்லாமும் அந்த மின்விசிறியின் கீழே . பேன் சுழற்சியில் பறந்து மீண்டும் எழும் ஒட்டடை இந்தப் பிரபஞ்சம். சூரியன் அவர் கையில் இருக்கும் அந்த வயரின் மின்விசை. மேஜையில் இருக்கும் அந்த மின்விசிறி மோட்டார் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எனக்காக அதை எடுத்து ஓர பெஞ்சில் வைத்தார்.
எனக்கு இன்டக்ஷன் அடுப்பு பழுது பார்க்க வேண்டும். சில நாட்களாய் அது வாயில் கதவை மூடிக் கொண்டது. என்ன தட்டினாலும் பயனில்லை. இவர் அன்று விடுப்பில் இருப்பதாகச் சொன்னதால், இன்னொரு கடையில் கொடுத்திருந்தேன். அந்த அம்மாள் வாங்கி அடுக்கி வைத்திருந்த அடுப்புகளின் மேலே என் மொபைல் நம்பரை எழுதி ஒட்டி வைத்தார். நாளைக்கு வா என்று அனுப்பி விட்டார். எவ்வளவு ஆகலாம் என்று கேட்டேன். கணவருக்குத் தெரியும் என்றார். அவ்வளவெல்லாம் ஆகாது என்றார். வாசலில் காற்று குப்பையைச் சேர்த்திருந்தது. உள்ளே பழைய டிவி, மிக்ஸி, டிஷ் ஆண்டெனா, போன்ற சாமான்கள் நிரம்பியிருந்தன. என்னிடம் மேல்கொண்டு பேச ஒன்றும் இல்லை, போனை மீண்டும் பார்க்க ஆரம்பித்தார்.
இரண்டு நாளில் ஃபோன் அழைப்பும் இல்லை, கடை திறப்பும் இல்லை. சார் ஐந்து நிமிஷம் என்று பல ஐந்து நிமிடங்கள் கழிந்து, கணவர் போனில் வந்து எழுநூறு ஆகும், நாளை வா என்றார். எனக்கு அவர் தொழிலில் நம்பிக்கை இல்லை. அடுப்பை வாபஸ் கேட்டேன். அம்மாள் சமையலில் இருப்பதாகச் சொன்னார், முடித்து ஒரு வழியாக அடுப்பை மீட்டேன் .
திரும்பி அவர் கடைக்கு வந்திருந்தேன். ஒரு குழந்தையைப் போல் அடுப்பை வாங்கி மேஜையில் வைத்தார். பிளக்கில் இணைத்ததும் , அது ஏனோ வேலை பார்க்க ஆரம்பித்தது. எனக்கு மொழிச் சவால், எதிர்பார்த்தது தான். மீண்டும் மீண்டும் சரியாக வேலை செய்தது. இது இப்படித்தான், நேரத்திற்கு ஒரு மாதிரி என்று சொல்லித் திறக்க வைத்தேன்.
திருப்பிப் போட்டு அதைத் திறக்க ஆரம்பித்தார். நான்கு மூலையில் ஸ்க்ரூக்களை கழற்றி தட்டில் விட்டார். அவை விடுபட்டு அங்கும் இங்கும் ஓடிப் , பின் நிலையாக நின்றன. இரும்பு முடிச்சுகள். மேற்பலகையும் கீழ்ப் பலகையும் பிரிந்தன. வியர்வைக்கு ஏர் கூலரை மாட்டி போட்டுக் கொண்டார்.
அடிப் பலகையில் அதே போல் காப்பர் வயர் சுருள். தாமிரம் ஒளியில் கருப்பு, பொன் என இன்னும் வேறு நிறங்களாய்ப் பிரிந்தது. மேல் தட்டில் இருந்து ஒரு கயிறு கீழ்த்தட்டை இணைத்தது. அதை உருவி மூடியைத் தனியே எடுத்தார். மேலே தெரிந்த பத்து சுவிட்சுகளுக்கு கீழே ஒரு சர்க்யூட் அட்டை இருந்தது. பெரிய கயிறு , ஒரு பத்து முடிச்சுகள். முடிச்சுகளின் மேல் சுவிட்சுகள் அமர்ந்திருந்தன. மேலே தொடும் போது விசை மாறி, மின்னழுத்தம் மாற வேண்டும். சுவிட்ச் தேய்ந்திருந்தது, அழுந்தாமல் நின்றது.
சோல்டரிங் கம்பியால் பசை தடவி பழுதுபட்ட முடிச்சை அவிழ்த்தார். பசையின் வாடை என்னை கல்லூரிக் காலம் பின்னோக்கித் தள்ளியது. ஆய்வகத்தில் சாம்பிராணி வாடை அப்போது எனக்கு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது. சோல்டரிங் இரும்பின் வெப்பம் பசையில் விழும்போது எழும் புகையின் நறுமணம். பெட்ரோல் மணம் போல தலைக்குள் ஏறுவது.
அதே இடத்தில் இன்னொரு ஸ்விட்சை உட்கார வைத்து சோல்டரிங் முடிச்சுப் போட்டார். நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு கருவியும் இப்படித் திரண்ட கயிறுகளால் கட்டப்பட்டு, முடிச்சுக்களால் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இணையமோ, செல் ஃபோன் அழைப்போ முடிச்சுகளால் இணைத்துக் கட்டப்பட்ட கயிற்றில் ஓடும் விசை. பேரண்டத்தைக் கட்டும் சிறுதாம்பு. கயிற்றின், முடிச்சின் வழியே வற்றாத நதியென ஊறும் விசை.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பன்... பாசுர வரிகள் நினைவில் எழுந்தன.
எல்லா முடிச்சுகளையும் ஒரு முறை சரிபார்த்தார். தூசி துடைத்தார். நானும் வாங்கி அந்தக் காற்றாடியில் சிக்கியிருந்த தூசி உலகத்தை முதல் மாடி ஓட்டுக் கூரையில் விடுவித்தேன்.
இரும்பு முடிச்சுகளை இணைத்துக் கட்டினார். பிளக்கில் இணைத்து ஓரிருமுறை போட்டு நிறுத்தினார். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி மேலே வைத்தார். கீழ்ப் பலகையின் காந்தப் புல வெப்பம் விசையென அதிர்ந்து பாத்திரத்தில் பாய்ந்து, உள்ளே இருந்த நீரின் குமிழி ஒன்று கண்ணெனத் திறந்தது. பின்னர் பல கண்கள், காற்றாய் ஏறி விண்ணில் கலந்தன. அவர் முகத்தில் பெருமிதம்.
எவ்வளவு என்றேன் , நூறு என்றார். பொதுவாக, பிழைக்கத் தெரிந்தவர்கள், சாமானை வாங்கி வைத்து நாளை வா என்பார்கள். போனில் போர்டு காலி என்பார்கள். இதே வேலையை மறைவில் செய்து கொடுப்பார்கள். இவர் ஏன் இப்படி நாளும் பொழுதும் திறந்தபடி வேலை செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. பிழைக்கத் தெரியாதவரா , இல்லை முடிச்சுகளில் திளைக்கும் இன்பமா ?
ஆனால், பூமியில் எல்லாம் தூசி என்றான பின் மேல் தூசி, கீழ்தூசி என்ன இருக்கிறது?

Comments
Post a Comment