Translate

படிக்காத புத்தகங்கள் - tsundoku

படிக்காத புத்தகங்கள் - tsundoku

------------------------------------------






வீடு ஓசூர் முனைக்கு நகர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.

நேற்று எல்லோருமாய்ச் சேர்ந்து ஓசூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம் .

பத்து நாள் நடக்கும், நேற்று இரண்டாவது நாள்.


கேரட் & ஸ்டிக் பாலிசி இல்லை, கேரட் பாலிசி. போன வருடம் போனதும், சாப்பிட்டதும் பையனுக்கு நினைவிருந்தது. இந்த வருடம் அவனே 'எப்பப் போலாம்' என்று கேட்டான். கால்பந்து புத்தகம் தேடிப் பார்த்தான். சிக்கவில்லை.


இரண்டு மணி நேரம் சுற்றி பத்துப் புத்தகங்களுக்கு மேல் வாங்கினேன். பாராவின் கதைசொல்லலில் மயங்கி பஷீரின் தொகுப்பு ஒன்று. என்னுடைய குறிப்பு எழுதும் திறமையைக் கூர்படுத்த, அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள், வியாசனை அறிதல் போன்ற எப்போ படித்து நழுவிவிட்ட கட்டுரைகளின் புத்தக வடிவம், போன்றவை நினைவில் வருகின்றன.


அவளும் ஒன்றிரண்டு வாங்கினாலும் , வைக்க எங்க இடம் இருக்கு என்று கேட்டுக் கொண்டே வந்தாள். இந்தக் கேள்வியில் மறைந்திருப்பது, எல்லாம் என்று படித்து முடிப்பது என்பதும். இது எனக்கும் இப்போதெல்லாம் குத்தலாகவே இருக்கிறது. பாதிக்கு மேல் படிக்காத புத்தகங்கள்.


புத்தகங்கள் மேப் போல் என்று தோன்றுகின்றன. வழி காட்டும் பாதையில் சென்ற வழிகளும் , சென்றிராத வழிகளும் சேர்ந்தே இருக்கின்றன. உலக வரைபடமோ , இந்திய வரைபடமோ ஒரு முறை நெருக்கி சில நிமிடங்கள் பார்த்தால், பார்க்காத இடங்களே நிறைய கண்ணில் படும். அதற்காக வரைபடத்தை கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது. அன்று ஒருவர் ஊர் ஐஹோலே என்றார். பாதாமி, பட்டடக்கல் பக்கம் என்றார். பல்லவர்கள் தோன்றிய இடம் என்று படித்திருக்கிறேன். இந்திய சிற்பக் கலையின் முதல் விதைகள் அங்குதான் முளைத்தன. வாதாபி கணபதி என்று கேட்டே ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்க வேண்டிய இடம் என்றார். ஆமாம் என்றேன், வேறொன்றும் சொல்வதிற்கில்லை.


புத்தகங்களும் எனக்கு அப்படித்தான். ஜப்பானியர்கள் படிக்காத புத்தகதிற்கு ட்சுண்டோகு (tsundoku) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.புத்தகங்களை வாங்கி படிக்காமல் குமித்தல் என்று இதற்குப் பொருள். (https://en.wikipedia.org/wiki/Tsundoku)


குற்ற உணர்ச்சி இல்லாமல் புத்தகங்கள் வாங்குவதற்கு இப்படி ஒரு பெயர் தேவை. ஏன் மூளை இப்படி வாங்கி பின்னர் படிக்கலாம் என்று அடுக்குகிறது?

படித்த பின் கிடைக்கப் போகும் சந்தோஷத்திற்காக , டோபமைன் ஊக்கி இப்போதும் கொஞ்சம் சுரக்கிறது. நம்முடைய முன் மூளை , பழைய விஷயங்களை பதிவு செய்வதைப் போல, பின்னால் வரப்போகும் பொருளின் மகிழ்ச்சிக்கு இன்றே பாசிட்டிவ் முன்பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. இது உயிரின் அமைப்பு என்று ஆன பிறகு வேறு என்ன சொல்ல இருக்கிறது.


என் பையன் பத்து தொகுதியிருக்கும் புத்தகங்களை காட்டி, படிச்சு முடிச்சுட்டயா, இல்ல எப்ப படிப்ப என்று கேட்பான். இது ரெபெரென்ஸ் புக் என்று சொல்வேன்.

மனதில் பதிலில்லாமல் போகும் போது இறப்பதற்குள் என்று சொல்லிக் சொல்வேன். தவறேதும் இல்லை, சாகும் வரை படித்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியே. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2